பாரதியும் பாரதிதாசனும்- 4ஆ

-பேரா. அ.ச.ஞானசம்பந்தன்

4. பாரதிதாசன் –  ஆ


பாரதிதாசன் கண்ட கடவுள் நம்முடைய முன்னோர்கள் சொல்லிய அதே கடவுள் தான். கடவுள் என்ற பெயரிலேயே பாரதிதாசன் கண்ட பொருளும் அடங்கியிருக்கிறது. வாக்கு, மனம், கற்பனை ஆகிய அனைத்தையும் கடந்து நிற்கின்ற காரணத்தால்தானே அப் பொருளுக்குக் கடவுள் என்று நம் பழந்தமிழர் பெயரிட்டார்கள்? எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற பொருளுக்கு ஒரு பெயரும், ஊரும் வடிவமும் உருவமும் தந்து மனைவி என்றும் மக்கள் என்றும் சொல்வது எத்துணை அறியாமையுடையது! இவ்வாறு சொல்வதெல்லாம் அன்பினால் சொல்லப்படுகின்ற உபசார வழக்கேயன்றி வேறில்லை என்ற பேருண்மையைத்தான் மாணிக்கப் பெருமான் ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ” என்று பாடுகிறார். வாக்கு, மனம், லயம் கடந்த பரம்பொருள்’ என்று பேசுகிறார் தாயுமானவர். இத்தகைய ஒரு பரம்பொருளை, அனைத்தையும் கடந்து நிற்கின்ற முழுமுதற் பொருளை, இன்று பலரும் நாத்திகர்’ என்று வாய் கூசாமல் சொல்லுகின்ற புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் இதோ பாடுகிறார்:

சீருடைய நாடு - தம்பி
திராவிட
பேருடைய நாடு - தம்பி
பெருந் திராவி டந்தான்
ஓர் கடவுள் உண்டு - தம்பி
உண்மை கண்ட நாட்டில்
பேரும் அதற் கில்லை - தம்பி
பெண்டும் அதற் கில்லை
தேரும் அதற் கில்லை - தம்பி
சேயும் அதற் கில்லை
ஆரும் அதன் மக்கள் - அது
அத்தனைக்கும் வித்து
உள்ளதொரு தெய்வம் - அதற்கு
குருவ மில்லை தம்பி. 

       (கவிதைத் தொகுதி - 3 ஏற்றப் பாட்டு - 55)

மேலும் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாத அத்தைப் பாட்டிக் கதைகளைச் சொல்லி, ‘இவையெல்லாம் நம்புகின்றாயா, இன்றேல் நரகம் சித்திக்கும்” என்று பேசும்போது கவிஞர் சீறுகிறார். இதன் எதிராகக் கடவுள் தத்துவத்தை யாரேனும் பாடினும் அவை தமிழ்ப் பாட்டாக இருப்பின் கவிஞர் தம்மை மறந்து ஈடுபடுகிறார். மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில் ‘தொடுக்கும் கடவுட் பழம் பாடல் தொடையின் பயனே’ என்று தொடங்கும் ஓர் அற்புதப் பாடல் உண்டு. அப் பாடலில் நாத்திகர் என்ற பட்டம் சூட்டப்பெற்ற பாவேந்தர் பாரதிதாசனார் ஈடுபடுகிறார், அப் பாடலின் சுவையில், பொருள் ஆழத்தில் தம்மை மறந்த கவிஞர் இதோ பாடுகிறார்:

குமரகுருபரன் பாடல்
கூறிப்பின் பொருளும் கூறி,
அமரரா தியர்வி ருப்பம்
ஆம்படி செய்தான்; மற்றோர்
அமுதப்பாட் டாரம் பித்தான்,
அப்பாட்டுக் கிப்பால் எங்கும்
சமானமொன் றிருந்த தில்லை
சாற்றுவோம் அதனைக் கேட்பீர்

என்று பாடுகிறார். இப்பாடலைக் குமரகுருபரர் பாடியவுடன் இப் பாடலில் ஈடுபட்டு மறுபடியும் ஒரு முறை இப் பாடலைப் பாடுக என்று பணித்தாளாம் குழந்தை வடிவத்தில் வந்த மீனாட்சியம்மை.

