மகாவித்துவான் சரித்திரம் -1(1)

-உ.வே.சாமிநாதையர்


கணபதி துணை

திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்கள் சரித்திரம்

முதற் பாகம்

1. முன்னோரும் தந்தையாரும்


மதுரையின் பெருமை

“பாண்டி நாடே பழம்பதி”’ என்று திருவாதவூரடிகளாற் சிறப்பிக்கப்பெற்ற பாண்டி நாட்டுள், பூலோக சிவலோகம், சிவராசதானி முதலிய திருநாமங்களைப் பெற்று விளங்குவதும், சொல்வடிவாகிய ஸ்ரீ மீனாட்சியம்மை தடாதகைப் பிராட்டியாராகியும் பொருள் வடிவாகிய ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் சுந்தர பாண்டியராகியும் முருகக்கடவுள் உக்கிர பாண்டியராகியும் அரசாட்சி செய்த பெருமை மேவியதும், ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் அறுபத்துநான்கு திருவிளையாடல்களை இயற்றியருளிய ஏற்றமுடையதும், தமிழைப் பலவாற்றாலும் வளர்த்து விளங்கிய பாண்டிய மன்னர்களாற் செங்கோல் செலுத்தப் பெற்றதும், “உலகமொரு துலையாத் தானோர் துலையாப், புலவர் புலக்கோலாற் மாக்க – உலகமெலாந், தான்வாட வாடாத் தகைமைத்தே தென் னவன்றன், நான்மாடக் கூட னகர்”, ”அனலும் புனலு மியலறியும்”, “யாரறிவார் தமிழருமை யென்கின் றேனென் னறிவீன மன்றோவுன் மதுரை மூதூர், நீரறியும் நெருப்பறியும்” என்று ஆன்றோர்களால் புகழப்பட்டதும், ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளைத் தம்முள் ஒரு புலவராகப்பெற்ற சங்கப் புலவர்கள் பலர் புதிய பாக்களையும் புதிய உரையையும் இயற்றித் தமிழாராய்ந்த சிறப்பு வாய்ந்ததும், உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் விளங்கியதற்கு இடமாக உள்ளதுமாகித் திகழ்வது மதுரையம்பதியாகும்.

முன்னோர் நிலை

அந்நகரின்கண், இப்போது ஆதிநாராயண பிள்ளை தெருவென்று வழங்கப்படும் இடத்திற் சைவ வேளாளரும் நெய்தல் வாயிலுடையான் கோத்திரத்தினருமாகிய ஒரு குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளின் திருக் கோயிலுக்குரிய *1 முத்திரைக் கணக்கர்களுள் மீனமுத்திரைப் பணிக்குரியவர்களாக இருந்து விளங்கினார்கள். அவர்கள் தமிழ்க் கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். *2  கோயிலார் வருஷந்தோறும் ஒரு தினத்தில் அப்பணிக்குரிய சிறப்பொன்றை அவர்களுக்குச் செய்விப்பது வழக்கம்.

தந்தையார்

அக்குடும்பத்திற் பிறந்த சிதம்பரம்பிள்ளை யென்னும் ஒருவர் தம் மனைவியாராகிய அன்னத்தாச்சி என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். தம் முன்னோர்களைப் போலவே அவர் தேவார திருவாசகங்களில் அன்பும் அறிவும் பெற்றவர்; பெரியபுராணம், கம்ப ராமாயணம், கந்த புராணம் திருவிளையாடற் புராணம் முதலிய பெருங் காப்பியங்களிலும் பலவகையான பிரபந்தங்களிலும் இலக்கணங்களிலும் உரை நூல்களிலும் முறையான பயிற்சியும், கற்பவர்களுக்கு அன்புடன் பாடஞ் சொல்லுந் திறமையும், விரைவாகச் செய்யுள் செய்யும் ஆற்றலும் வாய்ந்து விளங்கினர்; பரம்பரைக் கேள்வியும் உடையவர்; நற்குண நற்செய்கை அமைந்தவர்; யாவரிடத்தும் அன்புடையவர்; சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர்; சிவனடியாரைச் சிவனெனப் பாவித்து வழிபடுபவர்.

