-தரம்பால்
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம்- 2
நாம் மேற்கொண்டு இதுபற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்ட்த்திலும் பிரிட்டிஷ் இந்திய நிர்வாகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாக நம்பப்பட்டு வருவதற்கு மாறாக, 1784 வாக்கிலிருந்து (அதற்கு முன் இல்லை என்று வைத்துக்கொண்டாலும்) இந்தியா தொடர்பாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரிய பங்கு எதுவுமே இருக்கவில்லை. தீர்மானங்கள் மட்டுமல்ல, பல நேரங்களில் ஆரம்பகட்ட செயல்திட்ட வரைவுகள் கூட 1784களுக்குப் பின்னர் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் கமிஷனர்கள் குழுவிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவானது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உறுப்பினர்கள்தான் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1858 வரையிலும் அந்தக் குழுவே இந்தியா தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுத்தது.
1858 வாக்கில் பிரிட்டிஷ் ராணியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இந்திய நிர்வாகம் கொண்டுவரப்பட்டதென்பது, அதுவரையில் கிழக்கிந்திய கம்பெனி செய்துவந்த குமாஸ்தா வேலையில் இருந்து அதை அப்புறப்படுத்தியது மட்டுமே. அனைத்து முடிவுகளையும் எடுத்துவந்த முந்தைய குழுவை ‘செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் இந்தியா’ என்று பெயர் மாற்றம் செய்வது மட்டுமே நடந்தது.
பெங்கால் பிரசிடென்சியின் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் கவர்னர் ஜெனரல் இன் கவுன்சில். அவருக்குக் கீழே பல்வேறு அரசுத் துறைகள் இருந்தன. அந்தத் தலைமைப் பதவியானது இந்தியாவுக்கான கமிஷனர்கள் குழுவினால் 1785-இல் உருவாக்கப்பட்டது. அரசாங்கத் துறை, ராணுவம், பொது நலத் துறை, வருவாய்த் துறை, நீதித் துறை, உளவுத் துறை போன்ற முக்கியமான துறைகள் அனைத்தும் வில்லியம் ஃபோர்ட்டில் (கல்கத்தா) இருந்து செயல்பட்டன. கவர்னர் ஜெனரல் இன் கவுன்சில் (கவர்னர் ஜெனரல் இல்லாதபோது, கமாண்டர் இன் சீஃப் தலைவராகச் செயல்படுவார்) வாரத்தில் சில நாட்கள் ஒன்றுகூடி குறிப்பிட்ட அரசாங்கத் துறை செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து வழிகாட்டுதலை அளிக்கும். இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், உத்தரவுகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் அல்லது தனிநபர்களுக்கு அந்தந்தத் துறையின் செகரட்டரி தெரியப்படுத்துவார். அவர் கவுன்சில் நடத்தும் கூட்டங்களில் பங்குபெற்று அதுதொடர்பான ஆவணங்களைப் பதிந்து வைத்திருப்பார். இவை அல்லாமல் 1785-இல் கொண்டுவரப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகள் மூலமாக கவர்னர் ஜெனரல் இன் கவுன்சிலுக்கு உதவியாக பல்வேறு துணை அமைப்புகளை உருவாக்கியிருந்தது. அந்த கவுன்சிலின் உறுப்பினர்களே அந்தத் துணை அமைப்புகளுக்கு தலைவராக இருந்து அரசின் பரந்துபட்ட செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு வழிகாட்டி நடத்தினர். அந்தத் துணை அமைப்புகளில் ராணுவத் துறையும், வருவாய்த் துறையும்தான் மிகவும் முக்கியமானவை (மதராஸ் பிரசிடென்சி, பம்பாய் பிரசிடென்சியிலும் இது போன்ற ஏற்பாடுகள் 1785லேயே உருவாக்கப்பட்டன).
இந்தக் காலகட்டத்தில் மாவட்ட ‘கலெக்டரின்’ பணி என்பது வருவாய் மதிப்பீடு, வரி சேகரிப்பு என்பதாகவே இருந்தது (வங்காளம், பனாரஸ், பீஹார் போன்ற பகுதிகளில்). காவல் துறை நிர்வாகம், நீதி நிர்வாகம் போன்ற பிற பணிகள் எல்லாம் மேஜிஸ்ட்ரேட் என்ற பதவியை வகித்தவரின் பொறுப்பில் விடப்பட்டிருந்தன. பொதுவாக, கலெக்டர் என்பவருக்கான உத்தரவுகள் வருவாய்த் துறையிலிருந்து தரப்பட்டன. மாறாக மேஜிஸ்ட்ரேட் என்பவர் கவர்னர் ஜெனரல் இன் கவுன்சிலில் நீதித் துறையின் தலைவரிடமிருந்து உத்தரவுகளைப் பெற்று செயல்பட்டார். கலெக்டரும், மேஜிஸ்ட்ரேட்டும் அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தனித்தனி அதிகார வர்க்கமாக உயர்நிலை அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர். எனினும் அவர்களையும் விட உயர்நிலையில் இருந்த அதிகாரிகளுடன் கொண்ட தொடர்பின் அடிப்படையில் பார்த்தால், கலெக்டரை விட மேஜிஸ்ட்ரேட் ஒரு படி கூடுதல் அதிகாரம் பெற்றவராக இருந்தார். பனாரஸ் மற்றும் வேறுசில மாவட்டங்களில் கூடுதலாக வேறு இரண்டு தனியான, உயர்நிலை அதிகாரிகள் இருந்தனர். ராணுவ நிர்வாகம், மேல் கோர்ட் என இரண்டு தனிப் பதவிகள் இருந்தன. இந்தப் பதவிகளுக்கு இடையிலான சில தொடர்புகள், அணுகுமுறையில் இருந்த வித்தியாசம் போன்றவை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆவணங்களில் இருந்து நன்கு தெளிவாகின்றன.
பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு இடையிலான கடிதப் பரிமாற்றமாக இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் ஆவணங்கள், முழுவதுமாக மறந்துவிட்ட ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் பற்றி தெளிவாக விவரிக்கின்றன. 1810-11 வாக்கில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக பனாரஸ், பாட்னா, சரண், முர்ஷிதாபாத், பாகல்பூர் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டம் பற்றி விவரிக்கின்றனர். காந்திய ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் ஆகியவற்றுக்கு முன்னதாகவே முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக நமக்குக் கிடைத்திருக்கும் மிகவும் தெளிவான, ஆதாரப்பூர்வமான ஆவணம் இதுவே. எனவே அதுபற்றி வரும் பக்கங்களில் சற்று விரிவாகவே பார்ப்போம்.
