வள்ளுவரின் அறமும் தீனதயாளரின் தர்மமும்

-பேரா.பூ.தர்மலிங்கம்

பண்டிட் தீனதயாள் உபாத்யாய (1916 – 1968), இந்தியாவின் அரசியல் களத்தை மாற்றியமைத்த அரசியல் கட்சியான பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக இருந்தவர். அவர் அரசியல்வாதி மட்டுமல்ல, அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர்.

ஓர் அரசியல் செயற்பாட்டாளராகவும், தலைவராகவும் கொள்கைகளை வகுத்தது மட்டுமல்லாமல், இந்தக் கொள்கைகளை தனது அரசியல் வாழ்க்கையிலும் பின்பற்றி வாழ்ந்தவர். பண்டிட் தீனதயாள் உபாத்தியாயவின் முயற்சியால் விளைந்த கோட்பாடே  ‘ஏகாத்ம மானவ தரிசனம்’ எனப்படும் ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடாகும்.

அவரது கருத்துக்களும் தத்துவங்களும் இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமானதாக இருப்பதோடு பெரும்பாலும் தர்மத்தையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்துவதாகவே திகழ்கின்றன.

தீனதயாளின் ஒருங்கிணைந்த மனிதநேயம் கூறுகின்ற தர்மம் குறித்த சிந்தனைகளையும், அரசு குறித்த பார்வைகளையும், அதற்கு முன்னதாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவரின் அறச் சிந்தனைகளோடு ஒப்பிட்டால், ஒரே சிந்தனைப் போக்கைக் காண முடிகிறது.

அறம் என்பது மனித வாழ்வுக்கு உயர்ந்த மதிப்புகளை வழங்குவது. அவ்வறம் வாழ்வியலோடு இயைந்து, இன்பமும் பொருளும் அறத்தின் வழிபட்டதாக இருத்தல் வேண்டும் என்று திருக்குறள் வலியுறுத்துகிறது. குறிப்பாக, தனிமனித அறம் – குடும்ப அறம் – புறநிலையில் அரசன் ஆட்சிமுறை போன்றவற்றுக்கான அறங்களையும் குறட்பாக்களின் வழி வள்ளுவர் எடுத்தோதியுள்ளார்.

திருக்குறள் சிந்தனைகளின் தாக்கம் உலகமெங்கும் இருப்பதை திறனாய்வுகள் சுட்டுகின்றன. மனித தர்மம் குறித்த தீனதயாள் உபாத்யாயவின் சிந்தனைகளை நோக்குகையில், திருவள்ளுவர் தனிமனித அறமாக, குடும்ப அறமாக, அரசின் அறமாகக் கூறியுள்ளனவற்றோடு ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தர்மம் அல்லது அறம் என்பது மக்களின் நல்வாழ்வியலுக்கான நீதி நெறிமுறையாகும். நாம் எந்தச் செயல்களை மேற்கொள்ள வேண்டும், எந்தச் செயல்களை மேற்கொள்ளக்கூடாது என்பதைத் தீர்மானிக்க இது உதவுகிறது. மனிதர்களைப் பொறுத்த வரை நெறிமுறை தவறாமல் நடப்பது தர்மம். தர்மம் குறித்து தீனதயாள் கூறுகையில், தர்மம் என்பது மிகவும் பரந்த ஒரு கருத்தாகும். இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இது சமூகத்தை நிலைத்திருக்கச் செய்கிறது. மேலும் இது முழு உலகையும் நிலைநிறுத்துகிறது. இவ்வாறு நிலைத்திருக்கச் செய்வதே தர்மம் என்கிறார்.

இத்தகைய தர்மத்தை  ‘உள்ளார்ந்த சட்டம்’ என்றும் கூறுகிறார். இத்தகைய தர்மம் மிக உயர்ந்தது என்பதால்  நமது அரசின் இலட்சியம் தர்ம ராஜ்ஜியமே என்கிறார். இக்கருத்தை வள்ளுவம் கூறிய தனிமனித அறம், அரசு அறத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.

