-உ.வே.சாமிநாதையர்

9. அம்பலவாண முனிவரிடம் பாடங்கேட்டல்
திருவாவடுதுறை சென்றது
இப்படி இவர் திருச்சிராப்பள்ளியில் இருந்து வருகையில், திருவாவடுதுறை யாதீனத் தலைவராகிய வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துக்கொண்டு வரவேண்டுமென்னும் விருப்பம் இவருக்கு உண்டாயிற்று; ஒருநாள் அங்ஙனமே புறப்பட்டுத் திருவாவடுதுறைக்கு வந்துசேர்ந்தார். வந்தகாலத்தில் அவர் சில தினத்துக்குமுன்பு *1 பரிபூரண தசையையடைந்து விட்டதாகத் தெரிந்தமையால், “இனி அறியவேண்டிய அரிய விஷயங்களை எவ்வண்ணம் தெரிந்துகொள்வோம்? யார் சொல்வார்கள்? எல்லாமுடனே கொண்டேகினையே” என்று அவரைப்பற்றி வருந்தித் தம்முடைய வருத்தத்தைச் சில செய்யுட்களாலே புலப்படுத்தினர். அப்பால் அங்கே பதினைந்தாம் பட்டத்தில் ஆதீனத் தலைவராக விளங்கிய ஸ்ரீ அம்பலவாண தேசிகரைச் சில பெரியோர்கள் முகமாகத் தரிசித்துப் பழக்கஞ் செய்துகொண்டார். அவர் திருமந்திரம் முதலிய நூல்கள், சைவசித்தாந்த சாஸ்திரங்கள், சித்த நூல்கள் முதலியவற்றைத் தக்கவர்களை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து வந்தமையின் அவரிடம் வேண்டியவற்றை எளிதில் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஆதீனத்திற் பரம்பரைக் கேள்வியையுடைய பெரியோர்களிடம் நூதனமாக அரிய நூல்களைப் பாடங்கேட்க எண்ணி அதற்கு ஏற்ற பெரியார் யாரென்று இவர் விசாரித்த பொழுது அங்கேயுள்ளவர்கள் அம்பலவாண முனிவரென்ற பெரியாரே அதற்குத் தக்கவரென்று சொன்னார்கள்.
அம்பலவாண முனிவர் இயல்பு
அவர் வடமொழி தென்மொழி யிரண்டிலும் முறையான பயிற்சியுடையவர். பல சிவபுராணங்களிலும் பல பிரபந்தங்களிலும் சைவ சாஸ்திரங்களிலும் அவருக்கு நல்ல ஆராய்ச்சி உண்டு. சிறந்த ஒழுக்கமுடையவர். இடைவிடாமற் படித்தலிலேயே காலத்தைப் போக்குபவர். மடத்திற் பல தமிழ்நூல்கள் கிடைக்குமாயினும் ஒவ்வொன்றையும் ஒரே அளவுள்ள சுவடிகளில் எழுதி வைத்துக் கொள்வதில் அவருக்குத் திருப்தியதிகம். அவ்வாறு அவர் எழுதிய சுவடிகள் மிகப் பல. அவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவராக விருந்தாலும் உலகப்பயிற்சியே இல்லாதவர். யாருக்கேனும் பாடஞ்சொல்லுதலில் அவர் பழகவில்லை. அவர் 96 பிராயத்திற்கு மேற்பட்டு வாழ்ந்திருந்தவர். ஸ்ரீ சூரியனார் கோயிலிலுள்ள ஸ்ரீ சிவாக்கிரயோகிகள் மடத்துத்தலைவராக அம்பலவாண தேசிகராற் பின்பு நியமிக்கப்பெற்றவர்.