1810 வாக்கில், இங்கிலாந்து தலைமையிடம் இருந்து கிடைத்த வழிகாட்டுதலின் பேரில், வங்காள அரசு (கல்கத்தா ஃபோர்ட் வில்லியமில் இருந்தது) வங்காளம், பீகார், ஒரிசா, பனாரஸ் போன்ற பகுதிகளிலும் புதிதாக கைப்பற்றிய பகுதிகளிலும் (இவை பின்னாளில் உத்தரபிரதேசத்தின் பகுதிகளாகின) பல புதிய வரிகளை விதித்தது. நிதிக்குழு பரிந்துரைத்த விதிகளில் ஒன்று, வீடுகளுக்கும் கடைகளுக்கும் வரி விதிக்க வழிவகுத்தது. இந்த வரி அக்டோபர் 6, 1810-இல் ரெகுலேஷன் XV, 1810 மூலம் அமல்படுத்தப்பட்டது.
இந்தப் புதிய சட்டம் என்ன சொன்னதென்றால், இந்த புதிய ரெகுலேஷன் அரசின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக கல்கத்தா நகரில் இருக்கும் வீடுகளுக்கு வரி விதிக்கத் தீர்மானித்திருக்கிறது. வங்காளம், ஒரிசா, பனாரஸ் போன்ற பகுதிகளில் இருக்கும் முக்கிய நகரங்களில் உள்ள வீடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு இந்த வரி குறிப்பிட்ட காலகட்டத்திற்கு விதிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டது. இந்த ரெகுலேஷன், எதைக்கொண்டு கட்டப்பட்டிருந்தாலும் அனைத்து குடியிருப்பு வீடுகளும் (சில விதிவிலக்குகள் நீங்கலாக) ஆண்டு வாடகையில் ஐந்து சதவிகிதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்று சொன்னது. அனைத்துக் கடைகளும் ஆண்டு வாடகையில் 10 சதவிகிதத்தை வரியாகச் செலுத்த வேண்டும். ஒரு வீடு அல்லது கடை வாடகைக்கு விடப்படாமல் உரிமையாளரே அனுபவிப்பதாக இருந்தால் அக்கம்பக்கத்தில் அதே அளவில் இருக்கும் வீடுகள், கடைகள் ஆகியவற்றுக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ, அதையே இந்த உரிமையாளர்களும் கொடுக்க வேண்டும்.
ராணுவத்தினர் வசிக்கும் வீடுகள், பங்களாக்கள், கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி கிடையாது. மத வழிபாட்டு கட்டடங்கள், வீடுகளுக்கு இந்த வரி கிடையாது. ஆட்கள் குடியிருக்காத வீடுகள், வியாபாரம் நடக்காத கடைகள் ஆகியவற்றுக்கும் வரி கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி வசூலிக்கப்பட வேண்டும். உரிய தொகை செலுத்தப்படவில்லை என்றால் அந்த வீடு அல்லது கடை விற்கப்பட்டு, வரி பாக்கித் தொகையானது அதிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்போதும் அந்த வரி பாக்கி முழுவதுமாக கிடைக்கவில்லை என்றால் அந்த உரிமையாளரிடம் இருக்கும் பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றைப் பெற்று அந்த வரி பாக்கியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
முறைகேடான வரிவிதிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று சொல்லப் பட்டிருந்தாலும், அப்படியான விண்ணப்பங்களை முடக்கும் நோக்கில், தவறான விண்ணப்பங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் மேஜிஸ்ட்ரேட்டுக்கு உண்டு என்றும் சொல்லப்பட்டிருந்தது. அந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாக இருந்தால் சூழ்நிலைக்கு ஏற்ப அபராதம் விதிக்கலாம் என்றும் சொல்லி இருந்தது.
இப்படியான மொத்த வரி வருவாயில் 5 சதவிகிதம் மாவட்ட கலெக்டருக்கு கமிஷனாகத் தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இது மிகவும் சகஜமான விஷயமாகவே இருந்தது. மொத்த நில வருவாயிலும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அவர்களுக்கு ஏற்கனவே கமிஷனாகத் தரப்பட்டு வந்தது.
இந்த புதிய வரியின் மூலம் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் அரசுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவகையில் இதே பெரிய தொகை தான். அதே காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய வரிகள் அல்லது ஏற்கனவே இருந்த வரிகளுடன் சேர்க்கப்பட்டவை இவற்றின் மூலமாகக் கிடைத்த ஒட்டுமொத்த வருவாயில் இந்த வீட்டு வரிகள் வெறும் 10 % மட்டுமே இருந்தன. பெங்கால் பிரசிடென்சியில் 1810-11 ஆண்டுக்கான மொத்த வரி வசூல் 10.68 கோடியாக இருந்தது. அதில் பெரும்பகுதி கிராமப்புறங்களில் இருந்தே கிடைத்தது. இந்த வீட்டு வரி அதனோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவானது தான். ஆனால் அந்தக் காலகட்டத்தில் விதிக்கப்பட்ட வேறு பல விதிகளோடு சேர்த்து பார்க்கும்போது நகரப்பகுதிகளில் புதிய வரிகள் கூடுதலாக விதிக்கப்பட்டிருந்தன. அதுதொடர்பான அதிருப்திகள் எல்லாம் ஒன்று குவியும் புள்ளியாக இந்த வீட்டு வரி இருந்தது.
பனாரஸ் நிகழ்வுகள்
பனாரஸில் முதலில் போராட்டம் ஆரம்பித்தது. வட இந்தியாவில் அப்போது இருந்த நகரங்களிலேயே மிகவும் பெரியது அரசு இதுதான். பாரம்பரிய அமைப்புகள் பாதுகாக்கப்பட்டு, செயலூக்கத்துடன் இருந்ததும் இங்குதான். எனவே அங்கு போராட்டம் ஆரம்பித்தது என்பது மிகவும் இயல்பான விஷயம்தான். அத்துடன் அதிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் வீட்டு வரி சட்டத்தை மிகவும் தீவிரமாக அமல்படுத்த முயன்றதும் போராட்டத்துக்கு ஒரு காரணமாக இருந்தது.
