அரவிந்தர் ஐ.சி.எஸ். ஆகாதது ஏன்?

-திருநின்றவூர் ரவிகுமார்

அரவிந்தரின் தந்தை டாக்டர் கிருஷ்ண தன கோஷ் இங்கிலாந்தில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்குச் சென்றார். ஏற்கனவே ஆங்கில மோகம் கொண்ட அவர் மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்று இந்தியா திரும்பி வந்தபோது முற்றிலும் ஆங்கிலேயர் போலவே மாறியிருந்தார். அவர் தனது பிள்ளைகள் மூவரையும் (விநயபூஷண் கோஷ், மன்மோகன் கோஷ், அரவிந்த கோஷ்) இங்கிலாந்தில் படிக்கவைக்க நினைத்தார்.

அவர் ரங்கபூரில் அரசு மருத்துவராக இருந்தபோது அங்கிருந்த மாஜிஸ்திரேட் கிளாஸியருடன் நண்பராக இருந்தார். கிளாஸியரின் மருமகன் இங்கிலாந்தில் கிறிஸ்துவப் பாதிரியாராக இருந்தார். அவரது பெயர் வில்லியம் ட்ரூவெட். கிருஷ்ண தன கோஷ், மகன்கள் மூவரையும் ட்ரூவெட்டிடம் ஒப்படைத்து கல்விக்கு ஏற்பாடு செய்தார். அதற்காக மாதந்தோறும் 360 பவுண்ட் அனுப்ப ஒப்புக்கொண்டார்; சில ஆண்டுகள் அனுப்பவும் செய்தார்.

ஆனால் வீட்டுச் செலவுகள் அதிகரித்து விட்டதாலும், பிறருக்கு உதவுவதில் அவர் மிகவும் தாராளமாக இருந்ததாலும், அவரால் மான்செஸ்டரில் படித்துக்கொண்டிருந்த தன் மகன்களுக்காக பணத்தை ஒழுங்காக அனுப்ப முடியவில்லை. பாதிரியார் ட்ரூவெட் ஆஸ்திரேலியா போகும் வழியில் இந்தியா வந்து பாக்கி பணத்தை வசூலித்துக்கொண்டு போனார்.

இதனிடையே டாக்டர் கிருஷ்ண தன கோஷ் குடிகாரராகவும் ஆகிவிட்டார். அவரது மனைவிக்கு புத்தி பேதலித்து விட்டது. இது இங்கிலாந்தில் இருந்த மகன்களுக்கும் தெரியும். அவர்கள் தங்கள் கஷ்டங்களை தந்தைக்கு எழுதவில்லை. தங்கள் படிப்பு பற்றியும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பாராட்டுக்கள் பற்றியும் மட்டுமே எழுதினார்கள்.

தந்தையைப் பற்றி மகன்கள் உயர்வான மதிப்புடனே இருந்துள்ளனர் என்பது அவர்கள் எழுதிய கடிதங்களில் இருந்து தெரியவருகிறது. அதேபோல மகன்களைப் பற்றி, குறிப்பாக அரவிந்த கோஷ் பற்றி, தந்தையும் மேலான அபிப்ராயமே கொண்டிருந்தார் என்பது, அவர் தன் மைத்துனருக்கு எழுதிய கடிதங்களில் வெளிப்படுகிறது.

அரவிந்த கோஷ் படிப்பில் கெட்டிக்காரர். லத்தீன், பிரஞ்சு, கிரேக்க மொழிகளில் ஏறத்தாழ எல்லாப் பரிசுகளும் அவருக்குக் கிடைத்தன. அது மட்டுமன்றி அவருக்கு ஆண்டுக்கு 80 பவுண்ட் (சீனியர் கிளாசிகல் ஸ்காலர்ஷிப்) உதவித்தொகை கிடைத்தது. அவர் ஐ.சி.எஸ். படிப்புக்குத் தேர்வு எழுதினார். அதில் பதினோராவது ஆளாகத் தேர்ச்சி பெற்றார். அதற்காகவும் அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.இது சகோதரர்களின் பணப் பிரச்னையை ஓரளவு தீர்த்தது.

