இலக்கிய தீபம்- 8

-எஸ்.வையாபுரிப் பிள்ளை

8. குறுந்தொகைச் செய்யுளில் ஒரு சரித்திரக்குறிப்பு

-I- 

பாடலிபுத்திரம் என்னும் நகரம் சந்திரகுப்தர் அசோகர் முதலிய சக்கரவர்த்திகளுடைய தலைநகராய் விளங்கியது என்பதும், கி.பி.4-ம் நூற்றாண்டிற்குப் பின் அப் பெருநகரம் அழிந்தொழிந்தது என்பதும் இந்திய சரித்திரத்தால் நன்கு தெளியப்பட்டனவே. இவ் இருபதாம் நூற்றாண்டில் அந்நகரம் இருந்த இடந்தானும் அறிதற்கரியதாயிற்று. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் லெப்டினன்ட் கர்னல் எல்.ஏ.வாட்டல் (Waddel) என்பவர், இப்பொழுது ‘பாட்னா’ என்று வழங்கும் பிரதேசத்தில் தோண்டிப் பரிசோதனை செய்து, பாடலிபுத்திரம் அமைந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்தனர். தாம் செய்த ஆராய்ச்சியின் வரலாற்றினையும் முடிவினையும் 1892-ம் வருடத்தில் வெளியிட்டனர்.*1 அவருக்குப் பின்னரும் பாடலிபுத்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் நிகழ்ந்துகொண்டே வந்தன. அவற்றின் முடிவைக் குறித்து வி.எ.ஸ்மித் தமது இந்திய புராதன சரித்திரத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

‘கி.மு. 5-ம் நூற்றாண்டில் நிருமிக்கப்பெற்று பேரரசர்களது தலைநகராய் விளங்கிய பாடலிபுத்திரமானது சோணை நதியின் வடகரையிலே, கங்கையினின்றும் சிலமைல் தூரத்திலே, அவ்விரு நதிகளும் சஙகமித்தலாலுண்டான நீண்ட இடைப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. இந்தப் பிரதேசத்தில் இப்பொழுது சுதேசியர் வாழ்ந்துவரும் பாட்னா என்னும் பெரிய நகரமும், பங்கிப்பூர் என்னும் ஆங்கிலர் நகரமும் இருக்கின்றன. ஆனால் அவ் இரண்டு நதிகளின் போக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டன; பாட்னாவிலிருந்து 12 மைல் தூரத்தேயுள்ள டினப்பூர் என்னும் இராணுவஸ்தலத்தின் அருகே அவை சங்கமிக்கின்றன. தற்காலத்துள்ள நகருக்குக் கீழாகப் புதையுண்டுகிடக்கிற புராதன நகரம், 9 மைல் நீளமும் 1.5 மைல் அகலமுமுள்ளதாய், நாற்கோண வடிவினதாய் அமைந்திருந்தது. திண்ணிய மரங்கொண்டியற்றிய மதிலால் அரண்செய்யப்பெற்று, 64 வாயில்களை யுடையதாய், 570 கோபுரங்களால் அலக்கரிக்கப் பெற்றதாய், சோணைநதியின் நீரைப் பாய்ச்சி நிரப்பிய ஆழ்ந்தகன்ற அகழியாற் புறத்தே சூழப்பெற்றதாய் விளங்கியது.’

