-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
21. மனமே சிவபெருமான் மாளிகை
.
த்ருதிஸ்தம்பாதாராம் த்ருடகுண நிபத்தாம் ஸகமனாம்
விசித்ராம் பத்மாட்யாம் ப்ரதிதிவஸ ஸன்மார்ககடிதாம்/
ஸ்மராரே மச்சேத: ஸ்புட-படகுடீம் ப்ராப்ய விச’தாம்
ஜய ஸ்வாமின் ச’க்த்யா ஸஹ சி’வகணைஸ் ஸேவித விபோ//
.
தைரிய நடுத்தூணில் திடகுண கயிறுகட்டி
தாமரை வடிவழகாம் தினந்தோறும் திருவழியாம்
மனதாமென் தூயதுகில் கொட்டகையில் சக்தியொடு
கணங்களும் துதிபாட காமாரி திகழ்வீரே.
.
மனக்குரங்கை சிவபெருமான் கரங்களில் ஒப்படைத்துவிட்டால், பிறகு அந்த மனம் சிவபெருமான் தங்குகிற கூடாரமாக, மாளிகையாக மாறிவிடும். அந்த மாளிகை எப்படி இருக்கும்? சிவபெருமான் காமனைப் பொசுக்கியவன், அழித்தவன். (காம + அரி = காமாரி). ஆகையால், அவனிருக்கும் இடத்தில் தீயாசைகளுக்கு இடமில்லை. சிவபெருமான் தங்கியிருக்கும் அப்படிப்பட்ட மனத்தை ஒரு கூடாரமாக வர்ணிக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
அத்தகு மனத்தில் தைரியமே நடுத்தூணாக விளங்கும். அந்த நடுத்தூணை ஆதாரமாகக் கொண்டு, திடமான குணம் என்ற கயிற்றினால், தாமரை போன்று விரிந்த அழகுடையதும், தினந்தோறும் நல்வழியிலே நாட்டமுடைய திசைகளில் நாட்டப்பட்டதுமான, தூய்மையான எண்ணங்களாகிய துகிலைக் கொண்டு மனமாகிய கூடாரம் கட்டப்பட்டிருக்கும். அந்தக் கொட்டகையில், எங்கும் நிறைந்த சிவப் பரம்பொருளே, பராசக்தியுடன் எழுந்தருளி, எப்போதும் வெற்றியுடன் திகழ்வீராகுக என்று நமது மனத்தைத் தூய்மையாக்கி அழைப்பு விடுகிறார் ஆதிசங்கரர்.
$$$