-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

14. குறும்புப் பிள்ளை
.
குறும்பும் செல்லமுமாய்
இருக்கிறது ஒரு பிள்ளை.
.
அடித்துக் கதவை சாத்திவிட்டு
ஆங்காங்கே குப்பை கொட்டுவான்.
என்னடா வேலையிது வென்றால்
பட்டம் பறக்க விட்டுக் காட்டுவான்.
.
கொத்துக் கொத்தாய்ப் பூக்களை
பிய்த்துப் பிய்த்துப் போடுவான்.
ஏனடா இப்படியென்றால் மூக்கருகே
முகர்ந்துபார் நல்வாசமி தென்பான்.
.
விளக்கேற்றிக் கரம் குவிக்கையில்
விளக்கணைத்து விளையாடுவான்.
சாமி கண்ணைக் குத்துமென்றால்
உயிரே உனக்கு நாந்தானென்பான்.
.
அசந்திருக்கும் வேளை பார்த்து
ஆடை விலக்கி அழகு பார்ப்பான்.
அச்சச்சோ என்றலறினால்
எனக்கென்ன என்றோடுவான்.
விரும்பிச் சொன்னது கொஞ்சம்.
வெறுத்துவிட்டது மிஞ்சும்.
என்ன செய்ய………?
.
உயிருக்கு உத்திரமாய்
உடனிருக்கும் பிள்ளை
ஆடிப்புழுதி மேனி பூசி அடங்காமல்
ஐப்பசி அடைமழை வரை குளிக்காமல்
தெருத் தெருவாய் திரிந்தலைகிறான்
கட்டிப் போட முடியாத காற்றுப் பிள்ளை.
$$$