-ரா.பி.சேதுப்பிள்ளை

III
11. தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும்
பாரத நாட்டின் தென்பாலுள்ளது தமிழ்நாடு. இந் நாட்டிற்கு வடக்கே ஆந்திர தேசம் என்னும் தெலுங்கு நாடு அமைந்திருக்கின்றது. மேற்கே கேரள தேசம் என்னும் மலையாள நாடு காணப்படுகின்றது. தெற்கே சிறு கடலாற் பிரிக்கப்பட்ட சிங்கள தேசம் என்னும் இலங்கை இருக்கின்றது. இத் தேசங்களில் வாழ்வோர் நமக்கு அயலார் ஆவர். இவற்றுள் ஆந்திர தேசத்திலுள்ள தெலுங்கரை நம் முன்னோர் வடுகர் என்றார்கள். ‘வடுகன் தமிழறியான். வைக்கோலைக் கசு என்பான்’ என்ற வாசகம் தமிழ்நாட்டில் உண்டு. வடுகன் என்ற சொல்லுக்கு வடக்கேயுள்ளவன் என்பது பொருள். முற்காலத்தில் வடுகராகிய தெலுங்கர், எந்த எல்லைக்கு வடக்கே இருந்தார்கள் என்பதைப் பார்ப்போம்:
திருப்பதி என்னும் திருவேங்கட மலைக்கு வடக்கே தெலுங்கர் வாழ்ந்தார்கள் என்று தமிழ் இலக்கியம் கூறுகின்றது. அக்காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லை திருவேங்கடமலை. அம் மலையே ஆந்திர நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே எல்லை காட்டும் கல்லாய் நின்றது. இதனாலேயே தமிழ்நாட்டார் திருவேங்கட மலையை வடமலை என்று வழங்கலாயினர். அம் மலையின் நீர்மையைக் கம்பர் நன்றாகக் கூறுகின்றார்:
“வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாகி
நான்மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய்
நல்லறத்துக் கீறாய் வேறு
புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்த
மெய்யேபோல் பூத்து நின்ற
உடை சுற்றும் தண்சாரல் ஓங்கியவேங்
கடத்திற்சென்று உறுதிர் மாதோ”
என்பது கம்பர் கவி.
திருப்பதி மலைக்குத் தெற்கே வாழ்ந்த தமிழரை தெலுங்கர், அருவர் என்று அழைத்தார்கள். நாளடைவில் அருவர் என்பது சிதைந்து அரவர் என்றாயிற்று. அரவம் என்பது தமிழுக்குப் பெயராய் அமைந்தது. அருவர் என்ற பெயர் எவ்வாறு தமிழரைக் குறிப்பதாயிற்று என்பதைச் சிறிது ஆராய்வோம். இப்பொழுது ஆர்க்காடு என்று வழங்கப்படும் நாடு முற்காலத்தில் அருவா நாடு என்ற பெயரைப் பெற்றிருந்தது. அருவா நாட்டில் வாழ்ந்தவர்கள் அருவர் எனப்பட்டார்கள். அவர்கள் பேசிய மொழி தமிழ். அருவர் வாழ்ந்த நாடு ஆந்திர தேசத்தை அடுத்திருந்தமையால் அருவரை ஆந்திரர் நன்கறிந்திருந்தார்கள். அருவர் தமிழர் ஆதலால், தமிழர் எல்லோரையும் ஆந்திர நாட்டார் அருவர் என்று அழைக்கலாயினர். இவ் வுண்மை கலிங்கத்துப் பரணி என்னும் தமிழ் இலக்கியத்தால் அறியப்படும். தெலுங்கு தேசத்திலுள்ள கலிங்க நாட்டில் தமிழ்ச் சேனைக்கும் கலிங்கப் படைக்கும் நடந்த பெரும் போர் கலிங்கத்துப்பரணியில் புனைந்து உரைக்கப்படுகின்றது. தமிழ்ச் சேனையைக் கண்ட போது கலிங்க நாட்டார் மனங்கலங்கினர்; ‘ஐயோ! அருவர் படை எடுத்து வந்து விட்டாரே !’ என்று அரற்றினர்.
“ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
அருவர் அருவர்எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் எனா நடுங்கியே”
என்று அவர் பட்ட பாட்டைக் கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. கலிங்கத்தில் நிகழ்ந்த கடும் போரைப் பற்றி மற்றொரு பழம்பாட்டும் உண்டு.
“ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடவர்
அருவர் அருவரென அஞ்சி – வெருவந்து
தீத்தீத்தீ என்றயர்வார் சென்னி படைவீரர்
போர்க்கலிங்க மீதெழுந்த போது”
என்பது அப் பாட்டு. சோழ நாட்டுப் போர் வீரரைக் கண்டபோது, ‘அருவர் அருவர்’ என்று அலறி அடித்துக்கொண்டு, ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கலிங்க நாட்டார் ஓடினர் என்பது இப்பாட்டினால் அறியப்படுகிறது.
இக் கலிங்கத்தைக் குறித்து இன்னும் அறியத்தக்க செய்திகள் இரண்டொன்று உண்டு. கடற்கரையோரமாக அமைந்தது கலிங்க நாடு. இந் நாட்டினின்றும் கலிங்கர் பலர் கடல் கடந்து பிற நாடுகளிற் குடியேறி வாழ்ந்தார்கள். மலாய், சிங்கப்பூர் முதலிய நாடுகளிற் குடியேறிய கலிங்கரை அந் நாட்டார் ‘கிளிங்கர்’ என்றழைத்தார்கள். நாளடைவில் கிளிங்கர் என்பது அங்குக் குடியேறிய இந்தியருக் கெல்லாம் பொதுப் பெயராயிற்று. இன்று சிங்கப்பூரில் வாழும் தமிழர்க்கும் கிளிங்கர் என்பதே பெயர்.
மற்றொரு வகையிலும் கலிங்கம் தமிழ்நாட்டில் வழங்குகின்றது. தமிழிலக்கியத்தில் ‘கலிங்கம்’ என்ற சொல் ஆடையைக் குறிப்பதாகும். ஆடைக்கும் கலிங்கம் என்று பெயர் எப்படி வந்தது? கலிங்க நாட்டின் பெயரே ஆடையின் பெயராயிற்றோ என்பது ஆராய்தற்குரியதாகும். ஊர்ப் பெயர் ஆடையின் பெயராக அமைதலுண்டு. காலிக்கட்டு (Calicut) என்ற ஊரில் நெய்யப்பட்ட துணி ஆங்கிலத்தில் ‘காலிக்கோ’ என்று வழங்குதல் போலவும், இரணியல் என்ற ஊரில் நெய்யப்படுகின்ற ஆடை ‘இரணியல்’ என்று மலையாள தேசத்தில் பெயர் பெற்றிருத்தல் போலவும், கலிங்கத்தில் நெய்யப்பட்ட ஆடையைக் கலிங்கம் எனத் தமிழ் நாட்டார் வழங்கியிருத்தல் கூடும்.
இனி, தமிழ்ப் பெருங் கவிஞராகிய கம்பரை ஆந்திர தேசத்து மன்னன் ஆதரித்த கதையொன்று தமிழ் நாட்டில் வழங்குகின்றது. எக் காரணத்தாலோ கம்பருக்கும் சோழ மன்னனுக்கும் மனவேற்றுமை உண்டாயிற்று. அந்நிலையில் மன்னனை நோக்கி,
“மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் – என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு”
என்று கடுமையாகப் பேசிவிட்டுக் கம்பர் சோழ நாட்டை விட்டகன்று ஆந்திர தேசத்திலுள்ள ஓரங்கல் நாட்டை அடைந்தார். அப்போது பிரதாப ருத்திரன் என்பவன் அங்கு அரசு வீற்றிருந்தான். அவ் வேந்தனை தமிழ்ப் புலமையால் வசப்படுத்தினார் கம்பர். புவிச் செல்வனாகிய பிரதாபனும் கவிச் செல்வராகிய கம்பரும் சிறந்த நண்பராயினர். கம்பர் விரும்பியவாறு பிரதாபன் மாறுகோலம் புனைந்து, அடைப்பை தாங்கிப் பின்னே வர, கம்பர் தம்மை அவமதித்த சோழ மன்னன் சபையினுள்ளே தலைநிமிர்ந்து சென்றார் என்று கர்ண பரம்பரைக் கதை கூறும்.
வடக்கேயுள்ள நாட்டை ‘வடுகு’ என்றழைத்த தமிழ் நாட்டார் மேற்கே யமைந்த நாட்டைக் ‘குடகு’ என்னும் பெயராற் குறித்தார்கள். குடக்கு என்பது தமிழில் மேற்கு என்று பொருள்படும். எனவே, குடகு என்பது மேற்கேயுள்ள நாடு. நன்னூல் என்னுந் தமிழிலக்கணம் குடகைத் தமிழ்நாட்டின் மேற்கு எல்லையாகக் கூறுகின்றது.
“குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையின் இருந்தமிழ்”
என்பது நன்னூல், ஆங்கிலத்தில் குடகு என்பது ‘கூர்க்’ (Coorg) என்று சிதைந்து வழங்குகின்றது.
தமிழ்நாட்டின் மேல் திசையில் அமைந்த மற்றொரு நாடு மலையாள தேசமாகும். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையே நெடிய தொடர் மலை நின்று எல்லை குறிக்கின்றது. ஆனால், முற்காலத்தில் மலையாள தேசம் சேரநாடு என்னும் பெயரோடு தமிழ்நாட்டின் ஓர் அங்கமாக விளங்கிற்று. பண்டைத் தமிழ்நாட்டை ஆண்ட முடிவேந்தர் மூவர் என்று தமிழ் இலக்கியங்கள் கூறும். மூவேந்தர் என்பார் சேர சோழ பாண்டியர் ஆவர். சேரநாட்டு மன்னர் குடியிலே பிறந்த அறிஞர் பலர் தமிழிலே சிறந்த நூல்கள் செய்துள்ளார்கள். பஞ்ச காவியங்களில் ஒன்றாகப் பாராட்டப்படுகின்ற சிலப்பதிகாரம், சேரநாட்டு இளவரசரொருவரால் இயற்றப்பட்டது. சைவ சமய அடியார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் தமிழ்ப்பாமாலை புனைந்து சிவபெருமானை வணங்கினார். வைணவ சமய ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகரர் தமிழிலே திருப்பாசுரம் பாடித் திருமாலைப் போற்றினார். இவ் விருவரும் சேரநாட்டுப் பெருமன்னர். ஆயினும், சேரநாட்டிற்கும் ஏனைய தமிழ்நாடுகளுக்கும் இடையே பெரிய மலை தடையாக நின்றமையால் போக்குவரவுச் சாதனம் குறைந்தது. காலம் செல்லச் செல்ல மலையாளமும் தமிழும் வேறு வேறு ஆயின.
