சுயசரிதங்கள்: ஒரு பார்வை 

-திருநின்றவூர் ரவிகுமார்

தற்சரிதம்  எனப்படுகின்ற சுய வரலாற்றை எல்லாராலும் எழுத முடியாது. ‘எனது வாழ்வே எனது செய்தி’ என்றார் மகாத்மா காந்தி. தன் வாழ்வில் சொல்வதற்கு சிறந்த செய்தி இல்லை என்றோ, தாம் அரிய செயல்கள் எதையும் செய்தவர் இல்லை என்றோ நினைப்பவர்கள் தற்சரிதம் எழுதுவதில்லை. 

வாழ்வை லட்சியத்தோடு வாழ்ந்தவர்கள், நேர்மையோடும் தன்னம்பிக்கையோடும் கடினமான முயற்சிகளுக்குப் பிறகு சாதனைகளை செய்தவர்கள், தங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் கிடைக்கும் என்று கருதி தற்சரிதத்தை எழுதுகிறார்கள். 

மனிதர்களின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று தன்னைப் பற்றிப் பேசுவது. மற்றொன்று, இன்னொருவர் கதையைக் கேட்பது. இதுவும் சுய வரலாற்றை எழுத ஒரு காரணம். பொதுவாக சுய வரலாறு என்பது படிப்பவர்களுக்கு நம்பிக்கையும் தம் தவறுகளைச் சரிசெய்து கொள்ளவும் உதவுகிறது. 

ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், வேசிகள், அரசு அதிகாரிகள், இலக்கியவாதிகள், படைத்தளபதிகள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், சமூக சேவகர்கள், ஓவியர்கள், சிற்பிகள், சமூக சீர்திருத்தவாதிகள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்டவர்களின் சுயசரிதங்கள் படிக்கக் கிடைக்கின்றன. 

ஒருவரின் வாழ்வில் ஒருமுறை நடைபெற்ற நிகழ்வுகள் மறுமுறை நிகழ்வதில்லை. உண்மையைத்தான் எழுத முடியும், கற்பனையாக எதையும் அதில் ஏற்றிட முடியாது. சுய சரித்திரம் எழுதுபவர்கள் தங்களைப் பற்றி உயர்வாகவே எழுதுகிறார்கள் என்ற புகார் உண்டு. அந்தப் புகாரில் சாரம் இல்லை என்பதற்கு உதாரணம் காந்தியடிகளின் ‘சத்திய சோதனை’. சுயசரிதம் எழுதுபவர்கள் சில விஷயங்களைக் குறிப்பிடாமல் போகலாம், ஆனால் அது தெரியாமல் போவதில்லை. 

தம் வாழ்நாள் முழுவதையும் சுய சரிதத்தில் கொண்டுவர முடியாது என்பது உண்மை. அது போலவே எந்த வயதில் எழுதப்பட்டது என்பது முக்கியமல்ல. ஆனி பிராங்க் என்ற பதிமூன்று வயதுப் பெண் தலைமறைவாய் வாழ்ந்த இரண்டு ஆண்டுகள் வாழ்க்கை பற்றி டச்சு மொழியில் எழுதிய சுய சரித்திரம் உலகப்புகழ் பெற்றது. சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அது வெறும் இரண்டு ஆண்டுகால நிகழ்வுகளை மட்டுமே பேசுகிறது. 

சுயசரிதம் என்பது எழுதப்பட்டவரைப் பற்றி மட்டுமல்ல, அவர் சார்ந்த துறை பற்றியும் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் நமக்கு தெரிவிக்கிறது. ‘அக்னிச் சிறகுகள்’ டாக்டர் அப்துல் கலாமின் தனிநபர் வாழ்க்கையை மட்டுமன்றி, இந்தியாவின் அறிவியல் துறை பற்றியும் அதன் வளர்ச்சியைப் பற்றியும் நமக்குக் காட்டுகிறது. 

இந்தியாவில் முதன்முதலாக சுய சரித்திரம் எழுதப்பட்டது தமிழில்தான். எழுதியவர், புதுச்சேரியில் பிரெஞ்சு கவர்னரிடம் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை. அவர் நாட்குறிப்பாகத் தான் எழுதத் தொடங்கினார். அது சுய சரித்திரமாகவும் பிரஞ்சு ஆட்சியை விளக்கும் ஆவணமாகவும் விளங்குகிறது. அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் வரை குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதன் மூலமாகத்தான் புதுச்சேரிக்கு ‘வேதபுரி’ என்ற பெயர் இருந்ததும், வேதபுரீஸ்வரர் கோயில் கிறிஸ்தவ மிஷனரிகளால் இடிக்கப்பட்டதும் ஆவணமாகி உள்ளன. 

