-மகாகவி பாரதி
அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! நமது நாடு ஏன் அடிமைப்பட்டது என்று சிந்தித்த மகாகவி பாரதி, சமூகத்தின் ஒரு பகுதியான அடித்தட்டு மக்களை பஞ்சமர்கள், தீண்டத் தகாதோர் என்று ஒதுக்கி வைத்த பாவமே அடிப்படைக் காரணம் என்று கண்டறிகிறார். ஈனம் என்று கூறப்படும் ஜாதியாரை ஆதரித்து அவர்களை உயர்த்துவதே தேசம் உய்யும் வழி என்கிறார் இக்கட்டுரையில். ஒரு கதை போல எழுதி, இறுதியில் அற்புதமான அறவுரையை முத்தாய்ப்பாக வைத்திருக்கிறார் பாரதி. சுதந்திர நன்னாளில் அவரது அறவுரையை அறிவுரையாக ஏற்போம். நாட்டைக் காப்போம்!

ஒரு தேசத்தில் ஒரு கோட்டையிருந்தது. அதற்குப் பஞ்சகோணக் கோட்டை என்று பெயர். அதாவது அந்தக் கோட்டைக்கு ஐந்து மூலைகளும் ஐந்து பக்கங்களும் உண்டு. அந்தக் கோட்டையை வெகுகாலமாய் எந்தச் சத்துருவாலும் பிடிக்க முடியவில்லை. அதை அழிவற்ற கோட்டை என்று உலகத்தோர் புகழ்ந்து வந்தார்கள். முன்பக்கம் ஆழமான கரும்பாறையே அஸ்திவாரமாயிருக்க, அதன்மேல் பெரிய பெரிய கற்களால் ஆகாயமளவாக் கட்டப்பட்டிருந்தது. கற்கள் ஒன்றில் ஒன்றாகப் பதிக்கப்பட்டுப் பின்னல் வரிசைகளாய் இருந்தன. ஒரு கவரைப் பேர்த்தால்தான் ஒரு கல்லைப் பேர்க்க முடியும். இவ்விதமாக நான்கு பக்கங்களும் மிகுந்த பலத்தோடும் கூடி அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால் பின்பக்கமாகிய ஐந்தாம் பக்கம் மாத்திரம் பலமற்றதாய் இருந்தது. அந்தப் பக்கத்தில் மண்சுவர்தான் இருந்தது.இந்த ரகசியம் வெகுகாலமாய் ஒருவருக்கும் தெரியாமல் இருந்தது. அந்தக் கோட்டையைப் பிடிக்கவந்த வீரசேனர்கள் எல்லாம் பலமான பக்கங்களைத் தாக்கி அபஜயமடைந்து போனார்கள். அதனால் அந்தக் கோட்டையின் கீர்த்தி உலகமெங்கும் பரவிவிட்டது.
இவ்வாறிருக்கும் காலத்தில் அந்தக் கோட்டைக்குள் சினேகமாய்ப் புகுந்த ஒரு அன்னியன் வெகுகாலமாய் அங்கிருந்ததால் அந்தக் கோட்டையின் பலஹீனமான பக்கம் இன்னதென்று அறிந்து கொண்டான். பலமான நாலு பக்கங்களும் பலஹீனமான மண் சுவராலாகிய ஐந்தாம் பக்கத்தை மிக இழிவாக மதித்து நடத்தி வந்தன. கல்சுவர்களுக்கும் மண் சுவர்க்கும் பொருத்தம் இருக்குமா?
அந்தக் கோட்டையைச் சுற்றி மிகவும் ஆழமான அகன்ற அகழ் ஒன்று இருந்தது. ஆனால், பின்பக்கம் இருந்தது மண் சுவராகையால் அதையடுத்திருந்த அகழின் பாகம் ஆழமில்லாமல் மேடாய் இருந்தது. அகழின் ஜலம் சிறிது வற்றுங் காலத்தில் மண் சுவர்ப் பக்கம் தரை தெரியும்படி வற்றிப் போகும்.
இந்த மர்மங்களையெல்லாம் அறிந்த அன்னியன் ஒரு சிறிய படையைத் திரட்டிக் கொண்டு வந்து அகழ் ஜலம் வற்றியிருந்த மண் சுவர்ப்பக்கம் இறங்கி அந்தச் சுவரைத் தாக்கி, அதைக் கைவசப்படுத்திக் கொண்டு கோட்டையைப் பிடித்துக் கொண்டான். கோட்டையில் இருந்த அளவற்ற நிகரற்ற செல்வங்களை எல்லாம் தன் தேசத்திற்கு வாரிக்கொண்டு போனான்.