தமிழோடு தொடர்புடையதாகக் கருதப்படுகின்ற கன்னடம் பேசுகின்ற மக்களைக் ‘கருநாடர்’ என்று சிலப்பதிகாரம் முதலிய செந்தமிழ் நூல்கள் குறிக்கின்றன. ‘கருநாடகம்’ என்பது கருநாடர் வாழ்ந்த தேசத்தின் பெயர். அந் நாடு கருநிறம் வாய்ந்த நிலப்பரப்பாய்க் காணப்பட்டமையால், தமிழ் நாட்டார் அதற்குக் ‘கருநாடகம்’ என்று பெயரிட்டனர் போலும். ‘கருநாடகம்’ என்பதே பிற்காலத்தில் கன்னடம் எனச் சிதைந்தது. ‘கருநாடகம்’ என்னும் சொல், ‘பழமை’ என்ற பொருளில் இன்றும் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது. நவநாகரிகத்துக்கு ஏற்ற நடையுடையில்லாதவர்களும், பழைய வழக்கங்களைக் கைவிடாதவர்களும் ‘கர்நாடகப் பேர்வழிகள்’ என்று எட்டியும் சுட்டியும் பேசப்படுகின்றார்கள். கருநாடக தேசத்தார் கைவண்ணம் திருநெல்வேலி ஜில்லாவிலே காணப்படுகின்றது. தாம்பிரவர்ணி யாற்றில் அமைந்துள்ள பழைய அணையொன்று ‘கன்னடியன் அணை’ என்று பெயர் பெற்றுள்ளது. கன்னடியன் ஒருவன் பொதிய மலையிலுள்ள அகத்தியர் ஆணைப்படி அவ்வணையைக் கட்டி முடித்தான் என்பது கர்ண பரம்பரைக் கதை. அணைக்கட்டிலிருந்து ஆற்று நீரைக் கவர்ந்து பாசனத்திற்குப் பயன்படுத்தும் கால்வாயும் ‘கன்னடியன் கால்’ என்று பெயர் பெற்றுள்ளது.
இனி, தமிழ்நாட்டினின்று சிறு கடலால் பிரிக்கப்பட்டுள்ள இலங்கை என்னும் சிங்கள தேசத்தைப் பார்ப்போம்:
இலங்கையை ‘ஈழநாடு’ என்பர் தமிழர். சங்க இலக்கியங்களிலும், தேவாரத் திருப்பாசுரங்களிலும் இலங்கை ஈழநாடென்றே குறிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் பண்டைக் கால முதல் போக்குவரவு உண்டு; ஏற்றுமதியும் இறக்குமதியும் உண்டு, தமிழ்நாட்டார் பெருந்தொகையினராக இலங்கையிற் சென்று குடியேறினர்; வளம் பெருக்கினர். இன்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் தமிழ் மாகாணமாகவே திகழ்கின்றது. அங்கு வாழ்பவர் பெரும்பாலும் தமிழரே.
‘யாழ்ப்பாணம்’ என்பது நல்ல தமிழ்ப் பெயர். அப் பெயரின் வரலாறு அறியத் தக்கதாகும். தமிழ்நாட்டுப் பழங்குடிகளில் ‘பாணர்’ என்பார் ஒரு வகுப்பார். பண்ணோடு பாட வல்லவர் பாணர் என்று பெயர் பெற்றார் என்பர். வைணவ சமய ஆழ்வார்களுள் ஒருவராகிய திருப்பாணாழ்வார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் குலத்தில் ‘யாழ்ப்பாணர்’ ஒரு பிரிவினர். இன்னிசைக் கருவியாகிய யாழைக் கையிலேந்திப் பாடிய பாணர் யாழ்ப்பாணர் எனப்பட்டனர். பெரிய புராணத்திற் போற்றப்படுகின்ற சிவனடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் இவ் வகையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணர்கள் குடியேறித் திருத்திய நகரமே ‘யாழ்ப்பாணம்’ என்று பெயர் பெற்றது. இவ் வழகிய ஊர்ப்பெயர் ஆங்கிலத்தில் ‘ஜாப்னா’ என்று சிதைந்து வழங்கு கின்றது. யாழ்ப்பாண நகருக்கு அருகே திருநெல்வேலி என்ற ஊர் உண்டு. பாண்டி நாட்டிலுள்ள திருநெல்வேலியினின்றும் ஈழநாட்டிற் குடியேறிய மக்கள் தம் ஊர்ப் பெயரிலுள்ள ஆசையால் அதனை ஆண்டு அமைத்து வழங்கினார்கள் என்று தோன்றுகிறது. இவ்வாறு இலங்கையில் குடியேறிய தமிழர், தம்மை இலங்கையராகவே கருதி வாழ்ந்து வருகின்றனர்.
முன்னாளில் இலங்கையை விட்டுத் தமிழ்நாட்டிற் குடியேறியவரும் உண்டு. இன்று தமிழ்நாட்டிலும் மலையாளத்திலும் காணப்படுகின்ற ‘ஈழவர்’ என்னும் சாதியார் ஈழநாட்டிலிருந்து வந்தவராதலால் அப்பெயர் பெற்றார்கள். இன்னும் திருநெல்வேலியிலுள்ள ‘இல்லத்துப் பிள்ளைமார்’ என்பார், ஈழத்துப் பிள்ளைமாரே யாவர். ‘ஈழத்துப் பிள்ளை’ என்பது இல்லத்துப் பிள்ளையெனச் சிதைந்து வழங்குகின்றது.
முற்காலத் தமிழரசர் சிலர் இலங்கைக்குச் சென்றார்கள். இலங்கை அரசர் சிலர் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். சேர நாட்டரசனாகிய செங்குட்டுவன் கண்ணகி தெய்வத்திற்கு வஞ்சி மாநகரத்தில் கோயில் கட்டித் திருவிழாக் கொண்டாடிய பொழுது இலங்கை அரசனாகிய கயவாகு மன்னன் வந்திருந்து அக் காட்சியைக் கண்டு களிகூர்ந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. அம் மன்னன் அரசு புரிந்த காலம் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியென்பர். கண்ணகியின் காட்சியைக் கண்களிப்பக் கண்ட கயவாகு மன்னன், ஈழ நாட்டில் கண்ணகிக்குக் கோயில் அமைத்து, ஆடி மாதந்தோறும் அணிவிழா எடுத்தான். அவன் காலம் தொட்டு, பத்தினிக் கடவுள் வழிபாடு இலங்கையிற் பரவலாயிற்று. இலங்கையிலிருந்த பத்தினிக் கடவுளின் படிவம் ஒன்று கடல் கடந்து, லண்டன் மாநகரில் உள்ள கண்காட்சிச் சாலையிற் காணப்படுகின்றது.
இன்னும், இலங்கையிலுள்ள கண்டி மாநகரத்தில் பரராஜசிங்கன் என்பவன் அரசுபுரிந்த காலத்தில் கடும் பஞ்சம் வந்துற்றது. ஈழ நாட்டார் பசியால் நலிந்து மெலிந்து வருந்தினர். அவர் பட்ட துயரம் கண்டு ஆற்றாத கண்டியரசன், தமிழ்நாட்டிற் பெருஞ் செல்வராய் விளங்கிய சடையப்ப வள்ளலாரிடம் தன் குறையைத் தெரிவித்தான். உடனே, வள்ளலார் வயலில் விளைந்த நெல், கப்பல் ஏறி ஈழ நாட்டிற் சென்று சேர்ந்தது; பசி தீர்ந்தது. பஞ்சத்தின் கொடுமை தீர்த்த சடையப்ப வள்ளலைப் பரராஜசிங்கன் தரும் தேவதை என்று புகழ்ந்தான்; நெஞ்சார வாழ்த்தினான். அவ் வாழ்த்து ஒரு செஞ்சொற் கவியாயிற்று:
“இரவு நண்பக லாகி லென்பகல் இருள றாஇர வாகிலென்
இரவி எண்டிசை மாறி லென்கட லேழும் ஏறி லென் வற்றிலென்
மரபு தங்கிய முறைமை பேணிய மன்னர் போகிலென் ஆகிலென்
வளமை இன்புறு சோழ மண்டல வாழ்க்கை காரண மாகவே
கருது செம்பொனின் அம்ப லத்திலோர் கடவுள் நின்று நடிக்குமே
காவி ரித்திரு நதியி லே ஒரு கருணை மாமுகில் துயிலுமே
தருவு யர்ந்திடு புதுவை யம்பதி தங்கு மானிய சேகரன்
சங்க ரன்தரு சடையன் என்றொரு தரும தேவதை வாழவே”
என்ற பாட்டு, கண்டியரசன் மனத்திலெழுந்த நன்றியை நன்றாக எடுத்துக் காட்டுகின்றது.
இதுகாறும் கூறியவற்றால் தமிழ்நாட்டார் அன்றுமுதல் இன்றுவரை அயல் நாட்டார்களோடு பழகிவரும் பான்மை ஒருவாறு விளங்குவதாகும்.
$$$
12. தமிழ் மொழியும் பிற மொழியும் – தெலுங்கு
பாரத நாட்டிலே பற்பல தேசங்கள் உண்டு. தேசந்தோறும் பாஷை வேறு. ஆயினும் அவற்றை இருகூறாக வகுக்கலாம். வட இந்தியாவில் வழங்கும் மொழிகள் ஒரு வகை. தென் இந்தியாவில் வழங்கும் மொழிகள் மற்றொரு வகை. வட நாட்டு மொழிகளை ஆரிய மொழிகள் என்றும், தென்னாட்டு மொழிகளைத் திராவிட மொழிகள் என்றும் கூறுவர். திராவிட வகையைச் சேர்ந்த தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும், தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்று வாதிப்பார் சிலர். இக் கருத்தைத் திருத்தமாக வெளியிட்டார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை.
“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத் துதித்தெழுந்தே ஒன்று பல வாயிடினும்”
என்று அவ்வாசிரியர் தமிழ்த்தாய்க்கு வணக்கம் கூறிப் போந்தார். எனினும், இக் கொள்கையை எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. தென்னிந்திய மொழிகள் எல்லாம் ஓர் இனம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் என்று கூறி அமைபவரே பலர் ஆவர்.
திராவிட மொழிகளுள் சாலப் பழமை வாய்ந்தது தமிழ் என்பதில் யார்க்கும் தடையில்லை. இலக்கியப் பண்பும், இலக்கண வரம்பும், சொல்லின் செல்வமும் தமிழிலே தலைசிறந்து காணப்படும். இவற்றுள் சொல்லின் செல்வத்தைச் சிறிது பார்ப்போம்:
முதலில் நாம் குடியிருக்கும் வீட்டை எடுத்துக்கொள்வோம். வீடு என்றாலும், இல் என்றாலும், மனை என்றாலும் அகம் என்றாலும் பொருள் ஒன்றே. இல் என்பது இல்லம் என்று வழங்கும். இல்லத்துக்கு உரியவள் இல்லாள் எனப்படுவாள். “இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை” என்றார் ஒரு தமிழ்க் கவிஞர். இல்லத்தில் இருந்து செய்யும் அறம் இல்லறம் எனப்படும். இல் என்பது இல்லு என்றும், இல்லாள் என்பது இல்லாலு என்றும் தெலுங்கில் வழங்குகின்றன. மலையாளத்தில் இல் என்பது இல்லம் என வழங்கும். வீட்டைக் குறிக்கும் மற்றொரு சொல் மனை. மனைக்குரியவளை மனைவி என்றும், மனையாள் என்றும் கூறுவர் தமிழர். மனையில் இருந்து செய்யும் அறம் மனையறம் எனப்படும். மனை என்பது கன்னடத்தில் உண்டு; தெலுங்கில் இல்லை. மனை வாழ்க்கை என்பது கன்னடத்தில் ‘மனெ வார்த்தெ’ என வரும். அகம் என்ற சொல்லும் தமிழில் வீட்டைக் குறிக்கும். சிலர் அகம் என்பதை ஆம் என்று சிதைத்து வழங்குவர்; அகமுடையானை ஆம்படையான் எனவும், அகமுடையாளை ஆம்படையாள் எனவும் கூறுவர். இத் தகைய அகம் என்பது தெலுங்கிலும் இல்லை; கன்னடத்திலும் இல்லை.
