மகாவித்துவான் சரித்திரம்- 2(14)

-உ.வே.சாமிநாதையர்

மகாவித்துவான் அவ்வப்போது எழுதிய தனிச் செய்யுட்கள், அன்பரைப் பாராட்டிய செய்யுள்கள், கடிதப் பாடல்கள், சிறப்புப் பாயிரப் பாடல்களில் கிடைத்தவற்றை அனுபந்தமாக பிற்சேர்க்கையில் இணைத்து வழங்கி இருக்கிறார் உ.வே.சா....

இரண்டாம் பாகம்

அநுபந்தம் 2

தனிச் செய்யுட்கள்

கடவுள் வணக்கங்கள்

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகப் பெருமான்.

(வஞ்சித்துறை.)

1. வெள்ளை வாரணப், பிள்ளை யார்பதம்
உள்ளு வார்மனக், கள்ள மாறுமே.


திருக்கற்குடிமாமலைச் சிவபெருமான்

(ஆசிரியவிருத்தம்.)

2. தலையானை முகற்பெறுமைந் தலையானை யரைக்கிசையத் தரித்த புற்றோற்
கலையானை யமுதமதிக் கலையானைச் செஞ்சடைக்கா டலைக்குங் கங்கை
அலையானை யிறந்துபிறந் தலையானைக் கடற்பிறந்த அடுநஞ் சுண்ண
மலையானைக் கற்குடிமா மலையானை யனுதினமும் மனத்துள் வைப்பாம்.

(தலை – தலைமை. புற்றோற்கலை – புலித்தோலாகிய ஆடை. மதிக்கலை – பிறை. உண்ண மலையானை – உண்ணுதற்கு மயங்காதவனை. இதில்
அடிதோறும் மடக்கு அமைந்துள்ளது.)


திருப்பாதிரிப்புலியூர்ப் பெரியநாயகி யம்மை

(குறள் வெண்பா)

3. ஒண்பா திரிப்புலியூ ருட்பெரிய நாயகித்தாய்
தண்பாதப் போதே சரண்.


திருவம்பர் வம்புவனப் பூங்குழல் நாயகி

(கீர்த்தனம்.)

ராகம் – தர்பார்.

பல்லவி

4. வம்புவனப் பூங்குழல்நின் அருளே – இந்த
மாநிலத்து மேனிலத்து மாறாத பொருளே.
அனுபல்லவி.

அம்பரம ரெம்பரமர் ஐந்தொழில்பு ரிந்துகிளர்
நம்பமர்பெ ருந்துணையெ னும்படிகி ளர்ந்துவளர் (வம்பு)
(இக் கீர்த்தனத்தின் எஞ்சிய பகுதிகள் கிடைக்கவில்லை.)

(நாமாவளி.)

5. பரமசை யோகவி நாயக ஆதி
படிக்கா சுத்திருப் பெயர்ச்சுயஞ் சோதி.
6. சரவண பவசுர லோக வுதாரா
தற்பர ஞானவி னோத குமாரா.
7. அருவுரு வாகிய போதா திருவா
வடுதுறை மேவிய சற்குரு நாதா.

(திரு அம்பரில் பிள்ளையவர்கள் இருந்தபொழுது அங்கே பஜனை பண்ணிக்கொண்டிருந்த அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சில நாமாவளிகள் இயற்றினார்கள். அவற்றுள் கிடைத்தவை இம்மூன்றே).

அன்பர்களைப் பாராட்டிய செய்யுட்கள்

அப்பாத்துரை முதலியார்

(வெண்பா)

8. தாணுமுடி மேலதுவுஞ் சங்கரிமுன் மேய்த்ததுவும்
பேணுஞ் சுவேதரையே பேசுவதும் – வாணிகர்கள்
வைப்பா யிருப்பதுவும் வந்தவரைக் கேட்பதுவும்
அப்பாத் துரைமுதலியார்.

(இது நிரனிறையின்பாற்படும். தாணு – சிவபெருமான். சங்கு அரி – சங்கை உடைய திருமால். சுவேதர் – வெள்ளைக்காரர். வைப்பு – சேம நிதி. அப்பாத்துரை முதலியார் என்னும் தொடரை, அப்பு (நீர்), ஆ (பசு), துரை, முதல், யார் எனப் பிரித்து, தாணு முடிமேலது அப்பு, சங்கு அரி முன் மேய்த்தது ஆ, சுவேதரையே பேசுவது துரை, வாணிகர்கள் வைப்பாயிருப்பது முதல், வந்தவரைக் கேட்பது யார் என முறையே முடித்துக்கொள்க.)