அந்த வரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்கள் எல்லாம் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடிதப் பரிமாற்றங்கள், பனாரஸ் வாசிகள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு (அதில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களும் பாணியும் ‘மரியாதைக் குறைவாக’ இருந்ததாகச் சொல்லப்பட்டு அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது) ஆகியவற்றிலிருந்து நமக்கு தெரிய வருகின்றன *23.
முந்தைய சுல்தான்கள் வீடுகளின் மீது வரி விதித்து இருக்கவே இல்லை. அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வாரிசுரிமை மூலமாகவோ விலைக்கு வாங்கியதன் மூலமாகவோ ஒருவருக்கு கிடைத்த வீட்டுக்கு முந்தைய அரசுகள் வரி விதித்திருக்கவே இல்லை. சொத்துக்களை விற்கும் போதும் உரிமையாளர்கள் விற்பனை வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தனர்.
எனவே இந்த புதிய வரியானது ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமையில் குறிப்பிடுவதாக இருக்கிறது. நீதி பரிபாலனத்தின் முக்கிய குறிக்கோள்களை மீறுவதாக இருக்கிறது. இந்த வீட்டு வரியானது காவல் துறையினரின் செலவுகளைச் சமாளிப்பதற்காகத் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பது நன்கு தெரிகிறது. வங்காளத்திலும் பீகாரிலும் காவல்துறையின் செலவுகள் ஸ்டாம்ப் டியூட்டி, மற்றும் பிற வரிகளின் மூலமாக ஈடு கட்டப்படுகின்றன. பனாரஸில் காவல் துறையின் செலவுகள் நில வருவாயிலிருந்து (Malgoozaree) ஈடு கட்டப்பட்டன. அப்படி என்றால் இந்த புதிய வரி எதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது?
சாஸ்திரங்களின் படி பார்த்தால் பனாரஸ் முழுவதுமே புண்ணிய பூமி. வழிபாட்டுக்கு உரியது. ரெகுலேஷன் 15, 1810 -ன்படி வழிபாட்டு மையங்களுக்கு வரி கிடையாது.
பனாரஸில் சுமார் 50,000 வீடுகள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு ஹிந்துக்கள், முஸ்லிம்கள், மற்றும் பிற சமயப் பிரிவினர் ஆகியோரின் வழிபாட்டு இடங்களாக திகழ்கின்றன. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தானமாகக் கொடுத்த வீடுகள் அவை. எஞ்சிய வீடுகளில் இருந்து கிடைக்கும் சொற்ப வரியை வைத்து பதுக்பந்தி (Phatuckbundee.) செலவுகளை மட்டுமே ஈடுகட்ட முடியும். இப்படியான நிலையில் இந்த புதிய வரியானது பலர் மீது மிகுந்த நெருக்கடியை உருவாக்குவதோடு அரசின் நல்லெண்ணத்துக்கு விரோதமாகவுமே இருக்கப்போகிறது.
பல வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடு பழுதுபட்டால் அதைச் சரி செய்யவும் புதிதாக கட்டவோ முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். மேலும் பலரோ அந்த வீடுகளில் இருந்து கிடைக்கும் வாடகையை வைத்துதான் தங்கள் குடும்பத்தையே கஷ்டப்பட்டு ஓட்டி வருகிறார்கள். அப்படியானவர்கள் எப்படி இந்த வரியைக் கொடுக்க முடியும்?
இந்த நலிவடைந்த விண்ணப்பதாரர்களின் நலனையும் மகிழ்ச்சியையும் வளர்த்து எடுப்பதற்குப் பதிலாக எங்களுக்குத் தொடர்ந்து பல நெருக்கடிகள் தரப்படுகின்றன. பல்வேறு சலுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம். ஆதாயங்களை ஈட்டிக் கொள்வதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம். அத்துடன் பல்வேறு கடுமையான கெடுபிடிகள் எங்கள் மீது சுமத்தப்படுகின்றன. காலப்போக்கில் அது மேலும் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
வாழ்வாதாரங்களைக் கவனித்துக் கொள்ளுதல் சிரமமாகிவருகிறது. முத்திரைப் பதிவு வரிகள், கோர்ட் வரிகள், பத்து மடங்கு பெருக்கப்பட்டிருக்கும் நகராட்சி வரிகள் போன்றவையெல்லாம் ஏழை- பணக்காரர் என அனைவரையும் பாதித்து வருகின்றன. இந்தப் புதிய வரியானது காயத்தின் மீது உப்பைத் தடவுவது போல இருக்கிறது; ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இரு தரப்பினருக்குமே பெரும் வேதனையைத் தருகின்றது. இதுபோன்ற வரிவிதிப்புகளினால் அத்தியாவசியப் பொருள்களின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் பதினாறு மடங்கு அதிகரித்து விட்டிருக்கிறது. இதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். வேறு வாழ்வாதாரம் இல்லாத எங்களுக்கு இந்த வரியை எப்படி கொடுக்க முடியும்?
பனாரஸில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள்தான் முதன்முதலில் இந்த வரியை அமல்படுத்த முன்வந்திருக்கிறார்கள். நகர நிர்வாக அமைப்பும், ராணுவக் கட்டமைப்பும் வலுவாக இருந்ததனால் அங்கு இது சாத்தியமாகியிருக்கும். பனாரஸ் கலெக்டர் அந்த ரெகுலேஷனைக் கொண்டு வந்த ஏழே வாரத்துக்குள் அதிவிரைவாக அந்தச் சட்டத்தை அமல்படுத்த அந்த அதிகாரிகள் முன்வந்ததற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதிகாரிகள் வரி விதிப்பு, வசூலிப்புப் பணிகளை மிக விரிவாக ஆரம்பித்துவிட்டிருந்தனர்.
