-எஸ்.எஸ்.மகாதேவன்

29. தேவி சரஸ்வதி அருளால் தவழுது தேசியத் தென்றல்!
மத்திய பிரதேச அரசு வெளியிட்ட மருத்துவப் பட்டப் படிப்பு முதலாண்டுக்கான ஹிந்தி பாடநூல்களை 2022 அக்டோபர் 16 அன்று மத்தியப் பிரதேசம், போபாலில் பாரத உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டாலும் வெளியிட்டார், ‘பாரதிய மொழிகளில் மாணவர்களுக்கு மருத்துவ, பொறியியல் படிப்பு கிடைக்க வேண்டும்‘’’ என்ற எதிர்பார்ப்பு வலுப்பெறத் தொடங்கிவிட்டது.
வரும் கல்வியாண்டில் உத்தரப் பிரதேச மாணவர்கள் மருத்துவம், பொறியியல் இவற்றை ஹிந்தி பாடநூல்கள் துணையுடன் படிப்பார்கள் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். பாரதிய மொழிகளில் பாடநூல்கள் கொண்டுவரும் தனது விரிவான திட்டத்தை மத்திய அரசும் அறிவித்தது.
தனியார் பல்கலைக்கழகங்களும் வெளியீட்டாளர்களும் பாரதிய மொழிகளில் பாட நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், தாய்மொழியில் உயர்கல்வி என்பதை நினைக்கும்போதே மாணவ மாணவிகளுக்கு கரும்பாய் இனித்தது.
“தாய்மொழிக் கல்வியே தலைசிறந்த கல்வி”
என்ற தமிழ் வாசகம் இங்கே சமஸ்கிருதம் உள்ளிட்ட ஏழு பாரதிய மொழிகளில்…
***
മാതൃഭാഷയിലുള്ള വിദ്യാഭ്യാസമാണ് ഏറ്റവും നല്ല വിദ്യാഭ്യാസം
mātr̥bhāṣayiluḷḷa vidyābhyāsamāṇ ēṟṟavuṁ nalla vidyābhyāsaṁ
மாத்ருபாஷையிலுள்ள வித்யாப்யாஸமாணு
ஏற்றவும் நல்ல வித்யாப்யாஸம்
(மலையாளம்)
***
ಮಾತೃಭಾಷೆಯಲ್ಲಿ ಶಿಕ್ಷಣವೇ ಶ್ರೇಷ್ಠ ಶಿಕ್ಷಣ
Mātr̥bhāṣeyalli śikṣaṇavē śrēṣṭha śikṣaṇa
மாத்ருபாஷயல்லி சிக்ஷணவே ஸ்ரேஷ்ட சிக்ஷணா
(கன்னடம்)
***
మాతృభాషలో విద్య ఉత్తమమైన విద్య
Mātr̥bhāṣalō vidya uttamamaina vidya
மாத்ருபாஷலோ வித்யா உத்தமமய்ன வித்யா
(தெலுங்கு)
***
मातृभाषा में शिक्षा ही सर्वोत्तम शिक्षा
maatrbhaasha mein shiksha hee sarvottam shiksha
மாத்ருபாஷா மே சிக்ஷா ஹீ சர்வோத்தம் சிக்ஷா
(ஹிந்தி)
***
मातृभाषेतील शिक्षण हे सर्वोत्तम शिक्षण आहे
Mātr̥bhāṣētīla śikṣaṇa hē sarvōttama śikṣaṇa āhē
மாத்ருபாஷே தீல்சிக்ஷண ஹே சர்வோத்தம சிக்ஷண ஆஹே
(மராட்டி)
***
মাতৃভাষায় শিক্ষাই শ্রেষ্ঠ শিক্ষা
Mātr̥bhāṣāẏa śikṣā’i śrēṣṭha śikṣā
மாத்ருபாஷயா சிக்ஷா ஈஸ்ரேஷ்ட சிக்ஷா
(வங்காளி)
***
मातृभाषायां शिक्षा सर्वोत्तमा शिक्षा अस्ति
maatrbhaashayaam shiksha sarvottamaa shiksha asti
மாத்ருபாஷாயாம்சிக்ஷாசர்வோத்தமாசிக்ஷாஅஸ்தி
