அதிகமான் நெடுமான் அஞ்சி-6

-கி.வா.ஜகந்நாதன்

6. ஒளவையார் தாது

அக் காலத்தில் காஞ்சிபுரத்தில் தொண்டைமான் இருந்து அரசாண்டு வந்தான். அதிகமானுக்குப் பெரிய மன்னர்களுடன் நட்பை வளர்க்க வேண்டும் என்னும் அவா உண்டாயிற்று. பாண்டியனுக்குச் சில சமயங்களில் அதிகமான் போரில் உதவி புரிந்தான். அதனால் அவனுடைய நட்புக் கிடைத்தது. ஒளவையாரைப் போன்ற தமிழ்ப் புலவர்கள் அடிக்கடி மதுரைக்கும் தகடூருக்கும் மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தார்கள். அதன் வாயிலாகவும் அந்த நட்பு வலிமை பெற்றது. சோழ மன்னனிடமும் அதிகமான் உறவு பூண்டான். அடிக்கடி தக்க பெரியவர்களைத் தூதாக அனுப்பிச் சோழனுடைய நலங்களை விசாரித்து வரச் செய்வான். சேரர் குலத்தோடு மட்டும் அவனுக்கு நெருக்கம் இல்லாமல் இருந்தது. இன்று நேற்று வந்த பிளவு அன்று இது. மிகப் பழங்கால முதற்கொண்டு சேர மன்னர்களுக்கும் அதிகர் குலத்துக்குமிடையே ஒரு வகையான பகைமை இருந்து கொண்டே வந்தது. அதனால் சேரனுடன் மாத்திரம் அதிகமானுக்கு யாதோர் உறவும் இல்லாமல் இருந்தது.

தொண்டைமானுடைய தலைநகரம் நெடுந்தூரத்தில் இருந்தது; சோழ நாட்டுக்கு வடக்கே பல காதங்களுக்கு அப்பால் உள்ளது. அங்கே புலவர்கள் அடிக்கடி போய் வருவதும் இல்லை. மதுரைக்கு அவர்கள் போவதுதான் மிகுதி. இதனால் தொண்டைமானுடைய தொடர்பு அதிகமானுக்கு உண்டாக வாய்ப்பு நேரவில்லை. எப்படியாவது சோழ பாண்டியர்களுடன் நட்புப் பூண்டதுபோல தொண்டைமானுடனும் உறவு கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு எழுந்தது.

இதற்கு என்ன வழி என்று பல நாள் ஆராய்ந்து கொண்டிருந்தான். பிறகு, ஒளவையாரைக் கொண்டு அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று தோன்றியது. தன் கருத்தை அந்தப் புலவர் பெருமாட்டியிடம் அறிவித்தான். அவர் பேருவகையோடு, அவ்வாறே செய்யலாம் என்று சொன்னார். உடனே தக்க காவலர்களும், கையுறைகளைத் தாங்கிச் செல்லும் மக்களும், ஏவலர்களும் உடன் செல்லப் பணித்து, ஒரு சிவிகையில் ஒளவையாரை ஏற்றித் தொண்டைநாட்டை நோக்கி அனுப்பினான் அதிகமான்.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். ஒளவையார் சென்ற வழியில் எல்லாம் அவருக்குச் சிறப்புக் கிடைத்தது. மக்கள் அவரைக் கண்டு இன்புற்றார்கள். அன்பு கனியப் பேசினார்கள். சில நாட்களில் ஒளவையார் காஞ்சியை அடைந்தார். மன்னர்க்குரிய வரிசைகளுடன் வந்த அவரை இன்னாரென்று தெரிந்துகொண்ட தொண்டைமான் அவரை வரவேற்றுப் பெருஞ் சிறப்புச் செய்தான். “தங்களுடைய பெருமையைக் காதாலே கேட்டிருக்கிறேன்; இப்போது கண்ணாலே தங்களைக் காணும் பேறு கிடைத்தது” என்று உவகை பொங்கக் கூறினான்.

 “அதிகமானிடத்திலிருந்து நான் வருகிறேன். அவனுடைய வள்ளன்மையை யாவரும் அறிவார்கள். அவன் உன்னுடைய நட்பை வேண்டி என்னைத் தூதாக அனுப்பினான். தகடூர் என்னும் ஊரில் இருந்து, வீரமும் ஈகையும் விளங்க அரசாளும் அந்தத் தலைவனுடைய ஏவலை மேற்கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் ஒளவையார்.

