-தரம்பால்
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம்- 4 (தொடர்ச்சி)
பிரிட்டிஷார் இதுபோன்ற பிரச்னைகளுக்கு எதிர்வினை புரியாததற்கான காரணம், இந்தியாவில் அவர்களுடைய ஆட்சிக்கான தார்மிக உரிமை என்பது கடைசி வரையிலும் இருந்திருக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னதாக இருந்த இந்திய ஆட்சியாளர்கள் பலருக்கு ஆட்சிபுரிவதற்கான தார்மிக உரிமை வலுவாக இருந்தது. எனவே மக்களுடைய போராட்டங்களுக்கு அடி பணிந்து, தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டு, அல்லது தான் செய்ய நினைத்ததைக் கைவிட்டுக்கொள்ள முடிந்திருந்தது.
ஆள்வதற்கான அவர்களுடைய உரிமைகள் அதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், மக்களுடைய கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து அவர்களுக்குப் பிடிக்காததை ரத்து செய்வதன் மூலம் அவர்களுடைய ஆட்சி அதிகார உரிமையை ஆட்சியாளர்கள் மனதிலும் மக்களுடைய மனதிலும் வலுப்படுத்தவே செய்திருக்கின்றன. ஆட்சி புரிவதற்கு தார்மிக உரிமை பெற்ற ஆட்சியாளரால் மட்டுமே இப்படியாக விட்டுக் கொடுக்கவும் பின்வாங்கவும் முடியும்.
மாறாக இந்தியாவில் ஆட்சி செய்த பிரிட்டிஷாருக்கு சில பகுதிகளில் ஆட்சி புரிவதற்கான அதிகாரத்தை மக்களில் சிலரிடமிருந்து அல்லது ஒட்டுமொத்த மக்களிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். எனினும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அவர்களுக்கு இந்தியாவை ஆள்வற்கான தார்மிக உரிமை ஒருபோதும் இருந்ததில்லை. அவர்கள் ஆக்கிரமிப்புச் செய்த சக்திகளாக, ராணுவத்தின் மூலம் அத்துமீறி நிலை பெற்றவர்களாகவே கடைசி வரை இருந்தனர். இந்த ஆக்கிரமிப்புக்கு அவர்கள் நமது ராணுவத்தை தந்திரமாகவும் மிகக் குறைவாகவேயும் ஒப்பீட்டளவில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது உண்மைதான். இருந்தபோதிலும் இந்தப் படைபலம் என்பது அந்த அளவுக்கு சிறியதொன்றும் அல்ல.
1857 வரையிலும் இந்தியாவில் இருந்த ஆக்கிரமிப்புப் படைகளில் 4 இந்தியர்களுக்கு ஓர் ஐரோப்பியர் என்ற விகிதத்தில் இருந்திருக்கிறார்கள். சில நேரங்களில் ஆறு இந்தியர்களுக்கு ஓர் ஐரோப்பியர் என்பதாக்க்கூட அவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால் 1857க்குப் பிறகு அவர்கள் மிகவும் பயந்துபோய் விட்டார்கள். அதைத் தொடர்ந்து இரண்டு இந்திய வீரர்களுக்கு ஓர் ஐரோப்பியர் என்ற வகையில் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை படையில் அதிகரித்தது. 1900 மற்றும் அதற்குப் பின்னரும் கூட இதுதான் நிலைமை.
1856-ல் ஐரோப்பியப் படையினரின் எண்ணிக்கை 45,104; 1860-ல் 92,866; 1908-ல் 75,702. அதேநேரம் 1856-ல் இந்திய வீரர்களின் எண்ணிக்கை 2,35,221; 1908-ல் 1,48,996 (பிரிட்டிஷ் பார்லிமென்டரி பேப்பர்ஸ், 1908, தொகுதி 74).
அப்படியாக இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சி எந்தவித தார்மிக உரிமையும் இன்ன்றித்தான் நீடித்தது என்ற உணர்வானது, ராபர்ட் கிளைவ், தாமஸ் மன்றோ, ஜான் மால்கம், சார்லஸ் மெட் கஃபே போன்ற பலதரப்பட்ட மனிதர்களால் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளது. 1857-ல் இது மேலும் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியவந்தது.
