-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
69. குறைகளை நிறையாக்கும் கருணாகரன்
.
ஜடதா பசு’தா கலங்கிதா
குடில சரத்வம் ச நாஸ்தி மயி தேவ/
அஸ்தி யதி ராஜமௌலே
பவதாபரணஸ்ய நாஸ்மி கிம் பாத்ரம்//
.
மூடமில்லை மிருகமில்லை களங்கமில்லை கோணலாம்
நடத்தையும் என்னிடத்தே யில்லையென் தேவனே
அவையெல்லாம் என்னிடத்தே இருந்திருப்பின் பிறைசூடி
அதுபோலே நானுமுன் ஆபரணம் ஆவேனே!
.
சிவபெருமான் கருணாமூர்த்தி. எந்தவிதப் பாகுபாடும் பார்க்காமல் பக்திக்காக உருகி வரங்களை அள்ளி வீசுபவர். பார்க்கப்போனால், குறைகள் இருப்பவர்களைத்தான் மிகவும் வாத்சல்யத்துடன் வாரியணைக்கிறார் பரமேஸ்வரன். அதனால்தான் மனிதர்கள், தேவர்கள் மட்டுமின்றி அசுரர்களும், விலங்குகளும்கூட சிவபெருமானை வணங்கியதாகப் புராணக் கதைகள் தெரிவிக்கின்றன.
.ஒரு தாய் எப்படி தனக்குப் பிறந்த குழந்தைகளைப் படித்தவர், படிக்காதவர், அழகுள்ளவர், அழகற்றவர், பலவான், பலவீனன், நல்லவர், கெட்டவர் என பேதம் பார்க்காமல் அன்பு செலுத்துகிறாளோ, அதனைப்போல உயிர்களின் தோற்றத்திற்கும், வாழ்வுக்கும், ஒடுக்கத்திற்கும் காரணமான சிவபெருமான் தாயுமானவனாக இருந்து பன்மடங்கு அன்பு பாராட்டி பக்தரை அரவணைக்கிறார்.
.தூய்மையானவர், உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர், ஞானமுள்ளவர், நல்ல குணங்களை உடையவர் ஆகியோரை மட்டும்தான் சிவபெருமான் ஆதரிப்பார் என்று கூற முடியாது. இதற்கு நேர்மாறாக இருப்பவர்களையும் கூட அவர்களது பக்தி காரணமாக ஏற்றுக்கொள்கிறார். அவர் ஏற்றுக்கொண்டால் போதாதா, குறைகள் நீங்கி நிறைவு ஏற்பட்டுவிடுமே!
சிவபெருமான் தீனபந்து. மிகவும் எளியவர். மங்களஸ்வரூபி. அவரிடம் தூய்மை- தூய்மையற்றது என்ற பேதமில்லை. ஏனெனில் அவரே தூய்மை வடிவானவர். அவரிடம் நெருங்கும் எதுவும் புனிதத் தன்மை பெற்றுவிடும். ஆகையால்தான் புலித்தோல், பாம்பு, மான், பிறைச் சந்திரன் போன்றவற்றையும் அவர் அணிந்திருக்கிறார். இதைத்தான் வஞ்சப்புகழ்ச்சியாக இந்த ஸ்லோகத்தில் கூறியிருக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
.அறிவற்ற ஜடமாகிய தோலாக நானில்லை. மான், பாம்பு போன்ற மிருகங்களாகவும் இல்லை. களங்கமுடையதும், தேய்ந்து மறைகின்ற கோணல் நடத்தை உடையதுமாகிய சந்திரனாகவும் நானில்லை. இதுபோன்ற குறைகள் எல்லாம் ஒருவேளை என்னிடம் இருந்திருந்தால், பிறை சூடிய பெருமானே உனது இரக்கத்திற்கும், அன்புக்கும் நானும் பாத்திரமாகி, உனது திருமேனியை அலங்கரிக்கும் ஆபரணங்களில் ஒன்றாக ஆகியிருப்பேனே என்று வேடிக்கையாகக் கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
(தக்ஷ பிரஜாபதியின் மகள்களாகிய 27 நட்சத்திரப் பெண்களை மணந்துகொண்ட சந்திரன், தனது மனைவிகளில் ரோகிணியை மட்டுமே நேசித்து மற்றவர்களை ஒதுக்கியதால், உடலழகு தேய்ந்துபோய் விடுமாறு தக்ஷனிடம் சாபம் பெற்றான். இதனால் சிறிது சிறிதாக உடல் தேயத் தொடங்கிய சந்திரன், சிவபெருமானை சரண் புகுந்ததால், உடலும் அதன் அழகும் மீண்டும் வளரும் வரம் பெற்றான். அதேநேரத்தில், தக்ஷணின் சாபமும் வீணாகக் கூடாது என்பதால் சந்திரன் 15 நாள் தேயும்படியும், 15 நாள் வளரும்படியும் சிவபெருமான் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. மேலும், தனது குரு பிருஹஸ்பதியின் பத்தினியையே மோகித்ததால் கோணல்புத்தி உடையவன் சந்திரன். அப்படியிருந்தும் அவனது பக்திக்காக இரங்கி அருள் செய்தார் சிவபெருமான். இதுபோன்ற துர்நடத்தை உள்ளவர்களும் வருந்தி, திருந்தி பக்தி செலுத்தினால் அவர்களுக்கும் நான் மதிப்பளிப்பேன் என்பதை உணர்த்தும் வகையில்தான் பிறைச்சந்திரனைத் தலையில் சூடியுள்ளார் சிவபெருமான்.)
$$$
–