-எஸ்.எஸ்.மகாதேவன்

13. “கலந்த சாதம், வகைக்கு ஒன்று … பார்சல்!”
இந்த வருஷம் ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3 அன்று வருகிறது; சிறு பிராய ஞாபகங்களின் வரிசையும் மனக்கண்முன் நீள்கிறது: ஒரே தெருக்காரர்களான 5, 6 குடும்பத்தினர் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சித்திரான்னம் எனப்படும் விதவித கலவை சாதம் கட்டிக்கொண்டு காவிரியை அல்லது தாமிரபரணியை அல்லது பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நதியை நோக்கி நடையைக் கட்டுவார்கள். அல்லது வண்டி கட்டுவார்கள். ஆற்றங்கரை மணல் பரப்பில் அன்று ஒரு வேளை சாப்பாடு அத்தனைபேருக்கும் பொது. ஆனால் அவரவர் வீட்டில் சமையல் செய்து எடுத்து வந்து பகிர்வார்கள். எந்த வீட்டில் இருந்து என்ன கலவை சாதம் என்று முன்கூட்டியே பேசியிருப்பார்கள். காலங்காலமாக நதியைப் பெண்ணாகப் போற்றும் நமது தொன்மை நாகரீகம் காரணமாக அன்றைய தினம் ஆற்றை வழிபடுவார்கள். அடுத்து கட்டுச்சோற்றை ஒரு கட்டுக் கட்டுவார்கள். எல்லாவற்றுக்கும் இடையில் ’கம்புக்கும் காவல், தம்பிக்கும் பெண் பார்த்த’ படலங்களும் அரங்கேறும்.

பல சமையலறைகளில் இருந்து பக்குவம் செய்து எடுத்துவந்து பொதுவாக அனைவரும் பங்கிட்டுக் கொள்வது ஆடிப்பெருக்கு அன்று மட்டும்தான் என்றில்லை, ஆண்டு முழுதுமே இதுபோல செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? இது ருசிகண்ட நாக்கின் கற்பனை அல்ல. ஊருக்குள் ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை. அது தவிர வறுமை. இதைச் சமாளிப்பதற்கு பொது சமையலறை (common kitchen) ஏற்படுத்தி ஆரோக்கியமான, ஊட்டம் மிகுந்த உணவை ஊருக்கே பரிமாறினால் என்ன என்று ஜனவரி மாதம் கேள்வி எழுப்பிய ஒரு பொதுநல மனு மீது பாரத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, இது பற்றி மத்திய, மாநில அரசுகள் தங்கள் கருத்தை தாமதிக்காமல் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ஆடிப்பெருக்கு ஐடியா அவ்வளவு வீச்சு கொண்டதாகத் தெரிகிறது!
பெருவர்த்தக நிறுவனங்கள் தங்கள் வேலைகளில் சிலவற்றை அவுட்சோர்சிங் செய்வது போல கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ”21 ம் நூற்றாண்டுக்கானது காமன் கிச்சன்’’ என்ற போக்கு காணப்படுகிறது. சமையலால் நகக்கண்ணில் அழுக்குப்படக் கூடாதாம், வீடு புகைபடியக் கூடாதாம். அதனால் அன்றாட சாப்பாட்டையே மக்கள் அவுட்சோர்சிங் செய்துகொள்கிறார்கள் என்று தகவல். அந்தப் பக்கத்து நாகரீகம் செய்த விபரீதம் பாருங்கள், அங்கே,”ஒற்றை நபர் குடும்பங்கள்” அதிகம். தனக்கு என சமைக்க நேரமில்லை; மனமில்லை. பார்சல் சாப்பாடே கதி!
நம்மூரில் இருந்து அங்கு போய் வசிக்கும் நம்மவர்களுக்கு அன்றாடச் சோறு அவுட்சோர்சிங் மனதுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் காமன் கிச்சன் முறையில் உள்ள லாபத்தையும் ருசிக்க வேண்டுமே? அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள்: அமெரிக்காவிலும் கனடாவிலும் ஏராளமான ஹிந்து கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் மனநிறைவு தரும் விதத்தில் சுத்தமாக இருக்கும். கூடவே கோயில் காமன் கிச்சன் (அதுதாங்க நம்ம மடைப்பள்ளி) வயிறு நிறையும் விதத்தில் நம்மூர் மெனுவை ஆக்கித் தள்ளும். சாமி கும்பிட்ட பிறகு நம்மூர்க்காரர்கள் வாரத்துக்கு ஒரு நாளாவது ’டெம்பிள் கிச்சன்’ ஐட்டங்களை கணிசமாக ருசிக்கிறார்கள். கோயிலுக்கும் வருமானம். ஒரு மதிப்பீட்டின்படி, பல கோயில் நிர்வாகங்கள் தங்கள் 40 சதவீத செலவை மடப்பள்ளி வருமானத்தைக் கொண்டே சரிக்கட்டுகின்றன. நம்மூர்க் காரர்களுக்கோ பக்திக்கு பக்தி, நாங்களும் 21 ம் நூற்றாண்டு மனிதர்கள் என்று காட்டிக் கொண்ட மாதிரியும் ஆயிற்று!

