பாரதியின் தனிப்பாடல்- 23

-மகாகவி பாரதி

காரைக்குடியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து ‘ஹிந்து மதாபிமான சங்கம்’ அமைத்து தொண்டாற்றி வந்தனர். அவர்களது அழைப்பின் பேரில் காரைக்குடி சென்று இரு நாட்கள் தங்கியிருந்து, அங்கு 9.11.1919 இல் சொற்பொழிவு நிகழ்த்தினார் மகாகவி பாரதி. தற்போது நமக்குக் கிடைக்கும் பாரதியின் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள், அப்போது அங்கு எடுக்கப்பட்டனவே. 

மகாகவி பாரதியின் முழு உருவத்தையும் புகைப்படத்தில் பதிவு செய்து பெருமை பெற்ர காரைக்குடி ‘ஹிந்து மதாபிமான சங்கம்’, பாரதியால் வாழ்த்துக் கவிதையும் பெற்று பெரும்பேறு அடைந்தது. அக்கவிதையே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

23. ஹிந்து மதாபிமான சங்கத்தார்

மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
அமரரைப் போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம், அதற்குரிய
உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்
செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொரு
பரம்பொருளை அகத்தில் சேர்த்து, 1

செய்கையெலாம் அதன்செய்கை, நினைவெல்லாம்
அதன்நினைவு, தெய்வ மேநாம்
உய்கையுற நாமாகி நமக்குள்ளே
யொளிர்வ தென உறுதி கொண்டு,
பொய், கயமை, சினம், சோம்பர், கவலை, மயல்,
வீண் விருப்பம், புழுக்கம், அச்சம்,
ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
வாளாலே அறுத்துத் தள்ளி. 2

எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்,
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்; சதுர்வே தங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
மெனப்புவியோர் சொல்லு வாரே. 3

அருமையுறு பொருளிலெலாம் மிக அரிதாய்த்
தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதியதன் சொற்படி யிங் கொழுகாத
மக்களெலாம் கவலை யென்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்
தழிகின்றார் ஓய்வி லாமே. 4

இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந்
தனையுலகில் இசைக்க வல்ல,
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்;
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காரைக்குடியூர் தனிலே சால
உத்தமராந் தனவணிகர் குலத்துதித்த
இளைஞர்பலர், ஊக்கம் மிக்கார். 5

உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார்,
அன்பொன்றே உறுதி யென்பார்,
வண்மையே குலதர்ம மெனக்கொண்டார்
தொண்டொன்றே வழியாக் கண்டார்;
ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்;
அவ்வன்பின் ஊற்றத்தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான
சங்கமொன்று சேர்த்திட்டாரே. 6

பலநூல்கள் பதிப்பித்தும், பல பெரியோர்
பிரசங்கம் பண்ணு வித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசா
லைபலவும் நாட்டி யுந்தம்
குலமுயர நகருயர நாடுயர
உழைக்கின்றார், கோடி மேன்மை
நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி
வாழ்ந்தொளிர்க,நிலத்தின் மீதே! 7

$$$

பிற்சேர்க்கை:

9.11.1919 இல் காரைக்குடியில் நடைபெற்ற ஹிந்து மதாபிமான சங்கத்தின் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது… இப்புகைப்படத்தில் இருப்பவர்கள் அ.மு.க.கருப்பன் செட்டியார், தமிழ்க்கடல் ராய.சொ. , மகாகவி பாரதியார், சொ.முருகப்பன் செட்டியார், ரெங்கநாதன் செட்டியார்.

$$$

One thought on “பாரதியின் தனிப்பாடல்- 23

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s