சத்திய சோதனை- 3(1-5)

-மகாத்மா காந்தி

மூன்றாம் பாகம்

1. புயலின் குமுறல்கள்


     நான் மனைவியுடனும் குழந்தைகளோடும் கப்பல் பிரயாணம் செய்வது இதுதான் முதல் தடவை. ஹிந்துக்களில் மத்தியதர வகுப்பினரிடையே பால்ய விவாகம் செய்துவிடும் வழக்கம் இருப்பதால், கணவன் படித்திருப்பான், மனைவி கொஞ்சம் கூட எழுத்து வாசனையே இல்லாதிருப்பாள் என்பதை இச் சரித்திரத்தில் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன். இவ்விதம் அவர்கள் இருவர் வாழ்க்கைக்கும் இடையே பெரும் அகழ் ஏற்பட்டு, அவர்கள் வாழ்வைப் பிரித்து நின்றது. கணவன், மனைவிக்கு ஆசானாகவும் இருக்க வேண்டியிருந்தது. ஆகையால், என் மனைவியும் குழந்தைகளும் அணிய வேண்டிய உடைகள் யாவை, அவர்கள் சாப்பிட வேண்டியது என்ன, புதிய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் எந்தவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பனவற்றையெல்லாம் நானே சிந்தித்து முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த நாட்களைப் பற்றிய சில நினைவுகள் இப்பொழுது நகைப்பை ஊட்டுபவைகளாக இருக்கின்றன.

‘கணவன் சொல் தவறாமல் பணிந்து நடந்து வருவதே தனக்கு உயர்ந்த தருமம்’ என்று ஒரு ஹிந்து மனைவி கருதுகிறாள். ஒரு ஹிந்துக் கணவனோ, மனைவிக்கு எஜமானனும் எல்லாமும் தானே என்று எண்ணுகிறான்; தன் மனைவி, தான் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்ய வேண்டியது கடமை என்றும் கருதுகிறான்.

     நாம் நாகரிகம் உள்ளவர்களாகத் தோன்ற வேண்டுமாயின் நடை உடை பாவனைகளெல்லாம் சாத்தியமான வரை ஐரோப்பியத் தரத்திற்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று எந்தச் சமயத்தைப் பற்றி எழுதுகிறேனோ அந்தச் சமயத்தில், நான் நம்பி வந்தேன். ஏனெனில், அப்படிச் செய்தால் தான் நமக்குக் கொஞ்சம் செல்வாக்காவது இருக்கும். அந்தச் செல்வாக்கு இல்லாது போனால், சமூகத்திற்குச் சேவை செய்வது சாத்தியமாகாது என்றும் நான் அப்போது எண்ணினேன்.

     ஆகையால், என் மனைவியும் குழந்தைகளும் எந்தவிதமான ஆடைகள் அணிவது என்பதில் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். அவர்கள் கத்தியவார்ப் பனியாக்கள் என்று கண்டுகொள்ளக் கூடியவாறு அவர்கள் உடை இருப்பதை நான் எப்படி விரும்ப முடியும்? இந்தியர்களில் பார்ஸிகளே, அதிக நாகரிகம் உள்ளவர்களாக அப்பொழுது கருதப்பட்டு வந்தார்கள். ஆனாலும், ‘முழு ஐரோப்பிய உடை சரிப்படாது’ என்று தோன்றவே, பார்ஸி உடையை அவர்கள் அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அதன்படி என் மனைவி பார்ஸிப் புடவை உடுத்திக்கொண்டாள். சிறுவர்கள், பார்ஸிக் கோட்டும் கால்சட்டைகளும் போட்டுக் கொண்டனர். பூட்ஸும் ஸ்டாக்கிங்கும் இல்லாமல் யாரும் இருப்பதற்கில்லை. அவற்றைப் போட்டுப் பழக்கப்படுவதற்கு என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நீண்ட காலம் பிடித்தது. பூட்ஸ்கள் அவர்கள் காலை நசுக்கின. ஸ்டாக்கிங்குகளோ, வியர்வையால் நாற்றம் எடுத்துவிட்டன. கால்விரல்கள் அடிக்கடி புண்ணாயின. இவைகளையெல்லாம் சொல்லி அவற்றைப் போட்டுக்கொள்ள அவர்கள் ஆட்சேபிக்கும் போதெல்லாம் அதற்குச் சமாதானம் கூற நான் பதில்களைத் தயாராக வைத்திருப்பேன். ஆனால், என் பதில்களால் திருப்தியடைந்து விடாமல், என் அதிகாரத்திற்குப் பயந்தே, அவர்கள் விடாமல், அவற்றை அணிந்து வந்தார்கள் என்று நினைக்கிறேன். ‘வேறு வழி இல்லை’ என்பதனாலேயே அவர்கள் உடை மாற்றத்திற்கும் சம்மதித்தார்கள். அந்த உணர்ச்சி காரணமாகவே, ஆனால் இன்னும் அதிகத் தயக்கத்துடனேயே, கத்தியையும் முள்ளையும் கொண்டு சாப்பிடவும் சம்மதித்தார்கள். இந்தவிதமான நாகரிகச் சின்னங்களின் மீது எனக்கு இருந்த மோகம் குறைந்த பிறகு, அவர்கள் கத்தியையும் முள்ளையும் உபயோகித்துச் சாப்பிடும் வழக்கத்தைக் கைவிட்டார்கள். புதிய முறைகளில் நீண்ட காலம் பழகிவிட்டதால், பழைய வழக்கத்திற்குத் திரும்புவதும் அவர்களுக்குச் சங்கடமாகவே இருந்தது. ஆனால் நாகரிகத்தின் இந்தப் பகட்டுகளையெல்லாம் உதறி எறிந்துவிட்ட பிறகு, நாங்கள் சுமையெல்லாம் நீங்கி விடுதலை பெற்ற உணர்ச்சியோடு இருந்ததை நான் இன்று காண முடிகிறது.

அதே கப்பலில் என் உறவினர்கள் சிலரும், எனக்குப் பழக்கமானவர்களும் இருந்தனர். எனது கட்சிக்காரரின் நண்பருக்கு அக் கப்பல் சொந்தமானதாகையால், அதில் நான் விரும்புகிற இடத்திற்கெல்லாம் தாராளமாகப் போக முடிந்தது. அதனால் இந்த உறவினர் முதலியவர்களையும் மூன்றாம் வகுப்பில் வந்த மற்ற பிரயாணிகளையும் நான் அடிக்கடி சந்தித்து வந்தேன்.

     மத்தியில் எந்தத் துறைமுகத்திலும் நிற்காமல், கப்பல், நேரே நேட்டாலுக்குப் போய்க்கொண்டிருந்தது. ஆகையால், எங்கள் பிரயாணம் பதினெட்டு நாட்களில் முடிந்துவிடும். ஆனால், ஆப்பிரிக்காவில் அடிக்கவிருந்த தீவிரமான போராட்டப் புயலைக் குறித்து எங்களுக்கு எச்சரிக்கை செய்வதைப் போல, நேட்டாலுக்கு இன்னும் நான்கு நாள் பிரயாணமே பாக்கி இருந்த சமயத்தில், கடலில் கடுமையான புயல் காற்று வீசியது. அது டிசம்பர் மாதம். பூமத்திய ரேகைக்குத் தெற்கிலுள்ள பகுதிக்கு அதுவே கோடைக் காலம். ஆகையால், அப் பருவத்தில் தென் சமுத்திரத்தில், பெரியதும் சிறியதுமாகப் புயல்காற்றுகள் அடிப்பது சகஜம். ஆனால் எங்களைத் தாக்கிய புயலோ மிகக் கடுமையானது. நீண்ட நேரம் அடித்தது. எனவே, பிரயாணிகள் திகில் அடைந்து விட்டனர். அது பயபக்தி நிறைந்த காட்சியாக இருந்தது. எல்லோருக்கும் பொதுவாக ஏற்பட்ட அபாயத்தில், சகலரும் ஒன்றாகிவிட்டனர். முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் முதலிய எல்லோரும், தங்களுடைய வேற்றுமைகளையெல்லாம் மறந்துவிட்டு ஒன்றை, ஒரே கடவுளை நினைத்தார்கள். சிலர் அநேக வேண்டுதல்களைச் செய்துகொண்டனர். பிரயாணிகளின் பிரார்த்தனைகளில், கப்பல் காப்டனும் கலந்து கொண்டார். புயல் ஆபத்துக்கு இடமானதுதான் என்றாலும், அதையும்விட மோசமான புயல்களைத் தாம் அனுபவித்திருப்பதாக காப்டன் பிரயாணிகளுக்கு உறுதி கூறினார். சரியான வகையில் கட்டப்பட்ட கப்பல், எந்தப் புயலையும் சமாளித்துத் தாங்கிவிடும் என்றும் விளக்கினார். ஆனால், பிரயாணிகளைத் தேற்ற முடியவில்லை. ‘கிரீச்’ என்ற சப்தமும், முறியும் சப்தமும் கப்பலின் பல பாகங்களிலும் ஒவ்வொரு நிமிடமும் கேட்டுக் கொண்டே இருந்தன. கப்பலில் பிளவு கண்டு, எந்த நேரத்திலும் தண்ணீர் உள்ளே புகுந்துவிடக் கூடும் என்பதை அந்தச் சப்தங்கள் நினைவுபடுத்தி வந்தன. கப்பல் அதிகமாக ஆடியது; உருண்டது; எந்தக் கணத்திலும் கவிழ்ந்துவிடக் கூடும் என்று தோன்றியது. மேல் தளத்தில் இருக்க முடியும் என்ற பேச்சிற்கே இடமில்லை. ‘எல்லாம் அவன் சித்தம்போல் நடக்கும்’ என்று சொல்லாதவர் இல்லை. இருபத்து நான்கு மணி நேரம் இவ்விதம் அல்லல்பட்டிருப்போம் என்பது என் ஞாபகம். கடைசியாக வானம் நிர்மலமாயிற்று; சூரியனும் காட்சியளித்தான். ‘புயல் போய் விட்டது’ என்று காப்டன் அறிவித்தார். கப்பலில் இருந்தவர்களின் முகங்களில் ஆனந்தம் பொங்கியது. ஆபத்து மறைந்ததோடு அவர்களின் நாவிலிருந்து கடவுள் நாமமும் மறைந்தது. திரும்பவும் தின்பது, குடிப்பது, ஆடுவது, பாடுவது எனபவற்றில் அவர்கள் இறங்கி விட்டார்கள். மரண பயம் போய்விட்டது. ஒரு கணம் மெய் மறந்து ஆண்டவனைத் துதித்த பக்தி போய்; அவ்விடத்தை மாயை மூடிக்கொண்டுவிட்டது. வழக்கமான நமாஸ்களும் பிரார்த்தனைகளும் பின்னாலும் நடந்து வந்தன என்பது உண்மையே. ஆனாலும், அந்த பயங்கர நேரத்தில் இருந்த பயபக்தி, அவற்றில் இல்லை.