நவம்பர் 26 அன்று கலெக்டர், தான் செய்யவிருந்தவை பற்றி மேஜிஸ்ட்ரேட்டுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்ற மதிப்பீட்டை ஆரம்பிக்கப் போவதாகவும், பல்வேறு தானாக்களில் இந்தச் சட்டம் தொடர்பான நகலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கும்படியும் கேட்டுக்கொண்டிருந்தார். மொஹல்லாக்களில் தனது பணியாளர்கள் சென்று வீடுகளின் வ ரி மதிப்பீட்டைச் செய்யும்போது காவலர்களின் உதவி தேவை என்றும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரும்படியும் மேஜிஸ்ட்ரேட்டிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
டிசம்பர் 6 அன்று கலெக்டர், கூடுதல் விவரங்களைத் தந்ததோடு, தானாதாரர்களிடமிருந்து உடனடி உதவிகள் கிடைக்க வழி செய்யும்படி மாஜிஸ்ட்ரேட்டுக்கு இன்னொரு கடிதம் அனுப்பியிருந்தார். தற்காலிக மேஜிஸ்ட்ரேட் ஆக இருந்தவர் டிசம்பர் 11 அன்று கலெக்டருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றி தெரிவித்திருந்தார். அத்துடன் வரி மதிப்பீடு செய்யப் போகிறவர்களுக்கு காவலர்களின் உதவி இப்போதைக்கு தேவைப்படாது என்றும் தெரிவித்திருந்தார். அதேநேரம், “உங்களுடைய பணியாளர்கள் சட்டபூர்வமான செயல்களைச் செய்யும்போது வீட்டு உரிமையாளர்கள் யாரேனும் எந்த வகையிலாவது தடங்கல்கள் ஏற்படுத்தினால், அது பற்றிய தகவலை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நான் உடனே உங்களுக்கு உதவும்படி காவல் துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு இடுவேன்” என்றும் தெரிவித்திருந்தார்.
வரிவிதிப்பு தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து எதிர்ப்புகளும் உடனே கிளம்பின. தற்காலிக மாஜிஸ்ட்ரேட் கல்கத்தா பிரஸிடென்ஸிக்கு டிசம்பர் 25 -ல் கடிதம் எழுதினார்.
“மாண்புமிகு கவர்னர் ஜெனரல் இன் சீஃபுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்கவில்லையென்றால் நான் தவறு செய்தவனாகிவிடுவேன். ரெகுலேஷன் 15, 1810 அமலாக்கப்படுவதைத் தொடர்ந்து இந்த நகரத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். நிலைமை மிகவும் மோசமாகிவருகிறது” இந்தப் போராட்டத்தின் பின்னணி பற்றிய தகவல்களைக் கொடுத்த பின்னர் மேலும் எழுதுகிறார்:
“மக்கள் பெரும் கூச்சலிடுகிறார்கள். கடைகள் அனைத்தையும் மூடிவிட்டார்கள். தமது பணிகளை நிறுத்திவிட்டார்கள். பெருமளவிலான எண்ணிக்கையில் கூட்டமாகக் கூடி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று என்னை வறுபுறுத்துகிறார்கள். கலெக்டருக்கு உத்தரவிட்டு வரி மதிப்பீட்டுப் பணிகளை நிறுத்தச் சொல்லும்படிக் கேட்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கை நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் தரும் கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பிவைக்கிறேன் என்றும் அரசிடமிருந்து உத்தரவு வரும்வரை வரி மதிப்பீட்டுப் பணிகள் தொடரட்டும் என்றும் சொன்னேன். அப்படி அந்தப் பணிகளை யாரேனும் தடுத்தால் அவர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் சொன்னேன். அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்தால், நாளை அரசு அந்த வரியை ரத்து செய்யாமல் போகும்போது இப்போது இருக்கும் அதிருப்தியோடு அதுவும் பல மடங்கு நெருக்கடிகளையே உருவாக்கும்.”
மூன்று நாட்களுக்குப் பின்னர், 28 அன்று வேறொரு அறிக்கை சமர்ப்பித்தார்:
“இந்தக் கலகக் குழுவானது 20ஆம் தேதி மாலையில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்து குழுமியிருக்கிறார்கள். படைவீரர்களின் தலைகளைப் பார்த்ததும் அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். 26 ஆம் தேதி காலை வரை யாரும் மீண்டும் வரவில்லை. எனவே அனைவரும் அமைதியாகத் தத்தமது பணிகளுக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நம்பினேன்.
ஆனால், அன்று மதியமே மீண்டும் கூட்டம் கூடியது. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், அனைத்து வகுப்பினரும் ஒரே குரலில் உறுதியுடன் நின்றனர். நான் கலெக்டருக்கு உத்தரவிட்டு வரி மதிப்பீட்டுப் பணியாளர்களை அந்தப் பணியில் இருந்து நிறுத்திவைக்க வேண்டும். அந்த வரியானது ரத்து செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை நான் அவர்களுக்குத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் அப்படிக் கூக்குரலிட்டு ஒரே இடத்தில் குழுமி நின்று சதி வேலையில் ஈடுபடுவதால், நான் அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்துவிடுவேன் என்று நினைக்கிறார்கள். இரும்புக் கொல்லர்கள், வீட்டு வேலைக்காரர்கள், ஹஜாம்கள், தர்சீக்கள், காகர்கள், பேரர்கள் என அனைத்துத் தொழிலாளர் வர்க்கமும் ஒரே மனதுடன் இந்தச் சதி வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 26ஆம் தேதியன்று எரிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட பிணங்கள் கூட கங்கைக் கரையில் அநாதையாகக் கைவிடப்பட்டுக் கிடந்தன. இறுதிச் சடங்குப் பணிகளைச் செய்வதற்கு உரியவர்கள் யாரும் அதற்கு முன்வரவில்லை. பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள், நகரின் ஒரு இடத்தில் கூடிவிட்டிருக்கிறார்கள் . நான் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் ஒழிய அங்கிருந்து நகர மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்கள்.”
டிசம்பர் 31 அன்று தற்ஆலிக மாஜிஸ்ட்ரேட் வேறொரு கடிதம் அனுப்பியிருந்தார்:
“ஆயிரக்கணக்கான மக்கள் பகலும் இரவுமாக குறிப்பிட்ட இடத்தில் வந்து குழுமியவண்ணம் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் சேர மறுப்பவர்களுக்கு அவர்கள் அபராதம் விதிக்கிறார்கள். புதிய வரிக்கு எதிரான இந்த எதிர்ப்பானது எந்த அளவுக்குப் போயிருக்கிறதென்றால் யாரேனும் ஒரு தனி நபர் இந்தச் சதி வேலையில் இருந்து விலகத் தீர்மானித்தால் அனைவராலும் அவமானப்படுத்தப்படுவதோடு ஜாதியில் இருந்து விலக்கியும் வைக்கப்பட்டுவிடுகிறார்.”
