-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
87. பக்தி ஒன்றே போதுமே!
.
அச’னம் கரலம் பணீ கலாபோ
வஸனம் சர்ம ச வாஹனம் மஹோக்ஷ:/
மம தாஸ்யஸி கிம் கிமஸ்தி ச’ம்போ
தவ பாதாம்புஜ பக்திமேவ தேஹி//
.
ஆகாரம் விஷமுனக்கு ஆபரணமோ அரவம்,
ஆடையோ புலித்தோல் வாகனமோ பெருங்காளை,
நான்கேட்பதில் எதைநீர் தந்திடுவீர்? எதுவுண்டு?
நின்திருவடித் தாமரையில் பக்தியொன்றைத் தருவீரே!
.
இறைவனிடம் தன்னை ஒப்படைத்து, அவரையே பெற்றுவிடுகின்ற சாமர்த்தியம், மெய் பக்தி ஒன்றினால் மட்டுமே சாத்தியம். அதைத்தான் இந்த ஸ்லோகத்தில் சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். இறைவனிடம் போய் எனக்குப் பணத்தைக் கொடு, பதவியைக் கொடு, அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பதா புத்திசாலித்தனம்? இறைவா, சிவபெருமானே என்னையே உன்னிடம் கொடுத்துவிட்டேன். இனி என் உள்ளத்தில் நீ இருந்து ஆட்சி செய் என்று கேட்பதுதான் புத்திசாலித்தனம். முழுமையான பக்தியுடன் நம்மை இறைவனிடம் ஒப்படைத்துவிட்ட பிறகு, நம்மைக் கடைத்தேற்றுவது அவரது பொறுப்பல்லவா?
இதைத்தான் வேடிக்கையாக இங்கே கூறுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். சிவபெருமானின் தோற்றமே, அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்கக் கூடிய நிலையில் இல்லையாம். அவருக்கு ஆகாரம், ஆலகால விஷம். ஆபரணமோ அரவம் (பாம்பு). ஆடையோ புலித்தோல். வாகனமோ அசைந்து செல்லும் காளை. இப்படி எளிய கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுக்கிறார். அவரிடம் நமக்குக் கொடுப்பதற்கு வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே என்று வேடிக்கையாகக் கூறுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். இப்படி எளிய கோலத்தில் இருக்கின்ற சிவனே, உம்மிடத்தில் எதுவும் கேட்க எனக்குத் தோன்றவில்லை. ஆகையினால், உமது திருவடித் தாமரைகளை எப்போதும் மனத்தில் தாங்குகின்ற பக்தி ஒன்றைத் தந்துவிடுங்கள் போதும் என்று பக்தனுக்காகக் கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
(இங்கே ஒரு கதையை உதாரணமாகச் சொல்லலாம்: வறுமையான ஒரு கிராமத்தைச் சேர்ந்த, திறமைசாலிகளான சில இளைஞர்கள், கஷ்டப்பட்டு தலைநகருக்குச் சென்று அரசனைப் பார்த்தார்கள். தங்களது திறமையால் அரசனை மகிழ்வித்த அந்த இளைஞர்களில் ஒருவனைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும், தங்கம், நிலபுலன் உள்ளிட்ட பரிசுகளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஒரேயொரு இளைஞன் மட்டும், “எனக்குப் பரிசு எதுவும் வேண்டாம். ஒரு வாரம் எனது வீட்டில் ராஜா வந்து தங்கினால் போதும்” என்று கேட்டுக்கொண்டான். மற்றவர்கள் அவனைப் பைத்தியக்காரன் என்பதைப்போலப் பார்த்தார்கள். ஆனால் அவன்தான் உண்மையிலேயே புத்திசாலி.
ஏனென்றால், அந்த இளைஞனின் வேண்டுகோளை ஏற்று, அவனது வீட்டுக்கு அரசன் வருவதாக ஒப்புக்கொண்டதும், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பரபரப்படைந்தனர். இளைஞனின் குக்கிராமத்துக்குச் செல்லும் பாதை கரடுமுரடானது என்பதால், உடனடியாக அது சீர்செய்யப்பட்டு நல்ல சாலை அமைக்கப்பட்டது. அங்கு குடிநீர் வசதிக்காக குளங்கள் வெட்டப்பட்டன. அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் வகையில் சந்தை அமைக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசன் சாதாரண மனிதன் வீட்டில் ஒரு வாரம் தங்கினால், அவரது மதிப்பு குறைந்துவிடும் என்பதால், அந்த இளைஞன் அரசவையில் இடம் பெறும் பிரபுக்களில் ஒருவனாக அங்கீகரிக்கப்பட்டான். அவனது குடிசை வீடு, அரண்மனையாக மாற்றப்பட்டு, பொன்னும் மணியும் குவிக்கப்பட்டன. அவனது ஏவலைக் கேட்க பணியாட்கள் அமர்த்தப்பட்டனர். அரசனுக்கு சிறப்பான விருந்தோம்பல் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரச குடும்பத்தைச் சேர்ந்த குணவதியான பெண்ணும் அவனுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டாள். இவ்வாறாக தனது இருப்பிடத்திற்கு அரசனை வரச் சொன்ன எளிய உபாயத்தின் மூலம் தன்னுடையது மட்டுமின்றி, தனது குடும்பத்திற்கும், தனது ஊருக்கும் தேவையான அனைத்து நன்மைகளையும் அந்த புத்திசாலி இளைஞன் பெற்றுவிட்டான். அரசனை வரவழைத்தவனுக்கே இத்தனைச் சிறப்புகள் கிடைத்தன என்றால், பக்தியினால் இறைவனை தமது மனத்தில் வசிக்கச் செய்யும் பக்தனுக்கு என்னென்ன சிறப்புகள் எல்லாம் கிடைக்கும்?)
$$$