‘தங்களைப் போன்ற பெரியவர்களை உறவினர்களாகப் பெற்ற அதிகமான் கிடைத்தற்கரிய பேறுடையவன் தான் என்று சொல்ல வேண்டும். அவனுடைய நட்பை ஏற்றுக்கொள்வது எனக்குப் பெருமையையே தரும்” என்று கூறி அளவளாவினான் தொண்டைமான்.

ஒளவையார் காஞ்சிமா நகரின் எழிலைப் பார்த்தார். தொண்டைமானது அரண்மனையை நன்றாகப் பார்த்தார். “இந்த அரண்மனையில் படைக்கலங்களை வைத்திருக்கும் கொட்டிலை நீங்கள் பார்க்க வேண்டும். சேர சோழ பாண்டியர்களிடங்கூட இவ்வளவு படைக்கலங்கள் இருக்குமோ என்பது ஐயந்தான். மிகவும் நன்றாக அவற்றை வைத்துப் பாதுகாக்கும்படி செய்திருக்கிறேன்” என்று தொண்டைமான் கூறினான். ஒளவையாரை அங்கே அழைத்துச் சென்றான்.

படைக்கலக் கொட்டில் பெரிதாகவே இருந்தது. ஒரு பக்கம் ஈட்டிகளாக வைத்திருந்தார்கள். மற்றொரு பக்கம் கேடயங்களாக இருந்தன. வேறு ஓர் இடத்தில் பளபளவென்று ஒளிர்ந்த வாள்களை மாட்டி வைத்திருந்தார்கள். வேல்கள் ஒரு பால் விளங்கின. வில்லு, அம்பும் ஓரிடத்தில் இருந்தன. கவசங்களும், தலையில் அணிகின்ற இருப்பு முடிகளும் தனித்தனியே காட்சி அமரித்தன. இன்னும் பல வேறு படைக்கலங்களை ஒளவையார் அங்கே கண்டார். யானையின் அங்குசங்களும், குத்துக் கோல்களும் ஓரிடத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தன. நெருஞ்சிமுள்ளைப் போல இரும்பிலே செய்திருக்கும் படை ஒன்று உண்டு அதற்குக் கப்பணம் என்று பெயர். போர்க்களத்தில் பகைவரின் யானை வேகமாக வரும்போது கப்பணங்களை அதன் முன் தூவுவார்கள். அதன் காலில் அவை தைக்கும்; மேலே நடக்க முடியாமல் அது தடுமாறும். அத்தகைய கப்பணங்கள் ஓரிடத்தில் குவியலாகக் கிடந்தன.

ஆயுதபூசை நடக்கும்போது தொழிலாளர்கள் தம்முடைய கருவிகளை யெல்லாம் தூசின்றித் துடைத்து மெருகிட்டு வைப்பார்கள். பூவையும் மாலையையும் சூட்டி வழிபடுவார்கள். அங்கே இருந்த படைகள் எல்லாம் அந்த முறையில் விளங்கின. அவற்றைப் பளபளவென்று தேய்த்து எண்ணெய் பூசியிருந்தார்கள். உடைந்ததாக ஒன்றுமே இல்லை. எல்லாவற்றையும் நன்றாகச் செப்பஞ் செய்து பளபளக்கும்படி வைத்திருந்தார்கள். மயிற் பீலியைச் சிலவற்றிற்கு அணிந்து அழகு செய்திருந்தார்கள். மாலைகளைப் புனைந்திருந்தார்கள். அந்தக் கொட்டில் நல்ல பாதுகாப்பான இடத்தில் அமைந்திருந்தது. காவலர்கள் அங்கே இருந்து காவல் புரிந்து வந்தார்கள்.

”இத்தனை படைக்கலங்களையும் நீங்களே வாங்கினீர்களா?” என்று ஒளவையார் கேட்டார்.

”என் முன்னோர்கள் வைத்திருந்தவை பல; நான் வாங்கினவை சில”.

“இப்போது ஏதேனும் விழா உண்டோ? இவற்றை நன்றாகத் தேய்த்து அணி செய்திருக்கிறீர்களே!”

“இப்போது மட்டும் அன்று; எப்போதுமே இவை இந்த நிலையில்தான் இருக்கும். ஒரு வேலின் முனை கூட முறிந்திராது.”

“அடிக்கடி இவற்றைச் செப்பஞ் செய்யும்படி இருக்குமோ?”

“செப்பம் செய்ய வேண்டி இராது. அடிக்கடி துடைத்து நெய் பூசச் செய்வேன்.”

“இந்தப் படைக்கலங்கள் யாவுமே உங்களுக்குப் பயன்படுகின்றனவா?”