நமது தேச சரித்திரத்திற் பெரும்புகழ் பெற்றிருந்த இப்பாடலி நகரின் அமைப்பிடம் பற்றிய செய்தியொன்று சங்ககாலத்துப் பேரிலக்கியங்களுள் ஒன்றாகிய குறுந்தொகையின் கண்ணே புதையுண்டு கிடக்கின்றது. இவ் அரிய இலக்கியம் முதன்முதலாக, வேலூர் வூர்ஹீஸ் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராயிருந்த சௌரிப் பெருமாள் அரங்கனார் என்பவரால், தாமெழுதிய ஒரு புத்துரையுடன், 1915-ல் வெளியிடப்பட்டது. இவர் மூலபாடத்தைச் செப்பஞ்செய்தற்குப் பெருமுயற்சியை மேற்கொண்ட போதிலும், பலசெய்யுட்கள் இன்னும் திருந்த வேண்டியனவாகவே உள்ளன. இவர் காலத்திற்குப் பின் மூன்று பதிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இப்பதிப்புக்களிலும் முற்கூறிய குறைபாடு நீங்கவில்லை. இலக்கியச்சுவையும் கவிச்சுவையும் மிக்குள்ள இப்பேரிலக்கியம் இதுகாறும் தக்கவண்ணம் பரிசோதனை செய்யப்பெற்று வெளிவராமலிருப்பது தமிழ் மக்களது துரதிர்ஷ்டமேயாகும். இப்பெருநூல் ஆராய்ச்சிமுறையிற் செப்பஞ் செய்யப்பெற்றுத் திருந்திய பதிப்பாக வெளிவருதலைத் தமிழறிஞர்களனைவரும் பெரிதும் அவாவி யெதிர்நோக்கி யிருக்கின்றனர். இவ் வேணவா விரைவில் நிறைவேற இறைவன் அருள்புரிக. சென்னைச் சர்வ கலா சங்கத்தார் இந்நூலைத் திருத்தமுறப் பதிப்பித்து வெளியிட வேணடுமென்று மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்களை வேண்டிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நற்செய்தி தமிழ் மக்களுக்குப் பெருமகிழ்ச்சியை விளைவித்திருக்கின்றது.

-II-

இப்பேரிலக்கியத்தின் 75-ம் செய்யுள் பின்வருமாறு அரங்கனாராற் பதிப்பிக்கப்பெற்றுள்ளது:

நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை பூஞ்சுனை படியும்
பொன்மலி பாடிலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே

இச்செய்யுள் ‘தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது’ ஆகுமெனத் துறைக்குறிப்பினால் அறியப்படுகின்றது. இதற்கேற்பவே இளம்பூரணரும், கற்பியல் 6-வது சூத்திரவுரையில், இச்செய்யுளை மேற்கோளாகக் காட்டி, ‘இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது’ என உரைக்கின்றார். நச்சினார்க்கினியர் ஒரு சிறிது வேறுபடுத்திக் கூறுவர். இவர் மேலைச்சூத்திரத்திற் காணும் ‘பல் வேறுநிலை’களை வகுக்கப் புகுந்து, ‘அவன் (தலைவன்) வரவு தோழி கூறிய வழி விரும்பிக் கூறுவனவும்’ என்ற நிலையைத் தந்து, இச்செய்யுளை யுதகரித்து, ‘இது தலைவன் வரவை விரும்பிக் கூறியது’ எனத் துறைகாட்டினர்.

எனவே, இச்செய்யுள் தலைவி கூறியதெனல் வெளிப்படை. தனது தலைவன் வருகையை உணர்த்திய வாயில் மிகச் சிறந்ததொரு கொடை பெறுவதாகவெனக் கூறுகின்றாள். இப்பொழுது நாம் ஆராய வேண்டுவன ஈற்றின்கணுள்ள மூன்றடிகளாம். ஏனைய அடிகளின் பொருள் தெளிவாகவேயுள்ளது.

‘வெள்ளிய கோட்டையுடைய யானை அழகிய சுனையிடத்துப்படியும். (ஆதலின் பரத்தையர் தனித்தாராய்ச் சென்றாடவிடாது தானும் அவ்விடத்து உறைவன் தலைமகன்). பொன்னின் மிகுதியைப் பெருமையில்லாதோய் பெறுதற்பொருட்டு எவர் வாயிற் கேட்டனை? காதலர் வருகையை (உரைத்தற்கு)’ என்று சௌ.அரங்கனார் உரையிட்டிருக்கின்றார்.

இவ்வுரை ‘வெண்கோட்டி யானை பூஞ்சுனை படியும்’ என்பதனை உள்ளுறையுவமமாகக் கொண்டு, அது பிறிதொரு பொருளைக் குறிப்பாற் பெறவைப்பதாக இவ்வுரைகாரர் கருதுகின்றார். ஆகவே, இவ்வடிக்கு இப்பொருள் நேரானதன்றெனல் தெளிவு. தாம்கொண்ட உள்ளுறை பொருளின்கண்ணும் இவ்வடியில் ஆதாரமில்லாத கருத்துக்களைக் கொண்டு புகுத்துகின்றார். ‘பரத்தையர் தனித்தாராய்ச் சென்றாடவிடாது என்றது அங்ஙனம் ஆதாரமின்றிப் புகுத்தியதாகும்.

