அழகிய போராட்டம் (பகுதி- 5)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம்- 2 (தொடர்ச்சி)

“முறைகேடாக,  விதிமுறைகளை மீறி  ஒன்றுகூடி இருந்த மக்களிடமிருந்து இந்த விண்ணப்பம் தரப்பட்டிருக்கிறது.  இது மிகவும்  தவறானது.  அதோடு அதில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களும் பாணியும் மிகவும் மரியாதைக் குறைவாக இருக்கிறது.  அதுவே அந்த விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்பதற்கு கூடுதல் காரணமாகத் இருக்கிறது”என்று மாஜிஸ்ட்ரேட் அதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

மாஜிஸ்ட்ரேட்டைப் பொருத்த வரையில், இப்படியாக நடந்து வரும் விஷயங்களெல்லாம்  ஒத்துழையாமையையே  உருவாக்குகின்றன.  மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஒழுங்கின்மையையே  கொண்டுவரும். இந்த நிலையில் சில வயதான மற்றும் விசுவாசமான பொது சேவைகள் நிலைமையை மேலும் மோசமாக்கும்.  அரசு தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றித் தரச் சொல்லி பனாரஸ் ராஜா மூலமாக முயற்சிகள் எடுத்துள்ளனர்.  மக்கள் ஓரளவுக்கு அமைதி படுத்தப்பட்டு விட்டிருக்கிறார்கள்.  எனினும் நிலைமை இன்னும் சீரடையவில்லை.  தற்காலிக  மாஜிஸ்ட்ரேட் தனது  ஜனவரி இருபத்தி எட்டாம் தேதி அறிக்கையில்,   ‘ஒரு பொது மன்னிப்பு வழங்கலாம்.  இந்த நகரத்தின் மனிதர்கள் அனைவரும் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார்கள்.  அரசாங்கத்தின் நலனுக்குத் தேவையானவை ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது’  என்று  ஆலோசனை தெரிவித்திருக்கிறார் 

தற்காலிக  மாஜிஸ்ட்ரேட்டின்  இந்த அறிக்கையைப்  பெற்றுக்கொண்ட அரசு பிப்ரவரி 4ஆம் தேதி  மக்கள் அமைதி நிலைக்கு திரும்பியது குறித்து மிகுந்த சந்தோஷத்தைத்  தெரியப்படுத்தியது;  தற்காலிக  மாஜிஸ்ட்ரேட்டின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டியது.  அரசுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு சிறப்புப் பட்டங்கள் தர முடிவு செய்யப்பட்டது.  ‘பதுக பந்தி’ வரியானது மாற்றப்படாமல் அப்படியே இருக்கட்டும். யாரெல்லாம் அதைச் செலுத்தி இருக்கிறார்களோ  அதே அளவுக்கான தொகையை அவர்கள் செலுத்தும்  வீட்டு வரியில்  இருந்து திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற மாஜிஸ்ட்ரேட் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அவர் சொன்ன பொதுமன்னிப்பு ஆலோசனையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.  அதுபற்றி அரசு கூறியது:

 “சமீபகாலத்தில் பனாரஸ் மக்கள் ஈடுபட்ட சட்டவிரோதமான கலகச்செயல்களுக்கு  பொதுமன்னிப்பு வழங்குவதில் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக கவர்னர் ஜெனரல் இன் கவுன்சில் கருதவில்லை.  மாறாக, நீதி நிலைநாட்டப்படடவும்,  இதுபோன்ற கலகங்கள் இனிமேல் நடக்காமலும் இருக்கவும் வேண்டுமென்றால், இந்தக் குழப்பங்களை முன்னின்று நடத்தியவர்கள் அந்தக் குற்றத்திற்காக நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று லார்ட்ஷிப் இன் கவுன்சில்  கருதுகிறார்.”

அதேநேரம்  பெருமளவிலான நபர்கள் தண்டிக்கப்படத் தேவையில்லை  என்று மாஜிஸ்ட்ரேட்டுக்கு அரசு வழிகாட்டியிருந்தது.

இதனிடையே பனாரஸ் மன்னர்  மற்றும்  ‘விசுவாசமான, நம்பிக்கைக்குரிய பொது சேவகர்கள்’ மூலமாக  மக்களை அமைதிப்படுத்தும் முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டன. பனாரஸ் மன்னர்  தனது மக்கள் சார்பில் முன்வைத்த விண்ணப்பத்தை பிப்ரவரி  ஏழாம் தேதி அன்று,  தற்காலிக மாஜிஸ்ட்ரேட்  அரசுக்கு அனுப்பி வைத்தார்  ‘இறுதி விண்ணப்பமாக’ அதை  அவர் குறிப்பிட்டிருந்தார்.  மக்கள்  லார்ட்ஷிப் இன் கவுன்சில் முன்பாக கடைசி விண்ணப்பமாக மிகவு ம் பணிவுடன் அதை சமர்ப்பித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.  அவர்கள்  மனதில்  அரசுக்கு ஒத்துழைப்பு தரக் கூடாது என்ற எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஜனவரி 13ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் சொன்னதைக் கேட்டு,  அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்பி, விதிவிட்ட வழி செல்வோம் என்று அவர்கள் அனைவரும் எழுந்து  வீட்டுக்குச் சென்று விட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

