அதிகமான் நெடுமான் அஞ்சி-4

-கி.வா.ஜகந்நாதன்

4. அமுதக் கனி

அதிகமான் காட்டில் பல மலைகள் இருந்தன. குதிரை மலை என்பது ஒன்று. கஞ்ச மலை என்பது மற்றொன்று. இப்போது சேர்வைராயன் மலை என்று சொல்லும் மலையும் அவன் ஆட்சியில் இருந்தது. கஞ்ச மலையில் பல வகை மருந்து மரங்கள் வளர்ந்திருந்தன. மூலிகைகள் படர்ந்திருந்தன. முனிவர்களும் சித்தர்களும் அந்த மலையை நாடி வருவார்கள். சிறந்த மருத்துவர்கள் அருமையான மருந்துக்குரிய செடி கொடிகளைத் தேடி அந்த மலைக்கு வருவார்கள். வேறு இடங்களில் கிடைக்காத அரிய மருந்துச் செடிகள் அங்கே கிடைத்தன. கஞ்ச மலைச் சித்தர் என்ற அற்புத ஆற்றலுடைய பெரியவர் ஒருவர் அந்த மலையில் வாழ்ந்திருந்ததாகப் பிற்காலத்தில் எழுந்த கதைகள் கூறுகின்றன.*1

அந்த மலையில் மிகவும் அருமையான நெல்லி மரம் ஒன்று இருந்தது. தமிழ் மருத்துவத்தில் வல்ல அறிஞர்கள் அதைக் கண்டுபிடித்தார்கள். அது பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே காய்க்கும்; பூத்துப் பிஞ்சு விடும்; ஆனால் பிஞ்சுகளெல்லாம் உதிர்ந்துவிடும். அதன் கனியை உண்டால் நரை திரை மூப்பின்றிப் பல காலம் வாழலாம். இதனை உணர்ந்த மருத்துவர்கள் அந்த மரத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்று அதிகமானிடம் சொன்னார்கள். அவன் அப்படியே அந்த மரத்துக்குத் தனியே வேலி கோலி, தக்க காவலாளரையும் அமைத்தான்.

ஒருமுறை அந்த மரத்தில் பிஞ்சுகள் உண்டாயின. அது கண்டு மக்களுக்கு நாவிலே தண்ணீர் ஊறியது. “காய் காய்த்தால் அதனைப் பெறப் பலர் முன் வருவார்கள்; அரசனுக்கு விருப்பமானவர்களுக்கே அவை கிடைக்கும்” என்று பேசிக் கொண்டார்கள். நாளாக ஆகப் பிஞ்சுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வந்தன. அதிகமான் மரத்தைச் சென்று பார்த்தான். ஒவ்வொரு நாளும் மரம் அணிகலனை இழந்துவரும் மங்கையைப் போலப் பிஞ்சுகளை உதிர்த்து வந்ததைப் பார்த்தான். யாருக்கு நல்லூழ் இருக்கிறதோ அவர்களுக்குக் கிடைக்கும் என்று எண்ணிப் போய்விட்டான். சில நாட்கள் சென்றன. சில பெரிய பிஞ்சுகளே மிஞ்சின.

நாட்கள் செல்ல, அவைகளும் உதிரலாயின. கடைசியில் ஒரே ஒரு காயே மிஞ்சியது முதிர்ந்தது. நெல்லிக்கனி பல இருந்தால் யார் யார் உண்பது என்ற சிக்கல் உண்டாக இடம் உண்டு. ஒரே ஒரு கனி தான் நின்றது. அரசனே அதை உண்ணுவதற் குரியவன் என்று யாவரும் எண்ணினார்கள்; பெரியவர்கள் அதையே சொன்னார்கள். ஒரு நல்ல நாள் பார்த்து மன்னன் அதை உண்ண வேண்டும் என்று சான்றோர்கள் திட்டம் செய்தார்கள்.