அப்புயல் மற்றப் பிரயாணிகளுடன் என்னை ஒன்றாகப் பிணைத்துவிட்டது. இதுபோன்ற புயல்களின் அனுபவம் எனக்கு இருந்ததால் புயலைப் பற்றிய பயம் எனக்குச் சிறிதும் இல்லை. கடல் பிரயாணம் எனக்குப் பழக்கப்பட்டுப் போனபடியால், எனக்கு மயக்கம் வருவதே இல்லை. ஆகையால், பயமின்றிப் பிரயாணிகளிடையே நான் அங்கும் இங்கும் போக முடிந்தது. அவர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி வந்தேன். புயல் நிலைமையைக் குறித்து  காப்டன் கூறிய தகவலை புயல் அடித்த போது மணிக்கு மணி அவர்களுக்குக் கூறுவேன். இவ்விதம் ஏற்பட்ட நட்பு, எவ்வளவு தூரம் எனக்கு உதவியாக இருந்தது என்பதை பின்னால் கவனிப்போம்.

     டிசம்பர் 18 அல்லது 19 ஆம் தேதி கப்பல் டர்பன் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது. ‘நாதேரி’ என்ற கப்பலும் அன்றே வந்து சேர்ந்தது.

     ஆனால், உண்மையான புயல் இனிமேல்தான் அடிக்க வேண்டியிருந்தது!

$$$

2. புயல்

     டிசம்பர் 18 ஆம் தேதி, இரு கப்பல்களும் டர்பன் துறைமுகம் வந்து சேர்ந்தன என்பதைக் கவனித்தோம். தென்னாப்பிரிக்கத் துறைமுகங்களில் நன்றாக வைத்தியப் பரிசோதனை செய்யப்படுவதற்கு முன், பிரயாணிகள் இறங்க அனுமதிக்கப்படுவதில்லை. தொத்து நோயால் பீடிக்கப்பட்டவர் எவராவது கப்பலில் இருந்தால், அந்தக் கப்பலிலிருந்து யாரையும் இறங்கவிடாமல் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்தியக் கண்காணிப்பில், தூரத்தில் நிறுத்தி வைத்து விடுவார்கள். நாங்கள் கப்பல் ஏறிய சமயத்தில் பம்பாயில் பிளேக் நோய் பரவி இருந்ததால், கொஞ்ச காலத்திற்கு இந்த விதமான ‘சுத்திகரண’த்திற்கு நாங்கள் ஆளாக நேரலாம் என்று பயந்தோம். வைத்தியப் பரிசோதனைக்கு முன்னால், ஒவ்வொரு கப்பலிலும் ஒரு மஞ்சள் நிறக் கொடி பறக்க வேண்டும். யாருக்கும் நோய் இல்லை என்று டாக்டர் அத்தாட்சி கொடுத்த பிறகே அக்கொடி இறக்கப்படும். அந்த மஞ்சள் கொடியை இறக்கிய பின்னரே பிரயாணிகளின் உற்றார் உறவினர்கள் கப்பலுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி எங்கள் கப்பலிலும் மஞ்சள் கொடி பறந்தது. டாக்டர் வந்து, எங்களைப் பரிசோதித்துப் பார்த்தார். ‘ஐந்து நாட்களுக்கு இக்கப்பலிலிருந்து யாரையும் இறங்க அனுமதிக்கக் கூடாது’ என்று டாக்டர் உத்தரவிட்டார். ஏனெனில், பிளேக் கிருமிகள் வளருவதற்கு அதிகபட்சம் இருபத்து மூன்று நாட்கள் ஆகும் என்பது அவர் கருத்து. ஆகையால், எங்கள் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட்டு இருபத்து மூன்றாம் நாள் முடியும் வரையில் அதிலிருந்து பிரயாணிகளை இறக்காமல் தனித்து வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்குக் காரணம் சுகாதாரத்தைப் பற்றிய கவலை மட்டும் அல்ல, அதைவிட முக்கியமான வேறு காரணங்களும் உண்டு.

     டர்பனில் இருந்த வெள்ளைக்காரர்கள், எங்களைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த உத்தரவுக்கு இக்கிளர்ச்சி ஒரு காரணம். டர்பனில் அன்றாடம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தாதா அப்துல்லா கம்பெனியார் தவறாமல் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரர்கள் தினந்தோறும் பெரிய பொதுக்கூட்டங்களை நடத்தி வந்தனர். தாதா அப்துல்லா கம்பெனியை, எல்லா விதங்களிலும் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் அக் கம்பெனிக்கு ஆசை வார்த்தைகளையும் கூறி வந்தனர். இரு கப்பல்களும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டால் கம்பெனிக்குத் தக்க நஷ்டஈடு கொடுத்து விடுவதாகவும் சொன்னார்கள். ஆனால், இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயந்து விடக் கூடியவர்கள் அல்ல தாதா அப்துல்லா கம்பெனியார். சேத்து அப்துல் கரீம் ஹாஜி ஆதம், அச்சமயம் அந்தக் கம்பெனியின் நிர்வாகப் பங்குதாரராக இருந்தார். ‘எப்படியும் கப்பல்களைக் கரைக்குக் கொண்டுவந்து, பிரயாணிகளை இறக்கியே தீருவது’ என்று அவர் உறுதி கொண்டிருந்தார். அவர் தினந்தோறும் விவரமாகக் கடிதங்களை எழுதி எங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். என்னைப் பார்ப்பதற்காக டர்பனுக்கு வந்த காலஞ்சென்ற ஸ்ரீ மன்சுக்லால் நாஸர், அச்சமயம் அதிர்ஷ்டவசமாக அங்கே இருந்தார். அவர் திறமை வாய்ந்தவர்; அஞ்சாதவர். இந்திய சமூகத்திற்கு வழிகாட்டி வந்தார். அக் கம்பெனியின் வக்கீலான ஸ்ரீ லாப்டனும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர். வெள்ளைக்காரர்களின் போக்கை அவர் கண்டித்தார். இந்திய சமூகத்தினிடம் கட்டணம் வாங்கும் வக்கீல் என்ற முறையில் மட்டும் அன்றி அச் சமூகத்தின் உண்மையான நண்பர் என்ற முறையிலும் அவர்களுக்கு அவர் ஆலோசனை கூறி வந்தார்.

     இவ்வாறு சம பலம் இல்லாத இரு கட்சியினரின் போர்க்களமாக டர்பன் ஆயிற்று. ஒருபக்கத்தில் ஒரு சிலரேயான ஏழை இந்தியரும் அவர்களுடைய ஆங்கில நண்பர்கள் சிலரும்; மற்றொரு பக்கத்திலோ, ஆயுதங்களிலும் எண்ணிக்கையிலும், படிப்பிலும், செல்வத்திலும் பலம் படைத்திருந்த வெள்ளையர்கள்! நேட்டால் அரசாங்கமும் அவர்களுக்குப் பகிரங்கமாக உதவி செய்து வந்ததால், அரசாங்கத்தின் பக்க பலமும் அவர்களுக்கு இருந்தது. மந்திரி சபையில் அதிகச் செல்வாக்கு வாய்ந்த அங்கத்தினராயிருந்த ஸ்ரீ ஹாரி எஸ்கோம்பு, வெள்ளையரின் பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாகக் கலந்து கொண்டார்.