எனினும் அரசானது  ஜனவரி பதினோராம் தேதி தெரிவித்த தீர்மானங்களுக்கு மேலாக பனாரஸ் மக்களின் கோரிக்கைக்கு பெருமளவில் செவிசாய்க்க விரும்பியிருக்கவில்லை.  அரசின் அந்த்த் தீர்மானமும்,  முன்பு எடுக்கப்பட்ட சிறிய திருத்தங்களும் ஒரு வாரம் கழித்து பிப்ரவரி 23ஆம் தேதி அன்று மன்னருக்கும் பனாரஸின்  முக்கிய பிரமுகர்களுக்கும்  மாஜிஸ்ட்ரேட் மூலம் தெரிவிக்கப்பட்டது.  அவர் மக்களுக்குத் தெரிவித்த அறிக்கையில், ‘இனிமேல் இந்த விஷயம் தொடர்பாக யாருக்கும் எந்தப் புகாரும் அதிருப்தியும் இருக்க வாய்ப்பில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால்,  பனாரஸ் மன்னர் மூலமாகக்  கொடுத்த விண்ணப்பத்தில் விதிவிட்ட வழி செல்வோம் என்று முடிவெடுத்ததாகச் சொன்ன மக்கள்  மாஜிஸ்ட்ரேட் நினைத்தது போல  அடிபணிந்து போய்விடவில்லை.  ஒரு வருடம் கழித்து, 1811,  டிசம்பர் 28 அன்று கலெக்டர் அனுப்பிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

 “யாருடைய வீடுகளின் வரி அளவுகள் எல்லாம் மதிப்பிடப்பட்டு விட்டனவோ அவரிடம் சென்று  வரி வசூலித்து வரும்படி எனது உள்ளூர் அதிகாரிகளை அனுப்பி வைத்தேன்.  ஒவ்வொரு வீட்டுக்குமான  வாடகை,  அதற்கான வரி  ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கொடுத்திருந்தேன். யாருக்காவது அந்த வாடகை,  வரி தொடர்பாக ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால் அதை எனக்குத் தெரியப்படுத்த வேண்டும்.  முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு சரியான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தேன்.   அப்படியான அவர்களுடைய  கருத்துக்களைக் கேட்பதற்கு வாரத்தில்  ஒரு குறிப்பிட்ட நாளை  ஒதுக்கி இருந்தேன். வீட்டு உரிமையாளர்களுக்கும்,  வாடகைதாரர்களுக்கும்  அந்தச் செய்தி சென்று சேர்ந்து இருக்கவில்லை.  எவர் ஒருவருமே வரி தொடர்பாக எந்த விண்ணப்பத்தையும்,  எதிர்ப்பையும் தெரிவித்திருக்கவும் இல்லை. 

இப்படியான நிலையில்  பலரும் வரி மதிப்பீட்டாளர்கள் தங்கள் பணியைச் செய்ய மௌனமாக அனுமதித்தனர்.  அவர்கள் கேட்கும் எந்த ஒரு தகவலையும் தராமலும் எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமலும் இருந்தனர்.  மதிப்பீட்டாளர் என்ன சொன்னாலும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.  அதிகாரிகள் அதைத் தடுக்க முடியாது.  அதேநேரம் அவர்கள் சொல்வதைச் செய்யப் போவதுமில்லை என்ற முடிவுடன் இருந்தனர்.” 

இருந்தும்  அதிகாரிகளுக்கு ஆறுதலாக ஒரு விஷயம் நடந்ததாக கலெக்டர் குறிப்பிட்டிருக்கிறார். 

 “ஒரு சில விதிவிலக்குகளும் இருந்தன.  அரசுப் பதவியில் இருந்த அல்லது அரசாங்கச் செயல்பாடுகளுடன் தொடர்பில் இருந்த,  அல்லது வேறு சில தனியான, முக்கியமான பிரமுகர்கள்  அரசுக்கு தமது விசுவாசத்தை,  கீழ்ப்படிதலைக்  காட்ட முன்வந்தனர்.  அவர்கள் என்னை வந்து சந்தித்து தமது வீடுகள்,  கடைகள் தொடர்பான தகவல்களைத் தந்தனர்.  அவற்றுக்கான வாடகையைத் தெளிவாக்க் குறிப்பிட்டனர்.  வரி தொடர்பான மதிப்பீட்டை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனர்.” 

எனினும் இப்படியான சொற்ப விதிவிலக்குகள் பெரிய திருப்தியை அரசுக்குத் தந்திருக்கவில்லை.  அந்த அறிக்கையை முடிக்கும்போது அவர் ஒரு விஷயத்தை அழுத்தமாக் குறிப்பிட்டிருக்கிறார்.  ”முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது இருப்பதை விட மிகப் பெருமளவிலான ராணுவம் இங்கு வந்து சேர்ந்தால்தான் வரி வசூலிப்பு வேலைகளை முன்னெடுக்க முடியும்” என்று அழுத்தமாகத்  தெரிவித்திருக்கிறார்.