இனி வானத்திலுள்ள மேகத்தைச் சிறிது பார்ப்போம்: முகில் என்பது மேகத்திற்கு ஒரு பெயர். மேக நிறம் பொருந்திய இராமனை,
“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்”
என்று பரிந்து பாடினார் கம்பர். முகில் என்பது தெலுங்கில் மொகிலு என்றும், கன்னடத்தில் முகில் என்றும், துளுவத்தில் முகல் என்றும் காணப்படுகிறது. வானத்திலே தவழும் வெண்மேகத்திற்கு மஞ்சு என்று பெயர். தெலுங்கிலும் கன்னடத்திலும் மலையாளத்திலும் மஞ்சு உண்டு. இன்னும், நீர் கொண்ட கருமேகத்தைக் கார் என்றும், கொண்டல் என்றும் கூறுவர் தமிழர். திருமாலைக் கார்வண்ணன் என்றும், கொண்டல் வண்ணன் என்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். கார் உலாவும் காலத்தையும், அக் காலத்தில் விளையும் பயிரையும் கார் என்றே கூறுவர். தெலுங்கில் கார் என்பது மழைக் காலத்தைக் குறிக்குமே யன்றிக் கருமேகத்தைக் குறிப்பதில்லை. கன்னடத்திலும் அவ்வாறே புயல் என்பது மழை மேகத்தைக் குறிக்கும் மற்றொரு சொல். பொதிய மலையிற் படிந்து மழை பொழியும் புயலின் பெருமையை ஒரு குறவஞ்சி பாடுகிறாள்:
“திங்கள்முடி சூடுமலை; தென்றல்விளை யாடுமலை
தங்கு புயல் சூழுமலை; தமிழ்முனிவன் வாழுமலை”
என்பது குறத்திப் பாட்டு. கொண்டலும் புயலும் மற்றைய திராவிட மொழிகளில் இல்லை.
இனி, மழையைக் குறிக்கும் சொற்களைப் பார்ப்போம்: மாரி என்பது மழைக்குரிய பெயர்களில் ஒன்று.
“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு”
என்று மாரியின் பெருமையைப் பாராட்டினார் திருவள்ளுவர். மாரியும் மழையும் தெலுங்கில் இல்லை. வான் என்பது தெலுங்கில் மழையைக் குறிக்கும். தமிழிலும் வான் என்பதற்கு மழை என்ற பொருள் உண்டு. மழையின் சிறப்பை வான் சிறப்பு என்றார் வள்ளுவர். இடைவிடாது பெய்யும் அடைமழையைச் சோனை என்பர் தமிழர். சோனை தெலுங்கிலும் உண்டு. சிறு மழைக்குத் தமிழில் தூவானம் என்பது பெயர். மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற பேச்சைத் தமிழ்நாட்டிலே கேட்கலாம். தூவானம் என்பது துவர என்றும், தூர என்றும் தெலுங்கில் வழங்கப்படுகின்றது.
மழையாலும் ஆற்று வெள்ளத்தாலும் நிறைகின்ற நீர் நிலைகளின் பெயரைச் சிறிது கருதுவோம்: ஏர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலே முன்னாளில் ஏற்றமான தொழிலாகக் கருதப்பட்டது. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை ஏரி என்று பெயர் பெற்றது. குளிப்பதற்காக அமைந்தது குளம். வானத்தி னின்றும் பெய்யும் மழையால் பெருகும் குளத்தை வான மாரிக்குளம் என்பர். ஒவ்வோர் ஊரிலும் கோவிலுக் கருகே அமைந்திருக்கும் குளம் தெப்பக்குளம் எனப்படும். பாசனத்திற்கு ஏரியும், குளிப்பதற்குக் குளமும் அமைந்தவாறே குடிப்பதற்குரிய நீர் நிலையும் உண்டு. அஃது ஊருணி என்று பெயர் பெறும். ஊரார் எல்லாம் நீர் உண்பதற்குரிய ஊருணியில், எவரும் அழுக்குற்ற ஆடைகளைத் துவைக்க மாட்டார்கள்; இறங்கிக் குளிக்க மாட்டார்கள்: ஊருணியின் தன்மையைத் திருவள்ளுவர் குறித்துள்ளார்.
“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு”
என்பது திருக்குறள். அறிவாளனிடம் அமைந்த செல்வம் ஊருணியில் நிறைந்த நீர் போன்றது என்பது இக் குறளின் கருத்து. சிறு குளம் கேணி என்று பெயர் பெறும். அழகிய அல்லி மலர் நிறைந்த கேணியைச் சுற்றி எழுந்த ஊர் திருவல்லிக்கேணி என வழங்குகின்றது. ஆழமான நீர் நிலை மடு என்றும், கயம் என்றும் கூறப்படும். “ஆறிடும் மேடும் மடுவும் போலாம் செல்வம்” என்ற பாட்டால் மடுவின் தன்மையை அறியலாம். கயம் என்பது கசம் என்று இக் காலத்தில் வழங்குகின்றது. ஆகவே ஏரி, குளம், ஊருணி, கேணி, மடு, கயம் இவை பலவகைப்பட்ட நீர் நிலையைக் குறிக்கும் பான்மையை உணர்கின்றோம். இவற்றுள் குளம் என்பது கொலனு என்றும், மடு என்பது மடுகு என்றும் தெலுங்கில் வழங்கும்.
முற்காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்த சொற்கள் சில இக்காலத்தில் வழக்காற்றில் இல்லை. அத்தகைய சொற்களில் ஒன்று அங்காடி. அங்காடி என்பது இன்று வழக்கற்ற சொல்லாய்விட்டது. அங்காடி என்றாலும், பசார் என்றாலும் பொருள் ஒன்று. ஆனால், அங்காடி என்பது தமிழ்ச் சொல்; பசார் என்பது பாரசீகச் சொல். இருவகையான அங்காடிகள் பண்டைத் தமிழ்நாட்டில் இருந்தன; பகற்பொழுதில் நடைபெறும் அங்காடி நாளங்காடி என்றும், அந்தி மாலையில் நடைபெறும் அங்காடி அல்லங்காடி என்றும் பெயர் பெற்றிருந்தன. முற்காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தில் அமைந்திருந்த நாளங்காடியைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. “கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும், நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி” என்பது சிலப்பதிகார வாசகம். அந்திப் பொழுதில் திறந்து நடைபெறும் அல்லங்காடியை இக்காலத்தில் குசிலிக் கடை (Evening Bazaar) என்கிறோம். குசிலிக் கடை என்னும் சொல்லில் உள்ள குசிலி என்பது குசிரி என்ற அரேபியச் சொல்லின் சிதைவு. ஆகவே, நாளங்காடி என்ற தமிழ்ச் சொல்லை இழந்து பசார் என்னும் பாரசீகச் சொல்லை வழங்குகின்றோம். அல்லங்காடி என்ற நல்ல ஓசையுடைய சொல்லை இழந்து, குசிலி என்னும் அரேபியச் சொல்லை வழங்குகின்றோம். ஆயினும் அங்காடி மற்ற திராவிட மொழிகளில் இன்னும் வழங்கி வருகின்றது. அங்காடி என்பது தெலுங்கிலும் கன்னடத்திலும் பசாரைக் குறிக்கும். மலையாளத்திலும் அங்காடி என்பது அதுவே.
தமிழ்நாட்டில் ஏட்டுத் தமிழுக்கும் வீட்டுத் தமிழுக்கும் வேற்றுமையுண்டு. ஒரு குலத்தார் பேசும் தமிழுக்கும் மற்றொரு குலத்தார் பேசும் தமிழுக்கும் வேற்றுமை காணலாம். ஒரு சாரார், எனக்கு என்பதை னேக்கு என்றும், உனக்கு என்பதை னோக்கு என்றும் வழங்கக் காண்கின்றோம். இத்தகைய மாற்றமடைந்த சொற்களைத் தெலுங்கிலே காணலாம். அவனுக்கு என்பது வானிக்கி என்றும், அதனுக்கு என்பது தானிக்கி என்றும் தெலுங்கில் வழங்கும்.
இன்னும் இரண்டொரு பெயர்ச் சொற்களைப் பார்ப்போம்: அதர் என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல். வழி என்பது அச் சொல்லின் பொருள். காற்று வருவதற்காக வீட்டில் அமைக்கும் ஜன்னலுக்குக் காலதர் என்று பண்டைத் தமிழர்கள் பெயரிட்டார்கள். ஜன்னல் என்பது தமிழ்ச் சொல்லன்று; போர்ச்சுகீசியப் பதம். போர்ச்சுகீசியர் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு முன், நம் வீட்டுச் சன்னலுக்கு ஒரு பெயர் இருந்திருக்க வேண்டுமன்றோ? அப் பெயர்தான் காலதர். கால் என்றால் காற்று; அதர் என்றால், வழி. காலதர் என்றால் காற்று வரும் வழி. இக் காலத்தில் பேச்சு வழக்கில் இல்லாத அதர் என்ற சொல்லைத் திருக்குறள் முதலிய பல பழைய நூல்களிற் காணலாம்.
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை”
என்றார் திருவள்ளுவர். ஊக்கத்தைக் கைவிடாமல் உழைப்பவனிடம் ஆக்கம் வழிகேட்டுச் சென்றடையும் என்பது இக்குறளின் கருத்து. இவ்வாறே நூல்களிலே எடுத்தாளப்பட்டிருக்கின்ற அதர் என்னும் சொல், தெலுங்கில் தாரி என்று வழங்குகின்றது. இவ் வண்ணமே உரல் என்பது ரோலு என்றும், இலது என்பது லேது என்றும், இறப்பு என்பது ரேப்பு என்றும் வழங்கக் காணலாம்.
காலத்தைக் குறிக்கும் சொற்களில் தமிழுக்கும் தெலுங்கிற்கும் உள்ள ஒற்றுமையைப் பார்ப்போம்: கதிரவன் உதிக்கும் காலம் முதல், மறையும் காலம் வரையுள்ள பொழுதைத் தமிழிலே பகல் என்பர்; தெலுங்கிலே பகலு என்பார்கள். நடுப்பகலைப் பட்டப் பகல் என்பர் தமிழர்; பட்டப் பகலு என்பர் தெலுங்கர். நேற்று என்பதற்கு இலக்கியத் தமிழ் நெருநல். ‘நேற்றிருந்தவனை இன்று காணோம்; இதுதான் இவ்வுலகின் பெருமை” என்ற கருத்தை அமைத்து,
“நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு”
என்றார் திருவள்ளுவர். இக் குறளில் நெருநல் என்னும் சொல் நேற்று என்ற பொருளைத் தருகின்றது. நெருநல் என்பது நென்னல் என்றும் வழங்கும்.