அம்பலவாண முனிவரிடம் பாடங்கேட்டது
பிள்ளையவர்கள் ஏனையோர்களால் தூண்டப்பெற்று அவரிடம் சமயம் பார்த்துச் சென்று வந்தனஞ்செய்து தம்முடைய மனக்குறையைத் தெரிவித்துக்கொண்டார். அவர், “மற்றொரு சமயம் வாரும்; யோசித்துச் சொல்லுவோம்” என்றார். அப்படியே மறுநாட்காலையில் இவர்போய் வந்தனஞ் செய்துவிட்டு அவருடைய கட்டளையை எதிர்பார்த்துக்கொண்டு நின்றார். “நல்லது; இரும்” என்று அவர் சொல்ல இவர் இருந்தார். “நீர் என்ன என்ன படித்திருக்கிறீர்?” என்று அவர் கேட்டார். இவர் தாம் படித்தவற்றுள் சில நூல்களின் பெயர்களைச் சொன்னார். “அவற்றைச் சிறந்த கல்விமான்களிடம் முறையாகப் பாடங்கேட்டிருக்கிறீரா?” என்று அவர் வினவினார். இவர், “இவ்விடமிருந்து திருச்சிராப்பள்ளிக்கு எழுந்தருளிச் சில மாதங்களிருந்த ஸ்ரீவேலாயுத சாமியிடத்தும் வேறு சிலரிடத்தும் ஏதோ ஒருவாறு சிலசில நூல்களைக் கேட்டதுண்டு. எனக்குள்ள சந்தேகங்கள் பல. அவற்றையெல்லாம் சாமிகளே தீர்த்தருள வேண்டும்” என்று விநயத்தோடு தெரிவித்தார். வேறு பலரிடம் இவர் பாடங்கேட்டிருந்தனராயினும், அந்த மடத்தின் தொடர்புடையாரைச் சொன்னால் முனிவருக்குப் பிரீதி உண்டாகுமென்று எண்ணியே இங்ஙனம் கூறினார். அவர், “இந்த ஆதீனத்துச் சிஷ்யர்களுக்கே நாம் பாடஞ் சொல்லுவோமேயல்லாமல் மற்றவர்களுக்குச் சொல்லுவதில்லை; அது முறையுமன்று” என்று கண்டிப்பாகச் சொன்னார். இவர், “அடியேன் சாமிகளுடைய சிஷ்ய பரம்பரையைச் சார்ந்தவன்தானே? இப்பொழுது அடியேன் கேட்கப்போவதும் சாதாரணமான நூல்களிலுள்ள சிலவற்றின் கருத்துக்களேயல்லாமல் சைவசாஸ்திரங்களல்ல” என்று பலமுறை மன்றாடவும், அவர் சிறிதும் இணங்கவில்லை. “ஒவ்வொரு நூலையும் எவ்வளவோ சிரமப்பட்டு நாங்களெல்லோரும் கற்றுக்கொண்டு வந்தோம். அவற்றை மிகவும் எளிதிற் கற்றுக்கொண்டு போகலாமென்று வந்திருக்கிறீரோ?” என்று சொன்னார். சொல்லியும் இவர் விடாமற் சென்று சென்று பாடங்கேட்டதற்கு முயன்றுகொண்டே வந்தார்; சில தினங்கள் இங்ஙனஞ் சென்றன. விடாமல் அலைந்தலைந்து இவர் கேட்டுக்கொள்வதைத் தெரிந்து ஒருநாள் மனமிரங்கி அவர், “இங்கே நீர் முதலிற் படிக்க வேண்டிய நூல் என்ன?” என்று கேட்டனர். “இப்பொழுது கம்பரந்தாதியே” என்றார் இவர். முனிவர், “நல்லது, ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு வாரும்” என்றார்.