என்றந்தப் பாடல் சொன்னான்
குருபரன்! சிறுமி கேட்டு
நன்றுநன் றென இ சைத்தாள்;
நன்றெனத் தலைஅ சைத்தாள்;
இன்னொரு முறையுங் கூற
இரந்தனள், பிறரும் கேட்கப்
பின்னையும் குரு பரன் தான்
தமிழ்க்கனி பிழியுங் காலை,
பாட்டுக்குப் பொருளாய் நின்ற
பராபரச் சிறுமி, நெஞ்சக்
கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து
கொஞ்சினாள் அரங்கு தன்னில்!
ஏட்டினின் றெழுத்தோ டோடி
இதயத்துட் சென்ற தாலே,
கூட்டத்தில் இல்லை வந்த
குழந்தையாம் தொழும் சீமாட்டி

தமிழையே பிழிந்தெடுத்துச் சாறாக்கித் தந்த இந்தப் பாடலைக் கேட்டவுடன் பிராட்டி மறைந்துவிட்டாளாம். ‘கடவுள் நம்பிக்கை இல்லாதவர்’ என்று அறியாமை உடையவர்களால் பட்டம் சூட்டப்பெற்ற பாவேந்தர் இந்த நிகழ்ச்சியை நினைந்து சிந்தித்து அனுபவித்து இதோ பாடுகிறார்:

ஏட்டினின் றெழுத்தோ டோடி இதயத்துச் சென்ற தாலே
கூட்டத்தில் இல்லை வந்த குழந்தையாம் தொழும் சீமாட்டி

கடவுள் நம்பிக்கை இல்லாதவரா ‘தொழும் சீமாட்டி’ என்ற சொல்லைப் போட்டிருப்பார்! இந்தச் சந்தர்ப்பத்தைப் பாடுகின்ற அந்த நேரத்தில் சமயம் என்ற பெயரில் நடைபெறும் சாக்கடைப் பழக்கவழக்கங் களையெல்லாம் மறந்துவிட்டு உண்மைச் சமய நெறியை நம்புகின்ற கவிஞர் தம்மையும் மறந்து தான் ‘தொழும் சீமாட்டி’ என்ற சொல்லைப் போடுகிறார்.

“அப்படியானால் நூற்றுக் கணக்கான இடங்களில் சமயத்தைத் தாக்குகிறாரே, பழக்கவழக்கங்களைத் தாக்குகிறாரே என்று கேட்கப்படலாம். தாக்குவது உண்மைதான். ஆனால், எதனைத் தாக்குகிறார்? சமயம் என்ற பெயரில் சமயம் என்ற அடிப்படை உணராதவர்கள் பேசுகின்ற பைத்தியக்காரக் கதைகளையும் முட்டாள்தனமான நம்பிக்கைகளையும் தாக்குகிறார் என்பது உண்மை. பெரியோர்கள் யார்தாம் இதனைத் தாக்கவில்லை? பழுத்த சமயவாதியாகிய இராமலிங்க வள்ளல்,

கலை உரைத்த கற்பனையே நிலை எனக்கொண் டாடும்
கண்மூடி வழக்க மெலாம் மண்மூடிப் போக

என்று பேசுகிறார். இவரைவிடப் பழுத்த கிழவராகிய நாவுக்கரசப் பெருமான் ‘கங்கை ஆடில் என்?  காவிரி ஆடில் என்ன?’ என்றும் ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?’ என்றும் பேசுகிறார். இவர்களெல்லாரும் நாத்திகர்களா? அடிப்படையில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ள பெரியவர்கள் தாம். அந்த அடிப்படையை மூடி மறைத்து அதன் மேல் குப்பைகள் கொட்டப்படும் பொழுது உண்மையில் வருத்தப்படுவார்கள். அடிப்படையை அறியாமல் மேலே கொட்டப்பட்ட குப்பைகளையே மெய் என்று எண்ணி அடிப்படையை ஒதுக்க முற்படுகின்றவர்களைப் பார்த்து ஏசுவார்கள்.

புரட்சிக் கவிஞர் இளமையில் முதன்முதலாகக் கவியரசர் பாரதியாரைச் சந்தித்தபொழுது பாடிய முதற் பாடல் சக்தியை வியந்து பாடியதாகும். முழு முதற் பொருளை, நாம ரூபம் கடந்த பொருளை, ஆற்றலின் வடிவாகக் காண்பதே முந்தையோர் கண்ட முடிவாகும். பிற்காலத்தில் அறிவில் குறைந்த மக்களுக்கு உண்மையை ஓரளவு புலப்படுத்த வேண்டிப் பலப்பல கதைகளின் மூலம் அறிவு கொளுத்தத் தொடங்கினர். கதைகளைக் கேட்ட மக்கள், கதைகளினால் கற்பிக்கப்படுகிற உண்மை களை மறந்து கதைகளையே மெய்யென நம்ப லாயினர். இதனால் வந்த பெருங்கேடு ஒன்றுண்டு அக் கோட்டைப் போக்குவதற்காகவே சமயாசாரிகளும், ஆழ்வார்களும் கதைகளைக் கூறும் பொழுது அவற்றின் உட்பொருளையும் உடன் சேர்த்துக் கூறிப் போயினர். எனவே, முழு முதற்பொருள் ஆற்றல் வடிவானது என்ற பழைய கருத்தை, நாம ரூபம் கடந்தது என்ற பழைய கருத்தைப் பாவேந்தர் பாரதிதாசனார். தமது முதற்பாடலில் பாரதியின் எதிரே பாடிக் காட்டினார். பாடல் வருமாறு :

