இன்றைய இந்தியாவின் முகங்கள்- 2

-திருநின்றவூர் ரவிகுமார்

2. ஆஷிஷ் சௌஹான்

ஒரு மாதத்திற்கு முன் தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் தலைவர்களான சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நாராயணன் ஆகியோர்  ஊழல் புகாரின் அடிப்படையில் கைது (22 மார்ச் 2022)  செய்யப்பட்டனர். இவர்கள் 2015இல் தானே வந்து மாட்டிக் கொண்டது தனிக்கதை.  இமயமலை யோகி ஒருவர் தான் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இ-மெயில் மூலம் வழிகாட்டினார் என்று சித்ரா ராமகிருஷ்ணன் கூற இந்துத்துவர்கள் மீது பாய்ந்தன பத்திரிகைகளும் ஊடகங்களும். இ-மெயில் ஐ.பி.யைத் தேட, அது வெளிநாட்டில் இருந்து வந்தது எனத் தெரியவந்தது. உடனே ஊடகங்கள் மயான அமைதியில் ஆழ்ந்தன. மேற்படி நபர்களுக்கு என்எஸ்இ போர்டு (கண்டனம் தெரிவிக்காமல்) அனுதாபம் தெரிவித்த கையோடு, இப்போதைய தலைவராக உள்ள விக்ரம் லிமாயி தானே மீண்டும் ஒருமுறை இந்த பதவியில் தொடர விருப்பமில்லை என்று தெரிவித்தார். இப்போது அந்தப் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பவர் ஆஷிஷ் சௌஹான்.

ஆஷிஷ் சௌஹான், மும்பை ஐஐடி-யில் பொறியியல் பட்டம் (B.E. Mech) பெற்றவர். பிறகு கொல்கத்தா எம்பிஏ பட்டம் பெற்றார். அப்போதே அவரை ஐடிபிஐ வங்கி (கேம்பஸ் இன்டர்வியூ) பணியில் அமர்த்திக் கொண்டது. ஆசியாவில் முதல் பங்குச் சந்தையாகிய மும்பை பங்குசந்தையில் 2009இல் அவர் துணை செயல் தலைவராகச் சேர்ந்தார். 2012 அதில் செயல் தலைவரானார். 

1991இல் நரசிம்மராவ்- மன்மோகன் சிங் ஆட்சி அமைந்தது. தாராளமயம், தனியார்மயம், உலகமயம்  கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1992 இல் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்சி) ஆரம்பிக்கப்பட்டது. ஐடிபிஐ வங்கிப் பணியை விட்டு விலகி, தேசிய பங்கு சந்தையை துவங்கிவர்களில் (Core Group) ஒருவரானார் ஆஷிஷ் சௌஹான்.  பங்கு சந்தை என்பது ஒரு தனியார் நிறுவனம். கம்பனிகளின் பங்குகளை வாங்க – விற்க மேடை அமைத்துத் தருவது அதன் பணி. பங்குச்சந்தையில் தரகர் மூலம் தான் முதலீடு செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி, ஓரளவு விஷயம் தெரிந்த யாரும் நேரடியாக பங்குச் சந்தையில் ஈடுபடலாம் என்ற நிலையை ஏற்படுத்தியதில் தேசிய பங்குச் சந்தைக்கு முக்கிய பங்குண்டு.

ஆரம்பத்திலிருந்து 2004 ஆம் ஆண்டில் என்எஸ்சி-யில் இருந்து விலகும் வரை அதில் ஆஷிஷ் சௌஹான் செய்த மாற்றங்கள், முன்னேற்றங்கள் பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றன. என்எஸ்சி 50 எனப்படுகின்ற நிப்டியைத் (வர்த்தக அட்டவணை) துவங்கியவர் அவர். என்எஸ்சி-க்கென செயற்கைகோளும் அதற்கேற்ப கட்டமைப்பையும் அவர் உருவாக்கினார். பங்குச் சரிவைக் கணக்கிடுவதற்கான ஒரு சூத்திரத்தை (Liquidity Formula) உருவாக்கியவர் அவர்தான்.

2004 ல் ஆஷிஷ் சௌஹான் புதிதாகத் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் இன்ஃபோகாம் கம்பெனியில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து விலகி 2009இல் மும்பை பங்குசந்தையில் சேர்ந்தார். 2012 இல் அதன் தலைமை செயல் அதிகாரியானார். 2014-இல் அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் (எம்டி மற்றும் சிஇஓ) ஆனார். 

மும்பை பங்குச்சந்தையின்  தலைவராக அவர் அறிமுகம் செய்ததே மொபைல் வர்த்தகம். அதுமட்டுமன்றி சிறு, நடுத்தரத் தொழில்களுக்கென பிரத்யேகமான பங்கு வர்த்தகத் தளத்தை ஏற்படுத்தினார். இன்று இந்தியாவில் இந்தப் பிரிவில் நடக்கும் பங்கு வர்த்தகத்தில் 70 % மும்பை பங்குச்சந்தை மூலமாகவே நடக்கிறது.

2013இல் நிதி நிறுவனங்களுக்கென (மியூச்சுவல் ஃபண்ட்) தனியாக ஒரு தளத்தை மும்பை பங்குச்சந்தையில் ஆஷிஷ் சௌஹான் அறிமுகம் செய்தார். அது மட்டுமன்றி சர்வதேச அளவிலான பங்குச்சந்தையை முதன்முதலில் இந்தியாவில் துவங்கினார். இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச், 2017 ஜனவரி மாதத்தில் குஜராத் மாநிலத் தலைநகரான காந்தி நகரில் துவங்கப்பட்டது. அதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இப்பொழுது என்எஸ்சி-யின் தலைவராக உள்ள விக்ரம் லிமாயின் பதவி ஓரிரு மாதங்களில் முடிவுறுகிறது.  புதிய விதியின்படி அவர் பதவியில் தொடர முடியாது. போட்டியிட்டுத் தான் வெல்ல வேண்டும். அவர் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். அடுத்த போட்டியாளர்களில் முன்னணியில் இருப்பவர், சர்வதேச அளவில் இந்தியாவின் முகமாக இருக்கும் ஆஷிஷ் சௌஹான்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s