-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்
அறிமுகம்:
திருப்பூரில் வசிக்கும் கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், பின்னலாடை சார்ந்த உபதொழிலில் ஈடுபடுபவர். ஆரம்பக்காலத்தில் இடதுசாரியாக இருந்தவர்; பல சிற்றிதழ்களில் பங்கேற்றவர். எளிமையான, கவித்துவம் மிக்க கவிதைகள் இவரது சிறப்பு. இவரது கவிதைகள் இனி நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும். இது இவரது ‘காற்றிடைச் சாளரம்’ கவிதைத் தொடரின் முதல் கவிதை….

அதன்பிறகு
எதுவுமே இருக்காதென
அவர்களுக்கும் தெரியும்.
செஞ்சுடராய் எம்பி வரும்
சூர்யோதயத்தை யார் பார்ப்பது?
சிட்டுக்குருவிகள் இசைக்கும்
சங்கீதத்தை யார் கேட்பது?
காலோடு உரசிப்பேசும்
பூனையுடன் எப்படிப் பேசுவது?
காதலியின் உள்ளங்கையில்
கவிதை எழுதிக் காட்டி
யார் மகிழ்விப்பது?
குளிக்கையில்
ஊதிய உதடுகளில்
பட்டுத்தெறிக்கும்
நீர்த்துளிகளில் விரியும்
வானவில்லை யார் ரசிப்பது?
அம்மாவை
இனியொருமுறை
அம்மாவென யார் அழைப்பது?
அது நிகழ்ந்த பிறகு
எதுவுமே முடியாதென
அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும்
அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சமைப்பது போல அணுகுண்டுகளையும்
சாப்பிடுவது போல
யுத்தங்களையும்.
$$$