-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
92. விலகியோடின வினைகள்
.
தூரீக்ருதானி துரிதானி துரக்ஷராணி
தௌர்பாக்ய துக்கதுரஹங்க்ருதி துர்வசாம்ஸி /
ஸாரம் த்வதீயசரிதம் நிதராம் பிபந்தம்
கௌரீச’ மாமிஹ ஸமுத்தர ஸத்கடாக்ஷை: //
.
கெடுவினை கெட்டெழுத்து கெடுநேர்ச்சி கடுந்துயர்
கெடுதன்மை கெடுவார்த்தை விட்டனவே கௌரீசா!
சுவைமிகு நின்சரிதம் இடைவிடாது அருந்துமெனை
கடைநோக்கால் இவ்விடமே இக்கணமே காப்பாயே!’
.
சிவபெருமானின் திருவடித் தாமரைகளை தியானிப்பதால் அறியாமை அகன்று, ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் மொழிந்த ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பரமஸே்வரரின் திருவிளையாடல் புராணங்களைக் கேட்பதால் பாவங்கள், தீமைகள் அனைத்தும் நம்மைவிட்டு விலகியோடும் என்பதை விண்டுரைக்கிறார்.
.கௌரி அம்மையுடன் கூடிய ஈசனே, நினது அருளால் பக்தனாகிய எனது தீயவினைகள் (பாவச் செயல்கள்), எனக்குக் கெடுதி விளைவிக்கும் கெட்ட தலையெழுத்து (விதி), கெடுதலான நிகழ்வுகளையே தொடர்ந்து தருகின்ற துரதிருஷ்டம், கடுமையான துன்பங்கள், கெடுதலை விளைவிக்கும் ஆணவ மனப்பான்மை, கெட்ட வார்த்தைகள் ஆகிய அனைத்தும் விலகி விட்டன. சிவபெருமானே, உமது திவ்ய சரிதமாகிய அமுதத்தை இடைவிடாது பருகுவதால் எனக்கு இந்த நன்மை நேர்ந்தது. இதுமட்டும் போதுமா? உடனடியாக உமது கடைக்கண் பார்வையால் இப்பொழுதே ஆட்கொண்டு கைதூக்கிவிட வேண்டும் என்று பக்தன் சார்பில் வேண்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
இதற்கு ஏதுவாக, சிவபெருமானின் திருவடித்தாமரைகள் மீதான பக்தி, பக்தனைக் கடைத்தேற்ற வல்லது என்பதை அப்பர் சுவாமிகள், “அல்லல் என்செயு மருவினை என்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கு எல்லை இல்லதோர் அடிமைபூண் டேனுக்கே” என்ற தேவாரப் பாடல் மூலம் எடுத்துரைக்கிறார்.
$$$