கப்பல் பிரயாணிகளை அல்லது கப்பல் ஏஜெண்டுகளான கம்பெனியை எப்படியாவது மிரட்டி, பிரயாணிகள் இந்தியாவுக்குத் திரும்பிப் போய்விடுமாறு பலவந்தப்படுத்திவிட வேண்டும் என்பதே, கப்பல் கரைக்கு வராமல் நிறுத்தி வைத்ததன் உண்மையான நோக்கம். இப்பொழுது எங்களை நோக்கியும் மிரட்டல்களை ஆரம்பித்து விட்டார்கள். ‘திரும்பிப் போய்விடாவிட்டால் நீங்கள் நிச்சயம் கடலில் தள்ளப்படுவீர்கள்! திரும்பிவிட ஒப்புக் கொள்ளுவீர்களாயின் உங்கள் கப்பல் கட்டணத்தொகையும் உங்களுக்குக் கிடைத்துவிடும்’ என்று மிரட்டினர். இதற்கெல்லாம் நாங்கள் மசியவில்லை. என்னுடைய சகப் பிரயாணிகளிடம் சதா போய், அவர்களை நான் உற்சாகப்படுத்தி வந்தேன். ‘நாதேரி’ கப்பலில் இருந்த பிரயாணிகளுக்கும் ஆறுதலான செய்திகளை அனுப்பிக்கொண்டு வந்தேன். அவர்கள் எல்லோருமே அமைதியாகவும் தைரியமாகவும் இருந்து வந்தனர்.

     பிரயாணிகளின் பொழுதுபோக்குக்காக எல்லா வகையான விளையாட்டுக்களுக்கும் ஏற்பாடு செய்தோம். கிறிஸ்துமஸ் தினத்தன்று, காப்டன், மேல் வகுப்புப் பிரயாணிகளுக்கு விருந்தளித்தார். விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் நானும் என் குடும்பத்தினரும். விருந்து முடிந்த பிறகு பிரசங்கங்களும் நடந்தன. அப்பொழுது நான் மேற்கத்திய நாகரிகத்தைப் பற்றிப் பேசினேன். பெரிய விஷயங்களைக் குறித்துப் பேச அது சமயம் அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால், என் பேச்சு வேறுவிதமாக இருப்பதற்கில்லை. பிறகு நடந்த களியாட்டங்களில் நானும் பங்கெடுத்துக்கொண்டேன். ஆனால், என் மனமெல்லாம் டர்பனில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது. உண்மையில் அப் போர் என்னை எதிர்த்து நடந்ததேயாகும். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் இரண்டு:

1. நான் இந்தியாவில் இருந்தபோது நேட்டால் வெள்ளைக்காரர்களை அக்கிரமமாகக் கண்டித்தேன் என்பது.

2. நேட்டாலை இந்திய மயம் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக, அங்கே குடியேறுவதற்கு இரு கப்பல்கள் நிறையப் பிரயாணிகளைக் கொண்டுவந்திருக்கிறேன் என்பது.

     என் பொறுப்பை நான் அறிவேன். என்னால் தாதா அப்துல்லா கம்பெனியார், பெரிய ஆபத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். பிரயாணிகளின் உயிர்களுக்கு ஆபத்து இருக்கிறது. என் குடும்பத்தினரையும் அழைத்து வந்ததால் அவர்களையும் ஆபத்தில் வைத்துவிட்டேன் என்பவற்றை எல்லாம் அறிவேன்.

     ஆனால், நான் முற்றும் குற்றம் அற்றவன். நேட்டாலுக்குப் போகுமாறு நான் எவரையும் தூண்டவில்லை. பிரயாணிகள் கப்பலில் ஏறியபோது அவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. என் உறவினர் இருவரைத் தவிர கப்பலில் இருந்த பிரயாணிகளில் ஒருவருடைய பெயர், விலாசம் கூட எனக்குத் தெரியாது. நேட்டாலில் நான் இருந்தபோது வெள்ளைக்காரர்களைக் குறித்து நான் கூறாத வார்த்தை ஒன்றையேனும், இந்தியாவில் இருந்தபோது நான் சொன்னதே இல்லை. மேலும் நான் சொன்னது இன்னது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் இருக்கின்றன.

     நேட்டால் வெள்ளைக்காரர்கள் எந்த நாகரிகத்தின் கனிகளோ, எந்த நாகரிகத்தின் பிரதிநிதிகளாக இருந்து அதை ஆதரிக்கிறார்களோ அந்த நாகரிகத்திற்காக நான் வருந்தினேன். அந்த நாகரிகம் எப்பொழுதும் என் மனத்தில் இருந்து வந்தது. ஆகவே, அச்சிறு கூட்டத்தில் நான் பேசியபோது, அந்த நாகரிகத்தைப் பற்றிய என் கருத்தை எடுத்துக் கூறினேன். காப்டனும் மற்ற நண்பர்களும் பொறுமையுடன் கேட்டனர். எந்த உணர்ச்சியுடன் நான் பேசினேனோ அதே உணர்ச்சியுடன் என் பிரசங்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையின் போக்கை அப்பேச்சு எந்த வகையிலாவது மாற்றியதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னர் காப்டனுடனும் மற்ற அதிகாரிகளோடும் மோனட்டு நாகரிகத்தைக் குறித்து, நீண்டநேரம் நான் பேசிக் கொண்டிருந்தேன். கிழக்கத்திய நாகரிகத்தைப்போல் அல்லாமல் மேற்கத்திய நாகரிகம் முக்கியமாக பலாத்காரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று என் பிரசங்கத்தில் விவரித்தேன். என் கொள்கையை நானே நிறைவேற்ற முடியுமா என்று சிலர் கேள்வி கேட்டனர். அவர்களில் ஒருவர் காப்டன் என்பது எனக்கு ஞாபகம். அவர் என்னை நோக்கி “வெள்ளைக்காரர்கள் தங்கள் மிரட்டலை நிறைவேற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது உங்களுடைய அகிம்சைக் கொள்கையை எப்படிக் கடைப்பிடிப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “அவர்களை மன்னித்து, அவர்கள் மீது வழக்குத் தொடராமல் இருந்துவிடும் தீரத்தையும் நற்புத்தியையும் கடவுள் எனக்கு அளிப்பார் என்றே நம்புகிறேன். அவர்கள் மீது எனக்குக் கோபம் இல்லை. அவர்களுடைய அறியாமைக்கும் குறுகிய புத்திக்கும் வருத்தமே கொள்ளுகிறேன். தாங்கள் இன்று செய்துகொண்டிருப்பது சரியானது, நியாயமானது என்று அவர்கள் உண்மையாகவே நம்புகிறார்கள் என்பதை அறிவேன். ஆகையால், அவர்கள் மீது நான் கோபம் கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இல்லை”.

     கேள்வி கேட்டவர் சிரித்தார். ஒருவேளை நான் சொன்னதில் நம்பிக்கை ஏற்படாமல் அவர் சிரித்திருக்கலாம்.

     இப்படியாக நாட்கள் ஆயாசத்தை உண்டு பண்ணிய வண்ணம் நீண்டுகொண்டே இருந்தன. இப்படிக் கப்பல் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது எப்பொழுது ரத்தாகும் என்பது நிச்சயம் இல்லாமல் இருந்தது. இப்படிக் கப்பலை நிறுத்திவைக்க உத்தரவிட்ட அதிகாரியோ, விஷயம் தம் கையை விட்டுக் கடந்துவிட்டது என்றும், அரசாங்கத்தின் உத்தரவு வந்ததுமே கப்பலில் இருந்து இறங்க எங்களை அனுமதித்து விடுவதாகவும் கூறினார்.

கடைசியாக எனக்கும் பிரயாணிகளுக்கும் இறுதி எச்சரிக்கைகள் வந்து சேர்ந்தன. உயிரோடு நாங்கள் தப்பிப் போய்விட வேண்டுமானால், பணிந்துவிடுமாறு எங்களுக்குக் கூறப்பட்டது. எங்கள் பதிலில், பிரயாணிகளும் நானும் நேட்டால் துறைமுகத்தில் இறங்குவதற்கு எங்களுக்கு உள்ள உரிமையை வற்புறுத்தினோம். என்ன கஷ்டம் நேருவதாயினும், நேட்டாலில் பிரவேசித்தே தீருவது என்று நாங்கள் கொண்டிருந்த உறுதியையும் தெரிவித்தோம்.

     இருபத்து மூன்று நாட்கள் கழித்து, எங்கள் கப்பல்கள் துறைமுகத்திற்கு வர அனுமதித்தார்கள். பிரயாணிகள் இறங்குவதை அனுமதிக்கும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

$$$

3. சோதனை

     கப்பல்களைக் கரையோரமாகக் கொண்டு போய் நிறுத்தினர்; பிரயாணிகளும் இறங்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஸ்ரீ எஸ்கோம்பு, காப்டனுக்கு ஒரு சமாசாரம் சொல்லியனுப்பியிருந்தார்: வெள்ளைக்காரர்கள் என்மீது மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள் என்றும், அதனால் என் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்றும், நானும் என் குடும்பத்தினரும் இருட்டிய பிறகு கப்பலிலிருந்து இறங்கும்படி சொல்லுமாறும், அப்பொழுது துறைமுக சூப்பரிண்டெண்டென்டு ஸ்ரீ டாட்டம், எங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்ப்பார் என்றும் சொல்லி எச்சரித்தார். அப்படியே செய்வதாக நானும் ஒப்புக்கொண்டேன். அரை மணி நேரம்கூட ஆகியிராது. ஸ்ரீ லாப்டன், காப்டனிடம் வந்தார். அவர் சொன்னதாவது: “ஸ்ரீ காந்திக்கு ஆட்சேபம் இல்லையென்றால் அவரை என்னுடன் அழைத்துப்போக விரும்புகிறேன். ஸ்ரீ எஸ்கோம்பு உங்களுக்குச் சொல்லியனுப்பியிருப்பதை நிறைவேற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இல்லை. கப்பல் ஏஜெண்டான கம்பெனியின் சட்ட ஆலோசகன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன்”.