‘பொன்மலி’ என்பது ‘பொன்னின் மிகுதி’ எனப்பொருள் கொள்ளப்படுகின்றது. இதுவும் வலிந்து கொள்ளப்பட்ட பொருளேயாகும். ‘மலி’ என்பதனைப் பெயராகக் கொள்ளுதல் பொருத்தமின்றாம். ‘பொன்மிக்க’ என்று உரைகூறுதலே நேரிதாம்.

‘பாடிலி’ என்பது ‘பெருமையில்லாதோய்’ எனக் கொள்ளப்படுகின்றது. ‘பாணனைநோக்கிக் கூறுமிடத்து ஒருகால் இப்பொருள் பொருந்துவதாகலாம். ஆனால் நச்சினார்க்கினியர் இச்செய்யுள் தலைவி தோழியை நோக்கிக் கூறியதாகத் துறைகாட்டுகின்றனர். எனவே, தோழிக்கும் பாணனுக்கும் பொருந்தக்கூடிய முறையிலேதான் பாடமும் பொருளும் இருத்தல் வேண்டும். ‘பாடிலி’ என்பதற்குப் ‘பெருமையில்லாதோய்’ என்பதைக் காட்டினும் வேறு சிறந்த பொருள் காணுதலும் அரிது. தோழியைப் ‘பாடிலி’ யென இழித்துரைப்பது தமிழ் நூல் வழக்கன்று. ஆதலால், ‘பெருமையில்லாதோய்’ என்ற பொருளும், அதற்குரிய ‘பாடிலி’ என்ற பாடமும் கொள்ளத்தக்கன அல்ல.

-III-

இனி, உண்மையான பொருள் யாதென ஆராய்வோம். ‘பொன்மலி’ என்பதற்குப் ‘பொன்மிக்க’ எனப் பொருள் கொள்ளுதலே நேரிதென மேலே கூறினேன். இது பொருந்துமாயின், இத்தொடர் ஓர் இடப்பெயர்க்கு விசேடணமாதல் வேண்டும். ‘வெண்கோட்டியானை…படியும்’ என்ற தொடரினையும் விசேடணத் தொடராகவே கொள்ளுதல் நேரிது. இதுவும் ஓர் இடப் பெயரினையே விசேடிக்க வல்லது. இவ் இடம் தன்னகத்து மிக்கு நிரம்பிய பொன்னாலும், தான் அமைந்திருந்த தலத்தின் அருகிலுள்ள நீர்ப்பெருக்கினாலும், முற்காலத்திற் பெரும்புகழ்பெற்று விளங்கியதாக இருத்தல் வேண்டும். அதன் பெயர்தானும் கேட்டவளவிலே உணரக்கூடிய பெருஞ் சிறப்புடையதாயிருத்தலும் வேண்டும். ‘படிதல்’,  ‘மலிதல்’ என்ற விசேடணங்கள் சென்றியையும் ‘பாடிலி’ என்றதனோடு ஒலியளவில் மிகவும் ஒத்ததாயிருத்தல் வேண்டும். இத்தன்மைகள் வாய்ந்த இடப்பெயரொன்று முற்காலத்துப் பிரசித்திபெற்று விளங்கியதுண்டா?

இவ்வினாவிற்குச் சரித்திர முணர்ந்தார் மிக எளிதில் விடையளித்து விடுவர். ‘பாடலி’ யென்று வழங்கிய பாடலிபுத்ர நகரமே ஈண்டு ஆசிரியராற் கருதப்பட்டதாதல் வேண்டும். இந்நகரம் பண்டைக்காலத்தில் தனது நிதியாற் புகழ்பெற்று விளங்கியமை

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ (அகம் -265)

என்று வரும் அகநானூற்று அடிகளால் நன்கு உணரக் கிடக்கின்றது. பாடலியிலேயுள்ள பொன்வினைஞர் பல இடங்களிலும் விரும்பிக் கொள்ளப்பட்டன ரென்பது

பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்

என்ற பெருங்கதை யடியினால் (உஞ்சை. 58, 42)  அறியலாகும். இதனால் பொன் அங்கே மிகுதியாக வுள்ளமையும் ஊகித்தல் தகும்.

