-தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் (1925- 1995) என்று அழைக்கப்பட்ட அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி திருமடத்தின் 45வது குருமகா சந்நிதானமாக விளங்கியவர். ‘அருள்நெறித் திருக்கூட்டம்’ என்ற அமைப்பை நிறுவி ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்; தமிழ் ஆர்வலர்; 25க்கு மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். சுவாமி விவேகானந்தர் மீதான அடிகளாரின் கவிதை இது…

பூவுல கதனிற் பொற்புடை பாரதம்
வடபால் இமயமும் தென்பாற் பொதியமும்
கங்கை, காவிரியெனும் வற்றா நதிகளும்
உயர்ந்த வேதம் முதல் ஒப்பிலாத் திருமுறை
ஈறாய் அருள்நலம் கொழிப்பினும், பாரத
மக்கள் அகத்திலும் புறத்திலும் வறுமை
விஞ்சியே தம்பீ(டு) இழந்து பிணமென
நடமா டியபோ(து) உயிரும் உணர்வும்
ஒருங்கே கூட்டி ஒளியினை வழங்கி
வாழ்வு அளிக்க வந்ததோர் ஞாயிறு,
பீடுசொல் பிறப்பில் பிறங்குநுண் ணறிவும்
மன்னும் மறைகளும் மறைகளின் முடிபும்
கற்றறிந் திட்டநூல் முற்றிய புலமையும்
அன்னை பராசக்தி தன்னருட் கடலில்
திளைத்து மகிழ்ந்த பரமா னந்தப்
பரம கம்சரின் அருளும் ஒருங்கே
இயைந்த உருவாய் இலங்கிய பெருமான்
வீறு புகழார் விவேகா னந்தர்!
இமயம் போன்ற எழிலார் தோற்றமும்
ஞானப் பேரொளி தவழ்திரு முகமும்
தண்ணரு லார்ந்த நெஞ்சமும், மன்னுயிர்
மனத்திருள் போக்கும் ஞானச் செஞ்சொலும்
பிணத்தையும் பேச வைத்தன; உயிர்களின்
சோர்வினை அகற்றிச் சுறுசுறுப்பினைத்
தந்தன; இதயத் தாமரை விரிந்தன;
எழுச்சியும் கிளர்ச்சியும் எய்து வித்தன;
சுதந்த ரத்தின் சுவையை யூட்டின;
ஞான மும்பர மோனமும் நல்கின;
தரணியெல் லாம்தலை தாழ்ந்து வணங்கிடும்
ஒப்புயர் வற்ற உயர்வாழ் வளித்தன.
அந்த, வி வேகா னந்தப் பேரொளி
நெஞ்சால் நீள நினைத்தற் குரியது;
நினைந்து நினைந்து தொழுதற் குரியது.
வாழ்க,அப் பேரொளி! வளர்க வையகமே!
.
நன்றி: தமிழர் கண்ட விவேகானந்தர் தொ.ஆ: திரு. பெ.சு.மணி வானதி பதிப்பகம், 1974.
$$$