‘இந்தியாவின் மீதான நமது ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் படைபலத்தின் மூலமே பெறப்பட்டது. அதன்மூலமே நிலைநிறுத்தப்பட வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு மன்னரும் பயத்தின் மூலமாகவே அடக்கி வைக்க வேண்டும்’ *37 என்பதுதான் பிரிட்டிஷாரின் ஆட்சி தொடர்பான ராபர்ட் கிளைவின் ஆதாரமான கோட்பாடு.
57 வருடங்களுக்குப் பின்னர் மெட்கஃபேயும் கிட்டத்தட்ட இதையே குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அதைவிட வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். 1829-ல் அவர் சொன்னது:
“நாம் முன்னெப்போதையும் விட இந்தியாவில் அதிக வலிமை கொண்டவர்கள் போலத் தோற்றமளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எளிதில் நம்மை வீழ்த்திவிட முடியும். நமது வீழ்ச்சி ஆரம்பித்தால் மளமளவெனச் சரிந்து விடுவோம். பிரிட்டிஷ் இந்திய சாம்ராஜ்யத்தின் அதிவேக வீழ்ச்சியானது நாம் அதிசயிக்கும் வகையில் பெற்ற வெற்றியை விட மிகுந்த ஆச்சரியத்துடன் இந்த உலகில் பார்க்கப்படும்.” *38.
அவர் மேலும் சொல்கிறார்: “இந்த அபாயத்துக்கான முக்கிய காரணம் என்னவென்றால், நமது வலு என்பது உண்மையில் நமது பலத்தின் மீது அமைந்திருக்கவில்லை. அது ஒரு தோற்ற மயக்கம் மட்டுமே. நமது உண்மையான பலம் என்பது நம்மால் அடக்கி ஆளப்படும் இந்தியாவின் பரந்து விரிந்த தேசத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஐரோப்பிய ராணுவப் படையில் தான் இருக்கிறது. அதுவே நமது ஒரே பலம். அந்தப் படைவீரர்களின் இதயமே நமக்கு ஆதரவாக நிற்கிறது. நெருக்கடியான காலகட்டங்களில் அவர்களை மட்டுமே நாம் நம்பியாக வேண்டியிருக்கும்.
நமது பிற இந்தியக் குடிமைக் கட்டமைப்புகள் எல்லாம் ஒருவகையில் அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பவையே. அவையெல்லாம் நமக்காகவும் சேவை புரிகின்றன என்றாலும், அவற்றின் இருப்புக்காகவே பெரிதும் செயல்படுகின்றன. எந்தச் சக்தியின் மூலம் அந்த அமைப்புகள் இயங்குகின்றன என்ற வகையில், நெருக்கடி நேரத்தில் அந்த சக்திகளுக்கு அவர்கள் நிச்சயம் விசுவாசத்தை காட்டக்கூடும். எனினும் அவர்களுடைய உள்ளார்ந்த உணர்வுகளில் நமக்கு எதிரான தன்மையே நிறைந்து காணப்படும். மோசமான அரசு நிர்வாகம் என்பதனால் அல்ல; இயல்பான, தவிர்க்கமுடியாத எதிர்ப்பு உணர்வினாலே அது நிறைந்து காணப்படும். இப்போதைய சூழல் மாறி நமக்கு எதிராக உள்ளூர் மக்களுக்குச் சாதகமான ஒரு நிலை உருவாகும் என்றால், அவர்களுடைய மதிப்பையும் மரியாதையையும் நாம் எதிர்பார்க்க முடியாத நிலையே ஏற்படும். சில அற்புதமான அர்ப்பணிப்புகளை நாம் பார்க்க முடியக் கூடும். ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரையிலான இந்தியாவை ஒருங்கிணைக்கும் பொதுவான உணர்வுக்கு மாறாக சிலர் நம் பக்கம் இருக்கவும் கூடும்.” *39
அதுக்கு அவர் மேலும் சொல்கிறார்: “நமக்கான பெரும் அச்சுறுத்தல் ரஷ்யப் படையெடுப்பில் இருந்து வரப்போவதில்லை. இந்தியர்களின் மனங்களில் நாம் வெல்ல முடியாதவர்கள் என்ற எண்ணம் அழியத் தொடங்குவதுதான் நமக்கான பெரும் அச்சுறுத்தல். வேரோடு பிடுங்கி எறியும் அதிருப்தியானது மிக அதிகமாகவே உள்ளொடுங்கி இருக்கிறது. செயலூக்கத்துடன் அதை கிளர்ந்தெழச் செய்யும் சூழல் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடக்கூடும்”. *40.
