பாரதியின் ‘முரசு’ பாடல்

-மகாகவி பாரதி

பல்வகைப் பாடல்கள்

3. முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

1. ஊருக்கு நல்லது சொல்வேன் – எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும் – ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்.

2. வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலைதவ றாமல் – தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

3. பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை, – தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

4. நாலு வகுப்பும்இங் கொன்றே; – இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

5. ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே – மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;

6. ஏவல்கள் செய்பவர் மக்கள்! – இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ?
மேவி அனைவரும் ஒன்றாய் – நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்.

7. சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் – அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்; – அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; – தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் – நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

10. கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.

11. தெய்வம் பலபல சொல்லிப் – பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் – எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்.

12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார், – நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்,
கோவிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் யேசு மதத்தார்.

13. யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

14. வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, – அவை
பேருக் கொருநிற மாகும்.

15. சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி – வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

16. எந்த நிறமிருந்தாலும் – அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் – இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் – இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

18. நிகரென்று கொட்டு முரசே! – இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே – பொய்ம்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

19. அன்பென்று கொட்டு முரசே! – அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவுமே போகும் – வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.

20. அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்
அத்தனைப் பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

21. உடன்பிறந் தார்களைப் போலே – இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில் – இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

22. மரத்தினை நட்டவன் தண்ணீர் – நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம், – இங்கு
சேர்த்த உணவெல்லை யில்லை.

23. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! – இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! – பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

24. உடன்பிறந் தவர்களைப் போலே – இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை – இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?

25. வலிமை யுடையது தெய்வம், – நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை – தன்னை
வீழ்த்தி மிதத்திட லாமோ?

26. தம்பி சற்றே மெலிவானால் – அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி – மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

27. அன்பென்று கொட்டு முரசே! – அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் – கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

28. அறிவை வளர்த்திட வேண்டும் – மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் – பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

29. பாருக்குள்ளே சமத்தன்மை – தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது – புவி
யெங்கும் விடுதலை செய்யும்.

30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

31. ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s