-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
72. திருப்பாதம் என்னும் நற்புதையல்
.
த்யானாஞ்ஜனேன ஸமவேக்ஷ்ய தம: ப்ரதேச’ம்
பித்வா மஹாபலிபி– ரீச்’வரநாம மந்த்ரை:/
திவ்யாச்’ரிதம் புஜகபூஷண முத்வஹந்தி
யே பாதபத்ம மிஹ தே சி’வ தே க்ருதார்த்தா://
.
தியானமென்னும் மையாலே நற்புதையல் தானறிந்து
நாமமென்னும் மந்திரத்தால் இருள்பிளந்து பலிகொடுத்து
தேவரெல்லாம் தொழுதிட்ட பாம்பணிந்த பாதபத்ம
தூயநிதி எழுப்பிட்டோன் வாழ்பயனை அடைந்தானே!
.
பொற்குவியல்கள் கொட்டிக் கிடக்கும் புதையலைக் காண விரும்புவோர் மந்திர மை போட்டு அதனை அறிந்துகொண்டு, பலிச் சடங்குகளை நடத்தி அதனை அடைய முயல்வர். பக்தர்களுக்கு சிவபெருமானின் திருவடிகளே நற்புதையலாகும். அந்த நற்புதையலின் இருப்பிடத்தை சிவபெருமான் மீதான தியானம் என்கின்ற மையின் மூலமாக அறிந்துகொள்ள முடியும். இருள் சூழ்ந்திருக்கும் இந்த உலகினிலே, சிவபெருமானின் நாம மந்திரங்களே, அந்த நற்புதையலை நாம் காண்பதற்கான ஒளியாக அமைகின்றன.
.அதாவது அறியாமையாகிய இருளை அகற்றி, இறைவன் குறித்த ஞான ஒளியை அவரது திருப்பெயர் துதிகளே நமக்குத் தருகின்றன. அந்தத் திருநாம உச்சரிப்பே, நற்புதையலை சூழ்ந்துகொண்டிருக்கும் குட்டி தேவதைகளாகிய தேவர்களை மகிழ்விக்கும் பலி பூஜையாகவும் அமைகிறது. அதன் மூலம், தேவர்களால் சூழ்ந்து தொழப்படுகின்ற, சிவபெருமானின் பாத பத்மமாகிய நிதி மேலே எழும்புகிறது. அந்த நிதியைப் பெற்றவன், வாழ்க்கைக்கான அர்த்தத்தை, அதன் பயனை அடைந்தவனாகிறான்.
$$$