ஆகவே ‘பொன்மலி பாடலி பெறீஇயர்’ என்பதே உண்மையான பாடமாதல் வேண்டும். பொன் முதலிய நிதியங்களால் மிக்கதும், பேரரசர்களது தலைநகராய் விளங்கியதுமான இந் நகரைப் பெறுதற்கு விழையுமொரு பேறாகக் கூறுதல் பெரிதும் ஏற்புடைத்தாகும். அங்ஙனம் பெருநகர்களைக் கூறும் வழக்குண்டென்பது

முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் (பட்டினப். 223)

எனவும்,

புனல்பொரு புதவி னுறந்தை யெய்தினும் (அகம். 237)

எனவும்,

சேண்விளங்கு சிறப்பி னாமூ ரெய்தினும் (அகம். 159)

எனவும் வரும் அடிகளால் உணரலாம்.

-IV-

‘பாடலி’ யென்ற பாடமே ஆசிரியர் கருதியதாகுமென்ற முடிபு, இச்செய்யுளின் மூன்றாமடியிற் காணும் பாடத்தாலும் உறுதியடைகின்றது. சில காலத்திற்கு முன்னால் குறுந்தொகையைச் சில கையெழுத்துப் பிரதிகளோடும் ஏட்டுப் பிரதியோடும் ஒப்பிட்டுத் திருத்திக்கொள்வதில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுது அண்ணாமலைச் சர்வகலாசாலையில் தமிழாராய்ச்சித் துறையி லுழைத்து வந்த ஸேது ஸம்ஸ்தான மகா வித்வான் ரா.ராகவையங்காரவர்கள் தங்களுடைய பிரதியை எனக்கு அன்புடன் உதவி யிருந்தார்கள். காலஞ்சென்ற தி.த.கனகசுந்தரம் பிள்ளையவர்களுக்குரிய பிரதியொன்றும் எனக்குக் கிடைத்திருந்தது. இவ் இரு பிரதிகளிலும் இச்செய்யுளின் மூன்றாவது அடி,

வெண்கோட் டியானை சோனை படியும்

என்று காணப்பட்டது. பிறிதொரு பிரதியிற் ‘சோணை’ படியும் என்று பாடம் சிறிது வேறுபட்டிருந்தது. இந்த அடியின் பொருள் ‘வெண்மையான கொம்புகளையுடைய யானை சோணைத்துறையிலே மூழ்கித் திளைக்கின்ற’ என்பதாம். எனவே, இத்தொடரும் விசேடணமாய் அமைந்து, ‘பாடலி’ என்னும் இடப்பெயரை விசேடிக்கின்றது. சோணைநதிக் கரையிலே பாடலி நகரம் இருந்ததென்பது சரித்திர ஆராய்ச்சியால் தெளியப்பட்ட உண்மையே. இது முற்காலத்திலே மிகவும் பிரசித்தியடைந்திருந்தமை பிறிதொரு சான்றாலும் அறியக் கிடக்கின்றது. பாணினீயத்தில் ‘யஸ்ய சாயாம:’ (2,1,16) என்றொரு சூத்திரம் படிக்கப்படுகின்றது. “ஏதாவது ஒன்றை ‘இதுவரை பரவியுள்ளதெனக் குறிக்க வேண்டுமிடத்து, சுட்டினாற் கொள்ளலாவதனை நபும்ஸக லிங்க துவிதீய ஏக வசனமாகக் கொண்டு அதற்கு முன் ‘அநு’ என்ற சொல்லைப் பெய்து கூறுக” என்பது இதன்பொருள். இதற்கு உதாரணமாக ‘அநுசோணம் பாடலி புத்திரம்’ என்பது மஹா பாஷ்யக்காரராகிய பதஞ்சலியாற் காட்டப்படுகின்றது. இவ்வுதாரணத்தால் பாடலி நகரம் சோணை நதியை அடுத்து விளங்கியது பிரசித்தமான செய்தி யென்பது தெளியலாம். எனவே, ‘வெண்கோட்டியனை சோணைபடியும்’ என்ற பாடமே கொள்ளத் தக்கதாய் முடிகின்றது. பெரும்பான்மைப் பிரதிகளிற் ‘சோனை’ என்பதே காணப்பட்ட போதினும், ‘னை’ ‘ணை’ என்ற எழுத்துக்கள் பிரதி செய்வோர்களால் ஒன்றற்கொன்று மாறாக எழுதிவிடப்படுமாதலாலும், ‘சோணை’ என்பதே வடமொழிப் பெயரோடு ஒத்திருப்பதாலும், தமிழ் நூல்களில் இப்பெயர் வந்துள்ள ஒரு சில இடங்களில் ‘சோணை’ என்றே காணப்படுமாதலாலும், ‘சோணை’ என்ற பாடமே கொள்ளுதற்குரியது.

