அழகிய போராட்டம் (பகுதி- 6)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம்- 3  

பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து 1810-11 காலகட்டத்தில் பனாரஸிலும் பிற பகுதிகளிலும் நடந்ததாகத் தெரியவரும்  போராட்டங்கள் எல்லாம் 1920-  1930களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கச் செயல்பாடுகளைப் போலவே  இருப்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். 1810-11 வாக்கில் பனாரஸிலும் பிற பகுதிகளிலும் நடந்த விஷயங்களை சுருக்கமாக இங்கு மறு பார்வை பார்ப்பது மிகவும் அவசியமாக இருக்கும்.

வீட்டு வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்தப் போராட்டம் ஆரம்பித்திருக்கிறது. எனினும் அதற்கு முன்னதாகவே பல்வேறு விதமான அதிருப்திகள், மகிழ்ச்சியின்மைகள் பல காலமாகவே உள்ளுக்குள் இருந்துவந்துள்ளன. 1810 வாக்கில் இந்தப் பகுதிகள் எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. பனாரஸ், பாகல்பூர், மூர்ஷிதாபாத் போன்ற பகுதிகளில் இருந்த மக்கள் பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்திருந்தனர். பனாரஸ்வாசிகள் சொன்னதுபோல, வீட்டு வரியானது ஏற்கெனவே இருந்த காயத்தின் மேல் உப்பைத் தடவுவது போலவே இருந்திருக்கிறது. மூர்ஷிதாபாத் மக்கள் அந்தப் புதிய ஒடுக்குமுறையானது வெடிகுண்டு வெடித்ததுபோல இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். பனாரஸில் நடந்த முதல் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:

1. அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இறுதிச் சடங்குகள் செய்ய உரிய நபர்கள் கிடைக்காததால் பிணங்கள் எரிக்கப்படாமல் கங்கைக் கரையில் அநாதையாக விடப்பட்டன. அந்த அளவுக்கு தொழில்கள் முடங்கின.

2. ஆயிரக்கணக்கான மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு அரசாங்க்க் கணக்கு, 2,00,000 பேர் பல நாட்கள் தர்ணாவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கிறது. வீட்டு வரி ரத்து செய்யப்படாவிட்டால் அந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

3. பல்வேறு கைவினைக் கலைஞர்கள், தொழிலாளர்கள் அனைவரும் தத்தமது தொழில் குழுமங்கள் அமைப்புகள் மூலமாக  தொடர்புகளை உருவாக்கி போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.

4. அந்த நேரத்தில் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இரும்புக் கொல்லர்கள் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பிற பல்வேறு பகுதிகளில் இருந்த இரும்புக் கொல்லர்கள் அனைவரையும் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்திருக்கிறார்கள்.

5. பரிசல்காரர்கள் முழுமையாக பணி முடக்கம் செய்திருக்கிறார்கள்.

6. தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அந்த இடத்தைவிட்டு அகல மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்.

7. ஒவ்வொரு கிராமத்துக்கும், பனாரஸில் நடந்த போராட்டத்துக்கு வீட்டுக்கு ஒருவர் வந்து கலந்துகொள்ளும்படி செய்தி அனுப்பியிருக்கிறார்கள்.

8. ஒவ்வொரு வர்க்கத்தைச் சேர்ந்த நபர்களும் போராட்டம் தொடர தங்களால் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறார்கள். போராட்டக்காரர்களின் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து தந்திருக்கிறார்கள்.

9. மத அமைப்புகள் மக்கள் ஒற்றுமையாகப் போராட அனைத்து வகையிலும் தமது செல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளன.

10. மக்கள் கூட்டம் பரந்து விரிந்து இருந்தது. போராட்டத்தில் இருந்து விலக நினைத்தவர்களை அவமானப்படுவதில் இருந்தும், ஓரங்கட்டப்படுவதில் இருந்தும் பாதுகாக்காக காவல் துறையால் முடியவில்லை என்று மாஜிஸ்ட்ரேட் தெரிவித்திருக்கிறார்.