எங்கெங்குக் காணினும் சக்தியடா - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின்கைப் பந்தென ஓடுமடா - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா.

காளை ஒருவன் கவிச் சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வைய முழுதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீ நினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

இப்பாடலின் கருத்து ஆழத்தைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், பாரதிதாசன் என்ற இளங் கவிஞரின் அகமனம் எந்த முறையில் பயின்று, பண்பட்டு இருக்கிறது என்பதை ஒருவாறு அறிய முடியும். இளமையில் இப்படிப் பண்பட்ட ஓர் அகமனம் வேறு எக் காரணம் கொண்டும் இதனை எதிர்த்து வேறு முறையில் பாட இயலாது என்பதைக் காட்டுவதற்காகவே ‘ஏற்றப்பாட்டின்’ பகுதியையும் ‘எதிர்பாராத முத்தத்தில்’ வரும் குமரகுருபரரைப் போற்றிப் பாடிய பகுதியையும் காட்டினோம். எனவே, கவியரசர் தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் தூய்மையானதும், ஆழமானதும், பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியாததும் ஆகிய கடவுட் பற்றுக் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். புரட்சிக் கவிஞரை ‘நாத்திகர்’ என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்ற வாதத்திற்கு இந்த அளவுடன் ஒருவாறாக ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, இனி அவருடைய கவிதைகளில் புகுந்து மன நிலையைக் காண முற்படலாம்.

கவிதைத் தொகுதி – 1

புரட்சிக் கவிஞரின் தனிக்கவிதைகள் மூன்று தொகுப்புக்களாக வெளியிடப் பெற்றுள்ளன. இவற்றுள் முதல் தொகுப்பில் காவியம், இயற்கை காதல், தமிழ், பெண்ணுலகு முதலிய பல தலைப்புகளில் தனித் தனியாகக் கவிதைகள் தொகுக்கப் பெற்றுத் தரப் பெற்றுள்ளன. காவியம் என்ற பெயரில் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’, ‘புரட்சிக் கவி’, ‘வீரத் தாய்’ என்பன இடம் பெற்றிருப்பினும் இவையும் சிறுகதைகளைக் கவிதையாகப் புனைந்த முறையேயாகும். என்றாலும், ஒரு காவிய அடிப்படையில் வர்ணனைகள் இடம் பெறுகின்றன. சிறுகதையில் ஒரே ஒரு நிகழ்ச்சியும் அதற்குரிய உணர்ச்சியும் இடம் பெறும். இவருடைய மேலே கூறிய மூன்று பகுதிகளிலும் பல உணர்ச்சிகள், பல நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. முதலில் உள்ள ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ கதைக் கட்டுக்கோப்பு இல்லாத ஒரு பகுதியாகும். இன்பச் சுவை மிகுந்து காணப்படும் இப் பகுதியில் உள்நோக்கம் கருதிச் சொல்லப்படும் கதைகளில் வரும் உள்நோக்கை மறந்து, கதையையே மெய் என்று நம்புகின்ற மக்களின் அறியாமை எள்ளி நகையாடப்பெறுகிறது. கவிஞரின் மிக இளமைக் காலத்தி லேயே எழுதப்பெற்ற இந் நூலில் பெண் விடுதலை பேசப்படுகிறது.

பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ;
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண் இனத்தை;
பெண் அடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
மண் அடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.

இப் பகுதியில் பெண் அடிமை செய்கின்ற தமிழ்நாட்டைக் கண்டு கவிஞர் எந்த அளவு சீற்றம் கொள்கிறார் என்பதை அறிய முடிகிறது.

மேலும், இத்தாலிக்காரனும், அமெரிக்கனும், ஆங்கிலேயனும் நம் நாட்டைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதையும் கவிஞர் குறிக்கிறார். சிறப்பாக ஆங்கிலேயன் பேசுவதாகக் கூறுவது. அற்றை நாளில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் இந்தியர்களைப்பற்றிக் கூறியன யாவை எனக் கூறும்.