“ஆம்; இவற்றால் எனக்கு எத்தனை பெருமை! வருகிறவர்களுக்கெல்லாம் இந்தக் கொட்டிலைக் காட்டுவேன். கண்டவர்கள் யாவரும் வியப்படைகிறார்கள்.”

ஒளவையாருக்கு உண்மை விளங்கியது. தொண்டைமான் போரில் ஈடுபடுகிறவன் அல்லன் என்பதை அறிந்து கொண்டார்.

தொண்டைமான், “அதிகமான் படைக்கலக் கொட்டில் இதில் பாதியாவது இருக்குமா? அங்கே படைக் கருவிகளைக் கருத்துடன் திருத்தமாகப் போற்றி வருகிறார்களா?” என்று கேட்டான்.

ஒளவையார் என்ன சொல்வதென்று சிறிதே சிந்தனையுள் ஆழ்ந்தார்.

தொண்டைமான், “அவன் கொட்டிலையும் இதையும் ஒப்பு நோக்கும்போது இதன் பெருமை உங்களுக்குத் தெரிகிறதென்று நினைக்கிறேன். அதனால்தான் நீங்கள் அங்குள்ள நிலையைச் சொல்ல நாணுகிறீர்கள் போலும்!” என்றான்.

தமிழ்ப் பெருமாட்டிக்கு இந்த வார்த்தைகள் நயமுடையனவாகத் தோன்றவில்லை. ‘கொலு வைத்தது போல இவற்றை வைத்துக் கொண்டாடுகிறான். இந்தப் படைக்கலங்கள் வீரர் கையில் ஏறி எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இதை ஒரு பெருமையாக எண்ணுகிறானே?’ என்பதை நினைக்கையில் அவருக்கு உள்ளுறச் சிரிக்கத்தான் தோன்றிற்று. அதிகமான் பெருமையை வெளியிட வாய்ப்பான சமயம் வந்திருக்கிறதென்று மகிழ்ந்தார். “அதிகமானிடம் உள்ள படைக் கலங்களுக்கும் இங்குள்ளவற்றுக்கும் எத்தனையோ வேறுபாடுகள். இங்கே இவற்றைத் தெய்வமாக அல்லவா வைத்துப் போற்றுகிறீர்கள்? அங்கே…”

“அங்கே இப்படி இல்லையா? படைக்கலக் கொட்டில் இருக்கிறதல்லவா?”

“இருக்கிறது, இருக்கிறது. ஆனால் அங்கே படைக்கலங்களைத் தான் சேர்ந்தாற்போல் காண முடியாது.”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

‘இங்கே உள்ள கருவிகள் செல்வப் பிள்ளைகளைப் போலப் பளபளவென்று விளங்குகின்றன; பீலியை அணிந்தும் மாலையைச் சூட்டிக் கொண்டும் அழகாகக் கிடக்கின்றன. பிடிகளை நன்றாகச் செப்பஞ் செய்து திருத்தமாக வைத்திருக்கிறீர்கள். துருவேறாமல் அடிக்கடி நெய் பூசி வருகிறீர்கள். இந்தக் கொட்டிலில் இவை. பாதுகாப்பாக உள்ளன. ஆனால் அதிகமானுடைய படைக்கலங்களோ….”

தொண்டைமான் அவர் சொல்லப் போவதைக் கேட்க ஆவலுடன் இருந்தான். ஒளவையார் தொடர்ந்து கூறினார்.

 “அவைகளில் பலவற்றிற்கு முனை முறிந்து போயிருக்கும். பலவற்றிற்குக் கங்குகள் ஒடிசலாக இருக்கும்.”

“ஏன் அப்படி ?”

“பகைவர்களைக் குத்தி அப்படி ஆயின. ஒரு கருவியாவது முழு உருவோடு இராது. எல்லாம் சிதைந்து உருக்குலைந்திருக்கும்.”

“அவற்றை அப்படியே படைக்கலக் கொட்டிலில் போட்டிருக்கிறார்களா?”

“படைக்கலக் கொட்டில் என்பது பேருக்குத் தானே அன்றி, படைக்கலங்கள் அங்கே இருப்பதில்லையே! போரிலிருந்து நுனி ஒடிந்தும் வளைந்தும் பூட்டுக் கழன்றும் பிடி உடைந்தும் வரும். அப்படியே கொல்லன் பட்டறைக்கு அதிகமான் அனுப்பி விடுவான். அங்கேதான் அவற்றைப் பார்க்கலாம். அவை செப்பஞ் செய்து வந்தால் அடுத்த போர் காத்திருக்கும். இந்த அழகு வருமா?”