(சமஸ்கிருதம்)
டிசம்பர் 11 : பாரதிய மொழிகள் தினம்
தொன்றுதொட்டு பாரதநாடு மொழிகளின் தேசமாக விளங்கி வந்துள்ளது. எல்லா பாரதிய மொழிகளும் ஒற்றுமையோடு பரஸ்பரம் ஊட்டமளித்து செழித்துள்ளன. பாரதிய மொழிகளின் பொதுவான தன்மைதான் பாரத மக்களை ஒன்றுபடுத்தும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
மொழிகள் இடையே சுமுகச் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன், மகாகவி பாரதியார் பிறந்த தேதியான டிசம்பர் 11 ஐ கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இனி ஆண்டுதோறும் ‘பாரதிய மொழிகள் தின’மாக (பாரதிய பாஷா திவஸ் / பாரதிய பாஷா உத்ஸவ்) கொண்டாட வேண்டும் என்று சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உள்பட 200 பல்கலைக்கழகங்களுக்கு அக்டோபர் 28 அன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது, பல்கலைக்கழக மானிய கமிஷன் (யுஜிசி).
யுஜிசி யின் இந்த சுற்றறிக்கை பற்றி பலரும் முகநூலில் ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். உதாரணமாக, ஐந்து மொழிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வந்து அறிமுக நிகழ்ச்சி நடத்தி விளையாட்டாக ஐந்து மொழிகளை அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று ஒரு யோசனை; அது இதோ:
“தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் தாய்மொழியாக கொண்ட 5 குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் 2 பேர். ஒவ்வொரு குழுவும் மற்ற குழுக்களுடன் சம்பாஷணை செய்ய வேண்டும், அவரவர் தாய்மொழியில்.உங்கள் பெயர் என்ன? எங்கு வசிக்கிறீர்கள்? என்ன வேலை / படிப்பு? இப்படி சின்னச் சின்ன விஷயம். விளையாட்டாக இன்னொரு மொழி கற்கலாம். பாரதிய மொழிகளின் அற்புதம் என்னவென்றால், பேசும்போது தூய்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அடுத்தவர் எந்த மொழிபேசினாலும், அதன் பொருளை விளங்கிக் கொள்ளலாம். இங்கு ஹிந்தி என்று குறிப்பிடுவது, உருது கலக்காத சுத்த ஹிந்தி”.
இதன் தொடர்ச்சியாக இன்னொரு யோசனை:
“ஒரு சந்திப்பில் பன்மொழி அறிமுகம். அதற்கு அடுத்த சந்திப்பில் ராமாயணக் கதை. பல மொழிகளில் ஒவ்வொரு வாக்கியமாக ஒவ்வொரு மொழியாக. ராமாயணப் பாத்திரங்களும் பாத்திரங்களுக்கிடையான உறவுகளும் ராமாயணத்தின் கதையும் பொதுவாக அனைவரும் அறிந்த விஷயங்கள் என்பதால் விளையாட்டில் விறுவிறுப்பு கூடும்”.