பிறகு அவர் என்னிடம் வந்து பின்வருமாறு கூறினார்: “நீங்கள் பயப்படவில்லையானால், நான் ஒரு யோசனை கூறுகிறேன். ஸ்ரீமதி காந்தியும் குழந்தைகளும் ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டிற்கு, வண்டியில் முன்னால் போகட்டும். அவர்களுக்குப் பின்னால் நீங்களும் நானும் நடந்தே போவோம். இரவில் திருடனைப்போல் நகருக்குள் நீங்கள் பிரவேசிப்பது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. உங்களைத் துன்புறுத்தி விடுவார்கள் என்று அஞ்சுவதற்கு இடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இப்பொழுது எல்லாம் அமைதியாக இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கலைந்து போய்விட்டனர். ஆனால், எப்படியும் நீங்கள் ஒளிந்துகொண்டு நகருக்குள் வரக்கூடாது என்று மாத்திரம் நான் உறுதியாக எண்ணுகிறேன்.” இதற்கு நான் உடனே ஒப்புக்கொண்டேன். என் மனைவியும் குழந்தைகளும் வண்டியில் பத்திரமாக ஸ்ரீ ருஸ்தம்ஜியின் இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டனர். காப்டனின் அனுமதியின் பேரில் ஸ்ரீ லாப்டனுடன் நான் கப்பலிலிருந்து இறங்கினேன். துறைமுகத்திலிருந்து ஸ்ரீ ருஸ்தம்ஜி வீடு இரண்டு மைல் தூரம்.

     நாங்கள் கீழே இறங்கியதும், சில சிறுவர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டனர். “காந்தி, காந்தி” என்று சப்தம் போட்டனர். இதைக் கேட்டதும் ஐந்தாறு பேர் அங்கே ஓடி வந்தார்கள். அவர்களும் சேர்ந்து கூச்சல் போட்டனர். கூட்டம் பலத்துவிடக் கூடும் என்று ஸ்ரீ லாப்டன் பயந்தார். பக்கத்தில் நின்ற ஒரு ரிக்ஷாவைக் கூப்பிட்டார். ரிக்ஷாவில் ஏறுவது என்பதே எனக்கு எப்பொழுதும் பிடிப்பதில்லை. அப்படி ஏறியிருந்தால் அதுவே எனக்கு முதல் அனுபவமாக இருந்திருக்கும். ஆனால், நான் ரிக்ஷாவில் ஏறச் சிறுவர்கள் விடவில்லை. ரிக்ஷாக்காரனைக் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். அவன் ஓட்டம் எடுத்துவிட்டான். நாங்கள் போக ஆரம்பித்தோம். கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. மேற்கொண்டும் போக முடியாத அளவுக்குக் கூட்டம் பெருகிவிட்டது. முதலில் ஸ்ரீ லாப்டனைப் பிடித்து அப்புறப்படுத்தி எங்களைத் தனித் தனியாகப் பிரித்துவிட்டனர். பிறகு என்னைக் கற்களாலும் அழுகிய முட்டைகளாலும் அடித்தார்கள். ஒருவர் என் தலைப்பாகையைப் பிடுங்கிக் கொண்டார். மற்றவர்கள் என்னை அடிக்கவும் உதைக்கவும் ஆரம்பித்தனர். உணர்வு இழந்து சோர்ந்து விட்டேன். கீழே விழுந்து விடாமல் இருக்க ஒரு வீட்டின் முன்புறக் கிராதியைப் பிடித்துக் கொண்டேன். சற்று மூச்சுவிடலாம் என்று அங்கே நின்றேன். ஆனால், முடியவில்லை. அங்கே வந்ததும் என்னை முஷ்டியால் குத்தினர்; அடித்தனர். எனக்குத் தெரிந்தவரான போலீஸ் சூப்பரிண்டெண்டென்டின் மனைவியார் அப்பக்கம் வந்தார். அந்த வீரப் பெண்மணி என்னிடம் வந்தார். அப்பொழுது வெயில் இல்லை என்றாலும், தம் கைக்குடையை விரித்துக் கொண்டு எனக்கும் கூட்டத்திற்கும் நடுவில் நின்றுகொண்டார். ஜனக்கூட்டத்தின் கோப வெறியை இது தடுத்தது. போலீஸ் சூப்பிரிண்டெண்டென்டான ஸ்ரீ அலெக்ஸாண்டரின் மனைவிக்குத் துன்பம் இழைக்காமல் அந்த வெறியர்கள் என்னை அடிப்பது சிரமம் ஆகிவிட்டது.

இதற்கு மத்தியில் இச்சம்பவத்தைப் பார்த்த ஓர் இந்திய இளைஞர், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். என்னைச் சுற்றி நின்று கொண்டு, நான் போக வேண்டிய இடத்தில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு வருமாறு கூறி போலீஸ் சூப்பரிண்டெண்டென்டான ஸ்ரீ அலெக்ஸாண்டர், போலீஸ்காரர்களை அனுப்பினார். நல்ல சமயத்தில் அவர்களும் வந்து சேர்ந்தனர். போலீஸ் ஸ்டேஷன், நாங்கள் போகும் வழியில் இருந்தது. நாங்கள் அங்கே போனதும், ஸ்டேஷனிலேயே பத்திரமாகத் தங்கிவிடுமாறு சூப்பரிண்டெண்டென்டு கூறினார். அவர் யோசனைக்கு நன்றி கூறினேன். ஆனால், அங்கே தங்க மறுத்துவிட்டேன். “தங்கள் பிழையை உணரும்போது அவர்கள் சாந்தம் அடைந்துவிடுவது நிச்சயம். அவர்களுக்கு நியாய புத்தியும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றேன். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன், மேற்கொண்டு எவ்விதத் துன்பமும் இல்லாமல் ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டை அடைந்தேன். உடம்பெல்லாம் இசிவு, ஊமைக்காயம் ஓர் இடத்தில் மாத்திரம் தோல் பெயர்ந்து காயம் ஏற்பட்டிருந்தது. அங்கே இருந்த கப்பலின் டாக்டர் தம்மால் சாத்தியமான எல்லா உதவிகளையும் செய்தார்.

     வீட்டிற்குள் அமைதியாக இருந்தது; ஆனால், வெளியிலோ வெள்ளையர், வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். இரவும் வந்து, ‘காந்தியை வெளியே அனுப்பு!’ என்று அந்த ஆவேசக்கூட்டம் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. நிலைமையை உடனே அறிந்துகொண்ட போலீஸ் சூப்ரிண்டெண்டென்டு, கூட்டம் கட்டுக்கடங்காது போய்விடாதபடி ஏற்கனவே வந்து சமாளித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தை அவர் விரட்டவில்லை. அவர்களிடம் தமாஷ் செய்தே சமாளித்து வந்தார். என்றாலும், நிலைமை அவரும் கவலைப்பட வேண்டியதாகவே இருந்தது. பின்வருமாறு எனக்குச் செய்தி அனுப்பினார்: “உங்கள் நண்பரின் வீட்டையும் சொத்துக்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்கள் பாதுகாக்க விரும்பினால், என் யோசனைப்படி மாறுவேடத்துடன் நீங்கள் வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்துவிட வேண்டும்.”

     இவ்விதம் ஒரே நாளிலேயே, ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரு நிலைமைகளை நான் சமாளிக்க வேண்டியதாயிற்று. உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று கற்பனையில் மாத்திரமே பயந்த ஸ்ரீ லாப்டன், என்னைப் பகிரங்கமாக வெளியில் வருமாறு யோசனை கூறினார். அந்த யோசனையை ஏற்று நடந்தேன். ஆபத்து முற்றும் உண்மையாகவே இருந்த சமயத்தில், மற்றொரு நண்பர் அதற்கு நேர்மாறான யோசனையைக் கூறினார். அதையும் ஏற்று நடந்தேன். என் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்பதனால் அப்படிச் செய்தேனா, அல்லது என் நண்பரின் உயிருக்கும் சொத்துக்கும் என் மனைவி மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிட வேண்டாம் என்பதற்காக அப்படிச் செய்தேனா என்பதை யார் கூற முடியும்? மேலே கூறியது போல், முதலில், கூட்டத்தை நான் தைரியமாக எதிர்த்து நின்றது, பின்னால் மாறுவேடத்துடன் நான் தப்பியது ஆகிய இரண்டிலும் நான் செய்தது சரிதான் என்று யாரால் நிச்சயமாகச் சொல்ல முடியும்?