சாதிப் பிரிவு, சமயப் பிரிவுகளும்
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்
மூடப் பழக்க வழக்கங்கள் எல்லாம்
முயற்சி செய்தே ஓடச் செய்தால்...

நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்று பேசும் பொழுது இந்நாட்டின் சமுதாயக் குறைகள் 1936 – ஆம் ஆண்டிலேயே கவிஞனை எங்ஙனம் விழிப்பு அடையச் செய்தன என்பதை அறிய முடிகிறது. இது தவிர இனிய ஓசையும் சிறந்த உவமை நயங்களும் நிறைந்து நிற்பது  ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’.

பிற்காலத்தில் வடமொழியில் தோன்றிய எதனையும் சினந்து சாடுகின்ற கவிஞர் அற்றை நாளில் வடமொழியிலுள்ள ‘பில்கணீயம்’ என்ற சிற்றிலக் கியத்தைக் கற்று அதன் மாட்டு அன்பு கொள்கிறார். நம் நாட்டிலுள்ள ‘அம்பிகாபதி’ கதை போலவே வட நாட்டில் வழங்குகின்ற கதை. ‘பில்கணீயம்’. இப்பகுதியைப் புரட்சிக்கவி’ என்ற தலைப்பில் பாடவந்த கவிஞர் வளமையான அகவற்பா முறையையும் பஃறொடை வெண்பா முறையையும் அதனை அடுத்துத் தோன்றிய விருத்தப்பா முறையையும் மிகச் சமீப காலத்தில் தோன்றிய நொண்டிச்சிந்து, கும்மிப்பாட்டு வகையையும் பயன்படுத்தித் தம் கவிதைத் திறத்தை எந்தெந்தத் துறைகளில் காட்ட முடியும் என்பதை நிறுவியுள்ளார். இதிலுள்ள தனிச்சிறப்பு யாதெனில் அகவற்பா, பஃறொடை வெண்பா என்ற வகைப் பாடல்களிலும் கூட மிக எளிய சொற்களை வைத்து இப் பழைய பாவின் முறைகளைக் கையாள்கிறார். அகவல் என்பது கவிஞன் விருப்பம் போல் விரிந்து கொடுக்காத பா முறையாயினும் ஓசையால் சிறப்புப் பெற்று விளங்குவதாகும். இதனை நன்கு கையாண்டுள்ள புரட்சிக் கவிஞர் பழமை பாராட்டும் பண்பையும் காட்டுகிறார். இலக்கண அறிவு இல்லாமலே கவிதை புனைய முடியும் என்று இக் காலத்தில் பேசுபவர்களை எள்ளி நகையாடுபவர் போல்,

என் மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத்துதற்குச்
செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்

இந்த இரண்டு அடிகளில் கவிஞர் ஒரு பேருண்மையைத் தெரிவிக்கின்றார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளை வெளியிடுவது தான் கவிதை எனினும் அவ் வெளியீட்டைச் சொற்களின் மூலமே செய்கின்றோம். சொல்லைப் பயன்படுத்தி உள்ளத்து உணர்வை வெளியிட வேண்டுமானால், அதற்குச் சில வரம்புகள் வேண்டும். கவிதைக்கு இலக்கணம் ஆகிய வரம்பு இல்லையானால், அது மரபு பிறழ்ந்துவிடும். மரபு பிறழ்ந்தால், தவறு என்ன என்று கேட்பவர்களை நோக்கி, மரபு பிறழ்ந்தால் பிறர் உங்களுடைய கருத்தை அறிந்து கொள்ள முடியாது என்று ஒரே வரியில் விடை கூறிவிடலாம். அரசனுடைய மகள் மனத்தில் கவிதை உணர்ச்சி வடிவாக இலங்குகிறது என்ற உண்மையையும், அந்த உணர்ச்சியை வெளியிட புறத்தில் பிறருக்குப் புலப்படுவதற்கு) மரபோடு கூடிய இலக்கண அறிவு வேண்டுமென்ற உண்மையையும் அறிவிக்கின்றார்.