- (கட்டுரையின் துவக்கத்தில் ஒரே வாக்கியம் ஏழு பாரதிய மொழிகளில் தரப்பட்டுள்ளது)
பல்கலைக்கழகம்தான் என்றில்லாமல் பொதுமக்கள் முயற்சியாக மொழிகளிடையே சுமுக உறவு மலர, இதுபோல இன்னும் என்னென்ன யோசனைகள் வெளியாகின்றன என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதற்கிடையில் பல்கலைக்கழகங்கள் இந்த சுற்றறிக்கை விஷயமாக எடுத்த உருப்படியான நடவடிக்கை, நிகழ்ச்சிகள் என்னென்ன என்பதைக் கண்காணிப்பதும் அவசியம். ஏனென்றால் சிலர் இதுபோன்ற விஷயங்களில் பல்கலைக்கழகங்களின் வாடிக்கையான அசட்டையை சுட்டிக்காட்டுகிறார்கள், இது போல:
“இப்படி பல சுற்றறிக்கைகளை யுஜிஸி வழக்கமாக அனுப்பிக் கொண்டே தான் இருக்கிறது. இதனை எத்தனை பல்கலைக் கழகங்கள் மதிக்கும்? ஏதாவது அழுத்தம் கொடுத்தால், நிகழ்ச்சி நடத்தினோம் என்று பேர் பண்ணுவதற்காக, கண்துடைப்பாக ஏதாவது செய்வார்கள்”.
இருக்கலாம். நேற்று நடந்தது போலவேதான் நாளையும் நடக்க வேண்டும் என்பதில்லையே?

இனி கல்வி நிலையம் என்றால் குருகுலம்! தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் குருகுலங்கள் பெங்களூருவில் வேத விஞ்ஞான குருகுல வளாகத்தில், சுபகிருது ஆண்டு, ஐப்பசி சுக்ல பட்சம் ஏகாதசி, துவாதசி, திரயோதசி தினங்களில் (2022 நவம்பர் 4,5,6 தேதிகளில்) ஒன்றுகூடி ‘ராஷ்ட்ரீய குருகுல சங்கோஷ்டி’ என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டன. பொதுவாக வேதம், ஆயுர்வேதம், யோகா, சங்கீதம் போன்ற விஷயங்கள் குருகுல முறையில் கற்றுக் கொடுக்கப்படுவதுண்டு. இது மட்டுமல்லாமல் ஜைன, பௌத்த, சீக்கிய சமூகத்தார் நடத்தும் குருகுலங்களும் செயல்படுகின்றன. கல்வியில் பண்பாட்டை வியாபிக்கச் செய்ய 2018 லும் உஜ்ஜயினியில் இதுபோன்ற குருகுலங்கள் சந்திப்பு நடைபெற்றது; அதன் தொடர்ச்சியாக இந்த சங்கோஷ்டி நடைபெறுகிறது. நாடு நெடுகிலும் இருந்து தலைசிறந்த சாஸ்திர அறிஞர்களும் கல்வியாளர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டார்கள். இன்றும் குருகுலத்தில் வில்வித்தை! ரிஷி வாடிகா குருகுலத்தில் வில்வித்தை (தனுர் வித்யா) பயிற்சி அளிக்கிறார்கள். ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் கட்டுமேடபள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது இந்த குருகுலம். சுதேசி ஆர்ச்சரியில் (வில்வித்தை) தேசிய சாம்பியன் உதயகுமார் வர்தி பயிற்சி அளிக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்த மட்டிலும் மாநில அரசின் கொள்கையைக் கடைபிடியுங்கள் என்று பல்கலைக்கழகங்களை மிரட்டி வைத்திருக்கிறது திமுக அரசு. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வீரியத்தில் அதற்கு இன்னும் நம்பிக்கை இருப்பது பரிதாபம்!
தேசத்தின் கலாச்சார பாரம்பரிய அடிப்படையில் மொழிகளிடையே சுமுக உறவு ஏற்படுத்தி,கழகங்கள் உருவாக்கி வைத்திருக்கிற மொழித் துவேஷத்தை துடைத்து அழிப்பதற்கு முயற்சி தொடங்கிவிட்டது. விளையாட்டு, பாட்டு, பழமொழி, கதை, உரையாடல் என்று நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியிலிருந்து உதயமாகி வியாபிப்பது நல்ல அறிகுறி.