ஆறுமுகத்தா பிள்ளை

தம் புத்தகத்தைப் பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை ஒளித்து வைத்தபோது அதனைத் தர வேண்டுமென்று சாமிநாத பண்டாரம் பாடியதாக இவர் இயற்றியளித்த செய்யுள்.

(ஆசிரியவிருத்தம்)

9. சீர்பூத்த புகழ்பெருத்த வாறுமுக பூபாலா செறிந்தோர் யார்க்கும்
பார்பூத்த சோறூட்டிப் புத்தகமும் ஈயவல்ல பண்ப னீயே
ஏர்பூத்த சந்தனப்பூச் சில்லையென்றாய் மேற்பூச்சென் றிருந்தேன் யானும்
வார்பூத்த புத்தகத்தை யொளித்தாயேல் வெளிப்படுத்த வல்லார் யாரே.


இராகவையங்கார்

(கட்டளைக் கலித்துறை)

10. வாரா கவன நகின்மா நிறங்கொண்ட மாதவன்றன்
பூரா கவனச மொத்தபொற் றாளிணை போதுதொறும்
ஏரா கவன மருச்சித் திறைஞ்சுது மெண்மறைதேர்
சீரா கவற்கெழிற் கல்வியுஞ் செல்வமுஞ் சித்திக்கவே.

(இராகவையங்கார் : பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவர். வார் ஆக வன்ன நகில்; வார் – கச்சு; ஆகம் – மார்பு. மா – இலக்குமியை. நிறம் – திருமார்பில். பூராக வனசம் – செந்தாமரை மலர்; பூ – பொலிவு; ராகம் – சிவப்பு. ஏராக – அழகாக. வனம் – திருத்துழாயால்.)

கோயிலூர்ச் சிதம்பர ஐயா

(கட்டளைக்கலித்துறை)

11. சீரார் கழனிச் சிதம்பர தேசிகன் செய்யகையால்
ஏரார் தரவருள் செய்மா நிதியையென் னென்றுரைக்கேன்
நீரார் சிந்தா மணியென் கோவிரண்டு நிதியமென்கோ
ஆரார் தரவறி வாரவன் பேரரு ளாயினதே.
(இது கோயிலூர்ப் புராணம் இயற்றி அரங்கேற்றிய பின்னர், சிதம்பர ஐயா ஸம்மானம் செய்தபொழுது பாடியது. கழனி – கோயிலூர்.)


தேவகோட்டை, சிந்நயச்செட்டியார்.

இவர் வன்றொண்டருடைய மாணாக்கர்; இவரைப் பார்த்தவுடனே பிள்ளையவர்கள் சொல்லியது.

(வெண்பா)

12. வன்றொண்டன் வார்த்தை மரீஇயென் செவிவழிபுக்
கின்றொண்ட நீயமர்ந்தா யென்னிதயத் – தின்றொண்டன்
அல்லனென வோவெளிவந் தாய்சிந் நயவேளே
செல்லவிடு வேன்கொல்புறத் தே.

(இன்று ஒண்டன்; ஒண்டன் – ஒண்டியிருப்பவன்.)

சுப்பிரமணிய தம்பிரான்

(ஆசிரிய விருத்தம்)

13. வாதவூ ரடிகளுக்கு மாலியானைப் புரூரவா மன்னர் கோமான்
பேதமிலா கமப்படியே முன்னாளி னடத்தியவப் பெருவி ழாவை
ஏதமிலா கமப்படியே யிந்நாளு நடத்திவரும் இயல்பு பூண்ட
போதமலி துறைசையெஞ்சுப் பிரமணிய முனிவர்பிரான் புகழ்மேல் வாழ்க.

(இது திருப்பெருந்துறைப் புராணத்தின் இறுதிச் செய்யுளாக முதலில் இயற்றப்பட்டது.)

பக்கிள் துரை

திருநெல்வேலி ஜில்லா, தரம் பைஸல் கலெக்டராக இருந்த பக்கிள் துரைமீது சுப்பிரமணிய தேசிகர் விருப்பத்தின்படி பாடியவை.