இயற்கையில் என்றும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நாமும் காண்கிறோம்; கவிஞனும் காண்கிறான். கதிரவன், இளமதி முதலியவற்றின் தோற்றம் நாம் அன்றாடம் காண்கின்ற காட்சிதான். என்றாலும், விடியற்கால நேரத்தில் கடல் முகட்டில் புறப்படுகின்ற கதிரவன் தன்னுடைய நெருப்புத் தன்மை தணிவதற் காகக் கடலில் குளித்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சந்திரன் என்ற வடிவில் புறப்படுகிறான் என்று நம்மில் யாரேனும் சிந்தித்தது உண்டா? மேலும், உலகில் உள்ள அழகையெல்லாம் ஒன்று திரட்டி அதற்கு ஒரு குளிர்ச்சியையும் தந்து ஆகாயத்தில் விட்டதே முழு நிலவாகும் என்று நம்மில் யாரேனும் நினைத்தது உண்டா? நம் மனத்தில் தோன்றாத இத்தகைய எண்ணங்கள் கவிஞனுடைய மனத்தில் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றும் பொழுது அவற்றைக் கற்பனை என்று சொல்கிறாம். பாவேந்தரின் கற்பனைத் திறத்திற்கு, அதுவும் அவருடைய இளமைக் காலக் கற்பனைத் திறத்திற்குப் ‘புரட்சிக்கவி’ என்ற பகுதியில் வரும் இவ்விரண்டு பாடல்களும் நல்ல எடுத்துக்காட்டாகும் :

நீலவான் ஆடைக்குள் உடல் ம றைத்து
        நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தைக்
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
        கொள்ளையிலே இல்வுலகம் சாமோ வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்
        சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
        கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ?

அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்;
        அவ்வாறே வான் கண்டேன்; திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள் தான் சிரித்த துண்டோ ?
        பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான் ?
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
        சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றே இயற்கை அன்னை வானில்
        எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?

எந்தக் கவிஞனும் அந்தப் பெயருக்குத் தகுதியுடையவனாக – அவன் இருத்தல் வேண்டுமெனில், அச்சத்தைப் போக்கி, சிறந்த மனத்திடம் கொண்டவனாக இருத்தல் வேண்டும். தீமையைக் கண்டு அஞ்சுபவன் நம் போன்ற சராசரி மனிதன். தீமை யைக் கண்டு அஞ்சினாலும் அதனைப் போக்க வேண்டு மென்று நினைப்பவன் நம்மைவிட ஒரு படி மேம் பட்டவன். ஆனால், அதனைக் கண்டு அதன் கொடுமையை உணர்ந்து, அதனை எதிர்த்து நின்று, பொருத்து அழிக்க வேண்டுமென்ற நெஞ்சுரத்தோடு போராடுபவன் கலைஞன். இத்தகைய கொடுமை களை எதிர்த்துப் போராடும் பொழுது பெரியோர்கள் எத்துணைத் துன்பம் வந்தாலும் எதிர்த்துப் போராடுவார்கள், அஞ்ச மாட்டார்கள் என்ற பேருண்மையைக் கவிஞர் இதோ பேசுகிறார்:

நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால்
நிறைதொழி லாளர்க ளுணர்வு மறைந்து போமோ?

பாவேந்தரின் ஓசை நயம் எவ்வளவு சிறப்பு உடையதோ அவ்வளவு சிறப்புடையன அவருடைய உவமைகளும் உருவகங்களும். சங்க இலக்கியத்தில் ஆழ்ந்து பயின்றுள்ள பாவேந்தர் தொட்ட இடமெல்லாம் சங்கப் பாடல்களின் கருத்துக்களையும் உவமம் உருவகங்களையும் கையாள்கின்றார். தன்னை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற தலைவன் மழைக் காலத்தில் இருட்டில் நடந்து செல்கிறான். எனவே, அவனுடைய பாதங்கள் நோகுமே என்று வருந்துகின்ற தன் மனத்தைத் தலைவி ஒருத்தி உருவகப்படுத்தி, ‘தோழி! என்னுடைய மனம் என்னிடம் இல்லை. தலைவனுடைய திருவடிகளைத் தாங்கிக்கொண்டு அவனுடைய கால் செருப்புப்போல் அவன் பின்னேயே சென்று விட்டது’ என்று பேசுகிறாள். அகநானூற்றில் (128) வரும்,

மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே
கொன்றோர் அன்ன கொடுமையோ டின்றே
யாமங் கொளவரின் கனை இக் காமங்
கடலினும் உரை இக் கரைபொழி யும்மே
எவன்கொல் வாழி தோழி மயங்கி
இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்கு
இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கான நாடன் வரும் யானைக்
கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரி வானந் தலைஇ நீர்வார்பு
இட்டருங் கண்ண படுகுழி இயலின்
இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே

என்ற உருவகம் கவிஞர் வாக்கில்,

ஆதரவு காட்டாமல் ஐயா எனைவிடுத்தால்
பாதரட்சை போலும் உன்றன் பாதம் தொடர்வதன்
வேறு கதி அறியேன்

என்று உருப்பெறுகிறது.

