நகரம்

-மகாகவி பாரதி

வால்ட் விட்மான் என்பவர் சமீபகாலத்தில் வாழ்ந்த அமெரிக்கா (யுனைட்டெட் ஸ்டேட்ஸ்) தேசத்துக் கவி. இவருடைய பாட்டில் ஒரு புதுமை என்னவென்றால், அது வசன நடை போலேதான் இருக்கும். எதுகை, மோனை, தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனையில்லாத கவிதைதான் உலகத்திலே பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனால், தளையும் சந்தமும் இல்லாத கவிதை வழக்கமில்லை. வால்ட் விட்மான், ‘கவிதையை பொருளில் காட்ட வேண்டுமே யல்லாது சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனமில்லை’யென்று கருதி, ஆழ்ந்த ஓசை மாத்திரம் உடையவாய், மற்றப்படி வசனமாகவே எழுதி விட்டார். இவரை ஐரோப்பியர், காளிதாஸன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தான்தே, கெத்தே முதலிய மகாகவிகளுக்கு ஸமான பதவி யுடையவராக மதிக்கிறார்கள்.

குடியாட்சி, ஜனாதிகாரம் என்ற கொள்கைக்கு மந்திர ரிஷிகளில் ஒருவராக இந்த வால்ட் விட்மானை ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிறார்கள்.

எல்லா மனிதர்களும், ஆணும் பெண்ணும் குழந்தைகளும் எல்லாரும் ஸமானம் என்ற ஸத்யத்தை பறையடித்த மஹான்களில் இவர் தலைமையானவர்.

ஸர்வ ஜகத்தும் ஒரே சக்தியை உயிராக உடையது ஆதலால், எல்லாம் ஒன்று. ஆதலால் பயத்தைவிடு; பிறருக்குத் தீங்கு செய்யாதே. மற்றப்படியெல்லாம் உன் சொந்த இஷ்டப்படி நடந்துகொள். எல்லோரும் ஸமானம் யாருக்கும் பயப்படாதே. கடவுள் ஒருவருக்கே பயப்பட வேண்டும். மனிதர் கடவுளைத் தவிர வேறொன்றுக்கும் பயப்படக் கூடாது. இதுதான் அவருடைய மதத்தின் முக்கியமான கொள்கை. ‘எல்லோரும் பரஸ்பரம் அன்பு செய்யுங்கள்’ என்ற கிறுஸ்துவின் போதனையை அவர் கவிதையாக பல வகைகளில் சொல்லியிருக்கிறார். 

இந்த மஹான் ஒரு நகரம் கற்பனை பண்ணுகிறார். அந்த நகரத்தில் ஆணும் பெண்ணும் சபதத்தில் துஞ்சார். அங்கே அடிமையுமில்லை, ஆண்டையுமில்லை. அங்கே, ஸ்தானிகர்களின் முடிவற்ற செருக்கை பொதுஜனம் உடனே சினந்து எதிர்க்கிறது. அங்கே, நகரத்தான் தலை, நகரத்தான் பிரமாணம்; அவனுடைய சம்பளக்காரரே பிரஸிடெண்டு, மேயர், கவர்னர் எல்லாரும். அங்கே குழந்தைகள் தமக்குத் தாமே பதி செய்து கொள்ளவும், தம்மைத் தாமே காத்துக் கொள்ளவும் பயிற்சி பெறுகிறார்கள். அங்கே, பெண்கள் வீதிகளில் ஆண்களைப் போலவே கூட்டங்கூடி ஊர்வலம் வருகிறார்கள். அங்கே, பொதுக் கட்டிடங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடம் பெறுகிறார்கள்.

இவ்வாறு வால்ட் விட்மான் கற்பனை பண்ணின நகரத்தை கண் முன்னே பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்போதுங்கூடப் பல ராஜ்ய தந்திரிகளும் மந்திரிகளும் சாஸ்திரிகளும் முயற்சி செய்து கொண்டு வருகிறார்கள்.

பணக்காரன், ஏழை; உத்தியோகஸ்தன், கூலிக்காரன்; குடிபடை; ஆண், பெண்; மூத்தது, இளையது – எல்லோரும் ஒருவருக் கொருவர் வஞ்சனை, துரோகம், அநியாயம், கொள்ளை, கர்வம், ஹிம்ஸை, அவமதிப்பு, கொலை முதலிய தீமைகள் செய்யாமல், பரஸ்பரம் அன்புடனும் மதிப்புடனும் நடந்து, எல்லாருக்கும் விடுதலையும் ஸமத்வமும் உள்ளதாகிய நகரம் கண்முன்னே தோன்றுவதை விரும்பாத மனிதனும் உண்டோ?

காண்க: வால்ட் விட்மன் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s