-மகாகவி பாரதி
செட்டிநாடு பகுதியில் உள்ள கானாடுகாத்தானில் வாழ்ந்த திரு. வை.சு.சண்முகன் செட்டியார், மகாகவி பாரதி மீது மிகுந்த பக்தி கொண்டவர். இவரது அழைப்பை ஏற்றுத்தான் காரைக்குடியில் செயல்பட்ட ஹிந்து மதாபிமான சங்கத்தாரின் நிகழ்ச்சியில் மகாகவி பாரதி பங்கேற்றார். அங்கு 9.11.1919 இல் சொற்பொழிவு நிகழ்த்தினார் மகாகவி பாரதி. தற்போது நமக்குக் கிடைக்கும் பாரதியின் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள், அப்போது அங்கு எடுக்கப்பட்டனவே. மகாகவி பாரதியின் முழு உருவத்தையும் புகைப்படத்தில் பதிவு செய்து பெருமை பெற்ற காரைக்குடி ‘ஹிந்து மதாபிமான சங்கம்’, பாரதியால் வாழ்த்துக் கவிதையும் பெற்று பெரும்பேறு அடைந்தது. தன்னை ஆதரிக்க முன்வந்த திரு.வை.சு.ச.வின் வள்ளல் தன்மையால் மகிழ்ந்த மகாகவி பாரதி அவர்மீது பாடிய பாடல்கள் இவை. இக்கவிதை எப்படிக் கிடைத்தது, ஏன் பலரால் அறியப்படாமல் இருந்தது என்பன போன்ற விவரங்களை பேராசிரியரும் பாரதி அன்பருமான திரு. கிருங்கை சேதுபதி ‘தினமணி’ நாளிதழ்க் கட்டுரையில் தெளிவுபடுத்தி இருக்கிறார். அக்கட்டுரை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது...

பல் லாண்டு வாழ்ந் தொளிர்க! கானாடு
காத்த நகர்ப் பரிதி போன்றாய்
சொல் லாண்ட புலவோர்த முயிர்த்துணையே
தமிழ் காக்குந் துரையே, வெற்றி
வில்லாண்ட இராமனைப் போல், நிதியாளும்
இராமனென விளங்கு வாய்நீ
மல்லாண்டதிண் டோளாய், சண்முக
நாமம் படைத்த வள்ளற் கோவே. 1
.
செட்டி மக்கள் குலத்தினுக்குச் சுடர்விளக்கே
பாரதமா தேவி தாளைக்
கட்டியுளத் திருத்தி வைத்தாய், பராசக்தி
புகழ்பாடிக் களித்து நிற்பாய்,
ஒட்டிய புன்கவலை பயஞ் சோர் வென்னும்
அரக்க ரெல்லாம் ஒருங்கு மாய
வெட்டி யுயர் புகழ் படைத்தாய் விடுதலையே
வடிவ மென மேவி நின்றாய்.2
.
தமிழ் மணக்கும் நின்னாவு; பழவேத
உபநிடதத்தின் சார மென்னும்
அமிழ்து நின தகத்தினிலே மணம் வீசும்;
அதனாலே யமரத் தன்மை
குமிழ்பட நின் மேனியெலா மணமோங்கும்;
உலகமெலாங் குழையு மோசை
உமிழ்படு வேய்ங்குழ லுடைய கண்ணனென
நினைப் புலவோர் ஓதுவாரே.3
.
பாரத தனாதிபதி என நினையே
வாழ்த்திடுவார் பாரி லுள்ளோர்;
ஈர மிலா நெஞ்சுடையோர் நினைக் கண்டா
லருள் வடிவ மிசைந்து நிற்பார்;
நேரறியா மக்க ளெலா நினைக்கண்டால்
நீதி நெறி நேர்ந்து வாழ்வார்
யாரறிவார் நின்பெருமை? யாரதனை
மொழியி னிடையமைக்க வல்லார். 4
.
பல நாடு சுற்றிவந்தோம்; பல கலைகள்
கற்று வந்தோ மிங்கு பற்பல
குல மார்ந்த மக்களுடன் பழகிவந்தோம்;
பல செல்வர் குழாத்தைக் கண்டோம்;
நில மீது நின் போலோர் வள்ளலையாங்
கண்டிலமே, நிலவை யன்றிப்
புலனாரச் சகோர பக்ஷி களிப்பதற்கு
வேறு சுடர்ப் பொருளிங் குண்டோ? 5
.
மன்னர் மிசைச் செல்வர் மிசைத் தமிழ்பாடி
யெய்ப் புற்றுமனங் கசந்து
பொன் னனைய கவிதையினி வானவர்க்கே
யன்றி மக்கட் புறத்தார்க் கீயோம்
என்ன நம துளத்தெண்ணி யிருந்தோ மற்
றுன் னிடத்தே இமையோர்க்குள்ள
வன்ன மெலாங் கண்டுநினைத் தமிழ்பாடிப்
புகழ்வதற்கு மனங் கொண்டோமே. 6
.