அதே பாடலின் மற்றொரு பகுதியில் நாம் பேசும் உவமையை அதன் குறை அறிந்து மாற்று கிறார். சாதாரணமாக உலக இயலில் ‘ஆயிரம் தேள் கொட்டியது போல என்று சொல்லுவார்கள். இவ் உவமையில் உள்ள ஒரு சிறு குறை: ஆயிரம் தேளும் கொட்டிய பிறகு ஓடி விடுமேயானால், அதனால் பெறப்போகும் துயரத்திற்கு ஓர் எல்லை யுண்டு. கொட்டியவுடன் தோன்றும் கடுப்புத் தீர்ந்தவுடன் விடுதலை கிடைக்கும். ஆனால், அவை கொட்டிக்கொண்டே இருப்பின் அதன் நிலையே வேறு. இக் குறைபாட்டை அறிந்த கவிஞர் இவ் உவமையை மாற்றி, ‘ஆயிரம் தேள் மண்டையிலே மாட்டியது போல’ என்று பாடுகிறார். ‘மாட்டியது ” என்று கூறிவிட்ட காரணத்தால் கொட்டிவிட்டுத் தேள்கள் போகவில்லை; அதே இடத்தில் இருந்து கொண்டு மறுபடியும் மறுபடியும் கொட்டிக் கொண்டேயிருக்கின்றன என்று சிறப்புபடப் பாடிச் செல்கிறார்.

புரட்சிக் கவிஞரின் பிற பகுதியிலே வருகின்ற பாடல்கள் உண்மையிலேயே பெரும் புரட்சியை அறிவிக்கின்ற பாடல்களாகும். அரசர்களாக இருப்பவர்கள் குடிமக்களை மக்கள் என்று கருதாமல் அல்லறுத்துகின்ற அவல நிலையைக் கவிதை மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.

‘காதற் குற்றவாளிகள் என்ற பகுதியில், கண்ணொடு கண்ணினை நோக்கச் செய்த கிழட்டு வள்ளுவனாரின் ஓவியத்தைப் புரட்சிக் கவிஞரும் புது மெருகிட்டுக் காட்டுகிறார்.

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில.

யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்.

-இவ்விரண்டு குறள்களும் கவிஞரின் வாக்கில் புதுமையுடன் வெளியிடப்படுகின்றன.

பாடம் படித்து நிமிர்ந்த விழி - தனிற்
பட்டுத் தெறித்தது மானின் விழி
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்.

‘எந்நாளோ’ என்ற பகுதியில் தமிழும் தமிழ்நாடும் இருக்கின்ற அவல நிலை நீங்கி வீறு பெற்று எழுகின்ற நாள் எந்நாளோ என்ற இனிய கருத்துப் பேசப்படுகிறது.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்
        வீரங்கொள் கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரேமற் றுடலினால்
        பலராய்க் காண்பார்.
கள்ளத்தால் நெருங்கொணாதே
        எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாள்? உள்ளம்
        சொக்கும் நாள் எந்த நாளோ?

தறுக்கினார் பிரதேசத்தார்
        தமிழன் பால் - எந்த நாட் டான்
வெறுப்புறும் குற்றம் செய்தா
        ராதலால் விரைந்தன் னாரை
நொறுக்கினார் முதுகெலும்பைத்
        தமிழர்கள் என்ற சேதி
குறித்த சொல் கேட்டின் பத்திற்
        குதிக்கும் நாள் எந்த நாளோ?

‘புதிய உலகம்’ என்ற பகுதியில் உள்ள 32 பாடல்களும் கவிஞரின் மன வளர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். தொழிலாளர் பற்றிய பல பாடல்கள், மானிட சக்தி முதலியவை சமூகத்தில் தோன்றிய தொழிலாளர் விழிப்புக்குக் காணிக்கையாகும்.