அந்த நாள் வந்தது. மரத்திலிருந்து கனியைப் பறித்து வந்தார்கள். அதிகமான் அரண்மனையில் அவன் வழிபடும் கடவுளுக்கு முன் வைத்தார்கள். அதிகமான் பணிந்து எழுந்தான். ஓரிடத்தில் சென்று அமர்ந்தான். கனியை ஒரு பொற்கலத்தில் ஏந்தி வந்தாள் எழிலுடை மங்கை ஒருத்தி; அவன் அருகில் நின்றாள். அவன் உண்ணலாமென்று அதை எடுக்கப் போகும் சமயத்தில் ஒளவையார் வந்து சேர்ந்தார். வெயிலில் நெடுந்தூரம் நடந்து வந்திருக்கிறாரென்று தோன்றியது.

அவரைக் கண்டதும் அதிகமான் எழுந்து வரவேற்றான். அவர் இப்போது அதிகமான் அரண்மனையில் உள்ள யாவருக்கும் பழக்கமாகி விட்டமையால் தடையில்லாமல் உள்ளே வந்துவிட்டார். அதிகமான் அவரை அமரச் சொல்லி நன்னீர் பருகச் செய்தான். “இந்தக் கடுமையான வெயிலில் வந்தீர்களே!’? என்றான்.

“ஆம்; கடுமையான வெயில் தான். ஆனால் என்ன? இங்கே வந்தால் குளிர்ந்த சொல்லும் குளிர்ந்த நீரும் குளிர்ந்த அன்பும் கிடைக்கின்றன” என்று சொன்னவர், அங்கே தட்டை ஏந்தி நின்ற மங்கையைப் பார்த்தார். அந்தத் தட்டில் இருந்த நெல்லிக்கனி அவர் கண்ணில் பட்டது, அது நெல்லிக் கனியா? வரும் வழியில் நாக்கு ஒரே வறட்சியாகி விட் டது. எங்கேயாவது நெல்லிக்காய் கிடைத்தால் உண்டு நீர் வேட்கையைப் போக்கிக் கொள்ளலாம் என்று பார்த்தேன். ஒரு நெல்லி மரங்கூட என் கண்ணில் அகப்படவில்லை” என்றார்.

அதிகமான் உடனே சிறிதும் யோசியாமல், ”இந்தாருங்கள்; இதை உண்ணுங்கள்” என்று சொல்லி அதை எடுத்து அவர் கையில் கொடுத்தான். அந்தப் புலவர் பெருமாட்டியார் அதை வாங்கி வாயில் போட்டு மென்றார். அதுவரையில் அவர் உண்ட நெல்லிக் கனிகளைப் போல் இருக்கவில்லை அது. தனியான இன்சுவை உடையதாக இருந்தது. ”இது என்ன, அதிசயக் கனியாக இருக்கிறதே! இத்தகைய சுவையையுடைய கனியை நான் கண்டதே இல்லையே!” என்று வியந்தார் அவர்.

அங்கே இருந்த சில முதியவர்களும் பிறரும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கலக்கமும் கோபமும் கொண்டார்கள். ”இந்தச் சமயத்தில் இந்தக் கிழம் இங்கே எங்கே வந்தது?” என்று சிலர் பொருமினார்கள். ”இந்த அரசர் உண்மையைச் சொல்லக் கூடாதோ? திடீரென்று எடுத்துக் கொடுத்து விட்டாரே!” என்று சிணுங்கினர் சிலர். ”இதுதான் கைக்கு . எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வதோ!” என்று இரங்கினர் சிலர். “இது அதிசயக் கனியாக இருக்கிறதே!” என்று ஒளவை சொன்னதும் அங்கிருந்த முதியவர் ஒருவர், ”ஆம், அதிசயக் கனிதான். அரசர் உண்ணுவதற்காகப் பாதுகாத்த கனி. இதை உண்டவர்கள் நரை திரை மூப்பின்றி நீடூழி வாழ்வார்கள்” என்று கூறினார். அவர் பேச்சில் சிறிது சினமும் அடங்கி ஒலித்தது.