“அன்னம் துணையோ டாடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர்”
என்ற சிலப்பதிகார இசைப்பாட்டில் நென்னல் என்னும் சொல் ஆளப்பட்டிருக்கின்றது. தெலுங்கில் நென்னல் என்பது நின்ன என்று வழங்குகின்றது. ரேப்பு என்ற சொல் தெலுங்கில் நாளை என்ற பொருளைத் தரும். இறப்பு என்னும் தமிழ்ச் சொல்லே தெலுங்கில் ரேப்பு என்றாயிற்று. இறப்பு என்பது கடந்த நிலையைக் குறிக்கும். கடந்த சென்ற காலத்தைத் தமிழில் இறப்பு என்றார்கள்; கடந்து வருங்காலத்தைத் தெலுங்கிலே ரேப்பு என்று கொண்டார்கள்.
இனி, பேசும் முறையைக் குறிக்கும் சொற்களைப் பார்ப்போம்; பேசும் முறை பல வகைப்படும். அம் முறைகளுக்கு ஏற்ற சொற்கள் தமிழில் அமைந்திருக்கின்றன. ஒருவன் விளக்கமாக விரித்துப் பேசினால், உரைத்தான் என்போம்; எல்லோரும் அறியப் பரக்கப் பேசினால், அறைந்தான் என்போம்; பல கூறுகளாகப் பிரித்து வகைப்படுத்திப் பேசினால், கூறினான் என்போம்; தெளிவாகவும் உறுதியாகவும் பேசினால் செப்பினான் என்போம். இவற்றுள் செப்பு என்பது தெலுங்கில் பெரிதும் வழங்குகின்றது. தமிழ் இலக்கியங்களில் செப்பு என்ற பதம் உண்டு.
“பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை
தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே”
என்று வேண்டுகின்றார் தாயுமானவர். மதுரை மாநகரில் கணவனை இழந்த கண்ணகி, பாண்டியன் முன்னே நின்று ‘தேரா மன்னர் செப்புவ துடையேன், என்று வழக்குரைக்கத் தொடங்கினாள். சொல்லாடல் என்றாலும் பேசுதல் என்றாலும் பொருள் ஒன்றே. ‘கல்லாடம் படித்தவனோடு சொல்லாடாதே’ என்ற
பழமொழியைக் கேட்டிருக்கின்றோம்.
“கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்”
என்று திருவள்ளுவரும் கூறினார், சொல்லாட என்பதற்கு நேரான தெலுங்கு மாட்டாட என்பது. மாற்றம் என்னும் தமிழ்ச் சொல் தெலுங்கில் மாட்ட என்றாகும். மாற்றம் என்றால் சொல் வாக்கும் மனமும் கடந்துள்ள கடவுளை, “மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்” என்றார் மாணிக்கவாசகர். மாற்றம் என்பது தமிழிலே ஏட்டு வழக்கில் உண்டு; நாட்டு வழக்கில் இல்லை. தெலுங்கிலே மாட்ட என்பது பெருவழக்காக உள்ளது.
பேச்சுத் தமிழுக்கும் தெலுங்குக்கும் உள்ள ஒற்றுமையைச் சிறிது பார்ப்போம்: உருண்டைக் கட்டியைப் பேச்சுத் தமிழில் உண்டைக்கட்டி என்பர். மழலைப் பேச்சில் பருப்பு என்பது பப்பு என்றாகும். இவ் வகையான சொற்கள் தெலுங்கில் பலவாகும். பருப்பு என்பது பப்பு என்றும், செருப்பு என்பது செப்பு என்றும் நெருப்பு என்பது நெப்பு என்றும், பருத்தி என்பது பத்தி என்றும், மருந்து என்பது மந்து என்றும் தெலுங்கில் வழங்கும்.
இன்னும் குழைந்த ஓசையுடைய ழகரமும் வல்லோசையுடைய றகரமும் திராவிட மொழிகளின் சிறப்பெழுத்துக்கள் என்பார். இவற்றுள் ழகரத்தைத் தெலுங்கு பழங்காலத்திலேயே இழந்துவிட்டதாகத் தெரிகின்றது. இதனாலே அழுத்து என்பது அத்து என்றும், உழுந்து என்பது உத்தலு என்றும், கொழுப்பு என்பது கொவ்வு என்றும் தெலுங்கிலே வழங்கக் காண்கிறோம். இவ்வாறு ழகரத்தை நழுவ விடுதல் பேச்சுத் தமிழில் உண்டு. குழந்தையைக் கோந்தை என்பர். தாழ்ப்பாளைத் தாப்பாள் என்பர். தொழும்பனைத் தொம்பன் என்பர். எழுந்திரு என்பதை ஏந்திரு என்பர்.
சிறப்பெழுத்தாகிய ழகரம், பல தெலுங்குச் சொற்களில் டகரமாக மாறியிருக்கின்றது. ஏழு என்பது ஏடு; கோழி என்பது கோடி; மேழி என்பது மேடி; பவழம் என்பது பவடம். இவ்வாறே இன்னும் பல.
வல்லின றகரம் இரட்டித்து வரும் சொற்களிலும் பேச்சுத் தமிழுக்கும் தெலுங்குக்கும் ஒற்றுமை உண்டு. குற்றம் சாற்றினான் என்பதைக் குற்றம் சாட்டினான் என்கிறோம். ஒற்றுக் கேட்டான் என்பதை ஒட்டுக் கேட்டான் என்கிறோம். கழற்று என்பது கழட்டு என்றும், சுழற்று என்பது சுழட்டு என்றும் வழங்கக் காண்கிறோம். இவ்வாறே தெலுங்கிலும் றகரம் டகரமாகின்றது. கொற்று என்பது கொட்டு என்றும், சுற்றம் என்பது சுட்டமு என்றும், புற்று என்பது புட்ட என்றும், ஊற்று என்பது ஊட்ட என்றும், மாற்றம் என்பது மாட்ட என்றும் வழங்குகின்றன. ஆகவே, தமிழும் தெலுங்கும் வேறு மொழிகளாகக் காணப்படினும் அவற்றுள் அடிப்படையான ஒற்றுமையுண்டு என்பது இதுகாறும் கூறியவற்றால் ஒருவாறு விளங்கும்.
$$$
13. தமிழ் மொழியும் பிற மொழியும் – மலையாளம்
மலையாள தேசம் முற்காலத்தில் சேரநாடு என்று பெயர் பெற்றிருந்தது. சேரநாடு தமிழ்நாட்டின் ஓர் அங்கமாக விளங்கிற்று. சேர சோழ பாண்டியர் மூவரும் தமிழ் மன்னராகவே திகழ்ந்தார்கள். சேர நாட்டு மன்னருட் சிலர் செந்தமிழ் நூல்கள் செய்து அழியாப் புகழ் பெற்றனர். ஆகவே; ஆதியில் சேரநாடு தமிழ் மணக்கும் திருநாடாக விளங்கிற் றென்பதில் யாதும் ஐயமில்லை.
இக் காலத்தில் தமிழும் மலையாளமும் தனித்தனி மொழிகளாகக் கருதப்படுகின்றன. எனினும் இவ்விரு மொழிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு. பேச்சுத் தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டுகின்ற சில சொற்களைப் பார்ப்போம்:
ஒன்று என்பதைப் பேச்சுத் தமிழில் ஒன்னு என்பர். மூன்று என்பதை மூனு என்பர். மலையாளமும் இவ்வாறே ஒந்று, மூறு என்று வழங்குகின்றது. இன்னும் பன்றியைப் பன்னி என்றும் கன்றைக் கன்னு என்றும் தமிழில் வழங்குவது போலவே மலையாளமும் வழங்குகின்றது. குன்று என்பது பேச்சுத் தமிழில் குன்னு என்றாகும். தொண்டை நாட்டிலுள்ள குன்றத்தூரைக் குன்னத்தூர் என்றும், நீலகிரி மலையிலுள்ள குன்றூரைக் குன்னூர் என்றும் கூறுகின்றோமல்லவா? மலையாளத்தில் குன்றைக் குன்னு என்றே வழங்குகின்றார்கள். இன்னும், ஒன்பதை மலையாளத்தில் ஒம்பது என்றும், ஐம்பதை அம்பது என்றும் கூறக் காண்கிறோம்.
பல தமிழ்ச் சொற்களின் பழைய வடிவம் மலையாளத்திலே விளங்குகின்றது. தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு அரிசி உண்டு. பண்டைத் தமிழ்நாட்டினின்றும் அரிசியை ஏற்றுமதி செய்த கிரீக்கர்கள் அதனை அருஸா என்கிறார்கள். அதுவே ஆங்கிலத்தில் ரயிஸ் (rice) என்று ஆயிற்று. அரிசி என்னும் சொல் இவ்வளவு பழமை வாய்ந்ததாயினும், பிங்கலந்தை என்ற பழைய தமிழ் நிகண்டில் அரி என்ற வடிவம் காணப்படுகின்றது. திராவிட மொழிகளுள் ஒன்றாகிய துளுவத்திலும் அரி என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்தில் இன்றும் அரிசியை அரி என்றே குறிக்கின்றார்கள், ஆதலால் அரி என்பது அரிசியின் ஆதி வடிவம் போலும்.
மற்றொரு சொல்லைப் பார்ப்போம்: எலும்பு என்பது எல்லோரும் அறிந்த சொல். இலக்கியங்களில் இச் சொல் என்பு என வழங்குகின்றது.
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு”
என்னும் திருக்குறளில் என்பு அமைந்துள்ளது. கன்னடத்தில் எலும்பை எலு என்கிறார்கள். எலும்பின் ஆதி நிலையினை நாடும் பொழுது மலையாளம் வந்து உதவுகின்றது. எல் என்பது மலையாளத்தில் எலும்பைக் குறிக்கும். அதுவே கன்னடத்தில் எலு என்றாயிற்று; தமிழில் விகுதி பெற்று என்பு என்றும், எலும்பு என்றும் அமைந்தது.
இனி, பெற்றோரையும் உற்றோரையும் குறிக்கும் சில தமிழ்ப் பதங்களைப் பார்ப்போம்: பிதாவை நாம் தந்தை யென்றும், தகப்பன் என்றும் கூறுவோம்; அண்ணனைத் தமையன் என்போம்; இளையவனைத் தம்பி என்போம்; மூத்த சகோதரியைத் தமக்கை என்றும், இளைய சகோதரியைத் தங்கை என்றும் வழங்குவோம். தந்தை, தகப்பன், தமையன், தமக்கை, தம்பி, தங்கை – இச் சொற்களின் பிறப்பு முறையில் ஓர் ஒற்றுமை இருக்கக் காண்கிறோம் அல்லவா? தம் என்ற சொல்லின் அடிப்படையாக இப் பதங்கள் பிறந்தனவாகத் தோன்றுகின்றன. ஆனால், தகப்பன் என்னும் பதத்தில் மட்டும் ககரம் எப்படி வந்தது என்று சிறிது திகைக்கின்றோம். மலையாளம் அம் மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தாக அமைகின்றது. மலையாளத்தில் தகப்பனைத் தமப்பன் என்கின்றார்கள். ஆகவே, தம் அப்பன் என்பது தமப்பன் என்றாகித் தமிழில் தகப்பன் ஆயிற்றென்று அறிந்து கொள்கின்றோம்.
