-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
88. ராமனா? அகத்தியனா? பிரம்மனா?
.
யதா க்ருதாம்போனிதி ஸேதுபந்தன:
கரஸ்தலாத: க்ருத பர்வதாதிப:/
பவானி தே லங்கித பத்மஸம்பவ:
ததா சி’வார்ச்சா- ஸ்தவ பாவன க்ஷம://
.
கடல்நடுவே அணையமைத்த ரகுராமன் தானோ
கைத்தலத்தால் மலையழுத்த குறுமுனி தானோ
மாலுந்தி மலர்பிறந்தோன் மேலொருவன் நானாயின்
தாணுவேநின் பூசைத்துதி கூர்நோக்கும் புரிவேனே!
.
சிவபெருமானின் பெருமைகளை வியந்து கூறி, அவருக்கு எப்படி நிறைவான பூஜை செய்வது? என்று ஸ்ரீ ஆதிசங்கரர் மலைத்து நின்று வினவும் அற்புதம், இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறது.
.தமது பராக்கிரமத்தால் கடலுக்கு நடுவே அணையை (சேது பந்தனம்) அமைத்து இலங்கைக்குச் சென்ற ரகுராமன், ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, அவரை பூஜித்தார். ஆகையால் சிவபெருமானே உமக்கு உள்ளபடியே அர்ச்சனை செய்வதற்கு நான் என்ன பராக்கிரமம் படைத்த ரகுராமனா?
தமது யோகவலிமையால், தமது கைவிரல்களைக் கொண்டு விந்திய மலையை அழுத்திய குறுமுனியாகிய அகத்தியர் எல்லா கலைகளிலும் வல்லவர். அப்படிப்பட்ட அகத்தியர், சிவபெருமானைத் துதித்து பல்வேறு ஸ்லோகங்களை மொழிந்துள்ளார். அந்த அகத்தியரைப் போன்ற வல்லமை எனக்கு இருந்தால் அல்லவா, உம்மைத் துதிக்க முடியும்?
.திருமாலின் உந்தித் தாமரையில் (தொப்புளில்) தோன்றிய பிரம்மனே, சிவபெருமானின் முடியைக் காணவியலாமல், அவரை முழுமையாக அளவிட முடியாமல் தோற்றுப்போனார். ஆகையால், சிவபெருமானை உன்னை முழுமையாக நோக்கி தியானிக்க வேண்டுமானால், பிரம்மனுக்கும் மேலான சக்தி படைத்தவரால்தான் முடியும். ஆனால், எளியவனான நான், உமக்கு எப்படி பூஜை, துதி, தியானம் ஆகியவற்றைச் செய்ய இயலும்? என்று வினவுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$