தனிமனிதன் ஒரு குடும்பம், குழு, அரசு போன்றவற்றோடு இணைந்தே செயல்படுகிறான். சமுதாயம் தனிமனிதனை சமுதாய உறுப்பினராக்க பெருமளவில் தொண்டு புரிகிறது. பொதுவாக சமூக இயல்பு, தனிமனித இயல்பு ஆகிய இரண்டும் ஒருங்கேதான்  வளர்கின்றன. இந்த தனிமனித இயல்பும் சமூகஇயல்பும் அறக்கோட்பாட்டினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

 இதுவே உள்ளார்ந்த சட்டம் எனப்படுகிறது. இக்கட்டுப்பாட்டால் அறம் வயப்பட்ட அரசு உருவாக வேண்டும். அவ்வரசே போற்றப்படும் என்பதை,

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்

என்கிறார் வள்ளுவர் (குறள்- 388).

நீதிமுறை செய்து அதாவது அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறிவழி நின்று மக்களைக் காப்பாற்றும் அரசன் மக்களால் கடவுளாக வணங்கப்படுவான் என்ற வள்ளுவரின் சிந்தனையை, தீனதயாள் கூறும் தர்மமே உயர்ந்தது என்பதால் நமது அரசின் லட்சியம் தர்ம ராஜ்ஜியம்  என்று கூறுவதில் காண முடிகிறது. வள்ளுவரின் அறவழிப்பட்ட அரசு இங்கு தர்ம ராஜ்ஜியமானது.

அரசு என்பது தர்ம ராஜ்ஜியமாக தர்மத்தின் ஆட்சியாக மட்டுமே இருக்க முடியும். மற்ற வரையறைகள் அரசின் மிகச் சிறந்த தன்மைக்கு எதிராகப் போய்விடும். ஒரு தர்ம ராஜ்ஜியத்தில் அரசு முழுமையான அதிகாரம் படைத்ததாக இருக்காது. இது தர்மத்துக்கு உட்பட்டது. நாம் எப்போதும் தர்மத்தில் இறையாண்மையை வைத்திருக்கிறோம். அரசியல், பொருளாதார ரீதியான அனைத்து அதிகாரங்களையும் அரசு பெறும்போது, அதன்விளைவாக தர்மத்தின் அழிவு தொடங்குகிறது என்றும், அரசும் மக்களும் இணைந்த ஜனநாயகமே சிறந்தது என்றும் தீனதயாள் உபாத்யாய கூறுகிறார்.

சுதந்திரமும் தர்மமும் உள்ள இடங்களில் மட்டுமே உண்மையான ஜனநாயகம் இருக்கிறது. தர்ம ராஜ்ஜியம் இந்த கருத்தியலைக் கொண்டது என்ற இச்சிந்தனையை,

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

என்ற வள்ளுவரின் குறளடிகளில் (குறள்- 386) காண முடிகிறது.

 மக்கள் காண்பதற்கு எளியனாய், அவர்களது கூற்றுகளுக்குச் செவிமெடுத்து கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும் என்கிறார் வள்ளுவர். இங்கு அரசன் அதிகாரம் படைத்தவனாக இல்லாமல், அறவழிப்படி ஆட்சிசெய்து மக்களுக்கு எளியனாக, அவர்களின் கருத்தையும் கேட்டு நடப்பவனாக விளங்கினால் மட்டுமே அந்நாடு சிறக்கும் என்பதை, பண்டிட் தீனதயாளின் தர்மம், சுதந்திரம் பற்றிய ஜனநாயகத் தேடலுடன் ஒப்பிடலாம்.