மூதாட்டி உள்ளே ஒரு குறிப்பை வைத்துப் பேசினார். அதிகமானுடைய படைக்கலங்களை இழித்துக் கூறுவதுபோல் அவனுடைய வீரத்தைப் புகழ்ந்தார். தொண்டைமானுடைய படைக்கருவிகளைப் புகழ்வது போல, அவை பயனின்றிக் கிடப்பதைக் குறிப்பிட்டு இகழ்ந்தார்.

“படைக்கலங்களைப் பாதுகாத்து வைப்பதற்கே எவ்வளவோ செலவாகிறது” என்று, ஒளவையாரின் குறிப்பை உணராமல் மேலும் தொண்டைமான் பேசினான்.
“நீங்கள் பெரிய அரசர். அதனால் இப்படியெல்லாம் அழகு பண்ண முடிகிறது. அதிகமான் சிற்றரசன் தானே? கையிலே இருந்தால் வறியவர்களுக்கு வேண்டியவற்றை வாரி வழங்குவான்; இல்லையானால் தான் உண்ணுவதை அவர்களுக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வான்.”

அதிகமானுடைய ஈகையையே இந்த மொழிகளால் ஒளவையார் புலப்படுத்தினார். தொண்டைமானோ அதிகமானை வறியன் என்று சொல்வதாக எண்ணிக் கொண்டான். “தங்களுடைய திருவாக்கால் என்னுடைய படைக்கலக் கொட்டிலைச் சிறப்பித்து ஒரு பாடல் பாடியருள வேண்டும்” என்று பணிவாக வேண்டினான்.

“அப்படியே செய்கிறேன். அதிகமானுடைய படைக்கல நிலையையும் சேர்த்தே பாடுகிறேன்” என்று தாம் கூறிய கருத்துக்களையெல்லாம் அமைத்து ஒரு பாடலைப் பாடினார் ஒளவையார்.

இவ்வே, பீவி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காம் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியனக ரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில் மாதோ; என்றும்
உண்டாயின் பாதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணனால்எங் கோமான் வந்துதி வேலே. *1

[இவைகளோ, மயிற்பீலியை அணிந்து, மாலை சூட்டி. உருவம் திரண்ட வலிமையுடைய காம்பு அழகுறச் செய்து நெய் இடப்பெற்று, காவலையுடைய அகன்ற அரண்மனையில் இருக்கின்றன. அவையோ – எப்போதும் வளம் இருந்தால் வேண்டிய உணவுகளை வழங்கி, வளம் இல்லையானால் தான் உண்ணுவதைப் பகிர்ந்தளித்து உடனுண்ணும் ஏழைகளின் உறவினனும், தலைவனும், அண்ணலுமாகிய எம் கோமான் அதிகனுடைய கூரிய முனையையுடைய வேல்களோ- பகைவர்களைக் குத்திப் பக்கங்களும், நூனியும் சிதைந்து, கொல்லனுடைய உலைக்களமாகிய சிறிய இடத் தில் இருக்கின்றன. இவ்வே – இவை, பீலி – மயிற்பீலி. கண் – இடம்; இங்கே உருவம். நோன் காழ் – வலிய காம்பு கடி – காவல். வியல் நகர – அகன்ற அரண் மனையில் உள்ளன. நகரவே என்பது நகரவ்வே என்று விகாரமாக நின்றது. அவ்வே – அவை. கோடு – பக்கம். நுதி – நுனி. கொல் துறை – கொல்லனுடைய உலைக்கள் மாகிய, குற்றில – குறிய இல்லில் உள்ளன. பதம் – உணவுப் பொருள். இல்லோர் – வறியவர்கள். ஒக்கல் – உறவினன். வை -கூர்மையான.]

தொண்டைமான் இதைக் கேட்டு மகிழ்ந்து போனான். ஒளவையார் சில காலம் அங்கே தங்கி அதிகமானுடைய குண நலங்களை யெல்லாம் தொண்டைமானுக்குச் சொன்னார். அத்தகைய அறிவுடைப் பெருமகளாருடைய மதிப்புக்குரியவனாக இருப்பதற்கு அதிகமானிடம் ஏதோ சிறப்பிருக்க வேண்டும் என்பது அம் மன்னனுக்குப் புலனாயிற்று. “அதிகமானுடைய நட்பு உங்களால் கிடைத்ததற்கு நான் மிக்க நன்றி பாராட்டுகிறேன்” என்று மனம் கனிந்து கூறினான்.

அடிக்குறிப்பு மேற்கோள்:

1. புறநானூறு, 95

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s