இந்தச் ‘சதி வேலையானது’ அதிகாரிகள் பல முயற்சிகள் எடுத்த பின்னரும் நிற்காமல் தொடர்ந்து நடந்தது. இதனிடையில் தற்காலிக மாஜிஸ்ட்ரேட் கலெக்டருக்கும் மூத்த நீதிபதி ஒருவருக்கும் கடிதம் எழுதினார். தமது பயணத்தை முடித்துக்கொண்டு உடனே வரும்படி அதில் கேட்டுக் கொண்டார். அந்த மூத்த நீதிபதிக்கு பனாரஸின் மன்னரிடமும் அந்த நகரத்தின் முக்கிய நபர்களிடமும் நல்ல செல்வாக்கு இருந்தது. கலெக்டர் ஜனவரி, 1, 1811 அன்றூ தனது பயணத்தை முடித்துக்கொண்டு கல்கத்தா பிரஸிடன்ஸியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரைச் சந்திக்க வந்தார். தற்காலிக மாஜிஸ்ட்ரேட் கீழ்க்கண்டவாறு அறிக்கை சமர்ப்பித்தார்:
“வீட்டு வரிக்கு எதிரான கும்பலானது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மிக மோசமான நிலைமையை இப்போது எட்டிவிட்டது. மக்கள் நகரங்களையும் பணியையும் விட்டுவிட்டு அந்த இடத்தில் குழுமுகிறார்கள். அரசிடமிருந்து சாதகமான பதில் கிடக்கும் வரை அங்கேயே இருக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். நானும் அந்தப் அப்குதியின் பிற அரசு அதிகாரிகளும் என்னதான் சமாதானம் சொன்னாலும் எந்தப் பலனும் இல்லை.
இந்தக் கும்பலின் செல்வாக்கு அந்தப் பிராந்தியம் முழுவதிலும் பரவுவதாக நம்ப இடம் இருக்கிறது. வேறொரு கோரிக்கையை முன்வைத்து அணிதிரண்ட இரும்புக் கொல்லர்கள் இந்தச் சதியில் முன்னணி இடத்தை எடுத்துக்கொண்டனர். அந்தப் பிராந்ந்தியத்தில் இருந்த அனைத்து ஊர்களில் இருந்தும் அனைத்துக் கொல்லர்களும் இங்கு வந்துவிட்டனர். இதன் காரனமாக ரயத்துகளுக்கு விவசாயப் பணிகளில் மிகப் பெரிய கஷ்டங்கள் வரத் தொடங்கியிருக்கிறது. அதிருப்தியாளர்களின் என்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே நேரம், பனாரஸில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக இந்தப் பிராந்தியத்தில் வசிப்பவர் அனைவருமே அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள்.”
அதே நாளில் கலெக்டரும் நடந்தவை பற்றி விரிவாக ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்:
“எனக்குக் கிடைத்த தகவலின் படி சுமார் 20,000 பேர் ஒன்றாகக் கூடி அமர்ந்து போராட்டம் (தர்ணா என்று அதை அழைக்கலாம்) செய்கிறார்கள். புதிய வரி ரத்து செய்யப்படாதது வரை அந்த இடத்தைவிட்டு அகல மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். பக்கத்து ஊரகப் பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஜாதியினரும் சக ஜாதியினரை இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்கும்படிக் கேட்டுக் கொள்வதால் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தப் போராட்டக்காரர்களில் எந்தக் குழு மிகவும் தீவிரமாக இருக்கிறது; எந்த ஒரு குழு மற்றவர்களைவிட அதிக அத்துமீறலைச் செய்கிறது என்று பார்த்தால் இரும்புக் கொல்லர்கள் குழுவைத்தான் சொல்ல வேண்டும். அவர்கள்தான் அக்கம்பக்கத்தில் தமது ஆட்களை அணி திரட்டி இந்தப் போராட்டத்தை முதலில் ஆரம்பித்தனர். அதோடு நில்லாமல் இந்தப் பிராந்தியத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்த அனைத்து இரும்புக் கொல்லர்களையும் இந்தப் போராட்டத்தில் இறக்கவைத்துள்ளனர். விவசாய அறுவடைப் பணிகளை எல்லாம் (அறுவடைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது) முடக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஜமீந்தார்களும் ரயத்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த வரியை ரத்து செய்யும்படி நம்மை நிர்பந்திக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இந்த இரும்புக் கொல்லர்களும் பிற அனைத்து ஜாதியினரும், அனைத்து வகுப்பினரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மிகுந்த பிணைப்புடன் இந்த உறுதி மொழியில் உறுதியாக நிற்கிறார்கள்.
வெளிப்படையான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது என்பது இப்போதைக்கு அவர்களுடைய இலக்காக இல்லை. ஆயுதங்களை கையில் எடுக்காமல் இருப்பதன் மூலம் தங்களுக்கு ஒருவித பாதுகாப்பு கிடைக்கும்; இப்படியான அமைதியான போராட்டக்காரர்களை அரசு பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு நிச்சயமாகத் தாக்காது என்று நம்புபவர்களாகவே இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையினால் நாளுக்கு நாள் அவர்களுடைய எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது.”
பிற நகரங்களுக்கும் இந்தப் போராட்டத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றிக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்:
“நம்பகமான நபர்களிடமிருந்து எனக்குத் தெரியவந்திருக்கும் விஷயம் என்னவென்றால், பாட்னாவில் வசிப்பவர்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுங்கள் என்று கேட்டு பனாரஸ் போராட்டக்காரர்களுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அது பனாரஸைவிடப் பெரியது. பனாரஸ்காரர்களுக்கு தமது கோரிக்கையை வலுவாக முன்னெடுக்க வழி பிறந்துவிடும். அஸிமாபாத்தும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டால் அவர்களுக்கும் வீட்டு வரியை ரத்து செய்யவேண்டி வந்துவிடும். பனாரஸ் மட்டும் கேட்டுக் கொண்டால் பாட்னா உடனே இதுபோல போராட்டத்தில் இறங்கிவிடும்.”