11. பனாரஸின் தெருக்களில் போராட்டம் தொடர்பான  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அனல் கக்கும் வார்த்தைகள் கொண்ட சுவரொட்டிகள் கடுமையாகக் கண்டிக்கத் தக்க தொனியில் இருந்திருக்கின்றன. அந்த சுவரொட்டி காகிதங்களை வைத்திருப்பவர்களைப் பிடித்துத் தஉவோருக்கு ஐநூறு ரூபாய் சன்மானம் வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆயுதங்கள் இல்லாத போராட்டம் பற்றி மக்களுடைய பார்வை என்னவாக இருந்ததென்பது தொடர்பாக கலெக்டரின் கூற்றில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது:

                “வெளிப்படையான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது என்பது  இப்போதைக்கு அவர்களுடைய இலக்காக இல்லை. ஆயுதங்களை கையில் எடுக்காமல் இருப்பதன் மூலம் தங்களுக்கு ஒருவித பாதுகாப்பு கிடைக்கும்;  இப்படியான அமைதியான போராட்டக்காரர்களை அரசு பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு நிச்சயம் தாக்காது; சிவில் அதிகாரிகளால் தங்களை அப்புறப்படுத்தவும் முடியாது என்று நம்புபவர்களாகவே மக்கள் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையினால் நாளுக்கு நாள் அவருடைய எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது.” 

இப்படியான தீர்மானங்களை எடுப்பது மக்களுக்கு மிகவும் இயல்பாகவே இருந்திருக்கிறது. மேலும் இப்படியாகப் போராடுவது என்றால் அரசுடன் மக்கள் பகைமை கொண்டிருப்பதாக அர்த்தமில்லை. அவர்கள் அனுப்பி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தில் இது மிகவும் தெளிவாகக் குறிப்பிடவும் பட்டிருக்கிறது.   ‘உங்களால் அனுபவிக்கும் துயரத்துக்கு உங்களைத் தவிர வேறு யாரிடம் முறையிட முடியும்?  நீங்கள் செய்த செயலுக்கு உங்களிடம் தானே விண்ணப்பிக்க முடியும்?’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆட்சியாளர்- ஆளப்படுபவர் தொடர்பாக அந்த மக்கள் மத்தியில் அந்தக் காலகட்டம் வரையிலும் இருந்த சிந்தனையானது, பரவலாக அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருந்திருக்கிறது. அந்தவிதமான உரையாடலானது உண்மையில் பாரம்பரியமாகவே நீடித்து வந்திருக்கிறது. இப்படியான உரையாடலானது தேவைப்படும் நேரங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படியான நேரங்களில் என்ன செய்வார்கள் என்பது பனாரஸ் போராட்டத்தில் இருந்து முழுவதுமாக நன்கு தெரியவருகிறது.

இந்திய மக்கள் தங்களுக்கு முற்றிலும் அந்நியமான மதிப்பீடுகளைக் கொண்ட, எந்தவித பொது அம்சமும் இல்லாத புதிய ஆட்சியாளர்களிடம் தமது இத்தகைய பாரம்பரியமான போராட்டங்கள் எந்தப் பலனையும் தர முடியாது என்பதை மிகவும் தாமதமாகவே புரிந்துகொண்டனர். இதனால்தான் ஒரு பக்கம் அவர்கள் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. இன்னொருபக்கம், எதிர்ப்புக் காட்டாமல் முடங்கிப் போகவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாட்னா, சரூண், மூர்ஷிதாபாத் (சற்று மிதமானதாகத் தோன்றும்வகையில்), பாகல்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றவை எல்லாமே பனாரஸில் நடந்தவற்றைப் போலவே இருந்திருக்கின்றன. பாகல்பூரில் கலெக்டர் தான் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என அதிரடியாகச் செயல்பட்டிருக்கிறார். மக்கள் அவருடைய நடவடிக்கைகளினால் ஆத்திரமடைந்த நிலையிலும் அமைதியாகவே போராடியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் ஆயுதங்கள் இன்றி ஓரிடத்தில் கூடியிருக்கிறார்கள். பெண்களும் குழந்தைகளும் துப்பாக்கிச் சூடு தொடர்பான எந்த பயமும் இன்றி அதைத் துணிந்து எதிர்கொள்ளும் நோக்கிலேயே கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த வருடத்தை கொஞ்சம் 110-120  வருடங்களுக்கு முன்னதாக மாற்றிக்கொண்டு,  வரியின் பெயரை மாற்றிக்கொண்டு வேறுசில மேலோட்டமான மாற்றங்கள் செய்து கொண்டால் போதும்.  1920- 30களில்  என்ன நடந்தனவோ  அவை அப்படியே அந்த நூறு வருடங்களுக்கு முன்னதாக நடந்திருக்கின்றன.

மக்கள் ஒன்றுகூடிய விதம், முன்னெடுத்த நடவடிக்கைகள், ஒற்றுமையைத் தக்கவைக்கச் செய்தவை, போராட்டம் குறித்து மக்கள் மனதில் இருந்த அடிப்படையான மனோபாவம் – இவை எல்லாமே இந்த இரண்டு காலகட்டங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றன.