அப்படியே நல்லநாள் பார்த்துக்கொண்டு இவர் சென்றார். அப்போது அவர் புத்தகங் கொணர்ந்தீராவென்று கேட்டார். இவர் இல்லையென்றார். அவர் சென்று தம்முடைய புத்தகத்தையெடுத்து வந்து கொடுத்தார். இவர் இருந்தபடியே அதை வாங்கிக்கொள்ள ஆரம்பித்தபொழுது அவர், “என்னகாணும், உமக்குச் சம்பிரதாயம் தெரியவில்லை! நீர் முறையாகப் பாடங் கேட்டவரல்லரென்பது மிகவும் நன்றாகத் தெரிகின்றது. இதற்காகத்தான் நாம் பாடஞ் சொல்ல மாட்டோமென்று முன்னமே சொன்னோம். நமக்குக் குற்றமில்லை. இப்படிப்பட்டவர்களுக்குப் பாடஞ்சொன்னால் இடத்தின் கௌரவம் போய்விடுமே” என்று சினக்குறிப்புடன் சில வார்த்தைகள் சொன்னார். இவர், ‘வெண்ணெய் திரண்டு வருகையில் தாழியுடைந்ததுபோல நாம் நல்ல பயனையடையக்கூடிய இச்சமயத்தில் கோபம் வந்துவிட்டதே! என்ன விபரீதம்? இதற்குக் காரணம் தெரியவில்லையே!’ என்று மனம் வருந்தி, “சாமீ, அடியேன் புத்திபூர்வமாக யாதொரு தவறும் செய்யவில்லையே; அப்படி ஏதேனும் அடியேன் செய்திருந்தால், அதனை இன்னதென்று கட்டளையிட்டால் நீக்கிக் கொள்ளுவேன். அடியேன் நடக்க வேண்டிய நல்வழிகளையும் கற்பித்தருளல் வேண்டும்” என்று பலமுறை பிரார்த்தித்தார். அவர், “நாம் கொடுத்த புத்தகத்தை நீர் இப்படியா வாங்குகிறது?” என்றார். இவர், “எப்படி வாங்குகிறது? கட்டளையிட்டருள வேண்டும்” என, அவர், “இங்கே தம்பிரான்களிடத்திற் படித்துக் கொண்டிருக்கும் குட்டித் தம்பிரான்கள் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டு வரும், போம்” என்றார். இவர், “அங்குத்தியே அந்த ஸம்பிரதாயத்தை விளங்கச் சொல்ல வேண்டும்” என்று பலமுறை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். அவர், “நூதனமாகப் படிக்கத் தொடங்கும்பொழுது ஆசிரியர்களைப் பத்திர புஷ்பங்களால் முதலில் அர்ச்சித்து வந்தனங்கள் செய்து புஸ்தகத்தைப் பெற வேண்டும்; அப்பால் சொல்லெனச் சொல்லல் வேண்டும்” என்று சொன்னார். உடனே இவர் பத்திரபுஷ்பங்களைக் கொணர்ந்து அர்ச்சித்து வந்தனங்கள் செய்து நின்றார். அவர் புஸ்தகத்தைக் கொடுத்தனர். அதைப் பெற்றுக்கொண்டு மறுமுறை வந்தனஞ்செய்து புஸ்தகக்கயிற்றை அவிழ்த்துப் படிக்கத் தொடங்கியபொழுது அவர், “நில்லும்; பூசைக்கு நேரமாகிவிட்டது; நாளைக் காலையில் வாரும்” என்றார். இவர், “நல்ல வேளையில் தொடங்கிவிட வேண்டாமோ?” என்றார். “நாம் நல்ல வேளையிற் புத்தகத்தைக் கொடுத்துவிட்டோம். அதுவே போதியது” என்று சொல்லி உடனே அவர் எழுந்து போய்விட்டனர்.