மீனாடு கொடி யுயர்ந்த மதவேளை
நிகர்த்த வுருமேவி நின்றாய்
யா(ம்) நாடு பொருளை யெமக் கீந்தெமது
வறுமையினை யின்றே கொல்வாய்
வானாடு மன்னாடுங் களியோங்கத்
திரு மாது வந்து புல்கக்
கானாடு காத்தநக ரவதரித்தாய்,
சண் முகனாங் கருணைக் கோவே. 7
- காண்க: ஹிந்து மதாபிமான சங்கத்தார்
.
$$$
.
பாரதியைப் பேணிய வள்ளல்
-பேரா. கிருங்கை சேதுபதி

வாழுங்காலத்தில் பாரதியாரை யாரும் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. வறுமையைப் போக்கி, வளநலம் பேண முன்வரவில்லை’ என்ற வாதம் உண்மையன்று. அவரை நன்கு உணர்ந்து, ஏற்றுப் போற்றிப் பின்பற்றியவர்கள், அவர் காலத்திலேயே வாழ்ந்திருக்கிறார்கள்; தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வதுகூட, விளம்பரமாகிவிடுமோ என்று அமைதி கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர், கானாடுகாத்தான் வை.சு.சண்முகனார்; பாரதியைவிடவும், 12 வயது இளையவர்.
கடையத்தில் பாரதி இருந்தபோது நேருற சென்று தனது இல்லத்திற்கு வருகை தர அழைப்பு விடுத்தவர் இவர்.
அதன்படி, 28.10.1919 அன்று காரைக்குடி வழியாகக் கானாடுகாத்தானுக்கு வருகை புரிந்தார், பாரதி. வறுமையினால் உழன்ற அவர்தம் சூழ்நிலையை மாற்ற எண்ணிய வை.சு.சண்முகனார் தன் ‘இன்ப மாளிகை’யில் நிரந்தரமாகத் தங்கவைக்க விரும்பினார். அவர் விரும்பும் நூல்கள், பேனா, கடிதங்கள், பொருள்கள் நிரம்பிய கண்ணாடிப் பாத்திரங்கள் எல்லாம் வைத்த அலமாரி, காரியாலயக் கை ப்பெட்டி, அதன் சாவிகள் யாவும் பாரதியாரிடம் கொடுக்கப்பெற்றன.
“அவரது குடும்பம் கடையத்தில் இனி இருக்க வேண்டாம்; இங்கேயே அழைத்து வந்துவிடலாம்; என் மனைவியும் நானும் வசிக்கும் விதத்துக்குச் சிறிதும் குறைவின்றி, இங்கேயே இருந்து கவிதைகள் எழுதலாம்” என்று இவர் கேட்டுக்கொண்டதற்கு பாரதி இணங்கினார். அவரது குடும்பத்தினரை அழைத்து வர, வாகன வசதியுடன் ஆளும் அனுப்பப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் கவிதை யேதும் எழுதாதிருந்த பாரதி, வை.சு.ச. மீது ஏழு பாக்களை எழுதினார். அதில், “சண்முகநாத நாமம் படைத்த வள்ளற்கோவே”, “கானாடுகாத்தான் நகர் அவதரித்த சண்முகனாம் கருணைக் கோவே” என்றும் பாராட்டினார். பாரதியால், தம் வாழ்நாளில் நேருறப் பாடி வாழ்த்தப்பட்டவருள் ஒருவர் உ.வே. சாமிநாதையர்; மற்றொருவர் வை.சு.சண்முகனார்.
“மதவேளை நிகர்த்த உருமேவி நின்றாய்” என்று தன்னை வாழ்த்திப் பாடிய பாரதியின் முன் தழுதழுத்து, “கண்டோர் மகிழும் அழகான தோற்றம் உடையவன் நான் அல்லனே” என்றபோது, “மன்மதனுக்கு உரு இல்லை. கவர்ச்சிகரமான தோற்றங்கட்கே மன்மதன், ரதி என்று பொருள் கொள்ள வேண்டும். உன்னைக் காணும்போது, என் உள்ளம் மலர்கிறது. அதைக் காணவில்லையா?” என்று விளக்கம் சொன்ன பாரதி, “பணம் கேட்டுச் செல்வர்கள் மீதோ, மன்னர் மீதோ இனிக் கவிதைகள் பாடுவதில்லை என்று நெடுநாள்கட்கு முன் கட்டிய என் முடிவை இப் பாடல்களிலேயே சொல்லியிருக்கிறேனே. நல்லோரைக் கண்டு அவர் குணம் குறிகளை உள்ளபடி கவிஞனே உணர முடியும்” என்று கூறிவிட்டு வெடிப்புறச் சிரித்திருக்கிறார்.
இப்பாடலைத் தன்னடக்கம் காரணமாக, யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைத்திருந்தார் வை.சு.ச. அவருடன் உரையாடிய ஆய்வாளர் முடியரசன், இந்தத் தகவலைத் தெரிந்துகொண்டு, அவருக்கே தெரியாமல், வை.சு.ச.வின் துணைவியார் உதவியுடன் எடுத்து, ‘எழில்’ – இதழுக்கு அனுப்பி, வெளியிட்டு உலகறியச் செய்திருக்கிறார். இதற்கு உதவியவர் பேராசிரியர் தமிழண்ணல். இவர்கள் இல்லையேல், “செட்டிட் மக்கள் குலவிளக்கு’ என்னும் கவிதை யே காணாது போயிருக்கும்.