இப்படியான எதிர்ப்பும் ஒத்துழையாமையும்  பிப்ரவரி மாத  ஆரம்பத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது.  பனாரஸ் வாசிகளின் ‘இறுதி விண்ணப்பத்தை’  அரசுக்கு அனுப்பிய மாஜிஸ்ட்ரேட் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

 “எந்த விகிதத்தில் வரி விதிக்கப்படும்,  வாடகைகள் மதிப்பிடப்படும் என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு அக்கறையே இல்லை.  வீட்டு வரிவிதிப்பு என்ற  கோட்பாட்டையே அவர்கள் அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.  இப்படியான  வரிவிதிப்பு  இந்த தேசத்தின் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றுக்கு முற்றிலும் மாறுபட்டது என்றும், மிகவும் நூதனமானதாகவும்  அவர்களுக்குத் தெரிகிறது.  எந்த ஒரு அரசுக்கும்  இப்படியான ஒரு வரியை விதிக்க அதிகாரம் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.  இந்த வரி விதிப்பை  எதிர்க்கவில்லை என்றால் நாளுக்கு நாள் இந்த வரி அதிகரித்தபடியே செல்லும் என்று கருதுகிறார்கள்.  அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் அனைத்தின் மீதும் இது போன்ற வரிகள் விதிக்கப்பட்டு விடுமென்று அஞ்சுகிறார்கள். இப்படியான நிலையில் அவர்கள் எளிதில் வீட்டு வரி கொடுக்க சம்பாதித்து விடுவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.”

 பாட்னாவில்  நடந்தவை:

  இப்போது வேறு நகரங்களில் நடந்ததைப் பார்ப்போம்.  ஜனவரி இரண்டாம் தேதி அன்று எழுதிய கடிதத்தில் பனாரஸ் கலெக்டர் குறிப்பிட்டதுபோல  அங்கு நடந்தவற்றை  பிற நகரத்தினர் கூர்மையாக்க் கவனித்து வந்தனர்.  ஜனவரி 2 ஆம் தேதி அன்று  பாட்னா மாஜிஸ்ட்ரேட்  வீட்டு வரி தொடர்பாக  அந்த நகரவாசிகள் கொடுத்த 12 விண்ணப்பங்களை அரசுக்கு அனுப்பி வைத்தார்.  அரசு அவற்றில் எட்டு விண்ணப்பங்களை நிராகரித்தது.பனாரஸில்  இதுதொடர்பான விவாதங்கள் நடந்து வருவதால்  “பாட்னா நகரவாசிகள் கூட்டங்கள்  நடத்த விடாமல்  அல்லது மேலும் பல விண்ணப்பங்கள் கொடுக்க விடாமல், இதமாகவும் ஆறுதலாகவும் கையாளும்படி அரசு மாஜிஸ்ட்ரேட்டுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.  தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு பல நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் ஏதேனும் சட்டவிரோதமான  கடிதங்கள் எழுதப்பட்டாலோ  குழப்பம் விளைவிக்கும்  கூட்டங்கள் நடத்தப்பட்டாலும் உடனடியாக அந்தத் தகவலைத் தெரிவிக்கும்படியும்  அரசே கேட்டுக்கொண்டிருந்தது.

சரூண் பகுதியில் நடந்தவை:

ஒரு வாரம் கழித்து  (ஜனவரி 9)  சரூண்  பகுதியின் மாஜிஸ்ட்ரேட்  அரசுக்கு கடிதம் அனுப்பினார்.  அந்தப் பகுதி மக்கள் கொடுத்த விண்ணப்பங்களை அனுப்பி வைத்ததோடு கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

 “கலெக்டர் வரி மதிப்பீட்டுப் பணிகளைச்  செய்வதற்கு ஆட்களை அனுப்பியபோது பெரும் பதற்றம் உருவானது.  அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டிருந்தன.  மிக மோசமான சம்பவம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் நன்கு தெரிந்தன.”  வரி மதிப்பீட்டுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டதற்கான காரணங்களை  விவரித்த பின்னர் அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

 “இந்தப் பகுதியில் ராணுவம் எதுவும் இல்லை.  அரசின் மரியாதைக்குக்  களங்கம் விளைவிக்கும் செயல்கள் நடக்க ஆரம்பித்திருப்பது எனக்கு நன்கு புரிகிறது. அரசாங்கத்திடமிருந்து உத்தரவு வரும் வரை வரி மதிப்பீட்டுப் பணிகளை நிறுத்தி வைக்கும்படி கலெக்டரை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.”

ஜனவரி 11 ஆம் தேதி அன்று  மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நீங்கலாக சரூண்  பகுதி மக்களுக்கு எந்த வகையிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டது.  இந்த உத்தரவு ஜனவரி பதினெட்டாம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.  அதில் அரசு மேலும் தெரிவித்திருந்தது: 

 “சரூண்  இப்பகுதி மக்கள் வரி விதிப்புக்கு எதிராக வெளிப்படையாக எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நம்புவதாக கவர்னர் ஜெனரல் இன் கவுன்செல் நம்புகிறது.”

இப்படியான நம்பிக்கை இருந்த நிலையிலும்  அதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது: 

 “நிலைமை கை மீறிப் போனால்  அரசின் உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக தினாபூரில் இருக்கும்  ராணுவத்தை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.”

 முர்ஷிதாபாத்தில் நடந்தவை:

மார்ச் இரண்டாம் தேதி முர்ஷிதாபாத்துக்கு  அனுப்பிய கடிதத்திலும் இதுபோன்ற உத்தரவுகள் இடம்பெற்றிருந்தன.  ஆனால் இங்கு நிலைமை மேலும் மோசமாக இருந்தது.  பிப்ரவரி 25 அன்று இரண்டு விண்ணப்பங்களை மாஜிஸ்ட்ரேட் அரசுக்கு அனுப்பி வைத்ததோடு கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

 “பிரதான வணிகர்கள் வரிவிதிப்பை எதிர்ப்பதற்குப் பதிலாக  அதைத் தவிர்க்கும் நோக்கில் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி கூட்டமாக ஒரு இடத்தில் கூடி நிற்கத் திட்டமிட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் எனக்கு தகவல் கிடைத்தது.  சில முன்னணிப் பிரபலங்கள்  அப்படிச் செய்யவும் செய்தனர்.  அவர்களை நான் வீடுகளுக்குச் சென்று விடும்படி பேசி அனுப்பினேன். 