அதன்பின் இவர் அங்கே படித்துக் கொண்டிருக்கும் மாணாக்க ரொவ்வொருவரும் இங்ஙனமே வழிபாட்டோடு தத்தம் பெரியோரிடத்திற் கற்றுக்கொண்டு வருதலையறிந்து தாமும் இங்ஙனமே செய்ய வேண்டுவதுதான் முறையென்று நிச்சயித்துக்கொண்டார். பின்பு தம்முடைய உறைவிடஞ்சென்று ஆகாராதிகளை முடித்துக்கொண்டு கம்பரந்தாதியின் முதலைம்பது பாடல்களை ஒரு சுவடியிற் பெயர்த்தெழுதிக்கொண்டார். மறுநாட்காலையில் அவரிடம் சென்று முன்கூறிய வண்ணம் அர்ச்சித்து வந்தனங்கள் செய்து அப்பால் அவருக்கு விசிறிப்பணிவிடை செய்துகொண்டு நின்றார். அதனால் மிக்க மகிழ்ச்சியுற்ற அவர், “நல்லது; இருந்து படியும்” என்ன, இவர் இருந்து முதற்செய்யுளைப் படித்தார். இவர் பாடங்கேட்கத் தொடங்கினாலும் தெரிந்துகொள்ள வேண்டிய பாகம் மிகச் சிலவாகவே யிருக்குமென்பதை அவர் தெரிந்துகொள்ளாமல் அச்செய்யுளைப் பதம்பதமாகப் பிரித்து விரிவாக அர்த்தஞ்சொல்லி நெடுநேரம் போக்கினர். இந்த முறையில் அந்நூல் சில தினங்களில் முற்றுப் பெற்றது. அதனைக் கேட்டுவருகையில் சைவசாத்திரக் கருத்துக்களை நுணுகி இவர் வினாவுவாராயின் முனிவர், “இப்பொழுது இதனைச் சொல்லக் கூடாது; பின்பு பார்த்துக் கொள்ளலாம்” என்பர். பலநாளிருந்தும் அந்த ஒரு நூலுக்குமேல் அப்பொழுது ஒன்றும் கேட்க இயலவில்லை.
அப்பால் இவர் அந்த நூல் முற்றுப்பெற்றதையும் அதிலுள்ள அரிய விஷயங்களைத் தெரிந்துகொண்டதையுமே பேரூதியமாக நினைந்து மகிழ்ந்தனர்; ‘இந்த ஆதீன சம்பந்தமுள்ள இவ்வம்பலவாண முனிவர் நமக்கு வித்தியாகுருவாகக் கிடைத்ததே பெரும்பயன்’ என்று ஆறுதலுற்றனர். பின்பு அவர்பால் விடைபெற்றுக்கொண்டு திரிசிரபுரம் வந்து சேர்ந்தார். அவரிடம் பாடங்கேட்டதை மறவாமல், பின்பு இவர் செய்த தியாகராச லீலையில் அம்முனிவரைத் துதித்துள்ளார். அச்செய்யுள்,
“மின்னுமான் மழுவும் வெவ்வழல் விழியும் மிளிர்கறைக் கண்டமு மறைத்துப்
பன்னுமா னிடமாய் வந்தெனை மறைத்த பழமல வலிமுழு தொழித்து
மன்னுமா னந்தம் புணர்த்தியாள் கருணை வள்ளலா வடுதுறைப் பெருமான்
முன்னுமா தவர்சொ லம்பல வாண முனிவர னிணையடி போற்றி”
-என்பது. அக்காலத்தில் ஆதீனத்திலிருந்த ஞானாசிரியரைத் துதிப்பதாக விருந்தால் அம்பலவாண தேசிகர் என்று அமைத்திருப்பார்; முனிவரென்றல் ஆதீன ஸம்பிரதாயமன்று.
திரிசிரபுரம் வந்தபின்பு இவர் திருவாவடுதுறைக்கு அடிக்கடி சென்று அங்கே கல்வி கேள்விகளிற் சிறந்திருந்த தம்பிரான்களோடு பழகித் தமக்குள்ள ஐயங்களை வினாவித் தெளிந்துகொள்வார். அவரிடத்தும் அங்கே உள்ள தம்பிரான்களிடத்தும் சைவ சாஸ்திரங்களை உரைகளுடன் முறையே பாடங்கேட்டுத் தெளிந்தனர். அங்ஙனம் தெளிந்ததை இவர் பின்பு இயற்றிய பிரபந்தங்களிலும் காப்பியங்களிலும் அமைந்துள்ள சைவ சாத்திரக் கருத்துக்கள் புலப்படுத்தும்.
.
அடிக்குறிப்பு மேற்கோள்:
1. பரிபூர்ண தசையை அடைந்தது குரோதி வருஷம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம்.
$$$