புதிய யுத்த முறைமை

-மகாகவி பாரதி

இந்துஸ்தான் ஸ்வதந்திர யுத்தம் 1857ம் ஆண்டு நடந்து, ஐம்பத்திரண்டு வருஷமாகிறது. இப்போது நாஸிக்கில் ஒரு சண்டை நடந்தது. இதில் கலகத் தலைவன் ஸ்ரீ கணேச தாமோதர ஸவர்க்கர் எனும் மராத்தி வாலிபன். இவன் செய்த யுத்தத்தில் பட்டாக் கத்திகள், வில்லு, அம்புகள், ஈட்டி, கதை எனும் புராதன ஆயுதங்களும் கிடையாது. நவீன யுத்தமுறைமையில் வழங்கப்பட்டு வரும் துப்பாக்கி, பீரங்கி, பிஸ்தோல், ரிவால்வர், வேகமான மாக்ஸிம் பீரங்கி, இன்னும் வெடிகுண்டுகள் இந்த ஆயுதங்கள் ஒன்றுமே கிடையாது. எல்லா யுத்தங்களும் ஒரு புஸ்தகத்தில்; மராத்தி பாஷையில் ஸ்ரீ ராஜேந்திர சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் சரித்திரங்களைப் பாடல்களாகப் பாடியிருக்கிறார்.

இந்த ஸங்கதி அப்படியிருக்கட்டும். நாஸிக் ஸெஷன்ஸ் ஜட்ஜு இவரை அரசனோடு யுத்தம் செய்தவனென்றும், அந்த குற்றம் செய்ய அயலாரையும் தூண்டினானென்றும் சொல்லி அவருக்கு ஆயுள் பரியந்தம் தீபாந்திர சிக்ஷை விதித்தார். மேலும் அவருடைய ஸொத்துக்களைப் பிடுங்கி ஸர்க்காரில் சேர்த்துவிடும்படி உத்தரவு செய்தார். இதன்பேரில் பம்பாய் ஹைகோர்ட்டில் இவர் செய்த அப்பீலில் சென்ற வியாழக்கிழமை தினம் ஜஸ்டிஸ் சந்திரவர்க்கரும், ஜஸ்டிஸ் ஹீட்டனும் தள்ளிவிட்டுக் கீழ்க்கோர்ட் தீர்மானத்தை உறுதி செய்துவிட்டார்கள்.

இந்தியாவில் பிரிடிஷ் அரசாக்ஷியிலே ஒரு ஸூக்ஷ்மமான யுத்த முறைமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவர் காகிதத்தை எடுத்து அதில் ஏதாவது தன்னிஷ்டப்படி ஒரு பாட்டிற்காக இரண்டொரு வரி கிறுக்கிவிட்டால் போதும்; இனிமேல் இந்த ஸவர்க்கர் போன்ற போர் வீரர்களைக் கப்பலிலேற்றி இங்கிலாந்தில் கொண்டு இறக்கிவிட்டாலோ, ஜெர்மனியின் டிரெட்னாட் கப்பலுக்காவது, பிரான்ஸின் ஆகாய விமானங்களுக்காவது அமெரிக்க விசை பீரங்கிக்காவது இங்கிலாந்து பயப்பட வேண்டியதே யில்லை.

இந்த வீரர்களெல்லாம் இரண்டு பாடல்களெழுதிவிட்டால் ஜெர்மனி, பிரான்ஸு முதலான தேசங்களை இங்கிலாந்து ஜெயித்துவிடலாமே. ரொம்பவும் பரோபகார சிந்தனையுடன் இதை நாம் சிபார்சு செய்கிறோம். இதற்காக நமக்கு எந்தப் பட்டமாவது கேஸர்-ஹிண்டு மெடலுமாவது வேண்டாம்.

  • -இந்தியா (27-11-1909)

குறிப்பு:

இக்கட்டுரையில் ஸ்ரீ கணேச தாமோதர ஸவர்க்கர் என்று மகாகவி பாரதியால் குறிப்பிடப்படுபவர், சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக தாமோதர சாவர்க்கரின் அண்ணன் கணேச தமோதர சாவர்க்கர் ஆவார். 

ஸ்ரீ கணேச தாமோதர சாவர்க்கர் ஆங்கிலேயரை எதிர்த்து எழுதியதற்காகவே அவர் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையை எள்ளல் தொனியில்  மகாகவி பாரதி விமர்சித்திருப்பதை இக்கட்டுரையில் காணலாம். 

இந்த வழக்கில் தீவாந்திர தண்டனை பெற்ற கணேச சாவர்க்கர் அந்தமான் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார். அதே காலகட்டத்தில் இவரது தம்பி விநாயக தாமோதர சாவர்க்கரும் ஆங்கிலேயருக்கு எதிரான சதி செய்த குற்றத்துக்காக அந்தமான் கொடுஞ்சிறையில் இரட்டை தீவாந்திர தண்டனைக்காக அடைக்கப்பட்டிருந்தார். இருவரும் ஒரே சிறையில் இருந்ததையே பல மாதங்கள் அறியாமல் இருந்தார்கள். 

காண்க: கணேச தாமோதர சாவர்க்கர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s