விவேகானந்த பஞ்சகம்

-சுவாமி விபுலானந்தர் 

வணக்கத்திற்குரிய சுவாமி விபுலானந்தர்  (1842- 1947) இலங்கையைச் சார்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி; ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழின் முதல் சந்நியாச ஆசிரியர். தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த முன்னோடி  ஆராய்ச்சியாளர். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது அரிய கவிதை இது…

வாழியநின் றிருநாமம்! வாழியவிந் நாடு

வையகமே சிறந்ததென வானகத்தோர் வழுத்த

ஆழியிறை யுலகிருந்தோ அரனுலக மிருந்தோ

அருமுனிவ  ருலகிருந்தோ அவனிமிசை யடைந்தாய்?

அடைந்ததுவும் அருட்டிறத்தின் சிறப்பையுரைப் பதற்கோ?

ஆண்மையிது வெனக்காட்டிக் கீழ்மையகற் றுதற்கோ?

முடிந்தமுடி பாகியவே தாந்தத்தின் பொருளை

மொழிந்தவித்தை தனையகற்றி முத்திநிலை தரற்கோ?

நிலையிழிந்த பாரதத்தின் குறையனைத்து நீக்கி

நிலைநிறுத்தும் பொருட்டோவிந் நிலவுலகின் மாந்தர்

கலைமொழிந்த பொருளனைத்துங் கடந்து நின்றவுண்மைக்

கந்தழியைச் சார்வதற்கோ வந்தனைசீர்க் குருவே!

சீர்மருவு காசினியில் ஞானவொளி பரப்பத்

தேயத்துட் பாரதமே சிறத்ததென விசைப்ப

ஈரிருபா னாண்டுறைந்தா யெமதுதவக் குறையோ

இளவயதி லெமைவிடுத்தா யளவிலருட் கடலே!

அருட்செல்வஞ் செல்வமென அருந்தமிழ் வள்ளுவனார்

அறைந்தமொழிப் பொருளுணர்ந்தோய்! அருந்துறவோர்க் கரசே!

பொருட்செல்வம் மனைசுற்றம் புகழ்துறந்த நினக்குப்

புவியனைத்துஞ் சுற்றமே;  புகழனைத்தும் நினதே.

வாழியநின் றிருநாமம்!  வாழிய விந் நாடு!

 $$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s