பாரதி- அறுபத்தாறு (27-36)

-மகாகவி பாரதி

பாரதி-அறுபத்தாறு (27-36)

உபதேசம்

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
      பாழ்மனையொன் றிருந்ததங்கே; பரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
      ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
      ”அறிதிகொலோ!” எனக்கேட்டான் ”அறிந்தேன்” என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
      வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.       27

தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
      செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
”வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
      மண்போலே சுவர்போலே, வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
      தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை. அனுப வத்தால்
      பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.       28

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்,
      கருத்தையதில் காட்டுவேன்; வானைக் காட்டி
மையிலகு விழியாளின் காத லொன்றே
      வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி,
ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
      அகற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்.
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
      பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.       29

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
      வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
      கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
      ”தம்பிரா னே; இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
      மூட்டைசுமந் திடுவதென்னே?மொழிவாய்” என்றேன்.       30

புன்னகைபூத் தாரியனும் புகலுகின்றான்;
      ”புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே;
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ”
      என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
      மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
      இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்.       31

சென்றதினி மீளாது; மூடரே, நீர்
      எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
      குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
      எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
      அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.       32

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!
      மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
      மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
      அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
.வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.       33

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
      ‘ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்து விட்டேன்;
      நான் புதியன், நான் கடவுள், நலிவி லாதோன்’
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
      இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
      குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.       34

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
      குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமையாளை இடத்தி லேற்றான்
      வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
      தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா, நீ குறிப்பை நீக்கி
      அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய்.       35

கேளப்பா! மேற்சொன்ன உண்மை யெல்லாம்
      கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
      நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்
      துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
      மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க!       36

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s