தம் முன்னோர்கள் மேற்கொண்டு வந்த திருக்கோயில் முத்திரைப் பணியை அவர் ஒப்புக்கொண்டு ஒழுங்காகப் பார்த்து வந்தனர்.

அப்படி இருந்து வருகையில் என்ன காரணத்தாலோ அக்காலத்திலிருந்த கோயிலதிகாரிகளுக்கும் அவருக்கும் மனவேறுபாடு உண்டாயிற்று. அதனால் அவர் அவ்வேலையை வேண்டாமென்று விட்டுவிட்டுத் தம் மனைவியாரோடு மதுரையை நீங்கி வட திசையை நோக்கிச் செல்பவராய்ப் பல ஊர்களையுங்கடந்து *3  எண்ணெய்க் கிராமம் என்னும் ஊரை அடைந்தார்.

அவ்வூரார் அவருடைய நிலைமையையும், கல்வித்திறமையையும் அறிந்து அவர் இருப்பதற்குரிய இடமொன்றைக் கொடுத்து உதவியதன்றி உணவிற்குரிய பண்டங்கள் பலவற்றையும் பிறவற்றையும் அளித்து ஆதரித்து வந்தனர்.

கல்விமான்களேனும் எந்த வகையிலாவது சிறந்தவர்களேனும் ஏழை ஜனங்களேனும் தாம் இருக்கும் ஊருக்கு வந்தால் வலிந்து சென்று பார்த்தும் விசாரித்தும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைக் கைம்மாறு கருதாமற் செய்தும் செய்வித்தும் வருதல் அக்காலத்தார் இயல்பு.

சிதம்பரம் பிள்ளை அவ்வூரிலேயே சில நாள் இருந்து தம்பால் வந்து கேட்பவர்களுக்குப் பிரபந்தங்களையும் காப்பியங்களையும் பாடஞ் சொல்லித் தமிழ்ச்சுவையில் அவர்கள் ஈடுபடும்படி செய்து வந்தனர். அவருடைய புலமையையும் பாடும் திறமையையும் அவர்கள் அறிந்து வியந்து அவர்பால் மேன்மேலும் அன்பு வைப்பாராயினர். யாரேனும் கொடுக்கும் *4 சமுத்தியை விரைவிற் பூர்த்தி செய்தல், தெய்வங்களைத் துதித்தல், தமக்கு உதவி செய்த ஒருவருடைய குணங்களைச் சிறப்பித்துச் சந்தர்ப்பத்திற்கேற்றபடி பாடுதல், இன்ன பொருள் அனுப்பவேண்டுமென்று யாரேனும் ஒருவருக்குச் *5 சீட்டுக்கவி விடுத்தல் என்னும் ஆற்றல்கள் அவர்பால் அமைந்திருந்தன.

அவ் வூரார் அவருடைய தெய்வ பக்தியிலும் கவித்துவ சக்தியிலும் மதிப்பும் அவர்பாற் பயபக்தியும் உடையவர்களாக இருந்தனர். அக் காலத்தில் அங்கே மழை சிறிதும் பெய்யவில்லை. அவ்வூரார், ”மழை பெய்யும்படி தேவரீர் ஒரு பாடல் பாடியருள வேண்டும்” என்று அவரை வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அவர் சிவபெருமானைத் தியானித்து,

''சோகங்க ளுற்றவுயிர்த் *6 துன்பகல வேணியிடை
மேகங்க ளைத் தாங்கும் வித்தகனே - போகங்கள்
பாலித் தருளும் பரமனே கார்மழையை
ஆலித்துப் பெய்ய அருள்”

என்ற வெண்பாவைப் பாடினார். அவருக்கிருந்த நல்லூழினால் காக்கையேறப் பனம்பழம் வீழ்ந்ததென்பது போலச் சில நாட்களுள் நல்ல மழை பெய்தது. இப்படியே அவ்வூரிலும் அயலூர்களிலும் அவரால் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சில உண்டென்பர். அவற்றால் அவ் வூரார்க்கு அவர்பால் இருந்த மதிப்பு முன்னையினும் மிகுவதாயிற்று. அவரைத் தம்மூரிலேயே நிலைத்திருக்கும்படி செய்து விடவேண்டுமென்று எண்ணி அவ்வூரார் பலர் கூடி, ”உங்களுடைய வருஷச் செலவுக்கு எவ்வளவு நெல் வேண்டும்?” என்று அன்புடன் கேட்டனர்; அவர், “முப்பத்தாறு கலம் இருந்தாற் போதும்” என்றார். கேட்ட அவர்கள் அதனைத் தமக்குள்ளே தொகுத்து அவர்பாற் சேர்ப்பித்தார்கள். அவர் அதனைப் பெற்று உபயோகித்துக்கொண்டு உவகையுடன் விரும்பியவர்களுக்குப் பாடஞ் சொல்லி வந்தார்.

