பாஞ்சாலி சபதம் -1.1.4

-மகாகவி பாரதி

காப்பிய இலக்கணப்படி, ஹஸ்தினாபுர மன்னனை மகாகவி பாரதி அறிமுகம் செய்கிறார் இந்தப் பகுதியில்... துரியோதனன் இக்காப்பியத்தின் எதிர்நாயகன் ஆயினும் அவனது வல்லமையை எடுத்தியம்புகிறார் கவி.

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.4. துரியோதனன் சபை

கன்னங் கரியது வாய்-அகல்
      காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்,
துன்னற் கினியது வாய்-நல்ல
      சுவைதரும் நீருடை யமுனையெ னும்
வன்னத் திருநதி யின்-பொன்
      மருங்கிடைத் திகழ்ந்த அம் மணிநக ரில்,
மன்னவர் தங்கோ மான்-புகழ்
      வாளர வக்கொடி யுயர்த்துநின் றான்.       15

துரியோ தனப்பெய ரான்,-நெஞ்சத்
      துணிவுடையான்,முடி பணிவறி யான்
‘கரியோ ராயிரத் தின்-வலி
      காட்டிடு வான்’என்றக் கவிஞர்பி ரான்
பெரியோன் வேத முனி-அன்று
      பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்,
உரியோர் தாமெனி னும்-பகைத்
      குரியோர் தமக்குவெந் தீயனை யான்,       16

தந்தைசொல் நெறிப்படி யே-இந்தத்
      தடந்தோள் மன்னவன் அரசிருந் தான்.
மந்திர முணர்பெரி யோர்-பலர்
      வாய்த் திருந் தார்அவன் சபைதனி லே.
அந்தமில் புகழுடை யான்-அந்த
      ஆரிய வீட்டுமன் அறம்அறிந் தோன்.
வந்தனை பெறுங்குர வோர்-பழ
      மறைக்குல மறவர்கள் இருவரொ டே.       17

மெய்ந்நெறி யுணர்விது ரன்-இனி
      வேறுபல் அமைச்சரும் விளங்கிநின் றார்
பொய்ந்நெறித் தம்பிய ரும்-அந்தப்
      புலைநடைச் சகுனியும் புறமிருந் தார்;
மைந்நெறி வான்கொடை யான்-உயர்
      மானமும் வீரமும் மதியுமு ளோன்.
உய்ந்நெறி யறியா தான்-இறைக்கு
      உயிர்நிகர் கன்னனும் உடனிருந் தான்.       18

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s