இவரது அழைப்பை ஏற்று பாரதி வந்தமையால்தான், இரு நிழற்படங்களும் இந்து மதாபிமான சங்க வாழ்த்துக் கவிதையும் ஒரு சொற்பொழிவும் தமிழுக்குக் கிட்டின. பாரதி இங்கு தங்கியிருந்த ஒரு நாளில், “எனக்கு அவசரமாக நூறு ரூபாய் வேண்டும். கொடுப்பீரா?” என்று வை.சு.ச. விடம் கேட்டுப் பெற்றிருக்கிறார். “இது எனக்குத்தானே? இதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உண்டல்லவா?” என்றும் கேட்டிருக்கிறார்.
“தாராளமாக! எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று பதில் சொல்லியிருக்கிறார் வை.சு.ச. ரூபாய் நோட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே பாரதி எழுந்து நிற்க, வை.சு.ச.வும் எழுந்து நின்று, “ஏதாவது தேவையானால் வாங்கி வரச் சொல்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். அதற்குள், கண்மூடித் திறப்பதற்குள் பாரதி தன் கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டைக் கிழித்துப் போட்டுவிட்டார். காரணம் கேட்டதற்கு, “என் நோட்டை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். உமக்கென்ன அக்கறை?” என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்திருக்கிறார்.
பணத்தை விடவும் மனிதர்களின் உன்னத குணத்தை மட்டுமே மதிக்கத் தெரிந்த மகாகவி பாரதியின் மனம் கோணாமல் நடந்துகொண்ட வை.சு.ச.வின் இல்லத்திலேயே தங்கிவிட முடிவுசெய்த பாரதியின் உள்ளக் கருத்தை உணராமல், “பாரதியின் மனம் நிலையுடையதன்று. அவர் ஒருமாதம் கானாடுகாத்தானில் நிலைத்திருந்தால், பிறகு குடும்பத்தினரை அங்கு அழைத்துக் கொள்ளலாம்’ என்று செல்லம்மாவின் சகோதரர் அப்பாத்துரை சொல்லிய செய்தியோடு அழைத்துத் வரச் சென்ற அன்பர் திரும்பி வந்துவிட, பாரதி கிளம்பி விட்டார்.
இதற்குப் பின்னர் ஒருமுறை, பாரதி, கானாடுகாத்தானுக்கு வந்திருந்து பாடிய அழகை நாமக்கல் கவிஞர், தனது ‘சுயசரிதை’ நூலில் விவரித்திருக்கிறார். ஆக, இருமுறை பாரதியைத் தனது இல்லத்தில் தங்கவைத்து உபசரித்த வை.சு.ச.வைத் ‘தம்பி’ என்று அழைப்பது பாரதியின் வழக்கம். இந்தத் தம்பியின் அழைப்புக்கு இணங்கி, பாரதி குடும்பத்தார் வந்திருப்பார்களேயானால், இவ்வளவு அவசரமாய் நாம் பாரதியை இழந்திருக்க மாட்டோம். ஆனாலும் வை.சு.ச, பாரதியைப் போற்ற மறந்ததேயில்லை. அவர் நிறைவுக்காலம் வரை மாதந்தோறும் பணம் அனுப்புவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்.
பாரதி மறைந்த பிறகும், அவருடைய நூல்களின் உரிமைக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து, அதனை பாரதி விரும்பிய வண்ணம் பதிப்பிக்கவும் முயன்றார். காரியம் கை கூடவில்லை. ஆயினும், பாரதி பாராட்டிய அனைத்துப் பெரியவர்களுக்கும், பாரதிவழியில் பணி தொடர்ந்தோர்க்கும் வள்ளலாய் இருந்து உதவியிருக்கிறார், வை.சு.ச.
சமய, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளில் உறுதிபட நின்று இவர் ஆற்றிய பெருந்தொண்டுகள் அனைத்தையும் தன்னடக்கத்தோடு வெளித் தெரியாமல் ஒளித்துக்கொண்ட வை.சு.ச., கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த நிறைவுக் கட்டத்தில் வறுமை வயப்பட்டார். வம்பு வழக்குகளால் தன் ‘இன்ப மாளிகை’’ இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட நிலையிலும் மனம் தளராமல், வாடகை வீட்டில் வாழ்ந்து மறைந்தார். அவர் கடைசி வரையில் வைத்துப் பாதுகாத்துத் வைத்திருந்த நாட்குட் றிப்பேடுகளும், சான்றோர்களின் கடிதங்களும் காணாமல் போனது பெருஞ்சோகம்.
பாரதி நினைவு நூற்றாண்டில், பாரதிக்கு உதவிய வள்ளற் பெருமக்களையும், அவர்கள் வாழ்ந்த இடங்களையும் உலகறியச் செய்யும் வகையில் தமிழக அரசு நினைவுச் சின்னங்கள் அமைப்பது அவர்கட்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.
- நன்றி: தினமணி (19.09.2021)
$$$