பொதுவாக உரைநடை முறையில் தான் சுய சரித்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் தற்சரிதம் செய்யுள் வடிவில் உள்ளது. தமிழகத்திற்கு அப்பால் இந்தியா முழுவதும் தெரிந்த சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அவரது நண்பரும் பத்திரிகை ஆசிரியருமான பரலி. சு.நெல்லையப்பர் கேட்டுக் கொண்டதற்காக (1910) சுய வரலாற்றை சுருக்கமாக அகவற்பா என்ற செய்யுள் வடிவில் எழுதித் தந்தார். பின்னர் பல ஆண்டுக் காலம் கழித்து பத்திரிகை ஆசிரியராக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க (1930) இரண்டாம் பாகம் எழுதினார். அதையும் அகவற்பா வடிவில் தான் எழுதினார். அகவற்பாவில் இருந்தாலும் படிக்க முடியாமல் போகவில்லை. படிக்கக் கூடியதாகவும் அனுபவிக்கக் கூடியதாகவும் அந்நியர் ஆட்சியின் கொடுமைகளை விளங்க வைப்பதாகவும் அது இருக்கிறது. 

அவரது சமகாலத்தவரும் நண்பருமானவர் மகாகவி பாரதியார். அவர் தம் சுயசரிதத்தை ‘கனவு’ என்ற பெயரில் கவிதையாக எழுதி உள்ளார். அதை எழுதும்போது அவருக்கு வயது இருபத்தி ஒன்பது. வெள்ளையர் ஆட்சியில் வாழ முடியாத நிலைமையில் பிரஞ்சு ஆட்சியில் இருந்த புதுச்சேரியில் தஞ்சம் புகுந்து வாழ்ந்த கஷ்டமான காலகட்டத்தில் (1910) அவர் அதை எழுதினார். அதில் அவர் வாழ்க்கை பற்றி மட்டுமல்ல, வாழ்க்கை பற்றிய அவரது கண்ணோட்டமும் தெளிவாக வெளிப்படுகிறது. 

பாரதியார் கவிதை எழுதுபவர் மட்டுமல்ல, அதை அவரே பாடவும் செய்வார். அது பற்றி தெரிந்து, அவர் கவிதை எழுதி அதைப் பாடிக் கேட்க வேண்டும் என்ற ஆவலில் அவரிடம் வந்தவர் திரு.வி.க. எனப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தர முதலியார். தொழிற்சங்கவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாசிரியர், சன்மார்க்கப் பிரசாரகர்  என பன்முகம் கொண்டவர் அவர். தனிமனித வாழ்வும் பொதுவாழ்வு அறத்தை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும் என்ற கருத்துடன் வாழ்ந்தவர் திரு.வி.க. தன்சரித்திரத்தை எழுதுவது பற்றி அவருக்கு விமர்சனப் பார்வை இருந்தது என்றும், அதனாலேயே அவசியமானதை மட்டுமே, ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ என்று எழுதினார் என்றும் கூறுகிறார் எழுத்தாளர் சா.கந்தசாமி. எவரைப் பற்றியும் எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக தற்சரிதத்தை எழுதியுள்ளார். 

‘தமிழ்த் தாத்தா’ என்றால் அது உ.வே.சாமிநாத ஐயர்.  வாழும் காலத்திலேயே அங்கீகரிக்கப்பட்டு, போற்றப்பட்டவர். அவர் தனது குருவான மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், தியாகராஜ செட்டியார், இசைக் கலைஞர்களான கனம் கிருஷ்ண ஐயர் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். ‘என் சரித்திரம்’ என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதை அவர் வாழ்வை மட்டுமன்றி அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் நிலையையும் தமிழ் அறிவுச் சூழலையும் விளக்கும் ஆவணமாக இருக்கிறது. பிராமணர்கள்தான் படித்தவர்கள், மற்றவர்களை அவர்கள் படிக்க விடவில்லை என்ற திராவிடக் கட்சிகளின் பொய்யை உடைத்தெறிகிறது அவரது சுயசரிதை. அவருக்கு படிப்பித்தவர்களும் உதவியவர்களும் முதலியார்கள், செட்டியார்கள் தான். 

1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் அறிவிப்பை ஏற்று திருச்சியிலிருந்து நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரை நோக்கி உப்பு சத்தியாகிரகம் செய்ய ராஜாஜி புறப்பட்டார்.  நடைப்பயணம் அலுக்காமல் இருக்க நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதித் தந்த பாடல்தான் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ . அவர் ‘என் கதை’ என்ற பெயரில் தன் சரிதத்தை எழுதியுள்ளார். பத்மபூஷன் விருது பெற்ற அவர் சுதந்திரப் போராளி மட்டுமல்ல, நல்ல கவிஞர்; சிறந்த ஓவியர். பாரதியாரின் நண்பர். அவரது சுயசரிதை அவரது தனிப்பட்ட வாழ்வை மட்டுமன்றி சுதந்திர காலகட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் வரலாற்றையும் கூறுவதாக உள்ளது. 