(ஆசிரிய விருத்தம்)

14. மிக்குளபே ரிரக்கமுளாய் குடிகளெனும் பயிர்க்கினிய மேகம் போல்வாய்
இக்குளசா றெனவென்று நயமொழியே பேசிடுவாய் எக்கா லத்தும்
தக்குளகாட் சிக்கெளியாய் பெருஞ்சினத்துங் கையிகந்த தண்ட மில்லாய்
பக்கிளெனும் பெயருடையாய் நின்கீர்த்தி யெவராலும் பகரொ ணாதே.

(இக்கு – கரும்பு. கை இகந்த – வரம்புகடந்த)


15. மறிவில்பெருங் கீர்த்தியினான் பக்கிளெனும் பெயர்பூண்ட வளஞ்சான் மன்னன்
நெறிவழுவா காதவிதம் வரையனைத்துஞ் சாரல்மிக நிரம்பு மாறு
செறிவுபெறத் தருவொருவர் தறியாது வளர்த்துவரும் செய்கை யாலோர்
அறிவுயிரு மினையவெனில் மற்றையுயி ரெனையவெவர் அறைதற் பாலார்.
16. நெடியபுகழ் படைத்தபக்கி ளெனும்வேந்த னடத்திவரு நீதி நோக்கிப்
படியமையும் பன்னாட்டுப் பலகுடியெ லாமொருதென் பாண்டி நாட்டே
குடியமையக் கொளனினைக்கு மிடம்போதா வண்ணமுளம் குறித்தன் னானே
தடிவதறத் தமக்குரிய நாட்டுவரத் தவம்புரியுந் தவாம லன்றே.

17. இரவுவழி நடக்கலாங் கைநிறையப் பொருளேந்தி இவனாற் றீய
கரவுபுரி பவரொழிந்தார் கொலைஞருமெவ் வுயிரிடத்துங் கருணை செய்வர்
உரவுமழை முகின்மதியந் தொறுமுக்கா லுறப்பொழியும் உயர்ச்சி மேவப்
புரவுபுரி பக்கிள்மன்ன னதிகாரத் தெனிலவன்சீர் புகழ்வார் யாரே.

18. வாழ்ந்தோமென் றுரைப்பாரு மேன்மேலு நாமடைந்த வறுமை மாறப் போழ்ந்தோமென் றுரைப்பாருஞ் செழித்தோமென் றுரைப்பாரும் பொருமல் தீர்ந்து
தாழ்ந்தோம்பே ரின்பத்தென் றுரைப்பாரு மல்லாமற் றாவாத் துன்பத்
தாழ்ந்தோமென் றுரைப்பார்க ளொருவரிலை பக்கிள்மன்னன் அதிகா ரத்தே.

இராமநாதபுரம் பொன்னுசாமித் தேவர்

பொன்னுசாமித் தேவர், ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை மதுரைக்கு அழைத்துத் தம்முடைய பங்களாவில் எழுந்தருளச் செய்து மிகச்சிறப்பாக மகேசுவர பூஜை, பட்டணப் பிரவேசம் முதலியன செய்வித்ததையும் துதியாகச் சில பாடல்களை இயற்றி விண்ணப்பித்ததையும் அறிந்து அச்செயலைப் பாராட்டிப் பிள்ளையவர்கள் பின்வரும் செய்யுட்களை இயற்றி எழுதியனுப்பினார்கள்:

(ஆசிரிய விருத்தம்)

19. கொத்துமலர்ப் பொழிற்றிருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவ னந்நாள்
நந்துதன தடியரமு துணவிடமுண் டதையுணர்ந்து நயப்புற் றிந்நாள்
வந்துபல ரொடுமமுதே யுண்டுவக்கும் படிசெய்தாய் வண்மை யோருள்
முந்துபெருங் கொடைப்பொன்னுச் சாமிமன்னா நின்சீர்த்தி மொழிவார் யாரே.

20. ஒருதிருவா வடுதுறைச்சுப் பிரமணிய தேசிகன்முன் ஒளிர்பொன் னாதிப்
பெருமலைவைத் திருந்துமென்பா திகள்புனைந்த பழிதீரப் பிறங்கு பொன்னால்
வருமணியா லலங்கரித்துத் திருநெடுமா லென்றுரைக்கும் வண்ணஞ் செய்தாய்
தருநிகருங் கொடைப்பொன்னுச் சாமிமகி பாவிதுவும் தகுதி யாமே.