“என்ன! நரை திரை மூப்பை நீக்குவதா?”

”ஆம்; கஞ்ச மலையில் உள்ள அருமையான மரத்தில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்த அற்புதக் கனி உண்டாகும். இந்த முறை இந்த ஒன்று தான் கிடைத்தது. இதை மன்னர்பிரான் உண்ண வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்பட்டோம். ஆனால்–”

“அடடா! நான் குறுக்கே வந்தேனோ? என்ன காரியம் செய்து விட்டேன்!” என்று வருந்தினார் ஒளவையார்.

“எல்லாம் இறைவன் திருவருள். அதை உண்ணும் தவம் உங்களிடந்தான் இருக்கிறது” என்று அதிகமான் சொல்லிக்கொண்டிருந்தபோதே, இடைமறித்து, “நீ உண்டால் நீடூழி வாழ்ந்து நாட்டிலுள்ள மக்களுக்கெல்லாம் நலம் செய்வாய்; நான் உண்டு பயன் என்ன?” என்றார்.

“எங்களைப் போன்ற மன்னர்கள் உண்டு வாழ்வதனால் உலகத்திற்கு ஒன்றும் பெரிய நன்மை உண்டாகப் போவதில்லை. போர்தான் விளையும். அரசர்களுக்குப் பிறர் நாடு கொள்வதும், அதற்காகப் போர் செய்வதும், அதன் பொருட்டுப் படைகளைத் தொகுப்பதுமே வேலை ஆகிவிட்டன. நான் என் அநுபவத்தில் இதை உணர்ந்திருக்கிறேன். எத்தனையோ முறை போர் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டுப் புலவர்களைப் புறக்கணித்திருக்கிறேன்.”

“அது மன்னர்களின் கடமை.”

“எது கடமை? புலவர்களைப் புறக்கணிப்பதா? போருக்கு ஆயத்தம் செய்வதா?”

“வீரத்தை வெளியிடுவது மன்னர்களின் புகழை வளர்க்கும் செயல் அல்லவா?”

”அதற்காக எத்தனை காலம் வீணாகிறது? அவர்கள் போர் செய்வதனால் புகழ் வளர்வதில்லை. உங்களைப் போன்ற புலவர்கள் வாழ்த்திப் பாராட்டுவதனால்தான் புகழ் வளர்கிறது. புலவர்கள் தம்முடைய அரிய கவிகளால் பிறரை வாழ வைக்கிறார்கள்; தாங்களும் வாழ்கிறார்கள். அறிவின் பிழம்பாக விளங்கும் நீங்கள் இந்தக் கனியை உண்டதுதான் முறை. நீங்கள் வாழ, உலகம் வாழும். இறைவன் நானும் உண்ண வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டானானால் மரம் இருக்கிறது; கனி இன்னும் விளையலாம்.”

”இத்தகைய கொடையாளியை நான் எங்கும் கண்டதில்லை. நீ நீடூழி வாழ வேண்டும். சாவைத் தரும் நஞ்சை உண்டும் சாவாமல் யாவருக்கும் அருள் செய்து விளங்கும் நீலகண்டப் பெருமானைப் போலப் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்!” என்று மனம் உருகி வாழ்த்தினார் ஒளவையார். உணர்ச்சி மிக்க நிலையில் அந்தப் பெருமாட்டியார் தம் கருத்தை அமைத்து ஓர் அரிய பாடலைப் பாடினார்.