பல நாடுகளில் வீடுதோறும் சமையலறையை இல்லாமல் செய்துவிட முயற்சி தொடங்கியிருக்கிறது. சிங்கப்பூரில் வீட்டில் யாரும் சமைக்கக் கூடாது என்று அரசு சட்டம் போடாத குறை. வாடகைக்கு குடியிருப்போரிடம் வீட்டு உரிமையாளர்கள் சமைக்கக் கூடாது என்று கறார் நிபந்தனை விதிப்பதாக உறவினர்களைப் பார்த்துவிட்டு வர ஒரு நடை சிங்கப்பூர் போய்விட்டு வந்த நண்பர் சொல்கிறார். அது போன்ற நாடுகளில் பார்சல் சாப்பாடு வியாபாரம் செய்கிறவர்கள் காட்டில் மழை. சமைக்காமல் சாப்பிட்டு உயிர் வாழும் குடும்பங்கள் இது சிக்கனம் என்கின்றன. நாமே ஒரு மனக்கணக்கு போட்டு பார்ப்போமே? 4 குடும்பங்களில் 20 பேர்; காலையில் இருபது பேருக்கு காப்பி போட நாலு கேஸ் அடுப்புகள் பற்ற வைக்கப்பட்டாக வேண்டும். 20 பேருக்கும் ஒரே இடத்தில் காப்பி போடுவதாக இருந்தால் ஒரு அடுப்பு போதுமே? நம் நாட்டைப் பொறுத்த வரை எரிபொருள் சிக்கனம் என்றால் (சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டிய இன்றைய நிலையில்) யாரையும் கவர்ந்திழுக்கத் தானே செய்யும்?

அது சரி, ஒரு நாள், கிழமை என்றால் சுத்தபத்தமாக சாதம் வடித்து சாமிக்குப் படைத்து, வீட்டார் அத்தனை பேரும் ஒன்றாக உட்கார்ந்து அந்தப் பிரசாதத்தை ஏற்கும் நாகரிகத்தின் உச்சநிலைக்கு விடை கொடுத்துவிட வேண்டியது தானா? நமக்கு, திருத்தல யாத்திரையின்போது அன்னதானம் ஏற்பது பொருத்தமாகப் படுகிறது. சீக்கிய சகோதரர்கள் குருத்வாரா நிர்வாகம் செய்யும் போது அதில் லங்கர் (காமன் கிச்சன் போன்றது; இலவச உணவளிக்கும் மையம்) இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நம் வாழ்வில் காமன் கிச்சன் அவ்வப்போது தலைகாட்டுவதால் வீட்டில் சமையலறை இருந்தே தீரும், சமையல் நடந்தே தீரும், காரம் போதாது, உப்பு பற்றாது என்று குறைப்பட்டுக் கொள்வதும் தொடர்ந்தே தீரும்!
சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடப்போறேன் என்று நம் தாய்க்குலம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றாத வரை … பிழைத்தோம்!
முத்தாய்ப்பு:
வெளிச்சம் தேவைப்படும் ஒரு காட்சி
கொரோனோ முதல் அலை – இரண்டாம் அலை காலகட்டத்தில் மாதக்கணக்கில் பொது முடக்கம் நீடித்த நிலை. நம் நாட்டில் லட்சக்கணக்கான வீடுகளில் சமையலறை செயல்பட முடியாமல் போயிற்று. அந்த நாட்களில் வரலாறு காணாத அளவில் காமன் கிச்சன்கள் தொடங்கி ஊருக்கே சோறு போட சமையல் நடந்தது. பெருந்தொற்று அபாயத்துக்கு நடுவில், வீடு வீடாகப் போய் மக்களுக்குப் பரிமாறி விட்டு வந்தவர்கள் 5 லட்சம் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள். “அன்பு காட்டும் தாய்நாடே! உன்னால் சுகமாக வளர்க்கப் பட்டவர்கள் நாங்கள் ” என்ற உணர்வு காரணமாக அதை பாரத மாதாவுக்கு செய்யும் சேவையாக அவர்கள் கருதினார்கள்: உண்டி கொடுத்தார்கள்; உயிர் கொடுத்தார்கள்.
$$$