இப்படியிருக்கையில் அவருடைய புகழ் பக்கத்து ஊர்களிலும் பரவுவதாயிற்று. அப்பொழுது அதவத்தூரென்னும் ஊரிலுள்ளார் அவரிடம் வந்து தம்முடைய ஊரில் வந்து சில காலம் இருந்து தமக்கும் தமிழ் விருந்தளிக்க வேண்டுமென்று அன்போடு அழைத்தனர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிதம்பரம் பிள்ளை எண்ணெய்க் கிராமத்தாருடைய உடம்பாடு பெற்று அதவத்தூரை யடைந்து அங்குள்ளாருக்குத் தமிழ் நூல்களைப் பாடஞ் சொல்லி வந்தார். வருகையில் தமிழ் அறிவின் முதிர்ச்சியை அறிந்த எல்லோராலும் பாராட்டப்பெற்றும் வேண்டிய உதவிகள் செய்யப் பெற்றும் வந்தாராதலின் அவருடைய மனம் மிக்க ஊக்கம் பெற்றது; நிலையான பொருள் வருவாய் இல்லாவிடினும் கவலையின்றி இல்வாழ்க்கையை நடத்தலாமென்ற உறுதி அப்பொழுது அவருக்கு உண்டாயிற்று.

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு''

என்பது பொய்யா மொழியன்றோ?

சிதம்பரம்பிள்ளை *7 கணக்காயரானது.

அவர் பாடஞ் சொல்லும் அருமையையும் அவரால் தாம் பெற்ற ஊதியத்தையும் நினைந்து அவ்வூரார், ‘இவரைக்கொண்டு நம்முடைய பிள்ளைகளையும் படிப்பித்தால் அவர்கள் தமிழ்ப் பயிற்சியையும் நல்லொழுக்கத்தையும் அடைந்து பிற்காலத்தில் நல்ல நிலைமையைப் பெற்று விளங்குவார்கள்’ என்று எண்ணினர். எண்ணியவர்களுட் சிலர் கூடி அவர்பால் வந்து, ”எங்களுக்குத் தமிழ்ச் சுவையைப் புலப்படுத்தியது போலக் கணக்காயனாராக இருந்து எங்களுடைய பிள்ளைகளுக்கும் உரிய தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள். அவ்வாறே அங்கே ஒரு பள்ளிக்கூடம் வைத்து அவர் நடத்தலானார். அதனால் அவர் பெயர் சிதம்பர வாத்தியாரென்றும் வழங்கி வந்தது.

பழையகாலப் பள்ளிக்கூடங்கள்

பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் ஊர்கள்தோறும் பள்ளிக்கூடங்கள் இருந்தன. திண்ணைப் பள்ளிக்கூடங்களென்னும் பெயரால் அவை வழங்கப் பெறும். அங்கே தமிழ் நூல்களைப் படித்து இன்புறுதற்குரிய அறிவு பெறுவதற்குக் கருவிகளாகிய நிகண்டு, நீதி நூல்கள், பிரபந்தங்கள் முதலியன கற்பிக்கப்பட்டன. கணிதத்துக்கு அடிப்படையான எண்சுவடி முதலியவற்றையும் கற்பித்தனர். அவற்றின் உதவியால் மிகச் சிறிய பின்னங்களையும் அமைத்துக் கணக்கிடும் ஆற்றல் மாணாக்கர்களுக்கு உண்டாகும். குடும்பத்துக்கு வேண்டிய வைத்திய முறைகளும், நாள் பார்த்தல், சாதகம் பார்த்தல் முதலிய சோதிட நூல் வழிகளும், ஆலய வழிபாட்டு முறை, குலாசாரங்கள் முதலியனவும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளும் கற்பிக்கப்பட்டன. உபாத்தியாயர்கள் மாணவர்களுள் ஒவ்வொருவரையும் தனித்தனியே கவனித்துத் தக்க உணர்ச்சியையடையும்படி செய்தார்கள்.