தந்தை (கொஞ்சம்) பணம் அனுப்பும் போதெல்லாம் ஆடம்பரச் செலவு செய்கிறீர்கள் என்று அலுத்துக்கொண்ட கடிதமும் உடன் வந்தது. என்றாலும் அவர்கள் மூன்று வேளை அல்ல, இரண்டு வேளை கூட நன்றாக சாப்பிட முடியாத நிலையிலும், குளிருக்குத் தேவையான கம்பளி ஆடைகள் இல்லாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனாலும் மனம் சோராமல் உற்சாகமாகவும் இருந்தார்கள்.

அரவிந்த கோஷுக்கு லண்டனில் இந்திய விடுதலைப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார்; தீவிரமாகப் பேசினார்; ‘தாமரையும் குத்துவாளும்’ என்ற தீவிரவாத அமைப்பில் சேர்ந்து தேச விடுதலைக்காகப் போராட உறுதிமொழி ஏற்றார். அந்த அமைப்பு முதல் கூட்டத்துடன் முடிந்து போனாலும், உறுதிமொழியை அரவிந்த கோஷ் மறக்கவில்லை. இவற்றையெல்லாம் ஆங்கில அரசும் கண்காணித்துக் கொண்டே இருந்தது.

ஐ.சி.எஸ். தேர்வில் இரண்டு விஷயங்களில் அரவிந்த கோஷுக்கு பிரச்னை ஏற்பட்டது. ஒன்று உடல் ஆரோக்கியம்; மற்றது குதிரை சவாரி. உடல் ஆரோக்கியம் பிரச்னையில் பின்னர் அவர் தேர்வு பெற்றார். ஆனால் குதிரை சவாரியில்? அதுபற்றி பிற்காலத்தில் அவரே கூறியுள்ளார்:

“குதிரை சவாரியில் தேர்ச்சி பெறாமல் போனதற்கு என் தந்தையும் ஓரளவு காரணம். அவர் பணம் அனுப்பவில்லை. அந்தக் காலத்தில் கேம்பிரிட்ஜில் குதிரை ஏற்றம் கற்பது மிகவும் செலவான விஷயம். மேலும் அதைக் கற்பிக்கும் ஆசிரியர் பணம் வாங்கியதும் குதிரையை என்னிடம் விட்டுவிட்டுப் போய்விடுவார். எனக்கும் குதிரை ஏற்றம் கற்பதில் ஆர்வம் இல்லை.”

-இது அவர் பாண்டிச்சேரியில் இருந்தபோது ‘மாலை நேர உரை’யில் சொல்லியது.

குதிரை ஏற்றத் தேர்வுக்கு நான்கு முறை அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் போகவில்லை. அதைத் தெரிந்துகொண்ட அவரது அண்ணன் கடுமையாகத் திட்டியதை, ‘ஓநாய் போல் ஊளையிட்டான்’ என்று அவர் கிண்டலாகச் சொல்கிறார்.

அரவிந்த கோஷ் ஐ.சி.எஸ். படிப்பைத் தேர்ந்தெடுத்தது, தன் தந்தையின் விருப்பம் காரணமாகவே. அவருக்கு ஐ.சி.எஸ்.ஸில் அதிக நாட்டம் இல்லை. அதில் தேர்வு ஆகவில்லை என்றபோது பெரிய விடுதலை என்றே கருதினார். ஆங்கில ஆட்சியில் ஒரு அதிகாரியாக வேலை செய்ய அவர் சிறிதும் விரும்பவில்லை. அவரது தந்தையோ அரவிந்த் ஐ.சி.எஸ். அதிகாரியாகி ஆட்சி முறையை மாற்றி விடுவார் என்ற எண்ணத்தில் இருந்தார்.