நகரைவிட்டு வெளியேறிச் செல்லும் முடிவு வலுப்பெற்று வருகிறது.  எனக்கு வந்த விண்ணப்பங்களில் இடம்பெற்ற வாக்கியங்கள் விவகாரமானவை என்பதால்  அவற்றை உங்களுக்கு என்னால் அனுப்ப முடியவில்லை.  வயலில் கூடியிருந்த சிலரை நான் பேசி வீடுகளுக்கு அனுப்பி வைத்தேன்.  விவகாரமான வாக்கியங்கள் கொண்ட விண்ணப்பம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:

 ‘இறைவனின் அருளால் இந்த பூமியில் வசிக்கும் எந்த ஒரு அரசரும் தனது மக்களைக்  கொடுமைப்படுத்தியது கிடையாது.  இது ஆங்கிலேய கனவான்களுக்கு நன்கு தெரியும்.  கடவுள் தனது படைப்புகளை எந்தவிதத் துன்பமும் வராமல் காத்து வருகிறார். ஆனால் சில ஆண்டுகளாக எங்களுடைய துரதிர்ஷ்டவசமான விதியினால் நாங்கள் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் காரணமாக அரசு இருந்துவருகிறது. தொடர்ந்து சில வருடங்களாக ஏற்பட்ட நோய்களினால் நகர  மக்கள்தொகை வெகுவாகக் குறைந்திருக்கிறது. முந்தி இருந்ததில் பாதிப் பேர் தான் இப்போது இருக்கிறார்கள்.  நகராட்சி விதிக்கும் வரிகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. 100  ரூபாய் சொத்தை 200 ரூபாய் கொடுத்து வாங்க முடியாது.  சுங்கவரியானது இரண்டு மடங்கு, சில நேரங்களில் நான்கு மடங்கு கூட அதிகரித்திருக்கிறது.  நகரத்திலிருந்து வேறு இடத்துக்கு சொத்தை மாற்ற விரும்பினால் அதற்கும் தனியாக வரி செலுத்த வேண்டி இருக்கிறது.  வீடுகளுக்கும் கடைகளுக்கும் கூட வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.  அது புதிய ஒடுக்குமுறை.  அரசின் இந்த உத்தரவானது எங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்த்தது போலிருக்கிறது.’

 (அந்த அறிக்கையின் முடிவில் மாஜிஸ்ட்ரேட் எழுதியிருந்தது:-) வீட்டு வரி தொடர்பாக எழுந்திருக்கும் அதிருப்தியானது  மிகவும் ஆழமாக இருக்கிறது.  அதோடு அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் எழுந்திருக்கிறது. எனவே நிலைமை மோசமானால் என்ன செய்வது?”  என்று  அரசிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.

ஆனால் மாஜிஸ்ட்ரேட் பயந்ததுபோல மூர்ஷிதாபாத்தில் பிரச்னை பெரிதாக வெடிக்கவில்லை. பாகல்பூரில் நடந்த சம்பவங்களையும் வைத்துப் பார்க்கும்போது அடுத்த ஏழு மாதங்கள் வரையிலும் வரி வசூல் பணிகள் அங்கு நடக்கவில்லை என்பது தெரியவருகிறது. அக்டோபர் 19 அன்று வருவாய்த் துறையின் ஓய்வு பெறும் நிலையில் இருந்த மூத்த அதிகாரி ஒருவர் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அவரே வருவாய்த் துறை மற்றும் நீதித் துறையின் செயலாளராக இருந்தார். அனைத்து உத்தரவுகள், ஆலோசனைகள் எல்லாம் அவருடைய கையொப்பத்தின் மூலவே வெளியிடப்பட்டன. வீட்டு வரி பற்றிக் குறிப்பிடுகையில் அவர் இப்படி எழுதியிருக்கிறார்:

 “கல்கத்தா நகரம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் ஊர்களுக்கு அல்லாமல் வேறு இடங்களுக்கு இந்த வீட்டு வரியானது பிற பகுதிகளில் பொருட்படுத்தத் தகுந்த விஷயமாக அரசுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். பிற பகுதிகளில் இந்த வரிக்கு எதிராக கணிசமான அளவுக்கு எரிச்சல் நிலவுகிறது. அந்த எரிச்சல் முழுவதுமாக மறைய நீண்ட காலம் என்றே தோன்றுகிறது. பெருவாரியான மக்களின் நன்மதிப்பைப் பெற ஒரு 2-3 லட்சம் ரூபாயை விட்டுக் கொடுப்பதென்பது பெரிய விஷயமே இல்லை” என்று அவர் தெரிவித்திருந்தார்.

அக்டோபர் 22 அன்று அரசு இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு வருவாய் போர்டுக்கு அதைத் தெரிவித்தது.