     நடந்து போய்விட்ட சம்பவங்களைக் குறித்து, அவை சரியா, தப்பா என்ற ஆராய்ச்சியில் இப்பொழுது இறங்குவது வீண் வேலை. அவைகளைப் புரிந்துகொள்ளுவதும், சாத்தியமானால் அவைகளிலிருந்து அனுபவம் பெறுவதும் பயன் உள்ளதே. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட ஒருவர், இவ்வாறுதான் நடந்து கொள்ளுவார் என்று நிச்சயமாகச் சொல்லுவது கஷ்டம். அதோடு, ஒருவருடைய வெளிப்படையான காரியங்களிலிருந்து, அவருடைய குணத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றிக் கண்டு அறிந்துவிட முடியாது என்பதையும் நாம் காணலாம். ஏனெனில், அவருடைய குணத்தைக் கண்டு அறிந்துவிட, அவருடைய வெளிப்படையான காரியங்கள் மாத்திரம் போதுமான ஆதாரங்கள் ஆகிவிடா.

     அது எப்படியாவது இருக்கட்டும். தப்பிப் போய் விடுவதற்குச் செய்த ஏற்பாடுகளில் என் காயங்களை மறந்து விட்டேன். சூப்பரிண்டெண்டென்டின் யோசனைப்படி, இந்திய கான்ஸ்டபிளின் உடையைப் போட்டுக்கொண்டேன். ஒரு சட்டி மீது மதராஸி அங்கவஸ்திரத்தைச் சுற்றிக் கவசமாகத் தலையில் வைத்துக்கொண்டேன். என்னுடன் இரண்டு துப்பறியும் போலீஸார் வந்தனர். அவர்களில் ஒருவர், இந்திய வர்த்தகர் வேஷம் போட்டுக்கொண்டார். இந்தியரைப்போல் தெரிய வேண்டும் என்பதற்காக அவர், தம் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டார். மற்றொருவர் என்ன வேடம் போட்டுக் கொண்டார் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு குறுக்குச் சந்தின் வழியாகப் பக்கத்துக் கடைக்குள் புகுந்தோம். அங்கே அடுக்கிக் கிடந்த சாக்குக் கட்டுகளின் ஊடேசென்று, அக் கடையின் வாசலை அடைந்தோம். அங்கிருந்து கூட்டத்திற்குள் புகுந்து, தெருக்கோடிக்குப் போனோம். அங்கே ஒரு வண்டி எங்களுக்குக்கென்று தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறி, போலீஸ் ஸ்டேஷனை அடைந்தோம். எனக்கு அடைக்கலம் தருவதாக ஸ்ரீ அலெக்ஸாண்டர், கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னதும், அதே போலீஸ் ஸ்டேஷன்தான். அவருக்கும் துப்பறியும் அதிகாரிகளுக்கும் நன்றி கூறினேன்.

     இவ்வாறு நான் தப்பி வந்துகொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீ அலெக்ஸாண்டர் ‘புளிப்பு ஆப்பிள் மரத்தில், கிழட்டுக் காந்தியைத் தூக்கில் போடு!’ என்று பாட்டுப்பாடி, அவர்களுக்குச் சுவாரஸ்யம் அளித்துக் கொண்டிருந்தார். நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து விட்டேன் என்பது தெரிந்ததும், அவர், பின்வரும் செய்தியைக் கூட்டத்தினருக்கும் வெளியிட்டார். “சரி நீங்கள் தேடும் ஆசாமி, பக்கத்துக் கடைவழியாகத் தப்பிப் போய்விட்டார். ஆகையால், இப்பொழுது நீங்கள் வீட்டுக்குப் போகலாம்”. இதைக் கேட்டுச் சிலர் கோபம் அடைந்தனர். மற்றவர்களோ சிரித்தனர். இக்கதையைச் சிலர் நம்பவே மறுத்துவிட்டனர்.

     சூப்பரிண்டெண்டென்டு கூறியதாவது: “நான் சொல்லுவதை நீங்கள் நம்பவில்லையென்றால், உங்கள் பிரிதிநிதியாக ஒருவரை அல்லது இருவரை நியமியுங்கள். அவர்களை வீட்டுக்குள் அழைத்துப் போக நான் தயார். அவர்கள் காந்தியை அங்கே கண்டுபிடித்து விட்டால் அவரை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன். அவர்கள் கண்டுபிடிக்கவில்லை யென்றால் நீங்கள் கலைந்து போய்விட வேண்டும். ஸ்ரீ ருஸ்தம்ஜியின் வீட்டை நாசப்படுத்த வேண்டும் என்பதோ, ஸ்ரீ காந்திஜியின் மனைவியையும் குழந்தைகளையும் துன்புறுத்த வேண்டும் என்பதோ உங்கள் நோக்கம் அல்ல என்று நம்புகிறேன்.”

வீட்டைச் சோதிக்கக் கூட்டத்தினர் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பினார்கள். ஏமாற்றச் செய்தியுடன் அவர்கள் சீக்கிரமே திரும்பிவிட்டனர். கடைசியாகக் கூட்டமும் கலைந்தது. அவர்களில் பெரும்பாலானவர் சூப்பரிண்டெண்டென்டு சாமர்த்தியமாக நிலைமையைச் சமாளித்திருப்பதைப் பாராட்டினர். மற்றும் சிலரோ, ஆத்திரத்தினால் குமுறிக்கொண்டே போனார்கள்.

     காலஞ்சென்ற ஸ்ரீ சேம்பர்லேன், அப்பொழுது குடியேற்ற நாடுகளின் மந்திரியாக இருந்தார். என்னைத் தாக்கியவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடருமாறு நேட்டால் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு அவர் தந்தி கொடுத்தார். ஸ்ரீ எஸ்கோம்பு என்னைக் கூப்பிட்டனுப்பினார். எனக்கு ஏற்பட்ட காயங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அவர் கூறியதாவது: “உங்கள் உடம்புக்கு மிகச் சொற்ப தீங்கு இழைக்கப்படினும் அதற்காக நான் வருந்தாமல் இருக்க முடியாது. இதை நீங்கள் நம்புங்கள். என்ன வந்தாலும் சரி என்று ஸ்ரீ லாப்டனுடைய யோசனையை ஏற்றுக் கொள்ளுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் யோசனையை நீங்கள் கொஞ்சம் கவனித்திருப்பீர்களாயின், இந்தத் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்ந்தே இரா என்பது நிச்சயம். அவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடர நான் தயாராக இருக்கிறேன். நான் அவ்வாறு செய்ய வேண்டும் என்றே ஸ்ரீ சேம்பர்லேனும் விரும்புகிறார்.”

     அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன்: “யார் மீதும் குற்றஞ்சாட்டி, வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. அவர்களில் இரண்டொருவரை நான் அடையாளம் கண்டுபிடிப்பதும் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தண்டனை அடையும்படி செய்வதால் என்ன பயன்? மேலும் அடித்தவர்களே குற்றஞ் செய்தவர்கள் என்று நான் கருதவில்லை. நேட்டால் வெள்ளையரைக் குறித்து, இந்தியாவில் இல்லாதது பொல்லாததை எல்லாம் நான் கூறி, அவர்களை அவமானப்படுத்தி விட்டதாக அவர்கள் எண்ணும்படி செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு கூறப்பட்டதை அவர்கள் நம்பினார்கள் என்றால், அவர்கள் ஆத்திரம் அடைந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தலைவர்களைப் பற்றியும் நான் இப்படிக் கூறுவதை நீங்கள் அனுமதிப்பதாக இருந்தால், உங்களையும்தான் இதற்கெல்லாம் குற்றஞ் சொல்ல வேண்டும். மக்களைச் சரியான வழியில் நீங்கள் நடத்திச் சென்றிருக்கலாம். ஆனால், ராய்ட்டரின் செய்தியை நீங்களும் நம்பிவிட்டீர்கள். இல்லாததையெல்லாம் நான் கூறியிருப்பேன் என்று நீங்களும் எண்ணிக் கொண்டீர்கள். யார்மீதும் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. உண்மை தெரிந்ததும், தாங்கள் நடந்து கொண்டு விட்டதற்கு அவர்களே வருந்துவார்கள் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்.”

“நீங்கள் கூறியதைத் தயவு செய்து எழுத்து மூலம் கொடுக்கிறீர்களா?” என்று ஸ்ரீ எஸ்கோம்பு கேட்டார். அவர் மேலும் கூறியதாவது: “ஏனெனில், அப்படியே நான் ஸ்ரீ சேம்பர்லேனுக்குத் தந்தி மூலம் அறிவித்துவிட வேண்டியிருக்கிறது. அவசரத்தில் நீங்கள் எதையும் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. திட்டமான ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால், நீங்கள் விரும்பினால், ஸ்ரீ லாப்டனையும் மற்ற நண்பர்களையும் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் ஒன்றை மாத்திரம் உங்களிடம் ஒப்புக்கொண்டு விடுகிறேன். உங்களைத் தாக்கியவர்கள் மீது குற்றஞ்சாட்டி, வழக்குத் தொடரும் உரிமையை நீங்கள் விட்டுக் கொடுத்து விடுவீர்களாயின், அமைதியை நிலைநாட்டுவதற்கு அதிக அளவு எனக்கு உதவி செய்தவர்கள் ஆவீர்கள். அதோடு உங்கள் பெருமையையும் உயர்த்திக் கொண்டவர்கள் ஆவீர்கள்”.