கவிஞர் காலத்துக் கண்ட தமிழ்த் திரைப்படக் கலையைப் பற்றிப் பாடிய பாடல்கள் ஒருவேளை நேற்றுத்தான் பாடினாரோ என்று நினைக்கும் படி தமிழ்த் திரைப்பட உலகம் இன்றும் அதே நிலையில் இருப்பது கவிஞரின் தீர்க்கதரிசனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

கவிதைத் தொகுதி – 2

கவிஞரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பில் தம் ஆசானாகிய பாரதியைப் பற்றிப் புரட்சிக் கவிஞர் ஏழு பாடல்களில் அவர் பால் தாம் கொண்ட ஆர்வத்தையும் மதிப்பையும் வெளியிடுகிறார். பாரதியைப் பற்றிச் சொல்லவந்த கவிஞர் ‘புது நெறி: காட்டிய புலவன்’ என்ற தலைப்பில்,

உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி…

என்று பாடிவிட்டுக் கவியரசர் பாரதியார் தமிழ் நாட்டில் தோன்றிய காலம் மிகப் பொருத்தமானது என்று பேசுகிறார். மேலும்,

தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில் தமிழகம்
தமிழ்க்குத் தகும் உயர்வு அளிக்கும்
தலைவனை எண்ணித் தவம்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
பைந்தமிழ்த் தேர்ப்பாகன்! அவன் ஒரு
செந்தமிழ்த் தேனீ! சிந்துக்குத் தந்தை.
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்; நாட்டில்
படரும் சாதிப் படைக்கு மருந்து;
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பு அவன்

என்றும்,

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறு என்பதை எடுத்து உரைக்கிறேன்

என்றும் தம் ஆசானுக்குப் புகழ் மாலை சூட்டுகிறார் கவிஞர்.

இவையல்லாமல் பாரதியின் பாடல்கள் பலவற்றைத் தனித்தனியே எடுத்துப் பாராட்டுகிறார். அடுத்துள்ள ‘தேன் கவிகள் தேவை’ என்ற தலைப்பில் பாவேந்தரும் பாரதியும் கூடியிருந்து இன்பம் அனுபவித்த பழைய அனுபவங்களை-

பன்னத் தகுவதுண்டோ நாங்கள் பெறும் பாக்கியத்தை?
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்கள் எல்லாம்
போய் அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்
தாம்பூலம் தின்பார் தமிழ் ஒன்று சிந்திடுவார்
என்று படிக்கும் பொழுது நாலடியார்ப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

இகலிலர் எஃகறிவுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி.

இக் கருத்தேதான் புரட்சிக் கவிஞரால் போற்றிப் பேசப்பெற்றது.

‘பாரதி உள்ளம்’ என்ற பகுதியில் கவிச் சக்கரவர்த்தி பாரதியாரின் மனத்தின் அடிப்படையில் இருந்த இரண்டு பெருங் கருத்துக்களை அவருடன் நெருங்கிப் பழகிய பாவேந்தர் பாரதிதாசனார் இதோ பேசுகிறார்:

சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
        தமிழ் வளர்த்த ல்மற் றொன்று.
பாதியை நாடு மறந்தால் - மற்றப்
        பாதி துலங்குவ தில்லை

என்று பாரதி தம்மிடம் பேசியதாகத் தெரிவிக்கிறார். ‘அந்த இன்ப உரைகள் என்றும் என் காதில் மறைந்தோடவில்லை; நான் இன்றும் இருப்பதினாலே’ என்று பேசும் பாவேந்தர், பாரதி இதனை வெறும் வாய்ப்பறையாகச் சொல்லவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காக மூன்றாவது பாடலில் அரிஜனங்கள் என்று சொல்லப்படுபவர்கள் சமைத்த உணவை நான்கு தெருக்கள் கூடும் நாற்சந்தியில் அனைவரும் தம்மைக் காணுமாறு உண்டார் என்று பேசுகிறார்.

தம்முடைய ஆசானாகிய பாரதி பாண்டிச்சேரியிலோ தமிழ்நாட்டிலோ உள்ளவர்கள் மட்டும் அறிந்து அனுபவிக்க வேண்டிய கவிஞர் அல்லர் என்ற கருத்தை ‘மகாகவி’ என்ற தலைப்பில் இதோ பேசுகிறார்:

பாரதியார் உலககவி அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்
ஓர் ஊருக்கு ஒரு நாட்டுக்கு உரியதான
ஒற்றைச்சாண் நினைப்புடையர் அல்லர் மற்றும்
வீரர் அவர்

என்று கூறிவிட்டு, இதனையடுத்து அமரகவியின் உள்ளத்தை விரிவுற எடுத்துக்காட்டி உணர்ச்சிப் பிழம்பான அவருடைய பாடல்கள் பிற மொழியில் மொழி பெயர்க்க முடியாத பேராற்றல் வாய்ந்தவை என்ற கருத்தை –

தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த
தமிழ்ப் பாட்டை மொழி பெயர்த்தால் தெரியும் சோதி

என்றும்,

ஞானரதம் போல் ஒரு நூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை. கண்ணன் பாட்டுப்
போல் நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே
புதிய நெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேன் இனிப்பில் தருபவர் யார்?