“வெற்றியை உண்டாக்கி வெட்ட வேண்டியதைத் தப்பாமல் வெட்டும் வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்திலே அழியும்படி வென்றவனே, கழலுகின்ற வீர வளையைப் பெரிய கையிலே அணிந்தவனே, எப்போதும் ஆரவாரத்தோடு இனிய குடிநீர்களைப் பிறருடன் உண்டு மகிழும் அதியர் கோமானே, போரில் வஞ்சியாமல் எதிர் நின்று கொல்லும் வீரத் திருவையும் பொன்னாலான மாலையையும் உடைய அஞ்சியே, பால் போன்ற பிறையை மேலே அணிந்த முன் தலையையும் நீல மணிபோன்ற திருக்கழுத்தையும் உடைய சிவபெருமானைப் போல, பெருமானே, நீ நிலைத்து வாழ்வாயாக! மிகப் பழையதாக நிற்கும் நிலையை உடைய மலைப் பக்கத்துப் பிளப்பிலே தோன்றிய மரத்தில் விளையப் பெற்ற சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியை, இதனால் வரும் நன்மையை நாம் இழத்தல் கூடாது என்று எண்ணாமல், அதன் பெருமையை எனக்கு வெளியிடாமல் அடக்கிக்கொண்டு, சாவு நீங்கும்படி எனக்குத் தந்தாயே! இப்படி யாரால் செய்ய முடியும்?” என்ற பொருளோடு அந்தப் பாட்டுப் பிறந்தது.

வலம்படு வாய்வாள் ஏந்து ஒன்னார்
களம்படக் கொன்ற கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்,
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி,
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொல் நிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்குஈத் தனையோ!
*2

[வலம் – வெற்றி. வாய் – வாய்த்த; குறியைத் தப்பாமல் வெட்டிய. ஒன்னார் – பகைவர். கள்ளம்பட – போர்க் களத்தில் அழியும்படி.. தொடி – வளை. ஆர்கலி – ஆரவாரம். நறவு – கள் முதலிய குடிவகை. போர் அடு- போரிலே எதிர்த்தோரை வஞ்சியாமல் எதிர்நின்று கொல்லும். திரு – செல்வம், இங்கே வீரத்திரு. பொலந்தார் – பொன்னரி மாலை. புரை – ஒத்த,  நுதல் பொலிந்த சென்னி – நெற்றியோடு விளங்கும் தலை; என்றது முன் தலையை. நீலமணி மிடறு – நீலமணி போன்ற நிறமுள்ள கழுத்து. விடரகம் – பிளப்புள்ள இடம். தரு – மரம். ஆதல் – நன்மை அடக்கி – சொல்லாமல் மறைத்து.]

அதுமுதல் ஒளவையாருக்கு அதிகமானிடத்தில் அளவிறந்த மதிப்பும் அன்பும் பெருகின. நரை திரை மூப்பைப் போக்கும் கனியைத் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் ஒளவையாருக்கு ஈந்த இந்த நிகழ்ச்சியைப் புலவர்கள் அறிந்து பாராட்டினார்கள். மன்னர்கள் அறிந்து மனம் நெகிழ்ந்தார்கள். தமிழுலகமே அறிந்து வியந்தது. அதிகமானை, ”அமுதம் போன்ற கனியை ஔவைக்கு ஈந்தவன்” என்று குறித்து மக்கள் புகழ்ந்தார்கள். நெல்லியைப் பற்றிய பேச்சு வரும் இடங்களிலெல்லாம் அதிகமானுடைய பேச்சும் தொடர்ந்து வந்தது. பிற்காலத்திலும் அதிகமானை உலகம் நினைவுகூர்ந்து வருகிறதற்குக் காரணம் அவனுடைய வீரம் அன்று; அவனுடைய ஆட்சித் திறமையன்று; பிற வகையான கொடைகளும் அன்று; அமிழ்து விளை தீங்கனியை ஔவையாருக்கு ஈந்த மாபெருஞ் செயலே.