21. சொன்னயமும் பொருணயமு மணிநயமுங் கற்பனையாச் சொல்லா நின்ற
நன்னயமுந் தொடைநயமும் வனப்புநய மும்பிறிது நாட்டா நிற்கும்
எந்நயமுஞ் சிற்சிலவே பிறர்க்கமையு நினக்கமைந்த எல்லா மென்னிற்
பன்னயமு முணர்பொன்னுச் சாமிமகி பாநினது பாட்டெற் றாமே.

22. செறிபொழிலா வடுதுறைச்சுப் பிரமணிய தேசிகனாம் சிவனை நாளும்
பொறிவளர்வண் டுவாதசாந் தத்தலத்து வரவழைத்துப் பூசை செய்தாய்
நறியமலர்த் தொடைத்தடந்தோட் பொன்னுச்சா மிச்சுகுண நரேந்த்ர நின்னை
அறிவின்மிகப் பெரியனென யாவருஞ்சொல் வாரதனுக் கைய மின்றே.

(துவாதசாந்தத் தலம் – மதுரை.)


வேங்கடாசாரியர்

திருநெல்வேலி, தரம் பைஸல் டிப்டிகலெக்டர் வேங்கடாசாரியர் மீது திருவாவடுதுறை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் கட்டளையின்படி செய்யப்பட்டவை:

(ஆசிரிய விருத்தம்)

23. அதிகாரந் தனக்களித்த வேந்தனுக்கு நட்டமுறா தவன்கோற் கீழாய்ப்
பிதிராத குடிகளுக்கு நட்டமுறா தாராய்ந்து பெருக நாடித்
திதியாளு மிருவர்களு மனமகிழ முறைநடத்துஞ் செல்வ னாய
மதிமேய வேங்கடா சாரியமால் போற்பிறர்க்கு வருத லாமோ.

24. சொல்லாரும் பிரபலமா மதிகார நாடோறும் துணிபிற் செய்வார்
எல்லாரும் வேங்கடா சாரியைப்போற் பெருங்கீர்த்தி இயைந்தா ரல்லர்
வில்லாரு மஃதியையா விதமென்னை யென்றென்னை வினவு வீரேற்
பல்லாரும் புகழவுயர் கண்ணோட்ட மில்லாத பாவந் தானே.

25. பாடுதொழி லாளரெலா மிவன்புகழே பாடுதற்குப் படித்தோ மென்பார்
ஏடுகொள வுலகிலுள பனையனைத்தும் போதாவென் றிரங்கா நிற்பார்
காடுமலி பசுந்துழாய்க் கண்ணியா னடிக்கன்பு கலந்தோ னாய
நீடுகுண மலிவேங்க டாசாரி தன்பெருமை நினைந்து தானே.

26. உரவுமலி கடற்புடவி முழுதோம்பும் பெருங்கருணை உடைய கோமான்
அரவுமிசைப் படுப்பவனென் றவன்றரந்தேர்ந் தவற்புகழ்வோ னாத லாலே
கரவுதவிர் தரவேங்க டாசாரி தரந்தேரும் கடன்மை பூண்டு
விரவுபல குடிகளுக்கு முபகாரஞ் செய்வனெனின் விளம்ப லென்னே.
(தரம் தேரும் கடன்மை – நிலத்தின் தரம் அறிந்து வரி விதிக்கும் உரிமை.)

முன்ஸீப் வேதநாயகம் பிள்ளை

வேதநாயகம் பிள்ளை திருவாவடுதுறைக்கு வந்து ஆதீனகர்த்தர் மீது சில செய்யுட்களை இயற்றிச் சொல்லிக் காட்டியபொழுது பிள்ளையவர்கள் இயற்றியவை.

(கட்டளைக் கலித்துறை)

27. தருவேசிந் தாமணி யேயென்று பாவலர் சாற்றிடவும்
பொருவேது மின்றியுந் தானே தனக்கொத்துப் பூமிசையே
இருவே றுலகத் தியற்கைக் குறளை யெதிர்மறுத்து
வருவேத நாயக மானீடு வாழ்கவிம் மாநிலத்தே.