வீராதி வீரர்களுக்கெல்லாம் கைவசப்படாத இந்தக் கோட்டையைப் பிடித்த காரணத்தாலும் அதிலிருந்து வாரிக் கொண்டுபோன செல்வத்தின் உடைமையாலும் அந்த அன்னிய ஜாதியார் உலகத்தில் தலையெடுத்துக் கீர்த்தி பெற்று வாழ்ந்தார்கள். உண்மையை அறியாத உலகத்தோர் கோட்டை முற்றிலுமே பலமற்றதாய் இருந்திருக்க வேண்டுமென்றும் அல்லது அதைக் கைவசப்படுத்திக் கொண்ட அன்னியர் மகாவீரர்களாய் இருக்க வேண்டும் என்றும் பேச ஆரம்பித்தார்கள். கோட்டைக்குள் இருந்தவர்களில் பலரும் அவ்வாறே மதிமயங்கிப் பிதற்றினார்கள்.
தெய்வானுகூலத்தால் கோட்டைக்குரியவர்களில் அனேகருக்குச் சுய அறிவு வந்து, பலஹீனம் இந்த இடத்தில்தான் இருக்கிறதென்று தெரிந்து கொண்டார்கள். உடனே அவர்கள் அந்த மண் சுவரைக் கற்சுவராய்க் கட்ட ஆரம்பித்தார்கள். அப்படிச் செய்ய வொட்டாமல் அவர்களைப் பலவித உபாயங்களாலும் அந்த அன்னியர்கள் தடுத்தார்கள்.
எனினும் அவர்கள் விடாமுயற்சியோடும் ஒற்றுமையோடும் வேலை செய்துவந்ததால் காரிய சித்தி பெற்றார்கள். ஐந்து பக்கங்களும் பலப்பட்டு ஒரே கற்கோட்டையாய்ப் போகவே அது முன்னிலும் அதிகமாய் உறுதி அடைந்து, உலக முற்றிலும் அழிந்தாலல்லது அழியாத கோட்டையாய் விட்டது.
நம்மருமைச் சிறுவர்களே! இந்தக் கதையின் உட்பொருள் இன்னதென்று உங்களுக்குத் தெரியுமா? பாரத தேசத்தாராகிய நாமே அந்தப் பஞ்சகோணக் கோட்டையாவோம். கற்சுவர்கள் நாலும் மேலான ஜாதிகள். மண் சுவர் பஞ்சமர் என்ற ஐந்தாம் ஜாதியார். கோட்டையைச் சூழ்ந்து இருக்கும் அகழ் சுதேசாபிமானம்.
பஞ்சமர்களை நாம் எவ்வளவு அனாதரவாயும் கொடுமையாயும் நடத்தி வருகிறோம்! மேல்குலத்தார் குடியிருக்கும் தெருக்களில் அவர்கள் குடியிருக்கக் கூடாதென்று தடுக்கிறோம். அவர்களை நாம் தொட்டாலே பாவம் வந்து விடும் என்று விலகி யோடிப்போகும்படி ஏவுகிறோம்.
விராட் புருஷனுடைய அங்கமாகிய ஒரு வகுப்பாரை ஈன ஜாதியாரென்று நிராகரித்துத் தள்ளிவிடல் தர்ம மாகுமோ? அது ஈஸ்வர சம்மத மாகுமா?
ஒரே தேசத்தில் எத்தனையோ யுகங்களாய் வசித்துவரும் நமது சகோதரர்களாகிய பஞ்சமர்களை நாம் அவ்வாறு நடத்திவந்தால், அவர்களுக்குச் சுதேசாபிமானம் எவ்வாறு ஏற்படும்? அன்னியர்கள் அவர்களை நாம் நடத்துவதைக் காட்டிலும் மேலாக நடத்தினால், அவர்கள் அந்த அன்னியர்களுக்கு வசப்பட்டுப் போகிறார்கள்.
கடவுள் எல்லாரையும் சமமாகவே சிருஷ்டித்தார். கடவுள் முன்னிலையில் ஜாதி வித்தியாசம் நிற்குமா? நல்வினைக்கு நற்பலனும் தீவினைக்குத் தீயபலனும் சித்தித்தல் அனாதியான பிரமாணம்.பஞ்சமர்களை நாம் எவ்வாறு சகிக்க முடியாத கொடுமைக்கிடமாக நடத்தினோமோ அவ்வாறே நம்மையும் அன்னியர் நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
இனியேனும் நாம் ஈன ஜாதியாரை ஆதரித்து, அவர்களுக்குக் கல்வி புகட்டி, சுசீலமான வழக்கங்களை அவர்கள் அனுசரிக்கும்படி செய்து, அவர்களையும் நாகரீகத்தில் நமக்குச் சமமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டால் நம்மை வெல்ல வல்லவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருப்பார்களோ?
- இந்தியா (02.01.1909)
$$$