வாழ்க்கைக்கு இன்றியமையாத பல விஷயங்கள் அத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்பட்டன; ஆதலின் அவற்றிற்கு ஒரு தனிச்சிறப்பு இருந்து வந்தது. கற்பிக்கும் உபாத்தியாயர்கள் மற்ற எல்லோராலும் நன்கு மதிக்கப் பெற்றனர்; “மங்கலமாகி யின்றியமையாது, யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப், பொழுதின் முகமலர் வுடையது பூவே” என்பதைப்போல அவர்கள் இன்றியமையாதவர்களாகவும் யாவரும் மகிழ்ந்து மேற்கொள்ளும் இயல்பினர்களாகவும் இருந்து வந்தார்கள். கணக்காயர்கள் சிறந்த தமிழ்ப் புலமையும் நற்குண நல்லொழுக்கமும் வாய்ந்தவர்களாக இருந்தமையே அத்தகைய நன்மதிப்பை அவர்கள் பெறுவதற்குக் காரணமாக இருந்தது. பண்டைக் காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப்புலவர்களே கணக்காயர்களாக இருந்தனரென்று தெரிகின்றது. நக்கீரர் தந்தையாராகிய மதுரைக் கணக்காயனா ரென்பவரும் கணக்காயன் தத்தன் என்னும் சங்கப்புலவரும் அத்தகையவர்களே. பிற்காலத்திலும் பல புலவர்கள் கணக்காயர்களாக இருந்தனர். எல்லப்ப நாவலரென்று வழங்கப்படும் புலவர் பெருமானுடைய பெயர் ஏட்டுச் சுவடியில் எல்லப்ப வாத்தியாரென்று காணப்படுவதால் அவரும் ஒரு கணக்காயராக இருந்திருத்தல் வேண்டுமென்று ஊகிக்கப்படுகின்றது.

சிதம்பரம் பிள்ளைக்கு உயர்ந்த மதிப்பு இருந்து வந்ததற்கு முதற் காரணம் அவர் கணக்காயராக இருந்து பாடஞ் சொல்லி வந்தமையே யாகும். தாம் அறிந்த பலவற்றையும் மாணாக்கர்களுக்குச் சொல்லிப் பயன்படச்செய்யும் காலம் வாய்த்தது ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் பெருங்கருணையே யென்றெண்ணி அவர் மகிழ்ந்தனர்.

அப்படியிருக்கையில் ஒவ்வோர் ஆண்டிலும் தவறாமல் மதுரைக்குச் சென்று ஸ்ரீ மீனாட்சியம்மையையும் ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளையும் தரிசித்துக்கொண்டு வருதல் சிதம்பரம்பிள்ளைக்கு நியமமாக இருந்தது. அவர் திருவிளையாடற் புராணத்தை அன்புடன் படித்து மனம் உருகுவார்; விரும்புவோர்க்குப் பொருளும் சொல்லுவார். இவை அவருக்குப் பெரும்பான்மையான வழக்கங்களாக இருந்தன.$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1. இம் முத்திரைகள் ஐந்து வகையென்றும் மூன்று வகையென்றும் கூறப்படும்.
2. இச் செய்தியைச் சொன்னவர்கள் இச்சரித்திரத் தலைவர்களே.
3. இவ்வூர் திரிசிரபுரத்திற்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ளது; எண்ணெய் மாகாணமென்றும் வழங்கும்.
4. சமஸ்யை. சமஸ்யையை முடித்துப் பாடுவதிற் பேர் பெற்றவர்கள் காளமேகப் புலவர் முதலியோர்.
5. இது பழைய நூல்களில் ஓலைத் தூக்கு, ஓலைப் பாசுரம், திருமுகப் பாசுரம் எனவும் வழங்கப்பெறும். இவ் வகையான கவிகளை இயற்றுதலிற் பிற்காலத்திற் புகழ் பெற்றவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார் முதலியோர்.
6. துன்பகலும்படி கார் பெய்ய அருளென இயைக்க.
7. கணக்காயர் – உபாத்தியாயர்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s