செல்வத்தையும் சிறப்பையும் தரும் அறத்தை விட மேன்மையானது எதுவும் இல்லை என்பதை

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு

-என வள்ளுவர் (குறள்-31) எடுத்துரைக்கிறார். மேலும்,

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு

என்றும் (குறள்- 384) கூறுகிறார். அதாவது ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் என்கிறது குறள். ஓர் அரசனுக்கு சான்றுகளின் வழி அறமல்லாதவன மேம்பட்டு நிற்கும் சூழலில் கூட அவற்றைத் தவிர்த்து அறவழியில் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் இச்சிந்தனைகளை ஓர் அரசிற்கு எடுத்துரைக்கிறார் உபாத்யாய.

“அரசால் உருவாகும் சட்டமன்றமும் உயர்வானது அல்ல; நீதித்துறையும் உயர்வானதல்ல; இரண்டையும் விட தர்மம் உயர்வானது. சட்டமும் நீதியும் தர்மத்தின்படிசெயல்பட வேண்டும்” என்ற தீனதயாளின் கருத்து, வள்ளுவர் ஓர் அரசனுக்கு எடுத்துரைக்கும் இலக்கணத்தை ஒட்டி அமைவதைக் காண முடிகிறது.

பாரத நாட்டில் அரசரினும் சிறந்தது தர்மம். அத் தர்மத்தின்படி ஓர் அரசர் செயல்படவில்லையென்றால் அவரை நீக்குவது அனைவரின் கடமை என்கிறார் தீனதயாள் உபாத்யாய. இதனை ஒத்த சிந்தனையை வள்ளுவரிடத்திலும் காண முடிகிறது. 

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு  (குறள்-554)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்

மன்னாவாம் மன்னர்க்கு ஒளி  (குறள்- 556)

ஆகிய குறட்பாக்கள், அரசனின் தகுதியை எடுத்தியம்புகின்றன.

அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானாகில் அங்கு பருவமழை தவறி, மேகம் மழை பெய்யாமல் போகும் என்றும், அரசனுக்குப் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறை அதாவது நேர்மையான ஆட்சியே; அந்த ஆட்சி இல்லை என்றால் அவ்வரசனுக்குப் புகழ் நிலைபெறாமல் போகும் என்றும் கூறும் வள்ளுவர்,“ஓர் அரசனுக்கு அறநெறி தவறாத செயல் வேண்டும் என்பதையும், நேர்மையான ஆட்சி அற்றுப்போனால் மண்ணில் உயிர்வாழ அடிப்படையான மழை அற்றுப் போய் நாடே அழிந்துவிடும்” என்றும் எச்சரிக்கிறார்.

அரசனுக்குச் சொல்லப்பட்ட இக்கருத்தையே ஓர் நவீன அரசுக்கு எடுத்துரைத்து, ”தர்மத்தின்படி செயல்படாத அவ்வரசு இருந்தாலும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். மக்களிடத்து அவ்வரசனின் புகழ் மங்கிக் காணாமல் போவதுபோல அறம் தவறி நாட்டை அழிக்கும் அவ்வரசன் புகழை மங்கச் செய்து நீக்குவது அனைவரின் கடமை என்று தீனதயாள் கூறுவதைக் காண முடிகிறது. இதுபோல பல இடங்களில் வள்ளுவரின் அறக் கோட்பாடுகளுக்கும் பண்டிட் தீனதயாளின் தர்மச் சிந்தனைகளுக்கும் ஒப்புமையைக் காண முடிகிறது.

தர்மம், அர்த்தம் (செல்வம்), காமம் (ஆசை), மோட்சம்  ஆகிய நான்கு வகையான மனித முயற்சிகளுக்கான ஏக்கங்கள், மனிதனுக்கு இயல்பானவை. ஒருங்கிணைந்த வழியில் இவற்றின் திருப்தியே பாரதக்  கலாசாரத்தின் சாராம்சமாகும் என்று  கூறும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய,   “தர்மத்தின் வழி இவை அனைத்தும் அடைய முடியும், அடைய வேண்டும் என்பதே இவற்றின் சாராம்சம் என்கிறார்.