குறுந்தொகைப் பிரதிகளிற் காணப்படும் பாடமே தொல்காப்பிய உரைகளிலும் தரப்படுகின்றது. இப்பேரிலக்கணத்திற்கு உரையிட்ட பெரியார்களுள், காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணராவர். இவர் இரண்டிடங்களில் இச்செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டி யிருக்கின்றனர். ஒன்று மேலே சுட்டிய கற்பியல் 6-ம் சூத்திரவுரை. பிறிதோரிடம் கிளவியாக்கத்தில் 18-ம் சூத்திரவுரையாகும். இவ்விரண்டாவது இடத்தில், ‘சோனை’ என்பது ‘சேனை’ யெனப் பிரதி செய்தோராற் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது; மற்றைப்படி யாதொரு வேறுபாடும் இல்லை. நச்சினார்க்கினியரும், கற்பியல் 6-ம் சூத்திர உரையில், இச்செய்யுளை உதகரித்திருக்கின்றனர். அவரது பாடமும் பிரதிகளிற் காணப்படும் பாடமே யாகும்.

-V-

இனி, ‘பூஞ்சுனை படியும்’ என்ற பாடம் எவ்வாறு வந்தது என்பதனைச் சிறிது நோக்குதல் வேண்டும். எனக்குக் கிடைத்த பிரதிகளில் ஒன்றிலேனும் இப்பாடம் காணு மாறில்லை. சென்னை அரசாங்க நூல் நிலையத்திலுள்ள கடிதப் பிரதியில் மட்டும், ‘வெண்கோட்டியானை சொனைபடியும்’ என்று முதலில் எழுதிப் பிறகு அதனைத் திருத்தி ‘வெண்கோட்டியானை பூஞ்சுனைபடியும்’ என்று வரையப் பட்டுளது. இவ்வாறு திருத்துவதற்குரிய காரணமும் எளிதிற் புலப்படக்கூடியதே. ஏடுகளில் ‘சோனை’யென்பது சொனை’ என்றே எழுதப்பெறும். இவ்வாறு எழுதப் பெற்றது ‘சோனை’ என்ற நதியைக் குறிப்பதாகுமென்பதை யுணரும் ஆற்றல் சாமானியமாக ஏடெழுதுவோர்பாற் காணப்படுவதில்லை. அன்றியும் அந்நதியை,’சோனை’ என்பதே தமிழிற் பெருவழக்கு. ஆதலால்’ சுனை’ யென்பதுவே ‘சொனை’யென்று தவறாக எழுதப்பெற்று விட்டதெனக் கருதிச் ‘சுனை’யென முதலாவது திருத்தப் பட்டது. இவ்வாறு திருத்தியவுடன் அடிநிரப்புதற்கு ஓரசை குறைந்திருப்பது புலப்பட்டிருத்தல் வேண்டும். இக்குறை பாட்டை நீக்குதற்குப் ‘பூஞ்சுனை’ என்று பாடங் கொள்ளப்பட்டது. இப்பிழை வரலாறு ஏடெழுதுவோரால் எவ்வகைப் பிழைகள் நேரக்கூடுமென்பதனை யொரு சிறிது உணர்த்தக் கூடியதாம். தவறாகத் திருத்திய இப்பாடத்தினையே செள. அரங்கனார் தமது பாடமாகக் கொண்டு பொருள் கூறுதற்கண் பெரிதும் இடர்ப்படுவாராயினார்.

ஆகவே,

" வெண்கோட்டியானை சோணை படியும் 
பொன்மலி பாடலி பெறீ இயர்"

என்பதே உண்மையான பாடமெனத் தெளியலாம்.

பாடலிபுத்திரம் சோணை நதிகரையில் நிருமிகப்பட்டிருந்த தென்பது சரித்திரக்காரரால் நெடுங்காலமாக அறியப்படாமலிருந்ததோர் உண்மை. இவ்வுண்மையைப் பற்றிய குறிப்பொன்று குறுந்தொகையிற் காணக் கிடக்கின்றமை தமிழ் மக்களாகிய நாம் அறிந்து பெரிதும் இன்புறத்தக்கதாம்.

.

அடிக்குறிப்பு மேற்கோள்:

  1. Discovery Of the exact site of Ashoka’s classic capital of Pataliputram.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s