இன்னும், வண்ணான் என்ற சொல்லைப் பார்ப்போம்: அழுக்குத் துணிகளைச் சலவை செய்யும் தொழிலே வண்ணான் தொழில். மலையாளத்தில் வண்ணானை மண்ணான் என்பார்கள். மண்ணு என்ற சொல் கழுவு என்ற பொருளில் தமிழில் வழங்குகின்றது.
“மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா – கடல்பெரிது
மண்ணீரு மாகாது அதனருகே சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்”
என்ற பாட்டில் மண்ணீர் என்னும் பதம் கழுவும் தண்ணீர் என்ற பொருளில் வந்துள்ளது. மண்ணுதற்கு உதவும் நீரை மண்ணீர் என்றார் கவிஞர். ஆகவே, ஆடைகளின் அழுக்கைக் கழுவிப் போக்குகிறவனை மண்ணான் என்று குறிப்பது பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. மண்ணான் என்பது தமிழில் வண்ணானாகத் திரிந்தது போலும்.
இனி, ஒரு மலையின் பெயர் மலையாளத்தில் அடைந்த மாற்றத்தைப் பார்ப்போம்: மலையாள தேசத்தில் கடற்கரையின் அருகேயுள்ள ஒரு மலை எலிமலை என்னும் பெயர் பெற்றுள்ளது; ஆங்கிலத்தில் அதனை (Rat Mountain) என்று மொழிபெயர்த்து வழங்குகின்றார்கள். அம் மலையின் சரித்திரம் சென்னையிலுள்ள அம்பட்டன் வாராவதியின் கதையை ஒத்திருக்கின்றது. எழில் என்பது அம் மலையின் பெயர். பாண்டி நாட்டில் பொதியில் என்னும் மலை அமைந்திருத்தல் போல, மலையாள நாட்டில் எழில் என்னும் மலை விளங்கிற்று. அம் மலையை ஒரு சிற்றரசன் ஆண்டுவந்தான். அவனைக் கண்டு பரிசு பெறக் கருதிய ஒளவையார் காடும் நாடும் கடந்து சென்றார். மாளிகையை அடைவதற்கு முன்னே அந்திமாலை வந்துவிட்டது. ஆயினும், எங்கும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இரவு, பகலாகவே காணப்பட்டது. அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் அரசன் அமர்ந்திருந்தான். அங்கே சென்றார் ஒளவையார். அரசன் ஒன்றும் பேசவில்லை; பாராமுகமாய் இருந்தான். அவன் முன்னே நின்றுகொண்டு ஒரு தமிழ்ப் பாட்டு இசைத்தார் ஒளவையார். அப்பொழுதும் அவன் வாய் திறக்கவில்லை. பாட்டிக்குக் கோபம் வந்துவிட்டது. கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய், சபை நடுவே இருந்த அரசனது தன்மையை ஒரு பாட்டில் அமைத்துப் பாடினார்.
“இருள்தீர் மணிவிளக்கத்(து) ஏழிலார் கோவே
குருடேயூ மன்றுநின் குற்றம் – மருள்தீர்ந்த
பாட்டும் உரையும் பயிலா தன இரண்டு
ஓட்டைச் செவியும் உள”
என்று அவர் பாடிய பாட்டில் ஏழில் என்னும் மலை குறிக்கப்படுகின்றது. ஏழில் என்னும் பதத்திலுள்ள ழகரம் நாளடைவில் நழுவிற்று. ஏழில்மலை எலிமலை யாயிற்று. அம் மலையில் அரசு புரிந்த மன்னர் குலம் மூசிக வம்சம் ஆயிற்று. மூசிக வம்சத்தைக் குறித்து வட மொழியில் ஒரு காவியமும் எழுதப்பட்டது. இவ்வாறாக எலிமலை என்ற பெயர் அம் மலைக்கு நிலைத்துவிட்டது.
இனி, மலையாளத் தாக்கோலைச் சிறிது பார்ப்போம்: பூட்டைத் திறக்கும் கோல் தாக்கோல் எனப்படும். நிலைப் பூட்டுக்குத் தாழ் என்று பெயர். இக்காலத்தில் அது தாழ்ப்பாள் என வழங்குகின்றது; ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்குத் இரட்டைத் தாழ்ப்பாள்’ என்னும் வாசகம் தமிழ்நாட்டில் உண்டு. ஆயினும் தாழ் என்றாலே போதும். திருவள்ளுவர் அன்பின் தன்மையைக் கூறுமிடத்து,
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்‘
என்று பாடினார். தாழைத் திறக்குங்கோல் மலையாளத்தில் தாழ்க்கோல் என்றும், தமிழில் திறவுகோல் என்றும் குறிக்கப்படுகிறது. இந்நாளில் நாகரிகத் தமிழ்நாடு திறவுகோலைக் கைவிட்டுச் சாவியைப் பற்றிக்கொண்டது. சாவி என்பது போர்ச்சுகீசியப் பதம்; அதற்கு மேல் ‘கீ’ யென்னும் ஆங்கிலப் பதமும் இப்போது ‘அடிபடு’கின்றது.
பழந்தமிழ் நாட்டுப் பழக்க வழக்கங்களிற் சிலவற்றை இன்றும் மலையாள தேசத்திற் காணலாம். கல்யாணத்தில் மணமகன் வீட்டார் கொடுக்கும் புடைவையைப் பெண்ணுக்கு உடுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் உண்டு. அப் புடைவையைக் கூறைப்புடைவை என்பார்கள். கூறை என்றாலும், புடைவை என்றாலும் பொருள் ஒன்றே. முற்காலத்தில் புடைவை நெய்யப்பட்ட ஓரிடத்திற்குக் கூறை நாடு என்றே தமிழர் பெயரிட்டார்கள். இக் காலத்தில் அது கொரநாடு என்ற பெயரோடு மாயவரத்திற்கு அருகே இருக்கின்றது. அங்கு நெய்யப்படும் புடைவை கொரநாட்டுப் புடைவை என வழங்குகின்றது. மலையாள மன்னர் குடும்பத்தில் நடைபெறும் திருமணத்திற்குப் ‘புட்கொட’ என்று பெயர். புட்டகொட என்பது புடைவைக் கொடை என்பதன் திரிபேயாகும். பெண்ணுக்குப் புடைவை கொடுத்தலே திருமணத்தின் சிறந்த அம்சமாகக் கொள்ளப்பட்டதென்பது இதனால் நன்கு விளங்கும். காதல் மண முறையை விவரித்துக் கூறும் தமிழ் நூல்களில் காதலன் தன் காதலிக்கு மலராலும் தளிராலும் செய்யப்பட்ட தழை என்னும் ஆடையைக் கொடுத்து மகிழும் பழக்கம் குறிப்பிடப் படுகின்றது. அவ் வழக்கம் நாளடைவில் திருந்திக் காலத்திற்கேற்றவாறு புடைவைக் கொடையாயிற்று என்று கொள்ளுதல் பொருந்தும்.
நாடாளும் அரசனைக் குறிப்பதற்குத் தமிழிலும் மலையாளத்திலும் பல சொற்கள் உண்டு. கோ, கோன், கோமான் இம் மூன்று சொற்களும் தமிழிலும் மலையாளத்திலும் அரசனைக் குறிக்கும். இளவரசனை இளங்கோ என்பர். கோயில் என்னும் சொல் தமிழிலும் மலையாளத்திலும் அரசனுக்குரிய அரண்மனையையும் கடவுளுக்குரிய ஆலயத்தையும் உணர்த்துவதாகும். ஆனால், இப்பொழுது தமிழ்நாட்டில் கோயில் என்பது பெரும்பாலும் ஆலயத்திற்கே பெயராய் அமைந்து விட்டது. சைவர்களுக்குக் கோயில் என்பது சிதம்பரம். வைணவர்களுக்குக் கோயில் ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம்.
மலையாள தேசத்தில் அரசர் குலத்தைச் சேர்ந்தாரிற் சிலர் கோயில் தம்புரான் என்று அழைக்கப்படுவர். திருவாங்கூர் தேசத்தில் பத்துக் கோயில் தம்புரான்கள் இன்றும் சிறப்புற்று வாழ்கின்றார்கள். சென்ற சில நூற்றாண்டுகளாகத் திருவாங்கூர் மன்னராகத் திகழ்ந்தவர்கள் எல்லாம் கிளிமானூர்க் கோயில் தம்புரான் குலத்தைச் சேர்ந்தவர்களே. தமிழில் தம்பிரான் என்பது கடவுளையே குறிக்கும் . சிவபெருமானுக்குத் தம்பிரான் என்பது ஒரு பெயர். இதனாலேயே சிவபிரான் தோழராக விளங்கிய சுந்தரமூர்த்திக்குத் தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. இக் காலத்தில் சைவ சமயத்தைச் சேர்ந்த சந்நியாசிகளே தம்பிரான் என்று குறிக்கப்படுகின்றார்கள். அரசன் தெய்வத் தன்மை வாய்ந்தவன் என்பது இந் நாட்டுக் கொள்கையாதலால் மலையாளத்தில் தம்பிரான் என்று அரசர் குலத்தார் அழைக்கப் பெறுகிறார்கள்.
தெய்வத்தை நம் முன்னோர்கள் குளிர்ந்த சோலைகளில் வழிபட்டார்கள். அதற்குரிய சின்னங்கள் மலையாள தேசத்திலும், தமிழ்நாட்டிலும் இன்றும் காணப்படுகின்றன. செங்கோட்டைக்கு அருகே மலையாள தேசத்தில் ஆரியங் காவு என்ற ஊர் இருக்கிறது. காவு என்பது சோலை. எனவே, ஆரியன் காவு என்றால் ஆரியன் சோலை. எனவே ஐயப்பன் வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. தமிழ்நாட்டார் ஐயப்பனை ஐயனார் என்றும், சாத்தன் என்றும் வணங்குவார்கள்; காலத்தில் மழை பெய்யாவிட்டால் ஐயனாருக்குப் பொங்கலிட்டுப் பூசை செய்வார்கள்; அறுவடை முடிந்தபின் ஐயனாருக்குச் சிறப்பாக வழிபாடு செய்வார்கள். தமிழ்நாட்டு ஐயனாரே மலையாளத்தில் ஐயப்பனாக விளங்குகிறார், ஆரியன் என்பது ஐயப்பனுக்கு ஒரு பெயர். ஆகவே, ஆரியன் காவு என்று ஐயப்பன் சோலை அழைக்கப்படுகின்றது. இன்றும், மலையாள தேசத்தில் நாகம் வாழ்கின்ற காவுகள் ஆயிரக் கணக்காக உண்டு. பாம்புக் காவு என்பது அவற்றின் பெயர். ஒவ்வொரு நாயர் இல்லத்திலும் பாம்புக் காவு உண்டு. அக் காவில் முளைக்கின்ற மரஞ் செடிகளை வெட்டுவதில்லை. அங்கு வாழ்கின்ற பாம்புகளுக்குப் பால் வார்ப்பார்கள். இவ்வாறு காவில் தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் தமிழ்நாட்டிலும் இருந்தது. சீர்காழிக்கு அருகே ஒரு சிவஸ்தலம் உள்ளது. அதன் பெயர் கோலக்கா.