     “உங்களுக்கு நன்றி. நான் யாரையும் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. உங்களிடம் வருவதற்கு முன்னாலேயே இது சம்பந்தமாக நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என்னைத் தாக்கியவர்கள் மீது குற்றஞ் சாட்டி, வழக்குத் தொடரக் கூடாது என்பது என் கொள்கை. என் தீர்மானத்தை இப்பொழுதே எழுத்து மூலம் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்.” இப்படிக் கூறி அவசியமான அறிக்கையை எழுதிக் கொடுத்தேன்.

$$$

4. புயலுக்குப் பின் அமைதி

     இன்னும் போலீஸ் ஸ்டேஷனை விட்டு, நான் வீட்டுக்குப் போகவில்லை. இரண்டுநாள் கழித்துப் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தபடியே என்னை ஸ்ரீ எஸ்கோம்பிடம் அழைத்துச் சென்றனர். எனக்குப் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை எதுவுமே தேவை இல்லாதிருந்தும் என் பாதுகாப்புக்காக இரு போலீஸாரை என்னுடன் அனுப்பினர்.

கப்பலிலிருந்து இறங்கிய அன்று, மஞ்சள் கொடி இறக்கப்பட்டதும், ‘நேட்டால் அட்வர்டைஸர்’ பத்திரிகையின் பிரதிநிதி, என்னைப் பேட்டி காண்பதற்குக் கப்பலுக்கு வந்தார். அவர் என்னைப் பல கேள்விகள் கேட்டார். அவற்றிற்குப் பதில் அளிக்கையில், என்மீது கூறப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நான் மறுக்க முடிந்தது. இந்தியாவில் நான் செய்த பிரசங்கங்கள் யாவும் எழுதிப் படித்தவை. இதற்காக ஸர் பிரோஸ் ஷோ மேத்தாவுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும். அந்தப் பிரசங்கங்களின் பிரதிகளும் என்னிடம் இருந்தன. நான் மற்றபடி பத்திரிகைகளுக்கு எழுதியவைகளுக்கும் நகல் வைத்திருந்தேன். என்னைப் பேட்டி காண வந்த நிருபரிடம் அவைகளையெல்லாம் கொடுத்தேன். தென்னாப்பிரிக்காவில், அதிகக் கடுமையான பாஷையில் சொல்லாதது எதையும் நான் இந்தியாவில் சொல்லி விடவே இல்லை என்பதையும் அவருக்குக் காட்டினேன். ‘கோர்லாண்டு’, ‘நாதேரி’ கப்பல்களில் பிரயாணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்ததில், என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் அவருக்குக் காட்டினேன். அப் பிரயாணிகளில் அநேகர், முன்பே அங்கே வசிப்பவர்கள். மற்றும் பலர் டிரான்ஸ்வாலுக்குப் போகிறவர்களேயன்றி நேட்டாலில் தங்க விரும்புகிறவர்கள் அல்ல. அந்தக் காலத்தில் செல்வம் தேட வருகிறவர்களுக்கு, நேட்டாலைவிட டிரான்ஸ்வால்தான் அதிகச் சௌகரியமானதாக இருந்தது. ஆகையால், இந்தியரில் அநேகர் அங்கே போகவே விரும்பினார்கள்.

     பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டியும், என்னைத் தாக்கியவர்கள் மீது வழக்குத் தொடர நான் மறுத்ததும், மிகச் சிறந்த வகையில் என் பேரில் நல்லெண்ணத்தை உண்டாக்கி விட்டன. தங்கள் நடத்தைக்காக டர்பன் ஐரோப்பியர்கள் வெட்கப்பட்டனர். நான் ஒரு பாவமும் அறியாதவன் என்று பத்திரிகைகள் கூறின; ஜனக்கூட்டத்தின் செயலைக் கண்டித்தன. இவ்விதம் என்னை ஆத்திரத்துடன் கொல்ல முயன்றது, எனக்கு அதாவது என் லட்சியத்திற்கு பெரும் நன்மையாகவே முடிந்தது. தென்னாப்பிரிக்காவில் இந்திய சமூகத்தின் கௌரவம் இதனால் உயர்ந்தது; என் வேலையையும் இது எளிதாக்கியது.

     மூன்று, நான்கு நாட்களில் நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். சீக்கிரத்திலேயே வழக்கம்போல் வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டேன். மேற்கண்ட சம்பவம் என் வக்கீல் தொழிலிலும் வருமானம் அதிகமாகும்படி செய்தது.

     சமூகத்தின் கௌரவத்தை அது அதிகமாக்கியதுடன் சமூகத்தின்மீது இருந்த துவேஷத்தையும் அது வளர்த்து விட்டது. இந்தியன், ஆண்மையுடன் எதிர்த்தும் போராடுவான் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட உடனே அவன், தங்கள் நலத்துக்கு ஓர் ஆபத்து என்றும் வெள்ளைக்காரர்கள் கருதலானார்கள். நேட்டால் சட்டசபையில் இரு மசோதாக்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஒன்று, இந்திய வர்த்தகர்களுக்குப் பாதகம் விளைவிக்கக் கூடியது; மற்றொன்று, இந்தியர் வந்து குடியேறுவதற்கு கடுமையான தடையை விதிப்பது. வாக்குரிமைக்காக நடத்திய போராட்டத்தினால் அதிர்ஷ்டவசமாக ஒரு பலன் ஏற்பட்டிருந்தது. அதாவது, நிறம் அல்லது இனத்தைக் குறித்துச் சட்டம் பேதம் காட்டக் கூடாதாகையால், இந்தியர் என்ற வகையில் அவர்களுக்கு விரோதமாக எந்தச் சட்டமும் செய்யக் கூடாது என்று முடிவாகி இருந்தது. ஆகையால், மேற்கண்ட மசோதாக்களின் வாசகம், எல்லோருக்கும் அச்சட்டம் அமுலாகும் என்ற முறையில் இருந்தது. ஆனால், அவர்களுடைய உண்மையான நோக்கம், நேட்டாலில் இருக்கும் இந்தியருக்கு மேற்கொண்டும் நிர்பந்தங்களை உண்டாக்குவதேயாகும்.

இம் மசோதாக்கள், எனக்கு இருந்த பொது வேலையை அதிக அளவுக்கு அதிகமாக்கிவிட்டன. சமூகம், எப்பொழுதையும்விட நன்றாகத் தன் கடமையை உணர்ந்திருக்கும்படியும் இவை செய்தன. அம் மசோதாக்களில் மறைந்திருந்த விஷம நோக்கத்தைச் சமூகத்தினர் அறியும்படி செய்வதற்காக, அவைகளை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, முற்றும் விளக்கியும் வைத்தோம். குடியேற்ற நாட்டு மந்திரிக்கு விண்ணப்பித்துக் கொண்டோம். இதில் தலையிட அவர் மறுத்துவிட்டதால், மசோதாக்கள் சட்டம் ஆகிவிட்டன.

     நேரம் முழுவதையும் அநேகமாக நான் பொது வேலைக்கே செலவிட வேண்டியதாயிற்று. நான் முன்பு கூறியது போல், ஸ்ரீ மன்சுக்லால் நாஸர், டர்பனுக்கு முன்பே வந்து விட்டதால், அவர் என்னுடன் தங்கலானார். தம் நேரத்தை அவர் பொது வேலைகளில் செலவிட்டதால் ஓரளவுக்கு எனக்கு இருந்த வேலை குறைந்தது.

     நான் இல்லாதிருந்த சமயத்தில் எனக்குப் பதிலாக காங்கிரஸ் காரியதரிசியாக இருந்த சேத் ஆதம்ஜி மியாகான், போற்றத்தக்க வகையில் தமது கடமையை நிறைவேற்றியிருந்தார். அங்கத்தினர்கள் தொகையை அதிகமாக்கியிருந்தார். அதோடு, நேட்டால் இந்திய காங்கிரஸின் நிதியிலும் சுமார் ஆயிரம் பவுன் அதிகமாக்கியிருந்தார். இம் மசோதாக்களினாலும், நாங்கள் கப்பலிலிருந்து இறங்கியபோது நடந்த ஆர்ப்பாட்டங்களினாலும் இந்தியரிடையே ஏற்பட்டிருந்த விழிப்பை நான் நல்ல வழியில் பயன்படுத்திக் கொண்டேன். அங்கத்தினர்கள் அதிகமாகச் சேருவதுடன் பணமும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இப்பொழுது நிதி 5,000 பவுன் ஆயிற்று. காங்கிரஸுக்கு நிரந்தரமான நிதியைத் திரட்டி, அந்த நிதியைக்கொண்டு சொத்துக்களை வாங்கி, அச் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்துவருமாறு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஒரு பொது ஸ்தாபனத்தை நிர்வகிப்பதில் எனக்கு இது முதல் அனுபவம். என் யோசனையை என் சக ஊழியர்களிடம் அறிவித்தேன். அவர்களும், இதை ஆதரித்தனர். வாங்கிய சொத்து, வாடகைக்கு விடப்பட்டது. கிடைத்த வட்டி, காங்கிரஸின் நடைமுறைச் செலவுக்குப் போதுமானதாக இருந்தது. சொத்தை நிர்வகிப்பதற்குச் செல்வாக்குள்ளவர்களைக் கொண்ட தர்மகர்த்தா சபையையும் அமைத்தோம். இன்றும்கூட அது இருந்து வருகிறது. ஆனால், அது இடைவிடாத சச்சரவுக்கு இடமாகி விட்டது. இதன் காரணமாக இப்பொழுது அச் சொத்தின் வாடகைப் பணமெல்லாம் கோர்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

