-மகாகவி பாரதி

எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதிக்கு அந்த சமஸ்தான மன்னரான வெங்கடேசு ரெட்டப்ப பூபதியுடன் ஆரம்பகாலம் முதலே நல்ல தொடர்பு இருந்தது. தினசரி மன்னரின் கச்சேரியில் ஆஜராகி பத்திரிகை படித்துக் காட்டும் பணியை இளம் வயதில் பாரதி செய்திருக்கிறார். ஆயினும் அவரால், மன்னரின் அதிகாரத் தோரனையுடன் ஒன்றியிருக்க முடியவில்லை. அதனால் தான் ஆசிரியத் தொழிலை நாடி எட்டயபுரத்திலிருந்து அவர் வெளியேறினார். அது மட்டுமல்ல, மன்னரின் படாடோபம், அரண்மனையின் சில்லறை அரசியல், மன்னரின் அடிவருடிகளின் கேளிக்கைகள் ஆகிவற்றை வெறுத்த அவர், அதனை தனது வேடிக்கைக் கதைகளில் பூடகமாக புகுத்தி இருக்கிறார். எனினும் ஆங்கிலேய அரசால் வேட்டையாடப்பட்டு வறுமை சூழ்ந்த நிலையில், தனது குடும்ப நலனுக்காக, மன்னரிடம் உதவி கோரினார் பாரதி. அப்போது (1919) மகாகவி பாரதி எழுதிய விண்ணப்பக் கவிதையே இது... மன்னரிடம் உதவி கேட்கும்போதும்கூட, யாசகமாகக் கேளாமல், புவி ஆளும் மன்னரான எட்டயபுரம் ராஜா கவியரசனான தனக்கு உரிய கௌரவம் செய்ய வேண்டும் என்று கேட்கும் துணிவை இக்கவிதையின் நாம் காணலாம். இக்கவிதையில் இடம்பெற்றுள்ள ‘பொருள் புதிது’ என்ற மந்திரச் சொல்லே நமது தளத்தின் பெயராக அமைந்திருப்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
22. வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
1
ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மாகராஜ
வெங்கடேசு ரெட்பப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு:
கவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதும் சீட்டுக் கவிகள்
பாரிவாழ்ந் திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின் கண்ணே
ஆரிய! நீயிந் நாளில் அரசுவீற் றிருக்கின் றாயால்;
காரியங் கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லாயோ? 1
விண்ணள வுயர்ந்த கீர்த்தி வெங்கடேசு ரெட்டமன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பணி பாவள வுயர்ந்த தென்பா;
எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ்க் கவிஞர் வந்தால்,
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகி லாயோ? 2
கல்வியே தொழிலாக் கொண்டாய்! கவிதையே தெய்வமாக
அல்லுநன் பகலும் போற்றி அதைவழி பட்டுநின்றாய்!
சொல்லிலே நிகரி லாத புலவர்நின் சூழ லுற்றால்
எல்லினைக் காணப் பாயும் இடபம்போல் முற்ப டாயோ?
எட்டயபுரம்,
1919-ம் வருடம் மே மாதம் 2உ -சுப்பிரமணிய பாரதி
2
ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜ ராஜேந்த்ர
ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு:
கவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதும் ஓலைத் தூக்கு
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல
சேகரன் ஸ்ரீ ராஜ ராஜன்,
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண்க.
வாசமிகு துழாய்த் தாரன் கண்ணனடி
மறவாத மனத்தான், சக்தி
தாசனெனப் புகழ்வளரும் சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு. 1
மன்னவனே! தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை யென்று மாந்தர்
இன்ன லுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்த பொழு திரிந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு,
சுவைகண்டு, துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றே! 2
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது,
சொற்புதிது சோதி மிக்க
நவகவிதை, எந்நாளும் அழியாத
மகாகவிதை” என்று நன்கு. 3
பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறரு மாங்கே
விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவி யென்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்; பாரோ ரேத்துந்
தராதிபனே! இளசை வெங்க டேசுரெட்டா!
நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன். 4
வேறு
வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
கவிதையினை வேந்த னே! நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட நீகேட்டு
நன்கு போற்றி,
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள்
ஜதிபல் லக்கு,
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி
வாழ்க நீயே!
எட்டயபுரம்
1919-ம் வருடம் மே மாதம் 2ம் தேதி -சுப்பிரமணிய பாரதி
$$$