ஜனவரி நாலாம் தேதி வாக்கில் நிலைமை கொஞ்சம் நிதானமானதுபோல இருந்தது. நகரின் முக்கியமான நபர்கள் சிலரிடம் இருந்து கிடைத்த உதவிகளின் மூலம் இரும்புக் கொல்லர்கள் அனைவரையும் பணிக்குத் திரும்ப அழைக்கும்படி நில உடமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க தற்காலிக மேஜிஸ்ட்ரேட்டினால் முடிந்திருந்தது. எனினும் அவர் கூறியிருப்பதாவது:
“நிலைமை கொஞ்சம் நிதானமடைந்திருக்கிறது. என்றாலும் பெரிதாக எதையும் நம்பிவிட முடியாது. இந்த மக்களின் மதக் கட்டமைப்பு, முக்கிய, மரியாதைக்குரிய நபர்கள் எல்லாரும் தமது தீர்மானத்தில் உறுதியுடன் இருக்கிறார்கள். என்னவிதமான அச்சுறுத்தலுக்கும் சமாதானத்துக்கும் இடம்கொடுக்காமல் இருக்கும்படி இந்தக் குழுவினரை வழிநடத்திவருகிறார்கள். ஒவ்வொரு வர்க்கத்தின் முக்கிய நபர்கள் எல்லாம் இந்தக் கூட்டத்தில் இருந்து விலகிச் செல்ல விரும்பும் நபர்களை அவரவர் ஜாதியில் இருந்து வெளியேற்றியாக வேண்டியிருக்கிறது. ஊர் முழுவதும் தமது ஒற்றர்களை அனுப்பி இந்தக் கும்பலில் இருந்து வெளியேறுபவர்களைப் பிடித்து இழுத்து வருகிறார்கள். நான் அப்படியான செயலில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் தந்தேன். இருந்தும் மற்றவர்கள் அப்படியான தவறுகளைச் செய்வதில் இருந்து அது தடுக்கவில்லை.”
ஜனவரி எட்டாம் தேதியன்று, நிலைமை வெகுவாக மாறியது. “அரசுக்கு எதிராக இப்படியான கலகத்தை இனியும் தொடர்ந்து முன்னெடுத்தால் என்னவிதமான பின்விளைவுகள் ஏற்படும் என்று இந்த நகரவாசிகள் மெள்ள உணர ஆரம்பித்தனர்” என்று தற்காலிக மாஜிஸ்ட்ரேட், ‘மிகுந்த மன நிறைவுடன்’ ஓர் அறிக்கையை அனுப்பினார். ‘அபாயகரமான சூழலை’ விவரித்துவிட்டு, தான் அதை வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டதாக நினைத்த அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:
“அனைத்துத் தரப்பு மக்களும் நகரத்தில் ஒரு பகுதியில் ஒன்று கூடி, தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் ஒழிய அந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்று உறுதிமொழி எடுத்திருந்தனர். நாள்தோறும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒவ்வொரு கிராமத்துக்கும் தூதுவர்களை அனுப்பி போராட்டச் செய்தியைக் கொண்டு சேர்த்தனர். வீட்டுக்கு ஒருவர் பனாரஸில் நடக்கும் போராட்டத்தில் பங்கெடுக்கும்படிக் கேட்டுக்கொண்டனர். ஆயிரக்கணக்கான இரும்புக் கொல்லர்கள், கூன்பிகள், கொரீயர்கள் தமது வீடுகளில் இருந்து புறப்பட்டு இந்தக் கூட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அதேநேரம், நகரத்தில் இருந்து பலர் வெளியேறவும் தொடங்கினர். பணிகளை முடக்க விரும்பாதவர்களை வற்புறுத்தி வேலையை நிறுத்த வைத்தனர். அனைவராலும் அவமானப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும் கூட்டத்தில் பங்கெடுக்காவிட்டால் தரப்படும் தண்டனைகளில் இருந்து தப்பவும் சிலர் ஊரை விட்டு வெளியேறினர். ஒவ்வொரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர். கணிசமான தொகை சேகரிக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுடைய குடும்பத்தினருடைய தேவைகளை அந்தப் பணம் கொண்டு பூர்த்தி செய்தனர்.
இப்படி கூட்டமாக கூடியவர்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள், சமைப்பதற்கான விறகுகள் எல்லாம் தரப்பட்டன. நகரத்தில் தானியம் தவிர வேறு எதுவுமே வாங்க முடியாத நிலை இருந்தது. மத அமைப்புகள் தமது முழு சக்தியையும் பயன்படுத்தி, மக்கள் ஒற்றுமையாக தங்களுடைய முடிவுகளில் வலுவுடன் இருப்பதற்கு உதவி வந்தனர். அந்தக் கூட்டத்திலிருந்து விலகி வரும் தைரியம் பெற்றிருந்த ஒரு சிலரை கூட அவமானத்தில் இருந்தும், ஓரங்கட்டப்படுவதிலிருந்தும் காப்பாற்ற முடியாமல் காவலர்கள் தவித்தனர்.”
போராட்டத்தில் பரிசல் காரர்களின் பங்குபற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:
“இந்தச் சதி வேலையில் பரிசல் காரர்களும் இழுக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. மறு கரையுடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டு விட்டன. படகுப் போக்குவரத்தை முடக்கி இருக்கும் நபர்களின் படகுகளை அரசாங்கம் பறிமுதல் செய்யும் என்று நான் அறிவித்தேன். அதனால் பரிசல் காரர்கள் உடனே பணிக்கு திரும்பிவிட்டார்கள். அதுபோல காவல் துறையினர் கும்பல்கள் கூட்டுவதைச் செய்துவரும் பல்வேறு வகுப்புகளை சேர்ந்த சிலரை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையும் தரப்பட்டுள்ளன. கூட்டத்தில் மேலும் அதிக ஆட்கள் சேர்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.”