என்று பாடி வியக்கின்றார் கவியரசர் பாடலைப் பாவேந்தர் பாரதிதாசனார்.

கவிஞருடைய உள்ளத்தைக் கவர்ந்ததான சாதி ஒழிப்புப் பணியில் உயர் குலம் என்று சொல்லப் படுகின்ற குலத்தில் பிறந்த பாரதியார் முழுமூச்சாக இறங்கிச் சாதி ஒழிப்புப் பற்றிப் பாடியதோடு மட்டு மல்லாமல் செயலிலும் அதனைச் செய்து காட்டினார் என்பதை நினைக்கும் பொழுது பாவேந்தரின் உள்ளம் பரவசம் அடைகிறது.

தேசத்தார் நல்லுணர்வு பெறும் பொருட்டுச்
சேரியிலே நாள் முழுவதும் தங்கி உண்டார்
காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி அதைக் கனிவாய் உண்டார்

என்று பேசும் பொழுது பாரதியார் தம் கொள்கையைக் கவிதையாக மட்டும் வடித்துக் கொடுக்காமல் வாழ்விலேயும் கொண்டு செலுத்திய மாபெரும் சிறப்பைப் பாவேந்தர் பாடிப் பரவசம் அடைகிறார்.

இவ்விரண்டாம் தொகுதியில் ‘இசைபெறு திருக்குறள்’ என்ற தலைப்பில் வள்ளுவர் தம் வாய்மொழி தமிழ்நாட்டிற்கே உரிய தனிச் சொத்து என்றும் அதன் உள்ளீட்டை உணராத உரையாசிரியர்கள் தவறாகப் பொருள் செய்துவிட்டார்கள் என்றும் சாடுகிறார். ‘திராவிடன்’ என்ற தலைப்பில் உள்ள பல பாடல்கள் ஒரு கவிஞருக்குத் தகுதியில்லாத சொற்களால் வரம்பு கடந்து கடவுளரையும் பிறரையும் ஏசுகின்ற அளவிற்குச் செல்கின்றன. ‘கடவுள் வெறி, சமய வெறி, கன்னல் நிகர் தமிழுக்கு நோய் நோய் நோயே’. இதுவும் பாவேந்தர் வாக்கு! இங்ஙனம் பேசுகிறார் என்பதால் எதிலும் அளவு கடந்து விடாமல் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்ற ஆற்றலைக் கவிஞர் இத் தொடரில் போற்றுகிறாரே. அதனைத் தாம் பெற்றாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ்ப் பற்றுக் கொள்வது  என்பது வேறு: தேவையில்லாத முறையில் சமயம் பற்றிய இலக்கியம் என்பவற்றை வசை பாடுதல் வேறு. கவிஞரின் தமிழ்ப் பற்று, தமிழ் வெறியாக மாறி ஒரோவழி முன்னுக்குப்பின் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவிக்கவும் பேசவும் வாய்ப்பு அளித்துவிடுகிறது. ‘பிரிவுப்பத்து’ என்ற தலைப்பி லுள்ள பாடலைச் சற்றுக் காண்போம்.

கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம்
கேடுற, ஆந்திரம் பிய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே.

இங்ஙனம் பாடிய அதே கவிஞர் ‘படத் தொழில் பயன்’ என்ற பகுதியில் இவ்வாறு பாடுகிறார்:

செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்
தெலுங்கருக் கிங்கு நடிப்பெதற் காக?
வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார்
வளர்ந்திடு மோகலை அண்ணே? - இங்கு
மாயும் படக்கலை அண்ணே.

இதேபோல் தெலுங்கு, மலையாளம் ஆகிய இரண்டையும் அவை வந்து தமிழ்நாட்டில் புகுந்ததையும் சாடுகின்ற இடங்கள் பல உண்டு. இவற்றை எடுத்துக் காட்டுவதால் கவிஞர் பேரில் குறை காண்பதாக யாரும் நினைய வேண்டாம். முன்னர்க் குறிப்பிடப்பட்ட குழந்தை உள்ளம் படைத்த கவிஞர் அந்தந்த நேரத்தில் என்னென்ன உணர்ச்சியில் ஈடுபட்டாரோ அந்தந்த உணர்ச்சியை அப்படியே பாடுகின்ற இயல்பு வாய்ந்தவர் என்பதை அறிவுறுத்தவே இதனை எடுத்துக் காட்டுகிறோம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s