அரவிந்த கோஷ் ஐ.சி.எஸ். தேர்ச்சி பெறாதது அவரது ஆசிரியரான பிராத்திரோவுக்கும் அரவிந்தரின் நண்பரான சர் ஜேம்ஸ் காட்டனும் மனவருத்தம் தான். அவர் எழுதிய கடிதத்தில்,

“அரவிந்த கோஷ் போன்ற நற்பண்புகளும் திறமையும் கொண்டவர் தேர்ந்தெடுக்கப்படாமல் போனது (ஆங்கில) இந்திய அரசுக்கு ஏற்பட்ட துரதிஷ்டம் தான். ஒருவர் குதிரை மீது அமரவில்லை என்பதற்காக தகுதியற்றவர் என்பது அரசின் குறுகிய பார்வையை வெளிப்படுத்துகிறது. அரசின் இந்தப் பார்வையை எப்படி மாற்றுவது என்றே தெரியவில்லை. அரவிந்தர் தேர்ந்தெடுக்கப்படாதது அரசுக்குத் தான் இழப்பு” 

– என்று பிராத்திரோ குறிப்பிடுகிறார்.

அரவிந்த கோஷின் அண்ணன் விநயபூஷண் கோஷும் சர் ஜேம்ஸ் காட்டனும் அவரை வற்புறுத்தி இங்கிலாந்தில் இருந்த இந்தியாவுக்கான செயலாளர் கிம்பர்ளி பிரபுவுக்கு மறுவாய்ப்புக் கோரி மனுப் போட வைத்தனர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இணைச் செயலாளராக இருந்த ஜி.டபிள்யூ.ரசல் என்பவரும் இந்தியச் செயலாளருக்கு, ‘இவர் முற்றிலும் தகுதியானவராகவே தெரிகிறார். வறுமை மட்டுமே இவர் தேர்வுக்கு வராததற்கு காரணம் நான் நம்புகிறேன்’ என்று கடிதம் எழுதினார்.

ரசலுக்கு இந்தியச் செயலாளர் எழுதிய பதில் கடிதத்தில், “நீங்கள் சொல்லியது போல் ஒரு பரிவான பார்வையைப் பார்க்க என்னால் முடியவில்லை. அதற்காக எனது வருத்தத்தை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரைத் தேர்வு செய்யாததால் அரசுக்கு இழப்பு ஒன்றும் இல்லை” என்று தெனாவட்டாக எழுதியிருந்தார்.

குதிரையேற்றத்துக்கு அரவிந்த கோஷ் வராதது ஆங்கில அரசுக்கு சிறு காரணம் மட்டுமே. இதேபோன்ற சூழ்நிலையில் மற்ற சிலரைப் பணியில் சேர்ந்துக்கொண்ட பிறகு இந்தியாவில் போய் குதிரையேற்றத் தேர்வு நடத்தலாம் என்று சலுகை காட்டப்பட்டது. அரவிந்த கோஷுக்கு மறுக்கக் காரணம், இந்திய மஜ்லிஸில் அவர் பேசிய பேச்சுக்களும், ‘தாமரையும் குத்துவாளும்’ என்ற அமைப்பில் (அது செத்துப் பிறந்த அமைப்பு என்று பின்னர் அரவிந்தர் குறிப்பிட்டுள்ளார்) சேர்ந்ததுதான் என்று பின்னர் தெரிய வந்தது.

இந்தியச் செயலாளரின் இறுதியான மறுப்பு ஆணைக்குப் பிறகுதான் நிறுத்தி வைக்கப்பட்ட அவருடைய பாக்கி உதவித்தொகையான 150 பவுண்டுகள் வழங்கப்பட்டன. ஆங்கில அரசு அதிகாரியாக தான் தேர்வு செய்யப்படாதது இறைவனின் விருப்பம் என்று பிற்காலத்தில் அரவிந்தர் குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்தர் மாத்திரமல்ல, திலகரும் அப்படித்தான் கருதினார். இது பின்னாளில் அவர் ‘கேசரி’ (என்றால் சிங்கம் என்று பொருள்) பத்திரிகையில், “அரவிந்தரைப் போன்றோர் தேசிய இயக்கத்தில் சேர்ந்துள்ளது கடவுளின் கருணையே. ஐ.சி.எஸ்.ஸுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படாதது, நாடு செய்த புண்ணியமே….” என்று எழுதி உள்ளார்.

அரவிந்தரின் தந்தைக்கு நடந்தது தெரியாது; மகன் ஆங்கில அதிகாரியாக வருவான் என்ற கனவில் இருந்தார். அரவிந்தர் பயணித்த கப்பல் கடலில் மூழ்கி விட்டது என்ற தவறான தந்தி செய்தியைப் பார்த்ததும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணித்தார்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s