சில மாதங்களுக்கு முன்பாக மெட்கஃபே ஓர் ஆலோசனை வழங்கியிருந்தார்: ‘மக்கள் திரளில் செல்வாக்கு மிகுந்த பகுதியானது பொதுவான விருப்பங்கள், பொதுவான பார்வைகள் மூலமாக நமது ஆட்சியுடன் பிணைப்புக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் வேரூன்ற முடியும். இல்லை என்றால் நமது ஆட்சியானது எப்போதுமே நிலையில்லாததாகவே இருக்கும்’. அதற்கான வழிமுறையாக இந்தியாவில் நம் நாட்டினரை தெளிவாகத் திட்டமிட்டு குடியமர்த்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். *41.
இப்படியான மதிப்பீடுகளே இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சி பற்றி பிரிட்டிஷார் பலருக்கும் இருந்தது. அதுவே அவர்களுடைய அரசின் கொள்கைகளிலும் செயல்திட்டங்களும் வெளிப்பட்டது. ‘ஐரோப்பியப் படைகளின் பலம்’, ‘வெல்ல முடியாதவர்கள் என்ற தோற்ற மயக்கம்’ இவை நீங்கலாக பிரிட்டிஷாருக்கு இந்தியாவை ஆட்சி செய்வதற்கு எந்தவிதமான அங்கீகாரமோ தார்மிக உரிமையோ இருந்திருக்கவில்லை. இதனால் இந்தியர்களுக்கு எந்தவிதச் சலுகை தரும் நிலையிலும் பிரிட்டிஷார் இருந்திருக்கவில்லை. மக்கள் போராட்டத்திற்கு அடிபணிதல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஏதாவது சலுகை தருவது என்பது (1810-11 காலகட்டத்தில் வரிவிதிப்புக்கு எதிரான போராட்டத்தின் முடிவில் தந்ததுபோல) அவர்களைப் பொருத்த வரையில் மேலும் அதிக சலுகைகளைப் போராடி பெறும் மனநிலைக்கு மக்களை ஊக்குவித்து விடும் என்று நினைத்தார்கள். அதே அவர்களுடைய ஆட்சியின் அனைத்து அதிகாரங்களையும் சிதைப்பதில்தான் போய் முடியும் என்று நினைத்தார்கள். எனவே ஏதேனும் சலுகை தருவதோ, சரணடைவதோ தவிர்க்க முடியாமல் போகும்போது அரசின் மேலாதிக்கத்துக்கு எந்தவிதக் களங்கமும் வராத வகையில் வெளிப்படையாகத் தெரியும் வகையில் விட்டுக் கொடுக்காமல் அதைச் செய்ய வேண்டும் என்றே நினைத்தார்கள்.
அப்படியாக, பிரிட்டிஷாரால் நிலைநிறுத்தப்பட்ட ‘அரசு என்பது தவறே செய்ய முடியாது’ என்ற கோட்பாடானது (அதன் நீட்சியாக அரசின் பிற அங்கங்களான அதிகாரவர்க்கமும்) பிரிட்டிஷ் அதிகாரம் இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரும் நீடித்து வருகிறது. ஓர் அரசானது மிகவும் பலவீனமாகத் தன்னை உணர்வதால், தன்னை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில், போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டால் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுக்க முன்வருகிறது. அரசு பிழை செய்யவே முடியாது என்ற கோட்பாடானது அப்படியாக மாறியமைக்கப்பட்ட நிலையில், அப்படியான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்த விதிகளும் சட்டங்களும் அப்படியே நீடிக்கின்றன.
இந்தப் பிந்தைய கட்டமைப்பே அரசுக்கு அங்கீகாரத்தையும் தார்மிக பலத்தையும் தந்து வருகிறது. இப்படியான நிகழ்வுகள் மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டிருக்கிறது. அரசின் நம்பகமற்ற, பகைமை நிறைந்த அந்நியமான நிலைப்பாடுகள் எல்லாம் கட்டுக்குலையமால் காப்பதோடு வன்முறையைக் கையில் எடுத்தால்தான் நாம் சொல்வது அரசுக்குக் கேட்கும் என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளுகிறது. சமீபகாலமாக நடந்து வரும் கலவரங்கள், போராட்டங்கள், படுகொலைகள், காவல் துறையின் துப்பாக்கிச் சூடு போன்றவையெல்லாம் அந்த உணர்வையே எடுத்துக்காட்டுகின்றன.