 “ரெகுலேஷன் 15,1810ன் மூலம் கொண்டுவரப்பட்ட வீட்டு வரியை நிறுத்தி வைப்பதில் வைஸ்பிரசிடெண்ட் இன் கவுன்சில் மகிழ்ச்சியடைகிறது. எந்தப் பகுதிகளில் வரி மதிப்பீட்டுப் பணிகள் நடந்து முடியவில்லையோ அங்கு அதை அப்படியே நிறுத்தும்படியும். எங்கெல்லாம் வரி வசூலிப்பு ஆரம்பித்திருக்கிறதோ அந்த இடங்களிலும் அதை நிறுத்தும்படியும் அறிவுறுத்துகிறது. அதே நேரம் எந்த இடங்களில் எல்லாம் இது தொடர்பாக போராட்டங்கள் நடக்கின்றனவோ அங்கு மட்டும் இந்தக் காலகட்டத்துக்கு எதையும் நிறுத்தி வைக்கவேண்டாம்.”

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களிடமிருந்தும் அவர்கள் மாவட்டத்தில் நிலைமை என்ன என்பது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அரசு கேட்டுக்கொண்டது. அந்த அறிக்கைகள் கிடைத்ததும் வரியை ரத்து செய்வது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பிக்கும். வெளிப்படையான எதிர்ப்புகள் இருக்கும் இடங்களில் மட்டும் முழுவதுமாக அல்லது பகுதியளவுக்கு வரி வசூலிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தது.

பாகல்பூரில் நடந்தவை:

பாகல்பூரில் வீட்டு வரிக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சி நடந்தது. அக்டோபர் 2 அன்று பாகல்பூர் கலெக்டர் எழுதிய கடிதம்:

 “30 செப்டம்பர், முந்தா நாள் திங்கட்கிழமையாக இருந்ததால் வரி வசூலிப்பு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தாசில்தாரின் வருகையைக் கண்டதுமே மக்கள் தமது கடைகளையும் வீடுகளையும் மூடிக் கொண்டுவிட்டனர். நேற்றும் அரசாங்க அதிகாரிகளினால் எதுவும் செய்யமுடியவில்லை. மாலையில் நான் வண்டியில் வெளியே போனபோது சாலையில் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால், தங்களுடைய நிராதரவான நிலைமை குறித்து புகார் மழை பொழிந்தனர். வரியைச் செலுத்த முடியாது என்று கூச்சலிட்டுச் சொன்னார்கள்.”

மறுநாள் அரசுக்கு மாஜிஸ்ட்ரேட் எழுதிய கடிதமும் இதை உறுதிப்படுத்துகிறது. கடைகள் மூடப்பட்டது குறித்து விவரித்த மாஜிஸ்ட்ரேட் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

 “நகரின் முக்கியஸ்தர்கள் என்னை வந்து சந்திக்கும்படி நேற்று காலையில் அழைப்பு விடுத்திருந்தேன். அவர்களுடைய நடத்தை மிகவும் முறையற்றது என்றும் அரசாங்கத்தின் உத்தரவை தடுத்து நிறுத்தவே முடியாது என்றும் எடுத்துரைத்தேன். வீட்டை விட்டு வெளியேறி ஊரை விட்டே போனாலும் போவோமே தவிர வரியைக் கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள். என்ன விகிதத்தில், எத்தனை மாதத்துக்கு ஒருமுறை வரி கட்டவேண்டும் என்ற தகவல்களை எல்லாம் அவர்களுக்கு விளக்கவே இடம் தரவில்லை.

என்னதான் அவர்கள் இப்படி எதிர்த்தாலும், மூர்ஷிதாபாத்தில் அல்லது அக்கம்பக்கத்தில் இருக்கும் வேறு ஜில்லாக்களில் வரி வசூல் ஆரம்பமானால் நாங்களும் தரத் தயார் என்று சொன்னார்கள். எனவே அதுவரை வரி மதிப்பீட்டுப் பணிகளை நிறுத்திவைக்கும்படி கலெக்டரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.”

 மாஜிஸ்ட்ரேட்டின் குறுக்கீட்டை கலெக்டர் விரும்பியிருக்கவில்லை. இப்படியான சட்டவிரோதமான எதிர்ப்புக் கூட்டங்கள் நடப்பதால் வரி விதிப்புப் பணிகளின் தொடக்க கட்டத்திலேயே அதை நிறுத்துவதென்பது அரசு  அதிகாரத்தின் ஆணிவேரை அறுப்பது போன்றது. ஓர் அரசுக்கு அதன் மக்கள் மீது அந்த அதிகாரம் இருந்தே ஆக வேண்டும் என்று குறிப்பிட்டு இதுதொடர்பாக அரசின் ஆலோசனையைக் கேட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் முகமாக அக்டோபர் 11 அன்று அரசு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. கலெக்டர் சொன்னது சரிதான் என்றும் மாஜிஸ்ட்ரேட்டின் நடத்தையை  ‘ஒப்புக்கொள்ளவில்லை’ என்றும் தெரிவித்திருந்தது.  “மாஜிஸ்ட்ரேட் வரி வசூலிப்புப் பணிகளை நிறுத்தியதென்பது பாகல்பூர், மூர்ஷிதாபாத், பாட்னா மற்றும் பல பகுதிகளில் மக்கள் இப்படிக் கூட்டமாகக் கூடி குழப்பம் விளைவிக்க ஊக்கம் தருவதாகவே அமைந்திருக்கிறது. அந்த உத்தரவை மாஜிஸ்ட்ரேட் உடனே வெளிப்படையாகத் திரும்பப் பெறவேண்டும். வீட்டு வரி வசூலிப்புப் பணிகளில் ஈடுபட கலெக்டருக்கு அனைத்து வகைகளிலும் உதவ வேண்டும்” என்று அறிவுறுத்தியது.

