-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
70. வணங்குவதற்கு எளியவன்
.
அரஹஸி ரஹஸி ஸ்வதந்த்ர புத்த்யா
வரிவஸிதும் ஸுலப: ப்ரஸன்னமூர்த்தி:/
அகணித பலதாயக ப்ரபுர்மே
ஜகததிகோ ஹ்ருதி ராஜசே’கரோஸ்தி//
.
வெளியேயும் மறைவாயும் தன்னிச்சை புத்தியினால்
எளியோனாம் துதித்திடவே அருள்புரிய விரைவோனாம்
அளவில்லா நலன்தருவோன் அனைத்திற்கும் தலையோனாம்
அப்பாலான் பிறைசூடன் உறைவோனாம் என்னுள்ளே!
.
எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளாகிய சிவபெருமான் பூஜை செய்வதற்கு எளியவர். அவரை இப்படித்தான் வணங்க வேண்டும் என்றில்லை. பக்தி நம் மனத்தில் இருந்து, அது அவரது நினைப்பில் ஊறியிருந்தால் சடங்கு, சம்பிரதாயங்கள் அவசியமில்லை. அதேநேரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் அவரை நமது விருப்பத்திற்கேற்ற பலவித ஆசார சடங்குகள் மூலமும் வெளியே அவரை ஆராதிக்கலாம். உள்ளத்துக்குள்ளே உறைந்திருப்பவர் ஆதலால் மனத்திற்குள் ரகசியமாகவும் வழிபடலாம். கடந்துமாய் உள்ளுமாய் உறைகின்ற எந்தை சிவபிரானை நமது விருப்பம் எப்படியோ அப்படி வணங்கலாம்.
.துதிப்பதற்கு மிகவும் எளியவரான எம்பிரான், அருள் புரிவதிலோ மிகவும் விரைவானவர். எண்ணிலடங்காத, நம்மால் நினைக்க இயலாத பல நற்பயன்களை நமக்கு வாரி வாரி வழங்குபவர் சிவபெருமான். உலகத்தை ஆக்கி, காத்து, துடைத்தெறியும் முத்தொழிலும் புரிகின்ற தலைவனாக அவர் விளங்குகிறார். தோன்றி, மறைகின்ற இந்த உலகிற்கு அப்பாற்பட்டவராய் சிவபெருமான் திகழ்கிறார். பிறைசூடிய பெருமானாக உள்ள அந்த சிவபெருமான், எப்போதும் எனது உள்ளத்தினுள்ளே உறைகின்றார்.
$$$