28. தேனென் றெடுத்துப் புகல்கோ வடித்திடுந் தெள்ளமுதம்
தானென் றெடுத்துப் புகல்கோ சிறந்த தமிழ்ப்புலவோர்
வானென் றெடுத்துப் புகல்வேத நாயக மால்கவியை
நானென் றெடுத்துப் புகல்வோரு முண்டுகொல் நானிலத்தே.

கடிதப் பாடல்கள்

பிள்ளையவர்கள் எழுதிய கடிதங்களின் தலைப்பில் அமைத்த செய்யுட்களிற் சில வருமாறு. இவற்றிற்குரிய கடிதங்கள் கிடைக்கவில்லை.

அரியநாயகம் பிள்ளை  

(கலி விருத்தம்)

29. அரிய நாயகம் பிள்ளை யவர்களுக்
குரிய காகித மொன்றுமா யூரமா
புரியி லேகல்வி போதிக்குஞ் சாலையில்
துரித மாகவே தோன்ற வருவதே.

கலியாணசோழபுரம் அருணாசலம் பிள்ளை

(ஆசிரிய விருத்தம்)

30. அலங்கொருகைத் துடியாற்ற லபயகரம் போற்றலழல் அனைத்து நீற்றல்
இலங்கொருதாண் மயக்கலினி தெடுத்ததா ளருளலிவை என்று மோங்கத்
துலங்கொளிச்சிற் றம்பலத்து நடநவிலு நவிலரும்வான் சோதி மேவி
மலங்குதலி லாமனத்து வள்ளலரு ணாசலவேள் மகிழ்ந்து காண்க.

(இச்செய்யுள் எழுதப்பட்ட காலம் ரெளத்திரி ஆண்டு, மார்கழி மாதம் 30 – ஆம் தேதியென்று வேறு ஒரு கடிதத்தால் தெரிந்தது.)

கலியாண சோழபுரம் ஐயாறப்ப பிள்ளை
(விபவ ஆண்டு ஆனி மாதம் 12ஆம் தேதி)

31. மெய்யா றடைந்து, பொய்யா றகன்று
கையா றிரித்த, ஐயா றப்ப முகிலுக்கு.

சரவண பிள்ளை
(இவர் மாயூரம் முதலிய இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர்.)

(கொச்சகக் கலிப்பா)

32. உரைசிறந்த நயகுணனு முபகாரம் புரிதிறனும்
வரைசிறந்த புயத்தரசர் வழியொழுகு நுண்ணறிவும்
விரைசிறந்த பிரபலமு மேவுதலா லெஞ்ஞான்றும்
தரைசிறந்த சீர்படைத்த சரவணவே ளிதுகாண்க.

கலியாணசோழபுரம் சிதம்பரம் பிள்ளை

(ஆசிரிய விருத்தம்)

33. சிவபெருமான் றிருவுருவ நோக்குபணி விழிக்காக்கிச் சிறந்த வந்த
நவவடிவோன் றிருநாம நவிற்றுமொரு பெரும்பணிநன் னாவிற் காக்கி
அவமிலவன் றிருவடிகள் சிந்திக்கும் பணியென்றும் அகத்துக் காக்கும்
தவமுடைய நயசுகுண சிதம்பரப்பேர் வள்ளலிது தகவிற் காண்க.

கோயிலூர், சிதம்பர ஐயா

(கொச்சகக் கலிப்பா)

34. இதம்பரவு பிரமசபை யிடத்தினிது வீற்றிருந்து
முதம்பரவப் பொழிதருகொண் மூவெனச்சொன் மழைபொழிந்து
பதம்பரவு மடியவர்க்குப் பாசமொழித் தின்பருளும்
சிதம்பரதே சிகவினிது திருக்கண்ணால் நோக்குகவே.

தரங்கம்பாடி வக்கீல் செளந்தரநாயகம் பிள்ளை

(ஆசிரிய விருத்தம்)

35. சீர்பூத்த கல்வியறி வொழுக்கமுதற் பலவானுஞ் சிறப்புற் றோங்கி
நார்பூத்த தொன்றுதொடு நட்பினைப்பெட் புறநாளும் நனிபா ராட்டிப்
பார்பூத்த பெருங்கீர்த்திப் படாம்போர்த்தி யாவருக்கும் பயனா மேவும்
தார்பூத்த வரைத்தடந்தோட் சவுந்தரநா யகமகிபன் தகவிற் காண்க.