“கூத்தனை, குருமாமணி தன்னை, கோலக் காவினில்
கண்டுகொண் டேனே”
என்பது தேவாரம் கா என்பது சோலை; அதுவே மலையாளத்தில் காவு என்றாயிற்று. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் பல காவுகள் உண்டு. திருச்சிராப் பள்ளிக்கு அண்மையில் உள்ள திரு ஆனைக்கா இப்பொழுது திருவானைக் காவல் என வழங்குகின்றது. நெல்லி மரச் சோலையாகிய திரு நெல்லிக்கா இக் காலத்தில் திருநெல்லிக்காவல் என்று பெயர் பெற்றுள்ளது. ஆகவே, சோலையைக் கோயிலாகக் கொண்டு வழிபாடு செய்த பண்டை வழக்கத்தைத் தமிழும் மலையாளமும் நன்கு காட்டுகின்றன. இதுகாறும் கூறியவற்றால் பழக்க வழக்கங்களிலும், சொல்லாக்கத்திலும் தமிழகத்தார்க்கும் மலையாளத் தார்க்கும் உள்ள ஒருமைப்பாடு நன்கு விளங்கும்.
$$$
14. தமிழ் மொழியும் பிற மொழியும் – கன்னடம்
பாரத நாட்டில் உள்ள கருநாடக தேசத்தில் வழங்கும் மொழி கன்னடம் எனப்படும். கருநாடகம் என்னும் சொல்லே கன்னடம் என்றாயிற்று. இக் காலத்தில் வழங்கும் கன்னடத்திற்கும் முற்காலத்தில் வழங்கிய கன்னடத்திற்கும் சில வேற்றுமையுண்டு. முற்காலக் கன்னடத்தைப் பழங் கன்னடம் என்பார்கள். ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த கன்னடத்தைப் பழங் கன்னடம் என்று சொல்லலாம்; பழங் கன்னடத்திற்கும் தமிழுக்கும் பல வகையான ஒற்றுமையுண்டு. சில சொற்களைப் பார்ப்போம்:
தமிழில் உள்ள பூ, புல், புலி, பல்லி, பத்து – இவை போன்ற சொற்கள் அப்படியே பழங் கன்னடத்தில் காணப்படுகின்றன. ஆனால், தற்காலக் கன்னடத்தில் பூ – ஹவு என்றும், புல் – ஹுல்லு என்றும், புலி – ஹூலி என்றும், பல்லி – ஹல்லி என்றும், பத்து – ஹத்து என்றும் வழங்கப்படுகின்றன.
ஆயினும், இன்று தமிழில் கற்றோர்க்கு மட்டுமே விளங்கும் இலக்கியப் பதங்கள் பல, கன்னடத்தில் யாவரும் எளிதில் உணரும் தேசியச் சொற்களாக இருக்கின்றன. திங்கள் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும், சந்திரனுக்குரிய நாளைத் திங்கட்கிழமை என்கிறோம். இன்னும், திங்கள் என்பது மாசத்தையும் குறிக்கும். பத்து மாசம் சுமந்து பெற்ற தாயின் பெருமையைக் கூறுகின்றது ஒரு தமிழ்ப் பாட்டு:
“ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுத்தம் தந்தாளை
எப்பிறப்பிற் காண்பேன் இனி”
என்ற பாட்டில் திங்கள் என்பது மாதம் என்ற பொருளைத் தருகின்றது. இவ்வாறு இலக்கியத்தில் பயில்கின்ற சொல் கன்னடத்தில் கற்றோரும் மற்றோரும் வழங்குகின்ற பதமாக இருக்கின்றது. நிலவின் ஒளியைத் ‘திங்கள் விளக்கு’ என்பர். கன்னடியர் மாதத்தைத் திங்கள் என்றே கூறுவர்.
மற்றொரு பழைய தமிழ்ச் சொல்லைப் பார்ப்போம்: பழந்தமிழில் கரைதல் என்றால் அழைத்தல். காக்கை தன் இனத்தை அழைத்துக் கலந்துண்ணும் தன்மையைத் திருவள்ளுவர் கூறுகின்றார்:
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள”
என்பது திருக்குறள். காக்கை ஒளித்து உண்ணாமல் இனத்தை அழைத்து உண்ணும்; அத் தன்மை வாய்ந்தவர்க்கே இவ்வுலகில் ஆக்கம் உண்டு என்பது இக் குறளின் கருத்து. கரை என்ற சொல் மற்றொரு பொருளிலும் ஆளப்பட்டுள்ளது. கடலிற் செல்லும் கப்பல்களுக்குக் கரையிருக்கும் இடத்தைக் காட்டுவதற்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள விளக்கைத் தீப ஸ்தம்பம் என்பர் வடமொழியாளர்; ஆங்கிலவர் Light House என்பர்; கலங்கரை விளக்கம் என்பர் தமிழர். சிலப்பதிகாரத்தில் கலங்கரை விளக்கம் குறிக்கப்பட்டுள்ளது.
“இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்
இலங்கு நீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்”
என்பது சிலப்பதிகாரம்.
கலங்கரை விளக்கம் என்பதன் பொருள் என்ன? கலம் என்பது கப்பல்; விளக்கம் என்பது வெளிச்சம். கப்பலைத் துறைமுகத்திற்கு அழைக்கும் வெளிச்சம் என்பதே கலங்கரை விளக்கம் என்பதன் பொருள். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் இவ்வாறு பொருள் கூறுகின்றார். ஆகவே, கரை என்னும் சொல்லுக்கு அழை என்ற பொருள் பழந்தமிழில் உண்டு என்பது நன்கு விளங்கும். இத்தகைய கரை என்ற சொல் கன்னடத்தில் யாவராலும் வழங்கப்படுகின்ற தேசியச் சொல். பால் கறக்கும் வேளை வந்துவிட்டால் ‘கரு கரையுத்தே’ என்பர் கன்னடத்தார். ‘கன்று (தாயை) அழைக்கின்றதே என்பது அதன் பொருள்.
இனி, சில ஆண்பாற் பெயர்களையும் அவற்றிற்கு நேரான பெண்பாற் பெயர்களையும் பார்ப்போம்: ஒருவன் என்பதும் ஒருத்தன் என்பதும் ஆண்பாற் பெயர்கள். ஒருத்தன் என்பது பேச்சுத் தமிழிலே பெரும்பாலும் வரும். ஆயினும் அச்சொல்லின் பழமையும் செம்மையும் திருவாசகத்தால் விளங்குவதாகும்.
“நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி உலகெலாம் தேடியும் காணேன்”
என்று மணிவாசகர் திருவாசகத்திலே பாடியுள்ளார். ஒருத்தன் என்பது ஆண்பால்; ஒருத்தி என்பது பெண்பால். இனி, ஒருவன் என்ற சொல்லைக் கருதுவோம். ஒருவன் என்பதற்கு நேரான பெண்பாற் பெயர் ஒருவள் என்பதாகும். ஆனால், ஒருவள் என்னும் பதம் தமிழ் இலக்கிய மரபில் இல்லை. இக் குறைபாட்டைத் தீர்க்க முன் வந்தனர் சிலர்; ஒருவள் என்று கூறுதல் வழுவன்று என்று சில மாநாடுகளில் தீர்மானமும் செய்தனர். ஆயினும், புலவர் உலகம் ஒருவளை’ இன்றுகாறும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்புதுமைப் பதத்தை ஏற்றுக் கொள்வதற்குக் கன்னடத்தை ஆதாரமாகக் காட்டலாம் என்று தோன்றுகின்றது. ஒருவன் என்பது கன்னடத்தில் ஒப்பனு என்றாகும். அதற்கு நேரான பெண்பாற் பெயர் ஒப்பளு. ஒப்பளு என்பது கன்னடத்தில் வழங்குதலால் ஒருவள் என்னும் பதம் தமிழின் நீர்மைக்கு மாறுபட்ட தன்று என்று கொள்வதில் குற்றமொன்றும் இல்லை.
சில பழந் தமிழ்ப் பதங்களின் தாதுப் பொருள் கன்னடத்தால் நன்கு விளங்கத் தக்கதாக இருக்கின்றது. எருது என்ற தமிழ்ப்பதம் பழங்கன்னடத்தில் ஏர்து என்று வழங்குகின்றது. அது ஏர் என்ற தாதுவின் அடியாகப் பிறந்த சொல். ஏர்த் தொழிலாகிய உழவுக்குப் பயன்படும் காளைமாடுகளை ஏர்து என்று கன்னடத்திலும், எருது என்று தமிழிலும் வழங்கலாயினர் என்பது நன்கு விளங்குகின்றது.
மற்றொரு சொல்லினைப் பார்ப்போம்: வெங்காயத்தைத் தமிழில் உள்ளி என்பர். உள்ளி என்னும் பதம் கன்னடத்திலும் உண்டு. ஈருள்ளி, வெள்ளுள்ளி என உள்ளி இருவகைப்படும். ஈருள்ளியை ஈர வெங்காயம் என்றும், வெள்ளுள்ளியை வெள்ளை வெங்காயம் என்றும் பொது மக்கள் வழங்குவர். கன்னடத்தில் ஈருள்ளியை நீருள்ளி என்கின்றார்கள். சாறு நிறைந்த வெங்காயத்தை நீருள்ளி என்று குறித்தல் பொருத்தமாகத் தோன்றுகின்றது. நீருள்ளி நாளடைவில் ஈருள்ளியாயிருத்தல் கூடும்.
இனி, வண்டி என்ற தமிழ்ச் சொல்லை எடுத்துக் கொள்வோம். மாடு பூட்டிய வண்டியை மாட்டு வண்டி என்பர். குதிரை இழுக்கும் வண்டியைக் குதிரை வண்டி என்பர். இருப்புப் பாதையிற் செல்லும் வண்டியை ரயில் வண்டி என்பர். கன்னடத்திலும், தெலுங்கிலும் வண்டியைப் பண்டி என்கின்றார்கள். பழைய தமிழ் நூல்களில் பண்டி என்ற சொல்லே காணப்படுகின்றது. சிந்தாமணியாசிரியர்,
”மல்லலம் தெங்கள் நீர்ப்பெய் பண்டியும்
மெல்லிலைப் பண்டியும் கமுகின் மேதகு
பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியும்
ஒல்குதீம் பண்டம்பெய் தொழுகும் பண்டியும்”
என்று பாடியுள்ளார். பண்டி என்ற சொல் பழைய நூல்களிற் காணப்படுதலாலும், கன்னடமும் தெலுங்கும் பண்டி என்ற பதத்தையே வழங்குதலாலும் வண்டி என்பது பண்டியின் திரிபே என்று தெரிந்து கொள்ளுகின்றோம்.