எட்டயபுரத்திலிருந்து காசி மாநகரம் சென்று கல்வி பயின்ற பாரதியாருக்கு 11 மொழிகள் தெரிந்திருந்தன. ஆனால் அவர் தமிழ்க் கவிஞராக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் என்றால் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று தன் தாய்மொழிப் பற்றை அழுத்தம் திருத்தமாக அவர் பிரகடனம் செய்தது தான் காரணம். ஆனால் பாரதிய மொழிகளிடையே ஆரோக்கியமான உறவு நிலவ வேண்டும் என்ற தன் கனவை “காசி நகர்ப்புலவர் பேசுமொழி தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற வரியில் பாரதியார் பதிவு செய்யத் தவறவில்லை.

பாணினி பல்கலையில் வாஸ்து திருவிழா! மத்தியப் பிரதேசம், உஜ்ஜயினியில் உள்ள ‘மகரிஷி பாணினி சம்ஸ்கிருத– வேத பல்கலைக்கழகத்தின்’ ஜோதிடம், ஜோதிட அறிவியல் துறையினர் விஸ்வகர்மா ஜெயந்தியை அடுத்து செப்டம்பர் 17 முதல் 20 வரை வாஸ்து திருவிழா கொண்டாடினார்கள். நிறைவு நாளன்று எம்.ஐ.டி இயக்குநர் டாக்டர் விவேக் பன்ஸோர் பேசுகையில் கட்டிட நிர்மாணத்திற்கு மட்டுமல்ல, இசைக் கருவிகள் உருவாக்கத்திலும் வாஸ்து பங்கு வகிக்கிறது என்றார். நாட்டிய சாஸ்திரத்தில் வரும் சங்கீதச் செய்யுள்களின் அடிப்படையில் உருவாக்கிய வீணை, ஹார்மோனியம் இவற்றை இசைத்துக் காட்டினார். மேற்குலக இசையின் அடிப்படை பாரதத்தின் சங்கீத சாஸ்திரம்தான் என்று அவர் கூறினார். மாணவர்கள் இது போன்ற துறைகளில் ஆர்வம் காட்டுவதால் இந்த அரிய சாஸ்திரம் புதுவாழ்வு பெறும் என்று துணைவேந்தர் பேராசிரியர் விஜயகுமார் ஸீஜீ சுட்டிக்காட்டினார்.
பாரதிய மொழிகளில் பாட நூல்கள்
மொழிகள் இடையே நல்லுறவு ஏற்படுத்த யுஜிசி முன்னெடுப்பு தொடங்கிய முகூர்த்தம் நல்ல முகூர்த்தம்தான் போலிருக்கிறது; பின்வரும் பாணியில் செய்திகள் அடுத்தடுத்து நாளிதழ்களில் வெளிவரத் தொடங்கிவிட்டன:
- தமிழ் வழிப் பள்ளியில் படித்து தேறி வருகிறவர்களுக்கு தெளிவு கிடைப்பதற்காக தமிழில் 25 மருத்துவ படிப்பு பாடங்களை (சப்ஜெக்ட்) மொழிபெயர்த்து வெளியிட இருக்கிறோம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ரகுராமன். 2022 டிசம்பருக்குள் உடற்கூறியல், அடிப்படை பிசியாலஜி, அறுவை சிகிச்சை அறிமுகம், மகப்பேறு சார்ந்த நோயறிதல் ஆகிய விஷயங்களில் நான்கு நூல்கள் தமிழில் வெளியிடப்படும் என்று இவர் கூறுகிறார். தமிழ்நாடு பாடநூல் கல்விசேவைகள் கார்ப்பரேஷன் என்பது இவரது அமைப்பு.
- 2024 கல்வியாண்டில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு இவற்றில் சேருகிற என்ற ஒரு மாணவரும் 12 பாரதிய மொழிகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் எல்லாப் பாடங்களையும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம் என்று பாரதிய பாஷா சமிதி அமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவிக்கும் அடுத்த திட்டம் தான் பிரமிக்க வைக்கிறது: ‘அடுத்த பத்தாண்டுகள் கடப்பதற்கு முன் மாணவர்கள் உயர்கல்வி கற்க தேசத்தின் 22 மொழிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும’ என்கிறார்கள்.
