-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
81. வாழ்வின் விடையானவன்
.
கஞ்சித்கால- முமாமஹேச’ பவத: பாதாரவிந்தார்ச்சனை:
கஞ்சித்த்யான ஸமாதிபிச்’ச நதிபி: கஞ்சித் கதாகர்ணனை:/
கஞ்சித் கஞ்சிதவேக்ஷணைச்’ச நுதிபி: கஞ்சித்தசா’மீத்ருசீ’ம்
ய: ப்ராப்னோதி முதா த்வதர்ப்பித மனா ஜீவன் ஸ முக்த: கலு//
.
சற்றேனும் உமாபதியே நின்திருவடி பூசனை
சற்றேனும் குவிந்தாழ்ந்து வணக்கத்தொடு கதைகேட்டல்
சற்றேனும் காட்சியொடு போற்றிடல் நிலைநின்று
தன்மனம் உனக்கீந்தான் வாழ்வுவிடை பெற்றானே!
.
நமது வாழ்க்கையே ஒரு கேள்விக்குறிதான். அதன் விடை என்ன? அதற்கு அர்த்தம் என்ன? பல தொல்லைகள் நிறைந்த இந்த சம்சார சாகரத்தை (வாழ்க்கைக் கடலை) கடப்பதற்கான விடையை, இந்தப் பிறவிப் பிணிக்கு விடை கொடுப்பதற்கான விடையை இந்தப் பிறவியிலேயே பெற்றுவிட வேண்டும் என்பதுதான் நமது வாழ்க்கையின் அர்த்தம். வாழ்வுப் பிணிக்கு விடை கொடுக்கும் அந்த வாழ்வுவிடையை (ஜீவன் முக்தியை) எப்படிப் பெறுவது? சிவபெருமான் மீதான ஆழ்ந்த பக்தியின் மூலம்தான் எந்த பக்தனும், ஜீவன் முக்தனாக முடியும் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
சிரவணம் (கேட்டல்), கீர்த்தனம் (பாடுதல்), ஸ்மரணம் (நினைத்தல்), பாதசேவனம் (திருவடிச் சேவை), அர்ச்சனம் (பூசித்தல்), வந்தனம் (வணங்குதல்), தாஸ்யம் (தொண்டு செய்தல்), சக்யம் (தோழமை பாராட்டுதல்), ஆத்ம நிவேதனம் (தன்னையே அர்ப்பணித்தல்) என பக்தி ஒன்பது வகைப்படும். இந்தச் செயல்களில் எந்த பக்தனுடைய கர்மேந்திரியங்களும் (செய்கைக்கான உடல் உறுப்புகளும்), ஞானேந்திரியங்களும் (குறிப்பிட்ட செயல்களுக்கான திறன்களாகிய உள் அவயங்களும்), மனதும் நிலைபெற்றிருக்கிறதோ அந்த பக்தன், ஜீவன் முக்தனாக மதிக்கப்படுகிறான். அவனுக்கு இனிப் பிறவியில்லை. இந்தப் பிறவியிலேயே அவன் பரமேஸ்வரனுடன் கலந்துவிடுகிறான். இதனைத்தான் இந்த ஸ்லோகத்தில் வலியுறுத்துகிறார் ஜகத்குரு.
அம்மையப்பனாக இருக்கின்ற உமாபதியே, உமது திருவடிகளை சிறிது நேரமாவது அர்ச்சித்தல், பூஜை செய்தல், சற்று நேரமாவது மனம்குவிந்து உள்நோக்கி ஆழ்ந்து தியானித்தல், வந்தனங்களைக் கூறுதல், சிவபெருமானின் திருவிளையாடல்கள் குறித்த கதைகளைக் கேட்டல், சிறிது நேரமாவது மனக்கண்ணால் சிவபெருமானே உம்மை தியானித்தல், உங்களைப் போற்றித் துதித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு, அதன் மூலம் மனத்தை இறைவா உமக்கே அர்ப்பணம் செய்த பக்தன், வாழ்வுவிடையாகிய ஜீவன் முக்தியை அடைந்து விடுகிறானே என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$