வேறு சில விஷயங்கள் பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தார். “அனைவருமே தளர்ந்தும் வறுமையில் ஆழ்ந்தும்விட்டிருக்கிறார்கள். ‘கூட்டத்தினர் கலைந்து சென்றால்தான் அரசாங்கத்திடம் இருந்து சாதகமாக எதையாவது எதிர்பார்க்க முடியும்’ என்று நான் சொன்ன ஆலோசனை பலருக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே குறையத் தொடங்கியிருக்கும் கூட்டமானது இன்னும் சில நாட்களில் முற்றாக்க் கலைந்து போய்விடும்” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
முந்தைய பதற்றமான நிலை குறித்த அறிக்கைகள் கல்கத்தாவுக்குச் சென்று சேர்ந்திருந்தன. ஜனவரி 5ஆம் தேதி கவர்னர் ஜெனரல் இன் கவுன்சில் முதன்முதலாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார். டிசம்பர் 31 தேதி வரையிலும் அனுப்பப்பட்ட அறிக்கைகள், பனாரஸ்ஸில் இருந்த போராட்டக்காரர்களின் விண்ணப்பம் ஆகியவற்றையெல்லாம் படித்துப் பார்த்த பின் தனது முடிவை தெரிவித்தார். ‘வீட்டு வரியை ரத்து செய்வதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை. மக்களுடைய போராட்டம் மற்றும் கூக்குரலைக் கேட்டு ஒரு வரியை விலக்கிக் கொள்வது என்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல. வேறு எந்தக் கொள்கை முடிவும் அந்த வரியை நீக்கும்படி வழி காட்டவும் இல்லை’ என்று அரசு தெரிவித்தது. மேஜிஸ்ட்ரேட் எடுத்த நடவடிக்கைகள் சரிதான் என்று சொன்ன அரசு மேலும் கீழ்க்கண்டவாறு தெரிவித்தது:
“இனியும் அரசை எதிர்த்து இதுபோல ஏதேனும் எதிர்ப்பைத் தெரிவித்தால் மிகக் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எச்சரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மக்களுடைய ஒவ்வொரு உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். அதேநேரம் சட்டவிரோதமாகக் கூட்டமாக கூடி கூச்சலிட்டு பிற தவறான செயல்களைச் செய்து விண்ணப்பங்கள் கொடுத்தால் எல்லாம் கவர்னர் ஜெனரல் மசிந்து விடமாட்டார்.”
‘நியாயமான நடவடிக்கைகள்’ என்று சொன்னது என்னவென்றால், மக்கள் நுழைவாயில், வேலிகள் ஆகியவற்றைச் சரி செய்தல், ஊர்க்காவலர்களுக்கு சம்பளம் தருதல் ஆகியவற்றுக்காக மக்கள் தாமாகவே தமக்குள்ளாகவே சேகரித்துக் கொடுத்துவந்த ‘பதுகபந்தி’ தொகையை இனிமேல் தர வேண்டாம். அரசாங்கமே அவற்றையெல்லாம் இனிமேல் பார்த்துக் கொள்ளும். ராணுவ அதிகாரிகளுடன் பேசி முடித்த பின்பும், தேவையான பிற ஏற்பாடுகள் செய்த பின்பும் இந்த்த் தகவல் மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று தீர்மானமானது.
ஜனவரி இரண்டாம் தேதி அனுப்பப்பட்ட அறிக்கையில் நிலைமை மோசமானதைப் பற்றித் தெரிவிக்கப் பட்டிருந்தது. அரசாங்கம் ஏழாம் தேதி அனுப்பிய பதிலில் ராணுவத்தைப் பயன்படுத்தும் வழிமுறை பற்றித் தெரிவித்திருந்தது. “மக்களை அமைதி நிலைக்குக் கொண்டுவர அரசாங்க அதிகாரி ஓர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் என்னவிதமான மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.”
புதிய வரியை நீக்குவதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக கருதவில்லை என்று அரசு தெரிவித்ததோடு, “வரி வசூலிப்பை முன்னெடுக்க மாஜிஸ்ட்ரேட்டுக்கும் கலெக்டருக்கும் தேவையான உதவிகளை ராணுவம் செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தது. மேலும்,
“கவர்னர் ஜெனரல் இன் சீஃப் மிகுந்த அக்கறையுடன் ஓர் எச்சரிக்கை விட வேண்டிய பொறுப்பு இருப்பதாக உணருகிறது. சமூகத்தில் குழப்பம் விளைவிக்கும் சக்திகள் இனிமேலும் இதைத் தொடர்ந்தால் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். அனைத்து வகுப்பு மக்களுக்கும் உரிய பாதுகாப்பு தரப்படும். அதேநேரம் சட்டவிரோதமான கும்பல் கூடுதல், கூச்சல், குழப்பம் விளைவித்தல் போன்றவற்றை நியாயமான கடுமையான முறையில் ஒடுக்கும் பொறுப்பை அரசு ஒருபோதும் கைவிடாது.”
ஜனவரி ஏழாம் தேதிக்கும், அரசாங்கம் தனது தீர்மானத்தை அறிவித்த ஜனவரி 11க்கும் இடையில், கவர்னர் ஜெனரல் இன் சீஃபுக்கு வேறொரு விஷயம் தோன்றியது. ‘நிதானமாக ஆராய்ந்து பார்த்தபோது புதிய வரியில் சில மாறுதல்கள் தேவை. இந்த வரியினால் அதிக அளவு பாதிக்கப்படவிருக்கும் மக்களுடைய கோரிக்கையில் இருக்கும் நியாயங்கள் கணக்கில் கொள்ளப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.
ஜனவரி நான்காம் தேதி மாஜிஸ்ட்ரேட் இடமிருந்து கிடைத்த ஓரளவுக்கு நம்பிக்கையூட்டும் அறிக்கையைப் பார்த்தபின், 11 ஆம் தேதி அன்று இரண்டு கடிதங்கள் அனுப்பியது. அதில் பனாரஸில் இருந்த அதிகாரிகளுக்கு, மத வழிபாட்டு மையங்களுக்கு வரியிலிருந்து விலக்கு தந்தது போலவே, நலிவடைந்த நிலையில் இருக்கும் மக்களுடைய வீடுகளுக்கும் வரிவிலக்கு தரும்படி கேட்டுக் கொண்டது. அப்படியானவர்களுடைய வீட்டின் வரியானது அரசுக்கு பெருமளவுக்கு முக்கியமானதாக இருக்க முடியாது என்று தெரிவித்தது. இந்தத் தீர்மானங்களை மக்களுக்குத் தெரிவிப்பது தொடர்பாக அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருந்தது:
“இந்தத் தீர்மானங்களை மக்களுக்குத் தெரிவிப்பதற்கு முன்னதாக அதை எப்படி இதமாகச் சொல்லலாம் என்று யோசித்துப் பார்க்கவும். அரசாங்கத்தின் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமலும் அவருடைய மரியாதையை இழக்காமலும் அந்த விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். மக்கள் மத்தியில் அரசின் மீது அப்படியான நம்பிக்கையும் மரியாதையும் இருப்பது மிகவும் அவசியம். குறிப்பாக இதுபோன்ற குழப்பங்கள் உருவாகி இருக்கும் நிலையில் அரசு தன் கௌரவத்தை கட்டிக்காத்தாக வேண்டும்.”