     இந்தத் துக்ககரமான நிலைமை நான் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த பிறகு உண்டாயிற்று. ஆனால், இந்தத் தகராறு ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி இருக்க வேண்டும் என்று எனக்கு இருந்த கருத்து மாறிவிட்டது. இப்பொழுதோ, பல பொது ஸ்தாபனங்களை நான் நிர்வகித்திருப்பதால் எனக்கு அதிக அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ‘நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்களை நடத்துவது நல்லது அல்ல’ என்பதே இப்பொழுது என்னுடைய திடமான கருத்தாகி விட்டது. நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்திற்கு இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும் அந்நிதியுடன் ஊன்றப்பட்டு விடுகிறது. பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில், அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்குப் பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடத்தப்படும் பொது ஸ்தாபனங்கள், பொதுஜன அபிப்பிராயத்திற்கு மாறுபட்ட காரியங்களையும் அடிக்கடி செய்கின்றன. நம் நாட்டில் இதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். மத சம்பந்தமான தரும ஸ்தாபனங்கள் என்று கூறப்படும் சில ஸ்தாபனங்கள், கணக்குக் காட்டுவது என்பதையே விட்டு விட்டன. தருமகர்த்தாக்களே, அச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள், யாருக்கும் பொறுப்பாளிகள் அல்ல. ‘இயற்கையைப் போல, அன்றைக்குத் தேவையானதைப் பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது’ என்பதில், எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. பொதுஜன ஆதரவைப் பெற முடியாத ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஸ்தாபனமாக இருந்து வரும் உரிமையே இல்லை. வருடந்தோறும் ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும் சந்தாத்தொகை, அதன் செல்வாக்குக்கும், அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து வருகிறது என்பதற்கும் சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனமும் இந்த அளவுகோலுக்கு உட்பட வேண்டும் என்பது என் கருத்து. ஆனால், யாரும் என்னைத் தவறாக எண்ணிக் கொண்டுவிட வேண்டாம். சில ஸ்தாபனங்களை, அவைகளின் தன்மையை அனுசரித்து, நிரந்தரமான கட்டடம் இல்லாமல் நடத்த முடியாது. நான் கூறியவை, அத்தகைய ஸ்தாபனங்களுக்கு பொருந்தாது. பொது ஸ்தாபனங்களின் நடைமுறைச் செலவுகளை ஒவ்வொரு வருடமும் தானாகக் கிடைக்கும் சந்தாப் பணத்தைக் கொண்டு நிர்வகித்துவர வேண்டும் என்று சொல்லவே நான் விரும்புகிறேன்.

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக நாட்களில் இக் கருத்து ஊர்ஜிதமாயிற்று. அந்த மகத்தான போராட்டம், ஆறு ஆண்டுகள் வரை நடந்தது. அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படும். நிரந்தரமான நிதி எதுவும் இல்லாமலேயே அதை நடத்தினோம். சந்தா கிடைக்காவிட்டால் அடுத்த நாளைக்கு என்ன செய்வதென்று எனக்குத் தெரியாமல் இருந்த சமயங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன. ஆனால், வருங்காலத்தில் என்ன நேரும் என்பதை நான் இப்பொழுது சொல்லுவதற்கில்லை. இனிக் கூறப்போகும் வரலாற்றில், மேலே சொன்ன கருத்துக்கள் சரியானபடி நிரூபிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் காணலாம்.

$$$

5. குழந்தைகளின் படிப்பு

     1897 ஜனவரியில், டர்பனில் நான் இறங்கியபோது என்னுடன் மூன்று குழந்தைகள் இருந்தார்கள். என் சகோதரியின் பத்து வயதான மகன் ஒருவன்; ஒன்பது வயதும், ஐந்து வயதும் உள்ள என் புத்திரர்கள் இருவர். இவர்களை எங்கே படிக்க வைப்பது?

ஐரோப்பியக் குழந்தைகளுக்கு என்று இருக்கும் பள்ளிக் கூடங்களுக்கு நான் அவர்களை அனுப்பியிருக்கலாம். ஆனால், என் குழந்தைகளுக்குச் சலுகை அளித்து, விதிவிலக்குப் பெற்றால்தான் அங்கே சேர்த்துக் கொள்ளுவார்கள். வேறு எந்த இந்தியரின் குழந்தைகளையும் அப் பள்ளிக்கூடங்களில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. இந்தியக் குழந்தைகளுக்கென்று, கிறிஸ்தவப் பாதிரிகள் வைத்திருக்கும் பள்ளிக்கூடங்களில் அளிக்கப்படும் கல்வி எனக்குப் பிடிக்கவில்லையாகையால் என் குழந்தைகளை அங்கே அனுப்ப நான் தயாராக இல்லை. இதற்கு ஒரு காரணம், அங்கே ஆங்கிலத்திலேயே எல்லாப் பாடங்களும் போதிக்கப்பட்டு வந்ததாகும். இல்லாவிட்டால், பிழையான தமிழ் அல்லது ஹிந்தியில் போதிப்பார்கள். இதையும் கஷ்டத்தின் பேரில்தான் ஏற்பாடு செய்யவேண்டி இருந்திருக்கும். இதையும் மற்ற அசௌகரியங்களையும் சமாளித்துக்கொண்டு போக என்னால் முடியாது. இதற்கு மத்தியில் இக் குழந்தைகளுக்கு நானே போதிப்பது என்று சொந்த முயற்சியும் செய்து கொண்டிருந்தேன். ஆனால், நான் சொல்லிக்கொடுப்பது என்றால் ஒழுங்காகச் சொல்லிக் கொடுப்பதாக இருக்க முடியாது. தக்க குஜராத்தி உபாத்தியாயரும் எனக்குக் கிடைக்கவில்லை.

     ஆகையால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். என் மேற்பார்வையில், குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஓர் ஆங்கில உபாத்தியாயர் தேவை என்று விளம்பரம் செய்தேன். இந்த உபாத்தியாயர் ஒழுங்காக ஏதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டுவர வேண்டும். மற்ற படிப்பு விஷயங்களைப் பொறுத்தமட்டும் எனக்கு ஒழிந்தபோது அப்போதைக்கப்போது நான் சொல்லிக் கொடுப்பதோடு குழந்தைகள் திருப்தியடைய வேண்டியதே என்று முடிவு செய்தேன். ஆகவே ஓர் ஆங்கில மாதை, மாதம் ஏழு பவுன் சம்பளத்தில், குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க அமர்த்தினேன். இந்த ஏற்பாடு கொஞ்சகாலம் நடந்து வந்தது. ஆனால், எனக்கு இது திருப்திகரமாக இல்லை; நான் எப்பொழுதும் குழந்தைகளுடன், தாய்மொழியிலேயே பேசிப் பழகி வந்தேன். இதனால், அவர்களுக்குக் கொஞ்சம் குஜராத்தி தெரிய வந்தது. குழந்தைகளைத் திரும்ப இந்தியாவிற்கு அனுப்பிவிடுவதற்கும் எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில், சிறு குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரிக்கவே கூடாது என்று, அந்த நாளிலிருந்தே நான் கருதிவந்தேன்.

     ஒழுங்கான ஒரு குடும்பத்தில், குழந்தைகள் இயற்கையாகவே அடையும் கல்விப் பயிற்சியை, மாணவர்களின் விடுதிகளில் அவர்கள் அடைய முடியாது. ஆகையால், என் குழந்தைகளை என்னுடனேயே வைத்துக்கொண்டேன். என் சகோதரியின் மகனையும் என் மூத்த மகனையும், இந்தியாவில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் ஒரு பள்ளிக்குக் கொஞ்சகாலம் அனுப்பினேன். ஆனால், சீக்கிரத்திலேயே அவர்களைத் திருப்பி அழைத்துக் கொண்டுவிட வேண்டியதாயிற்று. பிறகு என் மூத்த மகன், வயதடைந்த வெகு காலத்திற்குப் பிறகு, என்னிடம் மனஸ்தாபம் கண்டு, இந்தியாவுக்குப் போய்விட்டான். அங்கே அகமதாபாத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தான். ஆனால் என் மருமகனோ, என்னால் கொடுக்க முடிந்த கல்வியோடு திருப்தியடைந்து என்னுடனேயே இருந்துவிட்டான் என்று ஞாபகம். நல்ல வாலிபப் பருவத்தில் அவன் துரதிருஷ்டவசமாகச் சிறிது காலம் நோயுற்றிருந்து இறந்து போய்விட்டன். என் குமாரர்களில் மற்ற மூவரும் பொதுப் பள்ளிக்கூடத்திற்குப் போய்ப் படித்ததே இல்லை. ஆனால் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு இருந்தவர்களின் குழந்தைகளுக்கென்று நான் ஆரம்பித்துச் சிறிது காலம் நடத்திக்கொண்டிருந்த வசதிக் குறைவான பள்ளிக்கூடங்களில் இவர்கள் சிறிது காலம் ஒழுங்காகப் படித்து வந்தனர்.