அந்த உத்தரவு அக்டோபர் 20-ம் தேதியன்று பாகல்பூருக்கு வந்து சேர்ந்தது. 21 அன்று இரவு பத்து மணி வாக்கில் கலெக்டர் அரசுக்குத் தெரிவித்த விஷயம்:

 “இன்று மாலை வரி வசூல் பணியில் ஈடுபட்டிருந்தபோது நான் என் வண்டியில் வைத்து மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கற்கள், கற்கள் போன்ற பல பொருட்கள் என் தலையைக் குறிவைத்து எறியப்பட்டன. என் முகத்திலும் தலையிலும் மிகப் பெரிய காயம் பட்டிருக்கிறது. திரு. க்ளாஸ் அவர்களுடைய வீட்டுக்குள் நுழைந்து தப்பித்திருக்கவில்லையென்றால் என் உயிரை இந்த உலகில் எதுவுமே காப்பாற்றியிருக்க முடியாது.”

இந்தச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் மற்றும் அவருடைய உதவியாளர் (தற்காலிக மாஜிஸ்ட்ரேட்) ஆகிய இருவரின் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. நவம்பர் 15 அன்று எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில், கலெக்டர் மட்டும் அடித்து விரட்டி, கூட்டத்தினரைக் கோபம் கொள்ளச் செய்யாமல் இருந்திருந்தால் இந்த்த் தாக்குதல் நடந்திருக்காது என்று நம்ப இடம் இருக்கிறது (அந்தப் பகுதியில் இருக்கும் கனவான்கள் பலரின் கருத்தும் இதுவே) என்று குறிப்பிட்டிருக்கிறார். கலெக்டர், வீட்டு வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது  தாக்கப்பட்டதாக அரசுக்குத் தெரிவித்திருப்பதென்பது  ‘உண்மைக்குப் புறம்பான’ செய்தி.  ‘செய்தியை உடனடியாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற பதற்றத்தில் எழுதிய கடிதமென்பதால் இப்படியான தவறான  செய்தி சொல்லப்பட்டிருக்கிறது’ என்று அரசு பின்னர் குறிப்பிட்டிருந்தது.

கலெக்டர் அவசர அவசரமாக அனுப்பிய தந்திச் செய்தியில்  “வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதாகச் சொன்னபோது கல்கத்தா அரசு அதை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டது. பதற்றத்தில் சொன்ன தவறான செய்தி என்ற புரிதல் அப்போது இருந்திருக்கவில்லை. அக்டோபர் 11 அன்று அனுப்பிய உத்தரவை நினைவுகூர்ந்ததோடு மாஜிஸ்ட்ரேட்டை உடனே சஸ்பெண்ட் செய்தது. வரி வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கலெக்டருக்கு போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து கொடுத்திருந்தால் பாகல்பூர் மக்கள் அந்தக் கடிதத்தில் சொல்லியிருப்பதுபோல கலெக்டருக்கும் அவர் மூலமாக அரசுக்கும் இப்படி அத்துமீறி நடந்துகொண்டு அவமானத்தை விளைவித்திருக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறது. 

அது மேலும் கூறுகையில்,  மாஜிஸ்ட்ரேட் பதவிக்கு திடமாகச் செயல்படும் துடிப்பான நபர் ஒருவரை நியமிக்கவிருப்பதாகவும் அந்த நபர் மக்கள் வரியை முறையாகச் செலுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விஷயமானது 28, அக்டோபர் 1811 எழுதிய கடிதத்திலும் இடம்பெற்றுள்ளது. இறுதியாக, “கலெக்டரும் காவல் துறை அதிகாரிகளும் தமது அரசாங்கக் கடமையை நிறைவேற்ற உதவும் வகையில் பாகல்பூருக்குக் கூடுதல் ராணுவப் படை (தேவை என்று தளபதி கருதினால்) அனுப்பவும்” என்று தெரிவித்தது.

 “அரசாங்கத்தின் தீர்மானமானது பாகல்பூரில் நடைபெற்ற சம்பவங்களில் எந்த்த் தாக்கத்தையும் ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை. ஏனென்றால் மக்களின் போராட்டங்கள் எல்லாம் அடக்கப்பட்ட பின்னே அந்தத் தீர்மானம் பாகல்பூர் அதிகாரிகளுக்கு வந்து சேர்ந்தது. எனினும் அங்கு எழுந்த  ‘எதிர்ப்பு அல்லது தடையை’த் தாண்டி வர உள்ளூர் அதிகாரிகள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. இதற்கு முக்கியமான காரணம், இந்த பிரச்னையை எப்படி அணுகுவதென்பதில் இருந்த கலெக்டருக்கும் மாஜிஸ்ட்ரேட்டுக்கும் இடையிலான மாறுபட்ட பார்வையே காரணம். அரசின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்பது கலெக்டரின் பார்வை. ஆனால், காவல் துறை மற்றும் ராணுவத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கவிருந்த மாஜிஸ்ட்ரேட் நிதானமான வன்முறையற்ற வழியைப் பின்பற்ற விரும்பினார்.