இவர் வீட்டிலிருந்துதான் ராஜாஜி உப்பு சத்தியாகிரக  யாத்திரையைத் துவங்கினார்; இவர் லண்டனுக்குச் சென்று மருத்துவம் படித்தவர்; வீர சாவர்க்கர், வ.வே.சு.ஐயர் மற்றும் காந்திஜியுடன் பழகியவர். ராஜாஜி அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் என்றெல்லாம் சொல்ல முடியும் – டாக்டர் தி.சே.சௌந்தரராஜன் (1888 – 1953) அவர்களைப் பற்றி. ‘நினைவு அலைகள்’ என்ற அவரது சுயசரிதம் ஒரு காங்கிரஸ்காரை சரியாக படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. 

பற்றற்ற அதேவேளையில் செயலூக்கம் கொண்ட துறவியின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ‘ஆத்ம சோதனை’ என்ற பெயரில் சுத்தானந்த பாரதியார் எழுதிய சுயசரிதத்தைப் படிக்கலாம். சுதந்திரப் போராளி, கவிஞர், காந்தியவாதி, மகரிஷி அரவிந்தருடன் பழகிய துறவி, ரமண மகரிஷியிடம் யோகம் பெற்றவர், வாழ்நாள் பிரம்மச்சாரி என அவரது சிறப்புகள் அனேகம். அவரது சுயசரிதையில் மனிதர்கள் நிரம்பி இருப்பதைக் காணலாம். அவர் சந்தித்த ஒவ்வொவரின் பெயர், ஊரின் பெயர், ஜாதி, அவர்களின் பண்பு என அனைத்தும் விவரமாகத் தெரிந்து கொள்ளலாம். 

அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் பொதுவாக சுய சரித்திரம் எழுதுவதில்லை. காரணம் அவர்கள் மேலிடத்துக் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் என்பதைத் தவிர சொல்லும்படியான முகமில்லை அவர்களுக்கு. ஆனால் இப்போது அவர்களுடைய எழுத்துதான் அரசியல்வாதிகளின், அதிகாரத்தில் இருப்பவர்களின் விளையாட்டுகளை வெளிப்படுத்துகிறது. எனவேதான் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் அரசின் அனுமதி பெற்றுத் தான் சுய வரலாற்றை வெளியிட வேண்டும் என நிபந்தனை வந்துள்ளது. 

அந்தவகையில், மேனாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலுவின் சுயசரிதமான ‘நினைவு அலைகள்’ குறிப்பிடத்தக்கது. அவருக்கு பெரியார் ஈ.வெ.ரா. உடன் இருந்த நெருக்கம், திமுக ஆட்சியில் கட்சிக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை போன்றவற்றைச் சொல்வதோடு அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும், அந்த வாழ்க்கை அவருள் எழுப்பிய கேள்வியையும் காட்டுகிறது. 

சுய சரித்திரம் எல்லாவிதமான இலக்கிய வடிவங்களிலும் சுவை மிக்கது என்பது ஜெயகாந்தனின் சுயசரிதை படிப்பவர்களுக்குப் புரியும். ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்ற பெயரில் ஜெயகாந்தன் ‘துக்ளக்’ பத்திரிகையில் சுயசரிதத்தைத் தொடராக எழுதினார்.  தண்டபாணி பிள்ளை முருகேசன் என்பது அவரது இயற்பெயர். முன்னோடியான தமிழ் இலக்கியவாதி. கம்யூனிஸ்டாகத் தொடங்கி காங்கிரஸ் உள்பட பல அரசியல் மேடையில் நின்றவர். அவர் மனதில் சரியெனப் பட்டதைச் சொல்லும் தைரியம் கொண்டவர். அவரது சுயசரிதையில் இசையில் அவருக்குள்ள ஈடுபாடும் இசைக்கலைஞர்கள் மேல் அவர் கொண்ட மதிப்பும் வெளிப்படுகின்றன. 

தமிழில் மிக நீண்ட சுய சரித்திரத்தை எழுதியவர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி. ‘நெஞ்சுக்கு நீதி’யில் அவருக்கே உரிய பாணியில் அவரது வாழ்க்கையையும் அரசியலையும்  சொல்லியுள்ளார். அதில்  சொல்லப்பட்டிருப்பவை மூலம் சொல்லாததையும் சொல்ல விரும்பாததையும் அது சொல்லி விடுகிறது. அவரது மகன், இப்போதைய முதல்வர் முக ஸ்டாலின் தந்தை வழியைப் பின்பற்றி சுய சரித்திரத்தின் (உங்களின் ஒருவன்) முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த்யை சுயசரிதம் எழுத வேண்டும் எனக் கேட்டபோது மறுத்துவிட்டார். ‘’நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் பொருத்தமாக எழுதித் தருகிறோம்’’ என்று சிலர் (நிழல் எழுத்தாளர்கள்) முன்வந்தபோது அவர், ”நான் செய்த சில செயல்கள் பொதுவெளியில் சொல்லவே முடியாதவை. அவற்றைத் தவிர்த்துவிட்டு  எழுதுவது நேர்மையாக இருக்காது” என்று கூறி ஒரேயடியாக மறுத்துவிட்டார். இப்படியும் சில  சாதனையாளர்கள் சரித்திரத்தில் உள்ளார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s