பாரதியின் தனிப்பாடல்- 24

-மகாகவி பாரதி

முன்னுரை:

நவம்பர் 1905-ல்  ‘சக்ரவர்த்தினி’ இதழில் பாரதியார்  ‘வேல்ஸ் இளவரசரும் இளவரசியாரும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலே இவ்வாறு கூறுகிறார்:

“எதிர்காலத்தில் இந்தியாவின் சக்ரவர்த்தியாகப் பட்டம் வகிக்கப் போகின்ற இந்த இளவரசர் இந்த தேச முழுவதிலும் யாத்திரை புரிந்து, இத்தேசத்தைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற சிறந்த எண்ணத்துடன் வந்திருக்கின்றா ராதலால், அன்றைய தினம் எமது பாரத மாதா (இந்திய நாடு) தனக்கேற்பட்டிருக்கும் பல துன்பங்களையும் சிறிது மறந்து, மந்தஹாஸம் பூண்டு, இளவரசருக்கும் அவர் மனைவிக்கும் நல்வரவு கூறினாள்.”

இக்கட்டுரைக்குப் பின்னர் பாரதி ஆய்வாளர் சீனி.விசுவநாதன் பின்வருமாறு எழுதுகிறார்:

“வேல்ஸ் இளவரசர் வருகையால் இந்தியாவிற்கு ஏதேனும் ஒருவகையில் நல்லது நடக்கும் என்று, இந்திய நாட்டுத் தலைவர்களில் ஒருசிலரும், காங்கிரஸ் ஜன சபையாரும் கருதினர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அதுபோது செல்வாக்குள்ள பத்திரிகையாளராகவும், சுதேசியச் சிந்தனைகளில் ஊறித் திளைத்தவராகவும் திகழ்ந்தவர் திரு.ஜி.சுப்பிரமணிய ஐயர்தாம். ஜி.சுப்பிரமணிய ஐயரும், அவர்தம் ‘சுதேச மித்திரன்’ பத்திரிகையும் வேல்ஸ் இளவரசரின் இந்திய விஜயம் பயன்தரும் என நம்பியதால், இளவரசருக்கு உபசரணை செய்ய முன்வந்ததில் யாரும் குற்றம் காணவில்லை.

பாரதியும் அச்சமயம் ‘சுதேச மித்திரன்’ தினப்பத்திரிகையில் துணை ஆசிரியராகவும், ‘சக்ரவர்த்தினி’ மாதப் பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். மற்ற தேசியத் தலைவர்களைப் போலவே பாரதியும் இந்தியர் தம் மன வருத்தங்களை மறந்து வேல்ஸ் இளவரசரை வரவேற்பதிலே தவறேதும் கிடையாது என்றே கருதினார். கருதிய அளவில் பாரதி வேல்ஸ் தம்பதியருக்கு நல்வரவு கூறினார்; அதுவும் பாரதமாதாவே தனக்கு ஏற்பட்டிருக்கும் பல துன்பங்களைச் சிறிது மறந்து மகிழ்ச்சியுடன் நல்வரவு கூறினாள் என்று எழுதியது பாரதியின் எழுதுகோல். வரவேற்பு உபசரணைகளையும், வாண வேடிக்கை வீண்செலவுகளையும் குறைத்துக் கொண்டு நிரந்தரமாகப் பெண்களுக்கென ஓர் பள்ளி சென்னை நகரிலே ஏற்படவேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தினார் பாரதி என்பதைக் இக்கட்டுரை மூலம் அறியலாம்.”

1906 ஜனவரி ‘சக்ரவர்த்தினி’ இதழிலும்  ‘சென்னையில் ராஜ தம்பதிகள் வரவு’ என்ற தலைப்பில் பாரதியார் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நவம்பர் 1905- இதழில் பாரதி எழுதியக் கட்டுரையுடன் தொடர்புபடுத்தியே இக்கட்டுரையையும் அணுக வேண்டும் என்று  ‘காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ தொகுப்பு நூலின் பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன் எழுதியிருக்கிறார்.

பின்னர் 29-01-1906 அன்று  ‘சுதேசமித்திரன்’ இதழில் – “வேல்ஸ் இளவரசருக்குப் பரத கண்டத்தாய் நல்வரவு கூறுதல்” என்கிற பாரதியின் கீழ்க்கண்ட கவிதை பிரசுரமானது. இக்கவிதையில், அந்நியர் ஆட்சியில் இந்தியர் அடைந்த துயரங்களிலிருந்து நமது மக்களை ஆங்கிலேய ஆட்சி காத்த்து என்று குறிப்பிடும் பாரதி, அவர்களால் ஏற்பட்டுள்ள தொல்லைகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. எனினும் வேல்ஸ் இளவரசரை    ‘அதிதி தேவோ பவ’ என்ற கருத்தாக்கத்துடன் வரவேற்று மகிழ்கிறார் மகாகவி பாரதி.

24. வேல்ஸ் இலவரசருக்கு நல்வரவு

ஆசிரியப்பா

வருக செல்வ!வாழ்கமன் நீயே!
வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்
பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த
நற்றவக் புதல்வ! நல்வர வுனதே!
மேதக நீயும்நின் காதலங் கிளியும்

என்றனைக் காணுமா றித்தனை காதம்
வந்தனிர்! வாழ்திர்! என் மனம்மகிழ்ந் ததுவே
செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்.

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில.
போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?
மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின.

போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதிபெற் றுய்வ ராயினர். எனவே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிதர லுற்றனள், பொருள்செயற் குரிய
தொழிற்கணம் பலப்பல தோன்றின; பின்னும்

கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம், இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால்.

மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என்
பாலரின் மீது படுதலுற் றனவே.
ஆயினும் என்னை? ஆயிரங் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை.

நல்குர வாதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால்
எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்
நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.
நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு

மருத்துவ ராக வந்தனர் என்பதூஉம்
பொய்யிலை. ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில
நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!
என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி
இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி

ஒருவரை யொருவர் ஒறுத்திட லிலாது,
செவ்விதின் வாழ்க! அச் சீர்மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!
வாழ்க நீ! வாழ்கநின் மனமெனும் இனிய
வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்!
மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!

  • சுதேசமித்திரன் (29.01.1906)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s