இதனை வள்ளுவர் “அறத்தால் வருவதே இன்பம்”(குறள்-39) என்று சுட்டுவதுடன் ஒப்பு நோக்கலாம். அறவழியில் பொருள் ஈட்டி, அதன்வழி இன்பம் பெற்று, அறவழியிலேயே நிறைவான வாழ்க்கை மேற்கொள்ளும் போது கிடைப்பது நிறைவான வீடுபேறு. இச்சிந்தனையை இருவரிடத்தும் காண முடிகிறது.

இந்திய கலாசாரமும் மதமும் ஆன்மிக ரீதியில் இருப்பது, ஒரு பொருள் சார்ந்த வாழ்க்கையின் பிரச்னைகளில் அக்கறை கொள்ளாதது போன்ற தவறான நம்பிக்கையே ஆகும். உண்மையில் தர்மம் பற்றி நமது வரையறை, பொருள் முதல்வாதத்தை முழுமையாகக் கணக்கில் எடுத்துள்ளது. இந்தியா மனோதத்துவ ரீதியான உலகை மட்டுமன்றி, பொருள் சார்ந்த செல்வத்தையும் சிந்திக்கிறது என்கிறார் பண்டிட் தீனதயாள் உபாத்யாய. அதாவது மகிழ்ச்சி தர்மத்தையும் தர்மம் பொருள் சார்ந்த செல்வத்தையும் சார்ந்துள்ளது எனப்படுகிறது.

இதனையே வள்ளுவர் அறத்தால் வருவதே இன்பம் என்றும், செல்வமானது அறவாழ்வையும் இன்பத்தையும் கொடுக்கும் என்றும்  கூறுகிறார். மேலும், இன்பம் அறத்தையும் அறச்செயல்கள் செல்வத்தையும் சார்ந்துள்ளன என்பதை,

அறம்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்

எனும் குறள் (குறள் – 754) உணர்த்துகிறது. தீயவழியில் கிடைக்காத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி அவருக்கு இன்பத்தையும் தரும் என்பது இக்குறட்பாவின் பொருளாகும்.

அதுபோல எங்கெங்கு, எப்படியெல்லாம் அறத்தைச் செயல்படுத்த முடியுமோ அங்கெல்லாம் இயன்றவரை அறத்தைச் செயல்படுத்துவதே சிறப்பு (குறள்- 33) என்று வள்ளுவர் கூறுகிறார்.

இதே கருத்தையொட்டி, தர்மத்தின் அடிப்படைக் கொள்கைகள் தொடக்கமும் முடிவும் இல்லாதது, மற்றும் உலகளாவியது. இருப்பினும் காலம், இடம், சூழலுக்கு ஏற்ப அவற்றின் செயல்பாடு வேறுபடும். அதாவது மாறும் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றதாக தர்மத்தின் கொள்கைகளும் இருக்க வேண்டும். தர்மம் தேசத்தை நிலைநிறுத்துகிறது. தர்மமே இறையாண்மையாகக் கருதப்படுவதால் நாம் எப்போதும் தர்மத்துக்கு முக்கியத்துவத்தை அளிக்கிறோம். அனைத்து மனிதர்களும், நிறுவனங்களும், அதிகாரிகளும் தர்மத்திலிருந்து தங்கள் ஆற்றலைப் பெறுகிறார்கள். அதற்கு அடிபணிந்து நடக்கிறார்கள்என்று  தீனதயாள் உபாத்யாய கூறுகிறார். அறமே வழிநடத்தும் வழியாகும் என்ற வள்ளுவரின் வலியுறுத்தலை இவரிடம் காண முடிகிறது.