தமிழில் யான், நான் என்னும் இரண்டும் தன்மை ஒருமைப் பெயர்கள். இவற்றுள் யான் என்பது மிகப் பழமை வாய்ந்தது. தொல்காப்பியம் என்னும் பழைய தமிழ் இலக்கணம் நான் என்பதைக் கூறவில்லை; யான் ஒன்றையே கூறுகின்றது. பிற்காலத்தில் நான் என்பதும் வழக்காற்றில் வந்துவிட்டது. கன்னடத்தில் யான் என்னும் முற்காலச் சொல்லும், நானு என்னும் பிற்காலச் சொல்லும் காணப்படுகின்றன.
தமிழில் முன்னிலை ஒருமைப் பெயர் நீ என்பது. அது கன்னடத்தில் நீன் என்று வழங்குகின்றது. தமிழ்நாட்டில் சில பாகங்களில் பேச்சுத் தமிழில் நானு, நீனு என்று வழங்குகின்றார்கள். ஆயினும் ‘நீனு’ என்பது. கொச்சை மொழி என்றே கற்றோரால் கருதப் படுகின்றது. கன்னடத்தில் நீன் என்பது நல்ல சொல்லாகும்.
திராவிட மொழிகளுக்குரிய சிறப்பெழுத்தாகிய ழகரம் கன்னடத்தில் பொது ளகரமாக மாறிவிட்டது. பல கன்னடப் பதங்களில் ழகரம் நழுவி ஒழிந்தது. உணவுப் பொருளாகிய உழுந்து கன்னடத்தில் உத்து என்றும், கொழுப்பு கொப்பு என்றும், கழுத்து கத்து என்றும் வழங்கக் காண்கின்றோம். குஷ்டநோயைத் தமிழில் பெருநோய் என்று பொது மக்கள் கூறுவர். அந் நோய் இலக்கியங்களில் தொழுநோய் எனப்படும். தேவாரத் திருப்பாசுரத்தில்,
“அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ய ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே”
என்று பாடினார் திருநாவுக்கரசர். தொழுநோய் கன்னடத்தில் தொன்னு என வழங்குகின்றது.
புலி என்னும் சொல் பழங் கன்னடத்தில் உண்டு. அது புதுக் கன்னடத்தில் ஹுலி ஆயிற்று. வேங்கைப் புலியைத் தமிழில் பெரும் புலி என்பர். அதற்கு நேரான கன்னடப் பதம் பொப்புலி என்பது. ஆந்திர தேசத்திலுள்ள பொப்புலி என்ற ஊர்ப்பெயரின் பொருள் பெரும் புலி என்பதேயாம். தெலுங்கிலும் கன்னடத்திலும் பல சொற்கள் இவ்வாறு தேய்ந்து வழங்கக் காண்கின்றோம். கன்னடத்திலும் பருப்பு பப்பு என்றும், மருந்து மத்து என்றும், எருமை எம்மே என்றும், பருத்தி பத்தி என்றும் வழங்கப்படுகின்றன.
இன்னும் சில கன்னடப் பதங்களில் முதலில் உள்ள சகரம் ககரமாகத் திரிந்துள்ளது. தமிழில் செவி என்பது கன்னடத்தில் கிவி. அவ்வாறே செவிடு என்பது கிவிடு; செந்தளிர் என்பது கெந்தளிர்; செம்பருத்தி என்பது கெம்பத்தி.
இனி, தமிழ்ச் சொற்களின் முதலில் உள்ள வகரம் பகரமாக மாறியிருத்தலைப் பல கன்னடப் பதங்களிற் காணலாம். வடுகர் என்பது படகர் என்றாயிற்று. வீடு என்பது பீடு. வீதி என்பது பீதி. வில் என்பது பில்லு.. வேர் என்பது பேரு. இத் தகைய மாற்றங்களை உணர்ந்து கொண்டால் தமிழுக்கும் கன்னடத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கு விளங்கும்.
கன்னடத்தோடு நெருங்கிய தொடர்புடைய மொழி துளுவம். ஆயினும் கன்னடத்தில் காணப்படாத சில சொற்கள் தமிழிலும் துளுவத்திலும் வழங்குகின்றன. அத்தகைய சொற்களில் ஒன்று கொக்கு. தமிழில் கொக்கு என்றும், துளுவத்தில் குக்கு என்றும் வழங்கும் சொல் மாமரத்தைக் குறிக்கும். இச் சொல்லைச் சிலேடையாக வைத்து குற்றாலக் குறவஞ்சியாசிரியர் முருகன் பெருமையைக் கூறுகின்றார். முருகப் பெருமான் முதல் வேட்டைக்குப் புறப்பட்டாராம். ஒரு கொக்கை அடித்தாராம்.
“மீறும் இலஞ்சுக் குறத்தியைக் கொண்ட செவ்
வேட்குறவன் முதல் வேட்டைக்குப் போனநாள்
ஆறுநாட் கூடிஒரு கொக்குப் பட்டது”
என்று பாடுகின்றான் மலைக் குறவன். முருகன் அசுரர் தலைவனாகிய சூரனோடு போர் தொடுத்தார்; ஆறு நாள் அரும்போர் செய்தார். மாயையில் வல்ல சூரன் மறைந்து ஒரு மாமரமாக நின்றான். அம் மாமரத்தை வேலால் எறிந்து வீழ்த்தினார் முருகன். இச் செயலைக் கொக்கு வேட்டையாடினார் குமரன் என்று குறவன் நயம்பட உரைத்தான். இவ்வாறு தமிழ் மொழிக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையை ஆராயும் பொழுது தென்னிந்திய மொழிகளெல்லாம் ஓர் இனம் என்பது தெளிவாகும். அவற்றுள்ளே தமிழ் மொழி காலப் பழமையும் செம்மையும் வாய்ந்த தென்பதும் செவ்விதின் விளங்கும்.
$$$
15. இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை
ஒரு செழுமையான சோலையில் பலவகைப்பட்ட மரங்கள் விளங்குகின்றன. சில மரங்களின் கிளைகளிலிருந்து விழுதுகள் தரையை நோக்கித் தாழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில விழுதுகள் தரையில் ஊன்றித் தனித்தனி மரங்களாகத் தழைத்துள்ளன. இத்தகைய சோலையைப் பார்க்கின்றான் ஓர் இயற்கை நூற்புலவன்; ஒவ்வொரு மரத்தின் போக்கையும் தாக்கையும் உற்று நோக்குகின்றான்; அவற்றின் தன்மையை ஆராய்ந்து எழுதுகின்றான்.
இச் சோலையைப் போன்றதே இலக்கிய உலகம். இலக்கிய உலகத்தில் பலவகைப்பட்ட மொழிகள் உண்டு. ஒவ்வொரு மொழியிலும் உள்ளத்தை அள்ளும் தெள்ளிய பாட்டும் உரையும் உண்டு. சிறந்த தாய்மொழிகளினின்று பிறந்த சேய்மொழிகள் தனி மொழிகளாகத் தழைத்தலும் உண்டு. இவற்றை யெல்லாம் ஆராய்ந்து ஒவ்வொரு மொழியின் தன்மையையும் எழுதிக் காட்டும் நூலே இலக்கணம் எனப்படும். அதனை வியாகரணம் என்பர் வடமொழியாளர்.
இலக்கணம் அமையப்பெறாத மொழிகள் வரம்பில்லாத வயல்களை ஒக்கும். பழமையும் பண்பும் வாய்ந்த பசுந்தமிழை இலக்கண வரம்புடைய மொழியென்று பாராட்டினார் பரஞ்சோதி முனிவர்.
“கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப் பசுந் தமிழ்ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ”
என்று முனிவர் இறுமாந்துரைத்தார்.
‘ஒரு மொழியின் பண்புகளை அதன் இலக்கணம் நன்கு பாதுகாக்கும்’ என்னும் உண்மைக்குத் தமிழிலக்கணமே தக்க சான்று. தொன்றுதொட்டுப் பல இனத்தார் தமிழ் நாட்டிற் போந்து தமிழரோடு கலந்துள்ளார்கள். அவ் வினத்தாருடன் வந்த பல மொழிகளும் தமிழ் மொழியோடு கலந்திருக்கின்றன. ஆதியில் ஆரியர் வந்தனர். அவர் மொழியாகிய ஆரியத்தோடு தமிழ் அளவளாவிற்று. அப்பால் மகமதியர் வந்தனர்; அவருடன் வந்த அரேபியத்தோடு தமிழ் உறவாடிற்று; சென்ற முந்நூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தோடு தமிழ் பழகிக்கொண் டிருக்கின்றது. ஆயினும், ஆதியில் வந்த ஆரியமாவது, இடைக் காலத்தில் வந்த அரேபியமாவது, பிற்காலத்தில் வந்த ஆங்கிலமாவது தமிழின் நீர்மையைக் கெடுத்துவிட்டவில்லை. தமிழின் உருவத்தைக் குலைத்துவிடவில்லை. இதற்குக் காரணம் தமிழ் இலக்கணமே.
பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்கலாகாது என்று தமிழ் இலக்கணம் தடை செய்யவில்லை; ஆனால், அச் சொற்கள் தமிழ்க்கோலம் பூண்டு தமிழிலே கலந்து கொள்ளுதல் வேண்டும் என்று விதித்தது. பிற நாட்டான் ஒருவன் தமிழனாகக் கருதப்பட வேண்டுமானால் அவன் நடை உடை பாவனைகள் எல்லாம் தமிழ் நாட்டாரைப் போல் இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறே பிறமொழிச் சொற்கள் தமிழோடு கலந்துகொள்ள வேண்டுமானால் அவை தமிழ் ஓசையும் உருவமும் உடையனவாய் வரல் வேண்டும் என்று தமிழிலக்கணம் வரையறை செய்தது. தமிழின் நலங்கருதிச் செய்யப்பட்ட இக் கட்டுப்பாட்டைத் தமிழிலக்கிய உலகம் ஏற்றுக்கொண்டது.
அதனாலே விளைந்த நன்மையைப் பார்ப்போம்; ராஜா என்ற வடசொல் ‘அரசன்’ என்ற வடிவத்திலே தமிழில் வழங்கலாயிற்று. லோகம் என்பது உலகம் எனவும், ரூப் என்பது உருவம் எனவும் வழங்கலாயின. இங்ஙனம் பல வடசொற்கள் தமிழோசையும் வடிவமும் பூண்டு தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றன. வடமொழிக் காவியங்களைத் தழுவித் தமிழ் நூல் செய்த கவிகளும் இவ்விதியை மீறக் கருதவில்லை. கவியரசராக விளங்கும் கம்பர் வடமொழிக் காவியத்திற் கண்ட இராம கதையைத் தமிழிலே தந்தார். அவர் காட்டும் நெறியைச் சிறிது கருதுவோம் : கதாநாயகனை ராமன் என்னாது இராமன் என்றே குறிக்கின்றார்; இராம தூதனை ‘ஹநுமன்’ என்னாது அநுமன் என்றே அழைக்கின்றார்; இராவணன் ஆண்ட நாட்டை லங்கா என்னாது இலங்கை என்றே கூறுகின்றார்.