பல பல வள்ளல்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தாலும் மிக வியக்கத் தக்கபடி கொடைத் திறத்தில் சிறந்து நின்ற ஏழு பேரை மட்டும் சிறப்பாகச் சேர்த்துச் சொல்வது புலவர்களின் வழக்கமாகி விட்டது. ஏழு பெரு வள்ளல்களாகிய அவர்களைச் சிலர் கடையெழு வள்ளல்கள் என்பார்கள். வேறு இரண்டு வரிசை வள்ளல்களை முதலெழு வள்ளல்கள், இடையெழு வள்ளல்கள் என்று கணக்குப் பண்ணி இவர்களைக் கடையெழு வள்ளல்கள் என்று அவர்கள் சொன்னார்கள். அந்தப் பதினான்கு பேர்களும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் வருகிறவர்கள்; பல நாடுகளில் இருந்தவர்கள். இந்த ஏழு பேர்களே வரலாற்றோடு தொடர்புடையவர்கள்; தமிழ்நாட்டிலே வாழ்ந்தவர்கள்.

எழு பெரு வள்ளல்களிலே ஒருவனாக எண்ணிப் பாராட்டும் பெருமையை அதிகமான் பெற்றான். முதியவர்கள் கூடத் தாம் நீண்ட காலம் வாழ வேண்டுமென்று காயகற்பம் உண்பார்கள்; சாமியார்களையும் சித்த வைத்தியர்களையும் தேடி மருந்து கேட்டு உண்பார்கள். அத்தகைய உலகத்தில் எங்கும் பெறுவதற்கு அரியதும், உண்டாரை மூப்பு வாராமல் நீண்ட நாள் வாழச் செய்வதுமாகிய நெல்லிக் கனியைத் தன் நலம் பாராமல் ஒளவையாருக்கு இந்த அரும் பெருஞ் செயல் காரணமாகவே அந்தப் பெருமை அவனுக்குக் கிடைத்தது.

அதிகமான் காலத்துக்குப் பிறகு வாழ்ந்த நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் எழு பெரு வள்ளல்களைச் சேர்த்து ‘சிறுபாணாற்றுப்படை’ என்ற நூலில் சொல்லியிருக்கிறார். அங்கே அதிகமானைச் சொல்லும்பொழுது.

…….மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை அதிகன்
*3

என்று பாடியிருக்கிறார். அதில் இந்த வியத்தகு செயலைக் குறிப்பிட்டிருக்கிறார். இப்படியே, அதிகமானுடைய பலவகைச் சிறப்புக்களில் இந்த வண்மைச் செயலே சிறப்பாகப் புலப்படும்படி புலவர்கள் அவன் காலத்தும் பிற்காலத்தும் பல பாடல்களைப் பாடினார்கள்.

சாவாமல் செய்யும் நெல்லிக்கனியை அவன் உண்ணாமல் வழங்கி விட்டாலும், அந்த இணையற்ற ஈகையே அதிகமானை இறவாமல் தமிழ் இலக்கிய உலகத்திலும் சான்றோர்கள் உள்ளத்திலும் நிலவும்படி செய்துவிட்டது.

$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1. கொங்கு மண்டல சதகம் 42.
2. புறநானூறு 93.

3. பெரிய மலையின் மணக்கின்ற மலர்களையுடைய பக்கத்திலே, வளர்ந்து அழகு பெற்ற நெல்லி மரத்தில், சுவையாலும் சாவை நீக்குவதாலும். அமிழ்தத்தின் தன்மை விளைந்த இனிய கனியை ஒளவையாருக்குத் தந்த, வலிமையையுடைய சினம் கனலுகின்ற ஒளி விளங்கும் நீண்ட வேலையும், ஆரவாரம் செய்யும் கடலைப் போலப் பரந்த சேனையையும் உடைய அதிகமான். (மால்வரை – பெரிய மலை. கவினிய – அழகு பெற்ற . உரவு – வலிமை. அரவம் – ஆரவாரம்: பேரோசை. தானை – சேனை).


$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s