இந்தப் பரிசோதனைகளெல்லாம் அரைகுறையானவைகளே. நான் விரும்பிய அளவு, குழந்தைகளுக்காக என் நேரத்தைச் செலவிட என்னால் முடியவில்லை. அவர்கள் விஷயத்தில் போதிய கவனம் செலுத்த என்னால் முடியாது போனதும், தவிர்க்க முடியாத வேறு காரணங்களும், அவர்களுக்கு நான் அளிக்க விரும்பிய இலக்கியக் கல்வியை அளிக்க முடியாதபடி செய்துவிட்டன. இவ்விஷயத்தில் என்மீது என் குமாரர்கள் குறை கூறியிருக்கின்றனர். எம்.ஏ. அல்லது பி.ஏ. படித்தவரையோ அல்லது மெட்ரிகுலேஷனாவது படித்தவர்களையோ அவர்கள் சந்திக்கும் போதெல்லாம், பள்ளிக்கூடப் படிப்பு இல்லாததன் கஷ்டத்தை அவர்கள் உணருவதாகத் தோன்றுகிறது.

     அது எப்படியானாலும் என் அபிப்பிராயம் வேறு. எப்படியாவது அவர்களைப் பொதுப் பள்ளிக்கூடத்தில் பிடிவாதமாகப் படிக்க வைத்திருந்தேனாயின், அனுபவம் என்ற பள்ளிக்கூடத்தில் மாத்திரம் கிடைக்கக்கூடியதான, பெற்றோருடன் இருப்பதால் அடைவதான கல்வி, அவர்களுக்கு இல்லாது போயிருக்கும். அவர்களைப் பற்றி நான் இன்று கொஞ்சமும் கவலை இல்லாமல் இருக்கிறேன்; இப்படி இருக்க முடியாமலும் போயிருக்கும். என்னைவிட்டுப் பிரிந்து, இங்கிலாந்திலோ, தென்னாப்பிரிக்காவிலோ அவர்கள் பெற்றிருக்கக்கடிய இயற்கையல்லாத கல்வி, இன்று வாழ்க்கையில் அவர்கள் காட்டி வரும் எளிமையையும், சேவா உணர்ச்சியையும் அவர்களுக்குப் போதித்தே இராது. மேலும், அவர்களுடைய செயற்கை வாழ்க்கை முறை எனது பொது வேலைக்குப் பெரிய இடையூறாகவும் இருந்திருக்கும். ஆகையால், என் திருப்திக்கு ஏற்ற வகையிலோ, அவர்கள் திருப்தியடையும் வகையிலோ, அவர்களுக்கு இலக்கியக் கல்வியை அளிக்க என்னால் முடியாது போயிற்று. ஆனாலும், என்னுடைய சக்திக்கு எட்டிய மட்டும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய என் கடமையை நான் செய்யாமல் இருந்துவிடவில்லை என்று, என்னுடைய கடந்த ஆண்டுகளைத் திரும்ப எண்ணிப் பார்க்கும்போது நான் நிச்சயமாகக் கருதுகிறேன். பொதுப் பள்ளிக் கூடங்களுக்குக் குழந்தைகளை அனுப்பாது போனோமே என்று நான் வருந்தவே இல்லை. இன்று என் மூத்த மகனிடம் விரும்பத்தகாத குணங்களை நான் காண்கிறேன். கட்டுத் திட்டமும் ஒழுங்கும் அற்ற என் இளவயதின் எதிரொலியே அது என்று நான் எப்பொழுதும் உணருகிறேன். என் வாழ்நாளின் அப்பகுதி, அரைகுறையான அறிவும், சுகபோகப் பற்றும் நிரம்பியிருந்த காலம் என்று கருதுகிறேன். அந்த காலமும் என் மூத்த மகனுக்கு நன்றாகப் புத்தி தெரிந்த காலமும் ஒன்றாக இருந்தன. அது, நான் அனுபவம் இன்மையிலும், இன்ப நுகர்ச்சியிலும் திளைத்த காலம் என்று கருத இயற்கையாகவே அவன் மறுத்து விட்டான். இதற்கு நேர்மாறாக அதுவே என்னுடைய வாழ்க்கையின் மிக சிறந்த காலம் என்றும், பின்னால் எனக்கு ஏற்பட்ட மாறுதல்கள், அறிவுத்தெளிவு என்று தவறாகக் கூறப்படும் மதிமயக்கத்தினால் ஏற்பட்டவை என்றும் அவன் கருதிவிட்டான். அவன் அப்படியே எண்ணியிருக்கட்டும். என் வாழ்க்கையின் ஆரம்ப காலம், நான் புத்தித்தெளிவு பெற்றிருந்த காலம் என்றும் பெரிய மாறுதல்கள் ஏற்பட்ட பிந்திய காலமே மாயையும், அகந்தையும் நிறைந்த காலம் என்றும், அவன் ஏன் எண்ணக் கூடாது? அடிக்கடி நண்பர்கள் என்னைக் கீழ்வரும் பல கேள்விகளைக் கேட்டு மடக்கப் பார்த்திருக்கின்றனர். ‘உங்கள் குழந்தைகளுக்குக் கலாசாலைப் படிப்பு அளித்திருந்தால் அதனால் என்ன தீமை விளைந்திருக்கும்?’ ‘இவ்விதம் அவர்களுடைய சிறகுகளைத் துண்டித்துவிடுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ ‘படித்துப் பட்டம் பெற்று, தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துறைகளை அவர்கள் மேற் கொள்ளுவதற்கு நீங்கள் ஏன் குறுக்கே நின்றிருக்க வேண்டும்?’

     இந்த விதமான கேள்விகளில் அதிக முக்கியத்துவம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எத்தனையோ மாணவர்களுடன் நான் பழகியிருக்கிறேன். கல்வியைக் குறித்து எனக்குள்ள கொள்கைகளை நானாகவோ, மற்றவர்களின் மூலமோ வேறு குழந்தைகளிடமும் அனுசரித்து, அதன் பலனையும் கவனித்திருக்கிறேன். என் புத்திரர்களின் வயதினரான மற்றும் பல இளைஞர்களை எனக்குத் தெரியும். மனிதனுக்கு மனிதன் ஒப்பிட்டுப் பார்த்தால், என் புதல்வர்களைவிட அவர்கள் எந்த விதத்திலும் மேலானவர்கள் என்றோ, அவர்களிடமிருந்து என் புதல்வர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய எதுவும் இருப்பதாகவோ நான் எண்ணவில்லை.

     ஆனால் என்னுடைய சோதனைகளின் முடிவான பலன், காலத்தின் கருப்பையில் இருக்கிறது. இந்த விஷயத்தை நான் இங்கே விவாதிப்பதற்கு முக்கியமான நோக்கம் ஒன்று உண்டு. நாகரிக வளர்ச்சியின் வரலாற்றை ஆராயும் ஒருவர், கட்டுப்பாட்டோடு கூடிய வீட்டுப் படிப்பிற்கும், பள்ளிக்கூடப் படிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தையும், பெற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கையில் செய்யும் மாறுதல்களுக்கு ஏற்ற வகையில் குழந்தைகளிடையே ஏற்படும் மாறுதல்களையும் ஓரளவு அறிந்துகொள்ளக் கூடும் அல்லவா? இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு: சத்தியத்தை நாடும் ஒருவர், சத்தியத்தைக்கொண்டு, தாம் செய்யும் சோதனைகளில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கிறது என்பதையும் சுதந்திரத்தை நாடுபவரிடமிருந்து அக்கண்டிப்பான சுதந்திர தேவி, என்ன என்ன தியாகங்களை எதிர்பார்க்கிறாள் என்பதையும் காட்டுவதே அக்காரணம் ஆகும். எனக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லாதிருந்திருக்குமானால், மற்றவர்களுக்குக் கிட்டாத கல்வி, என் குழந்தைகளுக்குக் கிடைப்பதைக் கொண்டு நான் திருப்தியடைந்து விடுபவனாக இருந்திருந்தால், அவர்களுக்கு நல்ல இலக்கியக் கல்வியை அளித்திருப்பேன். ஆனால், சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் அவர்கள் பெற்றிருக்கும் அனுபவப் படிப்பு, அப்போது அவர்களுக்கு கிடைத்திருக்காது. சுதந்திரம் அல்லது படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டி வரும் போது, படிப்பைவிடச் சுதந்திரமே ஆயிரம் மடங்கு மேலானது என்று யார்தான் கூறமாட்டார்கள்?

இந்திய இளைஞர்களை, அவர்களுடைய அடிமைத் தனத்தின் கோட்டைகளில் இருந்து – அதாவது அவர்களுடைய பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் இருந்து – வெளியேறிவிடுமாறு 1920 இல் நான் அழைத்தேன். ‘அடிமை விலங்குகளுடன் இலக்கியக் கல்வி கற்கப் போவதைவிட, சுதந்திரம் பெறுவதற்காக எழுத்து வாசனையே இல்லாமல் இருந்து, கல்லுடைத்து வாழ்வதே எவ்வளவோ மேல்’ என்று அப்பொழுது அவர்களுக்குச் சொன்னேன். எந்த ஆதாரத்துடன் நான் இந்தப் புத்திமதியைக் கூறினேன் என்பதை இளைஞர்கள் இப்பொழுது கண்டு கொள்ளலாம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s