இன்னும் வட சொற்களைத் தமிழின் நீர்மைக் கேற்பக் குழைத்து வழங்குவர் கம்பர். ஹிர்தய என்ற வட சொல்லை இதயம் என்று இனிமையாகக் குழைத்தார்.
” மயிலுடைச் சாய லாளை வஞ்சியா முன்னம் நீண்ட
எயிலுடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தான்”
என்ற கவியில் இதயமும் அழகும் இலங்குகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் டாகினி என்னும் வடசொல்லை இடாகினி என்றாக்கித் தமிழோடு இசைவித்தார். டாகினி என்பது வடமொழியில் ஒரு பேயின் பெயர். இப் பேயின் தன்மையை ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’ என்று இளங்கோவடிகள் இனிதுணர்த்தினார்.
இத்தகைய பண்பு திராவிட மொழிகளுள் தமிழுக்கே சிறப்பாக உரியதெனத் தோன்றுகின்றது. பாரத நாட்டின் வடபாகத்தில் வழங்கும் பாஷைகள் ஆரிய வகுப்பைச் சேர்ந்தவை என்றும், தென்பாகத்தில் வழங்கும் மொழிகள் திராவிட வகுப்பைச் சேர்ந்தவை என்றும் மொழி நூற் புலவர்கள் கருதுகின்றார்கள். திராவிட வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் சிறந்த மொழிகள். இந்நான்கு மொழிகளுள் இன்று தமிழ் ஒன்றே ஆரியத்தின் உதவியின்றித் தனித்தியங்க வல்லதாய் இருக்கின்றது. மற்றைய மூன்று மொழிகளுக்கும் ஆரியத்தின் சார்பு அவசியமாய்விட்டது. இவ்வாறு நேர்ந்ததற்குக் காரணம் இலக்கணமே.
தமிழொடு ஆரியம் கலக்கத் தொடங்கிய பழங்காலத்திலேயே தமிழுக்கு வரம்பு கட்டிவிட்டார்கள் இலக்கண ஆசிரியர்கள். ஆரிய வெள்ளம் இலக்கண நூலோர் வகுத்த வாய் மடைகளின் வழியாகத் தமிழ் வயலில் பாய்ந்தது. மற்றைய திராவிட மொழிகளின் இலக்கணங்கள் ஆரியம் நன்கு விரவிய பின்னர் எழுதப்பட்டன. தெலுங்கு மொழியின் இலக்கணமாகிய ‘ஆந்திர பாஷாபூஷணம்’ எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டது; கன்னட இலக்கணமாகிய ‘சப்தமணி தர்ப்பணம்’ எண்ணூறு ஆண்டுகளுக்குமுன் எழுந்தது. ‘லீலா திலகம்’ என்னும் மலையாள இலக்கணம் வடமொழியிலே எழுதப்-பட்டிருக்கின்றது. ஆனால், தமிழிலக்கணமாகிய தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே எழுந்தது. ஆராய்ச்சியாளர் சிலர் அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பர். தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட இலக்கணம் ஒன்று அகத்திய முனிவரால் இயற்றப்பட்டதென்று கர்ண பரம்பரை கூறுகின்றது. எனவே, தமிழ் இலக்கணம் மற்றைய திராவிட மொழிகளின் இலக்கணங்களைப் போல் இடைக்காலத்திலே எழுதப்படாமல் முற்காலத்தில் எழுதப்பட்டமையால் தமிழின் நீர்மையும் திறமையும் பாதுகாக்கப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது.
இலக்கணம், மொழியைப் பாதுகாக்கும் என்றால் அஃது ஓர் இரும்புச் சட்டை போல் இறுக்கி நெருக்கும் என்று எண்ணலாகாது. உயிருள்ள மொழிகள் வளர்ந்து கொண்டேயிருக்கும். பழைய சொற்கள் இறக்கும்; புதிய சொற்கள் பிறக்கும். பழைய இலக்கிய மரபுகள் வீழும். புதிய மரபுகள் தோன்றும். இவ்வாறு காலவகையினால் நேரும் திருத்தங்களை இலக்கணம் ஆதரிக்கும்.
”பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே”
என்றார் தமிழிலக்கண ஆசிரியராகிய பவணந்தி முனிவர். இதனை இரண்டோர் உதாரணங்களால் உணரலாம். நீ என்பது முன்னிலை ஒருமைப் பெயர். நீர், நீங்கள் என்பன பன்மை. அவன் என்பது படர்க்கை ஒருமை. அவர், அவர்கள் ஆகிய இரண்டும் பன்மை. எத்துணை அருமை வாய்ந்தவனையும் நீ என்றும், அவன் என்றும் குறிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாகிய கடவுளையே நீ என்றும், அவன் என்றும் அருள் பெற்ற பெரியோர் குறித்திருக்கிறார்கள். ‘அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ’ என்பது தேவாரம். ஆனால், நாளடைவில் மரியாதைக் குரியவரை ஒருமையில் நீர் என்றும், அவர் என்றும் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. அசோகவனத்தில் தன்னந் தனியளாயிருந்த சீதையைத் தன்னுயிரினும் மேலாக மதித்த இராவணன்,
“பெண்ணெலாம் நீரே யாக்கிப் பேரெல்லாம் உமதே யாக்கிக்
கண்ணெலாம் நும்கண் ணாக்கிக் காமவேள் என்னும் நாமத்து
அண்ணல்எய் வானு மாக்கி ஐங்கணைக் கரியத் தக்க
புண்ணெலாம் எனக்கே யாக்கி விபரீதம் புணர்த்தி விட்டீர்”
என்று பேசுகின்றான். இக் காலத்தில் மரியாதை இன்னும் ஒருபடி உயர்ந்துவிட்டது. ஒருவனை நீர் என்றும், அவர் என்றும் குறிப்பது போதாதென்று நீங்கள், அவர்கள் என்று பேசும் முறை வந்துவிட்டது. ஒருவனைப் பார்த்து, ‘நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்’ என்று கேட்பதில்லையா? ஆகவே, நீ, நீர், நீங்கள் ஆகிய மூன்றும் முன்னிலை ஒருமையிலும், அவன், அவர், அவர்கள் ஆகிய மூன்றும் படர்க்கை ஒருமையிலும் வழங்கக் காண்கிறோம். தமிழ்நாட்டில் மரியாதை முறை தெற்கே செல்லச் செல்ல சிறந்து தோன்றுகிறது. இவ்விதம் உண்டாகும் மாற்றங்களை இலக்கணம் நாளடைவில் ஏற்றுக்கொள்ளும்.
இப்பொழுது சில தொன்மொழிகளின் ஒப்பிலக் கணம் (Comparative Grarmmar) எழுதப்பட்டு வருகின்றது. தொன்றுதொட்டு ஆரியத்தையும் தமிழையும் ஒப்பிட்டுப் பார்க்கும் முறை இந்நாட்டில் உண்டு. எந் நாட்டவர்க்கும் இறைவனாகிய கடவுளையே ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்றார் ஒரு பெரியார். வடமொழிக்கு வியாகரணம் வகுத்த பாணினியும், தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரும் ஒருவருக் கொருவர் நிகர் என்று கூறினார் ஒரு கவிஞர். இரு மொழிகளிலும் காணப்படும் எழுத்துக்களைப் பொது எழுத்துக்கள் என்றும், தமிழிலே மட்டும் காணப்படும் எழுத்துக்களைச் சிறப்பெழுத்துக்கள் என்றும் தமிழிலக்கணம் கூறுவதாயிற்று. இக் கொள்கை பரவியிருந்த தமிழ்நாட்டில் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு சிறந்த அறிஞர் ஒருவர் தோன்றினார். கால்டுவெல் என்பது அவர் பெயர். இன்று அவர் பெருமை இலக்கண உலகத்தில் குன்றிலிட்ட விளக்குப் போல் நின்று நிலவுகின்றது. அவர் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் ஓர் உயரிய நூல் இயற்றினார்; பாரத நாட்டின் தென்பாகத்தில் வழங்கும் மொழிகள் எல்லாம் ஒரு பெருங்குடும்பத்தைச் சேர்ந்தவை என்று தக்க சான்றுகளால் நிறுவினார்; அவற்றின் சொற்களும் இலக்கணக் கூறுகளும் அடிப்படையில் ஒற்றுமை யுடையன என்று அறிஞர் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் முறையில் எடுத்துக் காட்டினார். இப் பேராசிரியரைத் ‘திராவிட மொழி நூலின் தந்தை’ என்று இலக்கண உலகம் போற்றுகின்றது.
ஏனைய மொழிகளில் இல்லாத இலக்கணம் ஒன்று தமிழிலே உண்டு. அது பொருள் இலக்கணம் எனப்படும். இலக்கியங்களில் எடுத்தாளப்படும் பொருளை அகப்பொருள் என்றும், புறப்பொருள் என்றும் தமிழிலக்கண நூலோர் பாகுபாடு செய்தார்கள். பொதுவாக இன்பம் அகத்திலும், வீரம் புறத்திலும் அடங்கும். காதலர் இருவர் கருத் தொருமித்து நிகழ்த்தும் இல் வாழ்க்கையே இவ்வுலகிலுள்ள இன்பங்களுள் தலை சிறந்ததாதலால் அகப் பொருள் இலக்கணம் காதலையும் கற்பையும் விரித்துச் சொல்லும். ஆண்மையும் வீரமும் பெரும்பாலும் போர்க்களத்திலே வெளிப்படுதலால் போரின் தன்மையைப் புறப்பொருள் இலக்கணம் விரித்துக் கூறும். இவ்விருவகை இலக்கணமும் தொல்காப்பியத் திலேயே காணப்படுகின்றது. இங்ஙனம் இலக்கியங்களிற் பயிலும் சொல்லையும் பொருளையும் தமிழிலக்கணம் வரையறை செய்வதாயிற்று.
இனி, செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகுபாட்டைச் சிறிது பார்ப்போம்: இதற்கு அடிப்படையாக உள்ளது இலக்கணமே. இக் காலத்தில் சிலர் செந்தமிழ் என்றால் கடுமையான தமிழ்; பல்லை யுடைக்கும் சொல்லையுடைய தமிழ் என்று தவறாகக் கருதி இடர்ப்படுகிறார்கள். பிழையற்ற தமிழே செந்தமிழ் இலக்கண வரம்பு கடந்து, கொண்டதே கோலமாக நடமாடும் தமிழ் கொடுந்தமிழ். செம்மையான தமிழ் செந்தமிழ்; கோணலான தமிழ் கொடுந் தமிழ். செந்தமிழே சிந்தைக்கும் செவிக்கும் இன்பம் பயக்கும். இதனாலன்றோ
“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே”
என்று பாடினார் பாரதியார்.
(தொடர்கிறது)
$$$