இந்த 1810-11 வாக்கில் நடந்த ஒத்துழையாமைப் போராட்டத்துக்கும் சத்யாகிரஹம் என்று சொல்லப்பட்ட போராட்டத்துக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று இதற்கு அர்த்தமில்லை.  ‘சத்யாகிரஹம்’ என்ற வார்த்தை காந்தியடிகளால் உருவாக்கப்பட்டதுதான். ஆஸ்ரம வாழ்க்கை அனுபவம் பெறாத ஒருவருக்கு அதை முறையாகப் பின்பற்ற முடியாது. ஆனால், சாதாரண சத்யாகிரஹம் என்பது  1810-11-ல் பனாரஸில் நடந்ததுபோல வெறும் ஒத்துழையாமை  மற்றும் சட்ட மறுப்பு என்பதுபோலவே நடந்து முடியும்.

செக்கோஸ்லோவியர்களுக்கும் போலந்து நாட்டினருக்கும் காந்தியடிகள் சத்யாகிரஹ வழிமுறையைப் பரிந்துரைத்தபோது (அந்த நாட்டினர் அவர்களுடைய திறமை, வாழ்க்கைப் பார்வைக்கு ஏற்ப அதை மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம்) பனாரஸில் நடந்த போராட்டத்தைத்தான் மனதில் கொண்டு சொல்லியிருக்க வேண்டும்

ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. 1810-11 களில் மக்கள், நமது விருப்பம்போலச் செயல்படவும் இடம் பெறவும் முடிந்தவர்களாக இருந்தனர்.  நூறு வருடங்களுக்குப் பிந்தைய இந்தியர்களுக்கு அது முடிந்திருக்கவில்லை. இரண்டுக்கும் இடையிலான அந்த நூற்றாண்டில் (வேறு சில பகுதிகளைப் பொருத்தவரையில் அதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ)  மக்களின் ஒட்டுமொத்த தைரியமும் தன்னம்பிக்கையும் ஒட்ட உறிஞ்சி எடுக்கப்பட்டு விட்டன.  ஒருவகையில் மேல்தளத்தில் என்றாலும், அந்த மக்கள்  உறைந்துபோன நிலையில்,  தமக்குள் உடைந்தவர்களாக,  அடிமைகளாக ஆகிவிட்டிருந்தனர்.  இப்படியான காலகட்டத்தில்தான் காந்தியடிகள் மக்கள் மத்தியில் அந்தப் பழைய தன்னம்பிக்கையையும்,  துணிச்சலையும் மீட்டுக் கொண்டு வந்தார்.

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தையும் சட்ட மறுப்பு போராட்டத்தையும் மிகப் பெரிய அளவிலும் வெற்றிகரமாகவும்  முன்னெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.  மகாத்மா காந்தி இந்தப் போராட்டங்களை எல்லாம் நடத்திய  இருபதாம் நூற்றாண்டில்  பிரிட்டிஷார் ஒப்பீட்டளவில்  மிதமானவர்களாக  மாறி இருந்தனர்.  இந்தியர்களின்  சாத்விக அணுகுமுறை  பிரிட்டிஷாரிடமும்  பிரதிபலித்திருந்தது. மகாத்மா காந்தியின் தனிப்பட்ட ஆளுமை கூட பிரிட்டிஷார் மனதில் அப்படியான நல்ல உணர்வுகளை உருவாக்கி இருக்கக்கூடும்.

பெரும்பாலான  பிரிட்டிஷார், காந்தியடிகளுடனான  தனிப்பட்ட உரையாடல்களில்,  இந்தியர்களுக்கு பிரிட்டிஷார் செய்து வரும் கொடுமைகள் பற்றி மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.  இதற்கு மாறாக 18-19ஆம்  நூற்றாண்டில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மனிதத்தன்மையற்ற,  மிகவும் கொடூரமான அரசாங்கத்தின் கையாட்களாக மட்டுமல்லாமல், தாமே அத்தகைய மனிதத்தன்மையற்றவர்களாகவும் இரக்கம் அற்றவர்களாகவும்  இருந்தனர்.  எது அவர்களிடையே அப்படியான சாதகமான மாற்றத்தைக் கொண்டு வந்தது?  ஒப்பீட்டளவில் மிதமாக நடந்துகொள்ள வைத்தது எது? என்பதெல்லாம் விரிவாக ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s