அந்த அறிக்கை முடிவாக இப்படியாகச் சொன்னது:
“மக்கள் சமீபத்தில் முன்னெடுத்த சட்டவிரோத குற்றச் செயல்பாடுகளைக் கைவிட்டுவிட்டு அரசுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அதன்மூலமே அரசாங்கத்தின் நியாயமான, அக்கறையான நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான வர்களாக அவர்களாக முடியுமென்று லார்ட்ஷிப் இன் கவுன்சில் கருதுகிறது.”
பனாரஸ் வாசிகள் கொடுத்த விண்ணப்பத்தை முழுவதுமாக நிராகரித்து ஜனவரி 5ஆம் தேதி அரசு அனுப்பிய தீர்மானமானது 13 ஆம் தேதி அன்று மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 14ஆம் தேதியிலிருந்து ‘மக்கள் மீண்டும் கூட்டம் கூட தொடங்கிவிட்டனர்‘. ஜனவரி 7ஆம் தேதி அரசு அனுப்பிய அறிக்கையானது இதனிடையில் வந்து சேர்ந்தது. மக்களை அமைதி வழிக்கு கொண்டுவர உதவும் என்ற நோக்கில் அதுவும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பதினெட்டாம் தேதி அன்று அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மாஜிஸ்ட்ரேட் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்:
“லக்னோவில் இருந்து படைகள் வந்து சேராமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று படைத்தளபதி தெரிவித்துவிட்டார். இதனிடையில் அரசு பதினோராம் தேதி என்று அனுப்பிய அறிக்கையும் பனாரசுக்கு வந்து சேர்ந்தது.”
ஆனால் மக்கள் இதுபோன்ற நியாயமற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும் வரையில் அரசின் அன்புக்கு அவர்கள் தகுதியானவர்களே அல்ல. எனவே அரசு தீர்மானித்து இருக்கும் நல்ல முடிவுகளை மக்களுக்கு இப்போது சொல்ல முடியாது என்று மாஜிஸ்ட்ரேட் கருதினார்.
இரண்டு நாட்கள் கழித்து 20 ஆம் தேதி அன்று , ‘நிலைமையில் சிறிது மாற்றம் இருப்பதாகவும், சாதகமான முடிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும்’ மாஜிஸ்ட்ரேட் அரசுக்குக் கடிதம் அனுப்பினார். கூடுதல் படைகள் வந்து சேரும் வரை காத்திருக்கலாம் என்று தீர்மானித்திருந்தார். ‘அரசின் உத்தரவுகளை’ தனக்கு சரியென்று தோன்றிய வகையில் அமல்படுத்த அவர் விரும்பினார். ‘கும்பல் கூடும் மக்களைக் கலைந்து போகச் செய்வது, சட்டவிரோதமான, கலகத்தனமான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகியவையே நாளுக்கு நாள் முக்கியமான விஷயமாக ஆகிவருகிறது’ என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும் அந்த கடிதத்தில்,
“அரசுக்கு எதிரான இப்படியான எதிர்ப்பை அனுமதிப்பது சரியல்ல. அரசின் வலிமை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. ஒரு நாட்டின் அரசின் மீது அதன் மக்கள் மரியாதை வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம்.” அதே கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பது:
“ரெகுலேஷன் XV, 1810ஐ பின்வாங்க முடியாது என்று அரசு தெரிவித்தபின் அதை எதிர்த்து அனல் கக்கும் வார்த்தைகள் கொண்ட போஸ்டர்கள் தெருக்களில் ஒட்டப்பட்டன. அவற்றின் இரண்டு நகல்களை உங்கள் பார்வைக்காக அனுப்பி வைத்திருக்கிறேன். அப்படியான செய்தியைக் கொண்ட காகிதங்களை வைத்திருப்பவர்களைப் பிடித்துக் கொடுத்தால் 500 ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்திருக்கிறேன். நிலைமையின் தீவிரம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்பதால் நான் செய்தது சரியானதுதான் என்று ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.”
அரசு எடுத்த கடுமையான முயற்சிகளினால் மக்களின் ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் வலுவிழக்கத் தொடங்கின. மாஜிஸ்ட்ரேட் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப் போனது. பனாரஸ் அதிகாரவர்க்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளின் விளைவுகள் ஒரு சில நாட்களிலேயே தெரிய ஆரம்பித்தன. கல்கத்தாவுக்கு பனாரஸ் மக்கள் புறப்பட்டுச் செல்வதென்று முடிவு செய்தனர். வீட்டு வரி தொடர்பாக ஒத்த சிந்தனை உள்ள ஊர்களின் ஊடாகச் செல்லத் தீர்மானித்தனர். ஒவ்வொரு வீட்டின் உரிமையாளர் அல்லது அவருடைய பிரதிநிதி வர வேண்டும். அல்லது கல்கத்தாவுக்குச் செல்லும் குழுவுக்குத் தேவையான பொருள் உதவியைத் தர வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருப்பதாக மாஜிஸ்ட்ரேட் கடிதம் அனுப்பினார். மேலும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருந்தது:
“ஒரு சிலர் அந்த பயணத்திற்குத் தயாராகிவிட்டனர். வழியில் தடுக்கப்படுவார்கள் அல்லது அவர்கள் உறுதியாக நம்பக்கூடிய விஷயத்தில் தோற்றுப் போவார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.”
இதனிடையில் பனாரஸ் மக்கள் இன்னொரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர்.
$$$
அடிக்குறிப்பு மேற்கோள்:
23. மேற்கு வங்காள ஆவணக் காப்பகம்: பெங்கால் ஜுடிஷியல் கிரிமினல் ப்ரொசீடிங்ஸ், பிரவரி 8, 1811, ஒரிஜினல் கன்சல்டேஷன்ஸ், எண்: 6.
(தொடர்கிறது)
$$$