வேறுவகைப் பாடல்கள்

திரு. பட்டாபிராம பிள்ளையின் விருப்பத்தின்படி பாடி யளித்தவை

(ஆசிரிய விருத்தம்)

36. நல்லொழுக்கந் தலைநின்றா னதுநிலைத்தற் காங்கலைகள் நயப்ப வோர்ந்தான்
இல்லொழுக்க மதுபூண்டான் றுறவொழுக்கந் தலையெடுத்தற் கியன்ற செய்வான்
புல்லொழுக்கம் பூண்டார்தம் முகம்பாரா னடுநிலைமை பொருந்தப் பார்ப்பான்
சொல்லொழுக்க மனைத்துமொரு வடிவுகொண்டா லெனப்பொலியுந் தூய னேயன்.

37. விளங்கதிகா ரத்தொடுகண் ணோட்டமுமுள் ளான்சிறப்பு மேன்மே னல்கும்
களங்கமின்ஞா னத்தினொடா சாரமுமுள் ளானளவாக் கவிக ளீனும்
வளங்கெழுமு கொடையினொடின் மொழியுமுளா னெஞ்ஞான்று மாறு றாது
துளங்கலிலாத் தெய்வபத்தி குடியிருக்கு மாலயமாம் சுமன முள்ளான்.

38. விரும்பிருகண் டனக்கென்ன விராவுமிரு கனிட்டருளான் வெய்ய தீமை
அரும்புமழுக் காறாதி கனவிலுமில் லான்குடிகள் அனைத்தி னுக்கும்
பெரும்புகழ்சா லரசினுக்கு நன்மையே யுண்டாதல் பேணிச் செய்வான்
இரும்புவியோர் கொண்டாடும் பட்டாபி ராமனெனும் இயற்பே ருள்ளான்.

39. இத்தகைய வள்ளலைப்பெற் றெடுத்தவனி யாவர்க்கும் இனிய சொல்வான்
உத்தமநற் குணங்களெல்லா முறைவதற்கோ ராலயமா உள்ளா னென்றும்
வித்தகமாற் கன்புள்ளான் வேங்கடா சலநாமம் விளங்கப் பூண்டான்
சத்தமையு மறம்பொருளின் பனுபவித்து முற்றியபின் தவத்தின் பேற்றால்

40. சீர்பூத்த விரோதிகிரு தாண்டிடப மதிப்பதினாற் றேதி நாளும்
ஏர்பூத்த மதிவார மபரபக்கந் துவாதசியாம் இனைய நாளில்
ஆர்பூத்த பிரகிருதிக் கப்பாலாம் விரசையெனும் ஆற்றை நீந்திப்
பார்பூத்த பரமபத மண்டபநித் தியசூரிப் படிவுற் றானே.

41. இனையபுகழ் வேங்கடா சலமகிபன் மனைக்குரிமை இயையப் பூண்டாள்
புனையவரு மில்லறத்திற் காமெவையுங் காலத்தே பொருந்த வீட்டி
நனையமொழி யொடுயார்க்கும் பதமருத்திப் பசியவிக்கு நலத்தான் மிக்காள்
கனையவிருந் தவன்பணியே தலைக்கொண்டு மழைக்குதவும் கற்பு வாய்த்தாள்.

42. பரவுபுகழ்ச் சின்னம்மை யெனும்பெயர்பூண் டவள்பிரசோற் பத்தி யாண்டில்
விரவுதுலா மதிப்பதினே ழாந்தேதிப் புதவார மேய தாகி
வரவுபயி லபரபக்கம் பஞ்சமியிற் றன்கொழுநன் மதித்துச் சென்ற
புரவுவைகுந் தத்துமுனம் புகன்றபடி புகுந்தின்பம் பொருந்தி னாளே.


சிறப்புப் பாயிரங்கள்

பின் வருபவை பின்பு கிடைத்தமையால் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டில் சேர்க்கப்படவில்லை.

