-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
71. அழிவில்லா அரசாட்சி தருவோன்
.
ஆரூடபக்தி குண குஞ்சித பாவ சாப
யுக்தைச்’ சி’வஸ்மரண பாணகணை ரமோகை: /
நிர்ஜித்ய கில்பிஷ-ரிபூன் விஜயீ ஸுதீந்த்ரஸ்-
ஸானந்த மாவஹதி ஸுஸ்திர ராஜலக்ஷ்மீம்//
.
ஓங்கிய பக்தியாம் நாண்வளைத்து நற்பாவனை
தாங்கிய வில்பூட்டி வீண்போகா சிவத்யான
கணைதொடுத்து பாவங்களாம் பகையொழித்து வெற்றியாம்
துணையுடையோன் அழிவில்லா அரசாட்சி அடைவானே!
.
எவ்வளவு சிறப்பான பேரரசுகளும் ஒருகாலத்தில் அழிந்துவிடும், மண்ணோடு மறைந்துவிடும். ஆனால், சிவபெருமான் மீதான பக்தி சாம்ராஜ்யம், அவரது பாதார விந்தங்களில் உறைகின்ற முக்தி சாம்ராஜ்யம் அழிவற்றது. இதனை இந்த ஸ்லோகத்தில் அருமையாக விளக்குகிறார் பகவத்பாதர்.
.ஓங்கி உயர்ந்து உச்ச நிலையை அடைந்துள்ள பக்தி என்ற நாணை வளைத்து, சிறந்த எண்ணங்களாகிய நற்பாவனை என்கின்ற வில்லிலே அதனைப் பூட்டி, இலக்கைத் தவறாமல் எய்துகின்ற, வீண்போகாத சிவத்தியானம் என்ற கணைகளை அந்த வில்லின் மூலம் தொடுத்து, பாவங்களாகிய பகையை அழித்தொழித்து, வெற்றித் திருமகளின் துணையைப் பெற்றிருக்கும் சிறந்த புத்திமான், என்றுமே அழியாத சிவபெருமானின் கருணை வடிவான முக்தி சாம்ராஜ்யத்தை அடைகின்றான்.
$$$