ஒத்துழையாமை மற்றும் சட்ட மறுப்புப் போராட்டங்களுக்கான எதிர்ப்பு மற்றும் கோட்பாட்டளவிலேயே கூட அவற்றை எதிர்க்கும் போக்குகள் எல்லாம் அரசு அதிகாரத்தில் இருந்தவர்களாலும் 1947க்கு முன்பாக சீனிவாச சாஸ்திரி, தாகூர், பராஞ்சபே போன்றவர்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக, அரசு இயந்திரம் எந்த்த் தவறுமே செய்ய முடியாத ஒன்று என்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடே விளங்குகிறது.
இப்போது மிகவும் விசித்திரமானதாகவும் மிகவும் வலுவிழந்ததாகவும் தோன்றும் இந்தக் கோட்பாடானது இன்று வரையிலும் இறந்து புதைக்கப்படவில்லை. அதன் வேர்கள் ஆட்டம் கண்டுவிட்டிருக்கிறது என்றாலும் விழுந்துவிடவில்லை. இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் இந்திய அரசாங்கத்தின் கோட்பாட்டு வடிவமைப்பாளர்களும் அந்த வேர்களை மீண்டும் வலுப்பெற வைக்க தமது திறமையையும் கவனத்தையும் செலவிட்டு வருகின்றனர்.
அந்நிய அரசாட்சிக்கு எதிராகப் பயன்படுத்தும்போது ஒத்துழையாமை இயக்கமும் சட்ட மறுப்பு இயக்கமும் நியாயமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு ஆட்சியாளர்களை எதிர்த்து அவற்றைப் பயன்படுத்துவது தவறு. இந்தப் பார்வையின் அடிப்படையில்தான் இந்தியாவின் பல்வேறு தலைவர்கள் (வரலாற்று, அரசியல் கோட்பாட்டு ஆசிரியர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்), பொதுவாக வர்க்கபேதமற்ற, மக்கள் நல அரசு அமைய வேண்டும் என்று நினைக்கும் நிலையிலும் நடைமுறையில் தவறே செய்ய முடியாத அரசு என்ற கோட்பாட்டின் புதிய ஆதரவாளர்களாக ஆகி விட்டிருக்கிறார்கள். இப்படியான கோட்பாடானது காந்தியடிகள் தமது நீண்ட, நெடிய பொது வாழ்க்கையில் முன்வைத்த அனைத்துக்குமே எதிரானது. பாரம்பரியமாக, காலம் காலமாக ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்து வந்திருக்கும் இந்திய மக்களின் அடிப்படை மனநிலைக்கும் இது முற்றிலும் எதிரானது.
அதே நேரம் சில ‘புரட்சிகரக்’ கோட்பாடுகள் முன்வைப்பதுபோல இந்த ஒத்துழையாமை இயக்கமும் சட்ட மறுப்பு இயக்கமும் முடிவற்றுச் செய்துகொண்டே இருக்க வேண்டியவையும் அல்ல. தேவை ஏற்படும்போது மட்டுமே அவற்றை மேற்கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களும் பிற அதிகாரவர்க்கங்களும், ஆளப்படுபவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் ஒத்திசைவுடன் நடந்துகொள்ளும்போது இப்படியான போராட்டங்களுக்கான தேவை வெகுவாகக் குறைந்துவிடும்.
பிற வகைப் போராட்டங்களைப் போலவே, ஒத்துழையாமை, சட்ட மறுப்புப் போராட்டங்களும் எல்லா பிரச்னைகளையும் தீர்க்கக்கூடியவை அல்ல. சில அரசியல், சமூகப் பிரச்னைகள், சூழல்களுக்கு இவற்றைப் பயனப்டுத்த முடியாது. முன்னரே சொன்னதுபோல ஒத்துழையாமை இயக்கம் வெற்றிபெற வேண்டுமென்றால் மோதிக்கொள்ளும் இரு தரப்பினரும் பொதுவான மதிப்பீடுகளைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய தரப்புகள் தற்காலிகமாவது பொதுவான மத, சமூக- அரசியல் மதிப்பீடுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும் இப்படியாக இருப்பதில்லை.