ஐயாத்துரை ஐயர்

(ஆசிரிய விருத்தம்)

43. சிறந்தவிரா மாயணசங் கிரகமிளஞ் சிறுவரெலாம் தெரியு மாசீர்
உறந்தபுக ழெல்லாக்கி முத்தையபூ பன்குலத்தில் உதித்த மேலோன்
அறந்தழுவு துரைசாமிக் குரிசில்சொல வங்ஙனமே அறைந்திட் டான்தோம்
மறந்தவள முக்குறும்பூர் வருமையாத் துரைப்பெயர்கொள் மறையோன் றானே.
(இராமாயண சங்கிரகம்).

சாமிநாத முதலியார்

(ஆசிரிய விருத்தம்)

44. கோடேந்து மிளநகிலார் குலவுமரங் கொளிர்மயிலை குலவு மெம்மான்
ஏடேந்து மிணைக்கழன்மே லுலகுள்ளோ ரேக்கழுத்தம் இயைந்து வாழச்
சேடேந்து சிவநேசன் சாமிநா தப்பெரியோன் செஞ்சொ லாற்றால்
பாடேந்து பதிற்றுப்பத் தந்தாதி சொனானவன்சீர் பகரொ ணாதே.
(மயிலைப் பதிற்றுப்பத்தந்தாதி – நள ஆண்டு ஐப்பசி மாதம்).

திருப்பாதிரிப்புலியூர், சிவசிதம்பர முதலியார்

(ஆசிரிய விருத்தம்)

45. உரிய னாயகி யாதிநன் கடையவென் றுரைசெயப் பொலிநல்லா
சிரிய னாயகி பூண்பவர்க் கன்புடைச் சிவசிதம் பரவண்ணல்
புரிய னாயகி தந்தப வெனவருள் பொலிவட புலிசைச்சீர்ப்
பெரிய னாயகிக் கியற்றுசொன் மாலையைப் பெட்டவர் பெரியோரே.

(பெரியநாயகிமாலை.)

(கியாதி – புகழ். நல் ஆசிரியனாய். அகி பூண்பவருக்கு – பாம்பை அணிபவராகிய சிவபெருமானுக்கு. அனாய் அகிதம் தப புரி – அன்னையே, அஹிதம் நீங்கும்படி செய்வாயாக. வடபுலிசை – திருப்பாதிரிப்புலியூர். பெட்டவர் – விரும்பியவர். இது திரிபாதலின் பெரியனாயகி என்பதில் ‘நா’ ‘னா’ ஆயிற்று.)

(வெண்பா )

46. உண்மைநல முற்றுமினி தோர்சிவசி தம்பரவேள்
திண்மைமதில் சூழ்பா திரிப்புலியூர் – ஒண்மைப்
பணிமாலை சூடும் பரமர்க் கிரட்டை
மணிமாலை சூட்டினனம் மா.

(திருப்பாதிரிப்புலியூர் இரட்டைமணிமாலை)

(ஆசிரிய விருத்தம்)

47. முயலுமா தவரு மமரருஞ் சூழும் முதுபுகழ் வடபுலி சையிற்செம்
புயலுமா முகிலும் போலவெஞ் ஞான்றும் பொலியிரு முதுகுர வருக்கும்
இயலுமா சிரிய விருத்தமோர் பப்பத் தியற்றின னினைப்பொடு மொழியும்
செயலுமன் னவர்க்கே செலுத்திடு மேலோன் சிவசிதம் பரப்புல வோனே .
(ஸ்ரீ பாடலேசுவரர் ஆசிரிய விருத்தம், பெரிய நாயகி ஆசிரிய விருத்தம்)

சுந்தரம் பிள்ளை

(ஆசிரிய விருத்தம்)

48. தந்தையென வரையகப்பெண் தழுவிநெடுங் கொக்கிறுத்துச் சயிலங் கைக்கொண்
டந்தமுறு தலையாறு கொண்டுவய லூர்மருவி அடியார்க் கின்பம்
சந்ததமுந் தருங்குமர வேளுக்கோ ரந்தாதி சாற்றி னானால்
கந்தமிகு தமிழுணர்ந்த சுந்தரநா வலனென்னுங் கருணை யோனே.

(வயலூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி)

[வரையகப் பெண் – மலையில் உள்ள பெண்ணாகிய வள்ளி, பார்வதி. கொக்கு – கொக்கென்னும் பறவை , மாமரம். சயிலம் – மலைகள், கைலை மலை. தலையாறு கொண்டு – ஆறு தலைகளைப்பெற்று, தலையிற் கங்கையாற்றைக்கொண்டு.]

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s