”கடவுள் தர்மத்துக்கு மாறாகச் செயல்பட முடியாது. அதன் விளைவாக அவர் தர்மத்துக்கு முழுமையாக இணங்கி நடக்கிறார். கடவுள் மனித உடலில் இறங்கி அதர்மத்தை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் செய்கிறார். எவரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்படக் கூடாது. எனவே அனைத்தையும் செயல்படுத்தக்கூடிய கடவுளும் தர்மத்திற்கு மாறாகச் செயல்பட முடியாது என்கிறார் உபாத்யாயா. அதாவது இறைவன் தர்மத்திற்கு கட்டுப்பட்டவன் என்கிறார்.

இதனை வள்ளுவரின்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்

என்ற அறவுரையின் (குறள்- 1023) பொருளிலும் நோக்க முடிகிறது. இக்குறள்,“குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்குத் தெய்வம் தனது ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு உதவி முன் நிற்கும் என்ற பொருளைத் தருகிறது.

கடவுள் தர்மத்தை மனித உடலில் நிலைநாட்டுகிறார். தர்மத்துக்கு முழுமையாக இணங்கி நடக்கிறார் என்று தீனதயாள் கூறுவதும், வள்ளுவர் தன் குடியை உயர்த்துவதே அறம் என்ற நெறி மேற்கொள்ளுபவனுக்காகத் தெய்வமே வரிந்து வரும் என்று கூறுவதும் ஒப்புநோக்கத்தக்கது.

அறத்தினூஉங்கு ஆக்கம் இல்லை, அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு

என்று வள்ளுவர் (குறள்- 32) கூறுவதிலிருந்து, ஒருவனுடைய வாழ்க்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை. அறத்தைப் போற்றாமல் அதைச் செய்ய மறப்பதை விட கெடுதியும் இல்லை“என்று தெரிய வருகிறது.

இதே கருத்தை தீனதயாளின் தர்மம் என்பது தேச ஆன்மாவின் களஞ்சியமாகும். தர்மம் அழிக்கப்பட்டால் தேசம் அழிந்து விடும். தர்மத்தைக் கைவிட்டோர் தேசத்தைக் காட்டிக் கொடுத்தவராகிறார். அதாவது அறம் தவறுவது தேசத்திற்குக் கெடுதல் விளைவிப்பது என்று கூறியிருப்பது ஒத்த சிந்தனையெனக் கூறத் தோன்றுகிறது.

இவ்வாறு அறம் வலியுறுத்தி அமையும் வள்ளுவரின் கோட்பாடுகளை பண்டிட் தீனதயாள் உபாத்தியாயவின் தர்மம் குறித்தக் கருத்தியல்களோடு பலவிடங்களில் ஒப்பிட்டுக் காண முடிகிறது. அறம் என்பது “ஒழுகுநெறி”என வள்ளுவர் அறம் உரைக்க, தீனதயாள், அறம்“ஒழுகியேயாக வேண்டிய நெறி” என்று கூறுகிறார்.

இவ்விருவரும் வலியுறுத்துவது ஒன்றே. அறம் எனினும் தர்மம் எனினும் அவை எம்மக்களாலும் எம்மதத்தாலும் எல்லா நேரங்களிலும் போற்றப்பட வேண்டும். அத்தகைய அறம், தர்ம வழி நடக்கும் அரசனே, அரசே நிலைப்பேறுடையதாக இருக்கும்.

அறவழி நிற்காது தர்மத்தின் வழி சிறக்காத அரசனை, அரசை மக்கள் புகழ்நீக்கி ஒழித்துவிட வேண்டும். அல்லது அதுவே அழிந்துவிடும் என்ற சிந்தனைகளை திருவள்ளுவரிடத்தும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவிடமும் காண முடிகிறது.

குறிப்பு::

கட்டுரையாளர், பேரா. பூ. தர்மலிங்கம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், பண்டிட் தீனதயாள் உபாத்யாய இருக்கைப் பேராசிரியராக உள்ளார்.    

தொடர்புக்கு: dharmaws@yahoo.co.in

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s