- பாரதிய ஞானப் பாரம்பரியத்தை செழுமைப்படுத்த எழுபத்தைந்து (75) பாடங்களுக்கான (சப்ஜெக்ட்) பாடநூல்களை தமிழில் கொண்டுவர தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. “இதனைப் பின்பற்றி தேசத்தின் எல்லா பல்கலைக் கழகங்களும் அந்தந்த மொழிகளில் பாடநூல்களைக் கொண்டு வந்தால் இந்திய மொழிகளில் பாடநூல் இல்லை என்ற குறை தீர்ந்து விடும்” என்கிறார் பாரத அரசின் பாரதிய பாஷா சமிதி (இந்திய மொழிகள் குழு) தலைவரும் சமஸ்கிருத மேம்பாட்டு பவுண்டேஷன் பொறுப்பாளருமான பத்மஸ்ரீ சமூ. கிருஷ்ண சாஸ்திரி.
தேசத்தில் 576 பேச்சு வழக்குகள் பாரத அரசின் உள்துறை அமைச்சகம் தாய்மொழி ஆய்வுப் பணியை நிறைவு செய்துள்ளது. அதன் ஆய்வின்படி நாட்டில் 576 மொழிகளும் பேச்சு வழக்குகளும் உள்ளன என்று தெரியவந்துள்ளது.576 மொழிகளின் பேச்சு வழக்குகள், காணொலியில் பதிவு செய்யப்பட்டன. இந்த வீடியோக்கள் தொகுக்கப்பட்டு, தேசிய தகவல் மையத்தின் வலை காப்பகத்தில் சேமிக்கப்பட உள்ளன.
அருஞ்சொல் களஞ்சிய ஆணையம்
‘முடிவெடு, திட்டமிடு, நடத்திக் காட்டு’ (சங்கல்ப ஸே ஸித்தி தக்) என்ற முத்திரை வாசகத்துடன் களமிறங்கியிருக்கும் பிரதமர் மோடியின் வழிகாட்டலில் இது சாத்தியமே என்று தோன்றுகிறது.
தற்போது பொறியியல் படிப்பில் சேர ஜே.இ.இ. தேர்வும் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வும் ஹிந்தி, அசாமியா, வங்காளி, குஜராத்தி, தமிழ்,தெலுங்கு மராட்டி, கன்னடம், மலையாளம், ஒடியா, உருது, பஞ்சாபி ஆகிய 12 மொழிகளில் நடத்தப்படுகின்றன. முதல் கட்டமாக, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பாடங்களுக்கான பாடநூல்களை இந்த 12 மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.
எந்த ஒரு பாடத்தையும் மொழிபெயர்க்கும்போது அருஞ்சொல் கண்டறியும் பணியில் ‘அறிவியல்-தொழில்நுட்ப அருஞ்சொல் களஞ்சிய ஆணைய’ வல்லுநர்கள் வழிகாட்டுதல் வழங்குவார்கள் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ஜெர்மனி, ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் அந்தந்த மக்களின் தாய்மொழியில்தான் கல்வி; பாரதத்தில் எதற்கு ஆங்கிலவழிக் கல்வி?” என்று மக்கள் கேட்கத் தொடங்கியாயிற்று.
முக்கியமான விஷயம், பாரதிய மொழிகள் நாடு நெடுகிலும் கல்வி நிலையங்களில் ஆதிக்க நிலையை அடையும்போது ஆங்கிலம் பரணில் கடாசப் படாவிட்டாலும், ‘Mother Tongue Never, English Ever’ என்பது போன்ற பித்துக்குளித்தனமான போக்குகளுக்கு முடிவு கட்டப்பட்டிருக்கும்!
$$$