22-ம் தேதியன்று நடைபெற்ற மக்கள் கூட்டத்தைப் பற்றி 24ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் அரசுக்குத் தெரிவித்திருந்தார்:

 “ஷாஹ்ஜங்கி பகுதியில் என்னை வந்து சந்திக்கும்படி சில படைகளுக்கு உத்தரவு கொடுத்திருந்தேன். அங்கு முன்பே சென்ற நான் அவர்கள் வருவதற்காகக் காத்திருந்தேன். அங்கு சுமார் 8000க்கும் மேற்பட்ட மக்கள்  கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் யார் கையிலும் எந்த ஆயுதமும் இல்லை. கூட்டத்தின் தலைவர்கள் மையத்தில் இருந்தனர். எனவே அவர்களை எங்களால் கைது செய்யமுடியவில்லை. இறுதிச் சடங்குகள் செய்வதாக எங்களிடம் சொல்லப்பட்டது. அங்கேயே கூட்டமாக இருந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று அறிவித்ததும் அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனர். மறு நாள் காலையில் ஒரு விண்ணப்பம் எழுதிக் கொண்டுவந்து கொடுக்க அனுமதி கேட்டார்கள். விண்ணப்பம் முறையாக, மரியாதையான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். வீட்டு வரியை ரத்து செய்ய மாட்டேன் என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொன்னேன். எல்லாம் பேசி முடித்த பின்னரும் ஆங்காங்கே பலர் கூடி நின்றனர். நெசவாளர்கள், மற்றும் பல்வேறு கைவினைத் தொழிலாளர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். எஞ்சியவர்கள் வயதான பெண்களும் சிறுவர்களுமாக இருந்தனர். நான் அவர்களிடம் சென்று பேசினேன். கூட்டம் கலைந்த பின் கடைசியாக எஞ்சியிருப்பவர்களைச் சுட்டுவிடுவேன் என்று அவர்கள் அஞ்சுவதாகச் சொன்னார்கள். அப்படிச் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்ததும் நாங்கள் புறப்பட்டபோது அவர்கள் கலைந்து தத்தமது வீடுகளுக்குச் சென்றனர்.

மேலும் ஹில் ரேஞ்சர்ஸ் படைப் பிரிவின் தளபதி சொன்னார்:  “பிரதான போராட்டத் தலைவர்கள் புறப்பட்டுப் போனதும் எஞ்சிய கூட்டத்தினர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்  துப்பக்கிச் சூடு பற்றி எந்த பயமும் இல்லாமலே அங்கு இருந்தனர். ஒருவகையில் அப்படியான தாக்குதலை எதிர்பார்த்தே அங்கு குழுமி நின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மறுநாள் விண்ணப்பம் கொடுக்க அந்த மக்கள்  வரும்போது தேவையான ஆயுதப் படைகள் அங்கு இருக்க வேண்டும்.   அல்லது அவர்களிடமிருந்து எந்த விண்ணப்பத்தையும் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் கூட சரிதான். வேண்டுமானால் அந்த விண்ணப்பத்தை அவர்கள் கடிதமாக அனுப்பிவைக்கட்டும் என்று ராணுவத் தளபதி மாஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவித்திருக்கிறார். 

மறுநாள் மாஜிஸ்ட்ரேட் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், முன்பு தான் குறிப்பிட்டதுபோல எந்த விண்ணப்பமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். 23 அன்று மாலையில் ராணுவ உதவி கோரப்பட்டது. 24 மணி நேரம் கழித்து கலெக்டர் அனுப்பிய அறிக்கையில் ‘நேற்றைய இரவு எடுத்த நடவடிக்கை அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைத்துவிட்டது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையில் மாஜிஸ்ட்ரேட் வேறு பல நடவடிக்கைகளை எடுத்தார். அக்கம்பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட்களுக்கு  ஒரு செய்தி அனுப்பினார்.

பிற மாவட்டங்களில் இருந்து பாகல்பூருக்கு யாரும் கூட்டமாக பத்து பேருக்கு மேல் சேர்ந்து வராதபடி பார்த்துக்கொள்ளும்படியும் எந்தவித ஆயுதமும் பாகல்பூருக்குள் வராதபடியும் பார்த்துக்கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அத்துடன் உள்ளூரில் நடக்கும் அனைத்துவித தகவல் தொடர்பு வழிமுறைகளையும் தடுத்துவிடும்படியும் ஏதேனும் சந்தேகத்துக்கு இடமானதாக இருந்தால் உடனே தனக்குத் தெரிவுக்கும்படியும் கேட்டுக்கொண்டிருந்தார். இதனிடையில் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஒருவித குழப்பம் ஏற்பட்டது. அக்டோபர் 22 அன்று வீட்டு வரியை ரத்து செய்வது தொடர்பாக அரசு எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து, பாகல்பூர் கலெக்டரை வரி வசூலிப்பை நிறுத்தும்படி வருவாய்த் துறை கேட்டுக்கொண்டது. இந்தத் தீர்மானத்துக்கு அரசில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் வரி வசூலிப்பு ஆரம்பித்தது.