18-19-ம் நூற்றாண்டு இந்தியாவில் ஆளப்பட்டவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் பொதுவான மதிப்பீடுகள் எதுவுமே இருந்திருக்கவில்லை. ஹிட்லரின் அதிகாரம் பரவியபோது ஐரோப்பாவிலும் இப்படியான நிலையே இருந்தது. தைமூரின் படையெடுப்பின்போது வட இந்தியாவிலும் இப்படியான நிலையே இருந்தது. ஓர் அந்நிய சக்தியைக் கையாள இந்தப் போராட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி வெற்றி கண்டதில் மகாத்மா காந்தியின் மேதமை, வீழ்த்த முடியாத துணிச்சல், ஒப்புவமை இல்லாத நிர்வாகத் திறமை போன்றவையே வெளிப்படுகின்றன.
ஓரளவுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் (20ஆம் நூற்றாண்டுவாக்கில் பிரிட்டிஷ் அதிகார சக்திகள் ஒப்பீட்டளவில் மென்மையாகிவிட்டிருந்தன என்பதும் ஒரு காரணம்), பெருமளவுக்கு மகாத்மாவின் அபாரமான ஆளுமை ஆகியவையே இந்தியத் தரப்பில் இருக்கும் நியாயங்களை, பிரிட்டிஷாரைச் சில நேரங்களில் புரிந்துகொள்ளவைக்க மகாத்மாவுக்கு உதவி புரிந்திருக்கின்றன. படிப்படியான போராட்டங்கள் மூலமாக (நில வருவாயில் தொடங்கி அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், உப்பு சத்யாகிரஹம், கள்ளுக்கடை மறியல், உலகப் போரில் இந்தியா வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதற்கான எதிர்ப்பு) காந்தியடிகள், வெள்ளையனே வெளியேறு என்ற இறுதிப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஹிட்லருக்கு எதிராக செக்கோஸ்லாவாகியாவினர், போலந்து நாட்டினர் ஆகியோரும் இப்படியான போராட்டத்தை முன்னெடுக்கும்படி காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக இப்படியான போராட்டங்களுக்குத் தரும் ஆதரவென்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள் நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பயன் தராது என்று எந்தவகையிலும் அவர் சொல்லவில்லை.
ஒத்துழையாமையும் சட்டமறுப்பும், ஜனநாயகமும் சுதந்தர நாடும் நன்கு செயல்பட உதவும் விஷயங்களே. இன்னும் சொல்லப்போனால் அவை இறுக்கமான சட்ட அமைப்புகளைவிட மிகவும் முக்கியமானவை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநில அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் அல்லது இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்குள் நடக்கும் மட்டுப்பட்ட விவாதங்கள், பரிசீலனைகள் ஆகியவற்றைவிட அமைதிப் போராட்டங்கள் மிகவும் அவசியமானவையே.
சர்வாதிகாரம், அநீதி, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இப்படியான அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் உண்மையில் அரசையும் மக்கள் சமூகங்களையும் காப்பாற்றக் கூடியவர்களே. அவர்கள் மட்டும் இல்லையென்றால், சமூகமானது வெறும் இயதிரம் போன்ற ஒன்றாகவே முடங்கிப் போகும். அல்லது சர்வாதிகாரப் போக்கினால் முழுமையான அராஜகம் மற்றும் ஆயுதப் போராட்டம் போல முடியும்.
$$$
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
37. ஐ.ஓ.ஆர். ஃப்ரான்சிஸ் பேப்பர்ஸ் : எம்.எஸ்.எஸ். யுர் இ, பக்கம் 37. ஹிண்ட்ஸ் ஆஃப் அ பொலிட்டிக்கல் சிஸ்டம் ஃபார் தி கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா (1772)
38. லண்டன் பப்ளிக் ரெக்கார்ட் ஆஃபீஸ், எலென்பரோ பேப்பர்ஸ், PRO/30/9/4/Part II/2. அக்டோபர்11, 1829, சி.ஜே.மெட்கஃபே
39. அதே.
40. அதே.
41. திர்ஹம், பேலியோக்ராஃபி அண்ட் டிப்ளமேட்டிக் துறை: ஏர்ல் க்ரே பேப்பர்ஸ், பாக்ஸ் 36/ ஃபைல் 1, பிப்ரவரி, 19, 1829, சி.ஜே.மெட்கஃபே.
(நிறைவு)
$$$