ஜனவரி 1812-ல் பாகல்பூரில் இருந்த ஐரோப்பியர்கள் சிலர் வீட்டு வரி கொடுக்க மறுத்தனர். அந்தப் பகுதியில் வரி வசூலிப்பைத் தொடர்வதற்காக இடப்பட்ட உத்தரவு தங்களுக்குப் பொருந்தாது என்று அவர்கள் வாதிட்டனர். அதைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் வசிக்கும் ஐரோப்பியர்களிடமிருந்து வீட்டு வரி வசூலிக்க வேண்டாம் என்று கலெக்டருக்கு வேறொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கல்கத்தாவைச் சுற்றி இருந்த பகுதிகளில் வசித்த ஐரோப்பியர்களுமே இந்த வீட்டு வரியைச் செலுத்த மறுத்ததாகவும் அதை அவர்கள் மீது திணிக்கவோ வரி செலுத்தாவிட்டால் அவர்களுடைய வீடுகளை பறிமுதல் செய்யவோ முடியுமா என்று தெரியவில்லை என்று அட்வகேட் ஜெனரல் கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஏற்கனவே வேறுபகுதிகளில் வரி வசூலிப்பை நிறுத்தியபோதிலும் கல்கத்தாவின் புற நகர் பகுதிகளில் மட்டும் வரி வசூலிப்பை அனுமதித்திருந்த அரசு அதையும் நிறுத்தியது.

ஜனவரி 12, 1812 அன்று அரசு வருவாய்த் துறைக்கு ஓர் அறிக்கையை அனுப்பியது. ரெகுலேஷன் 15, 1810 வரி வசூலிக்கும் சட்டத்தை கவர்னர் ஜெனரல் இன் சீஃப் நிறுத்திவைக்கத் தீர்மானித்தது. இந்த வரி ரத்து அறிவிப்பானது மே 8, 1812 அன்று ரெகுலேஷன் VII, 1812 என்ற பெயரில் நிறைவேறியது.

வீட்டு வரிவிதிப்பைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்த விஷயத்தை லண்டனில் இருந்த அதிகாரிகளுக்கு வங்காள அரசு பிப்ரவரி, 12, 1811ல் எழுதிய கடிதத்தின் மூலம் முதன்முதலாகத் தெரியப்படுத்தியது. அதைத் தொடர்ந்து டிராஃப்ட் எண் 218 (1811-12) மே 23, 1812-ல் உருவாக்கப்பட்டது.

மூல டிராஃப்டில் இருந்த ஒரு பத்தி இந்திய விவகாரங்களுக்கான கமிஷனர்கள் போர்டுக்கு அனுப்பிய இறுதி டிராஃப்டில் இடம்பெறவில்லை. வரியை விலக்குவதாக தீர்மானித்திருந்ததால் அது அவசியமில்லை என்று கருதி நீக்கப்பட்டது. அந்தப் பத்தி:

 ‘இந்த விஷயம் குறித்து (வீட்டு வரி) மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் பரிசீலித்த பின்னர், இந்த வீட்டு வரியை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம். சமீபத்திய உரையாடலில் இருந்து இது உங்களுக்கே தெரிந்திருக்கும். மக்களுடைய கூக்குரல் போராட்டத்தினால் உங்கள் அரசு அடிபணிந்துவிட்டதாக ஒரு பிழையான தோற்றம் இதனால் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, நீங்கள் சொல்லியிருக்கும்படியான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.’

அந்தப் பத்தியில் மேலும் இடம்பெற்றிருந்த விஷயம்:

 ‘அந்த்த் திருத்தங்கள் இல்லாமல் இந்த வரியை வசூலிக்க முற்பட்டால் அது மிகப் பெரிய தவறாகவே முடியும். எனவே அதை அமல்படுத்தும்படியாக என்னவெல்லாம் மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அதற்கான நடவடிக்கையை உடனே எடுங்கள். அரசின் மேலாதிக்கத்தை அதிக அளவுக்கு விட்டுக் கொடுக்காமலும் இதை அமல்படுத்துங்கள்.’

ஆனால், கல்கத்தா அரசுக்கு இப்படியான உணர்வுகளை லண்டனில் இருந்து பரிமாற வேண்டிய அவசியமே இருந்திருக்கவில்லை. ஏனென்றால் அவர்களுமே இதே எண்ணத்தில்தான் இருந்தனர். எந்தவொரு பின்வாங்கலும்  அரசின் மேலாதிக்கத்தைக் காயப்படுத்தாத வகையில்தான் மேற்கொள்ளப்படும் என்றுதான் அவர்களும் தீர்மானித்திருந்தார்கள். லண்டன் இது தொடர்பான அறிக்கையை அனுப்புவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, வங்காளத்தில் இருந்து டிசம்பர், 14, 1811-ல் அனுப்பப்பட்ட வருவாய்த் துறை கடிதமானது, கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:

 “வாதங்கள் எல்லாமே அந்த வரி தொடர வேண்டாம் என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. அதே நேரம் அரசாங்கத்தின் மேலாதிக்கத்துக்கு வலுச் சேர்த்தாக வேண்டிய அவசியமும் இருக்கிறது. அரசு தனது சட்டபூர்வ அதிகாரங்களைச் செயல்படுத்த முடியாமல் தடுக்கும் எதிர்ப்பு சக்திகளை அடக்கியாகவும் வேண்டும். பனாரஸ் மக்கள் வெகு காலத்துக்கு முன்னதாகவே அரசாங்கத்தின் மேலாதிக்கத்துக்கு அடிபணிந்துவிட்டார்கள். எனவே அந்த வரியை உடனே ரத்து செய்யவும் நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம் இந்த உத்தரவுகள் கிடைக்கும் போது இந்த வரிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவரும் வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் விரும்பவில்லை.”

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s