-மகாகவி பாரதி
முற்றுப் பெறாததாகக் காட்சியளிக்கும் இக்கவிதை, பாரதியின் கவிதைத் தொகுப்புகளில் காணப் பெறாதாது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை இது...

அருளா லெவையும் பார் என்றான் அதை
அறியாதே சுட்டியென் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால் – கண்ட
என்னையுங் கண்டிலே னென்னடி தோழி!
– தாயுமானவர்
ஆயிரங் கோடி அறிஞர்கள் பற்பல
ஆயிர யுகங்க ளாராய்ந் தறிகிலா
‘யான்’ உடை யியற்கை யானோ அறிவன்!
மீனுணர்ந் திடுங்கொல் வியன்கடற் பெருமை?
அருள்வழிக் காண்கென் றருளினர் பெரியோர்;
மருள்வழி யல்லான் மற்றொன் றுணர்கிலேன்!
அகிலமும் ‘யான்’ என ஆன்றோரிசைப்பர்
மகிதலத் திருளின் மண்டிய மனத்தேன்
யானதை யொரோவழிக் கண்டுளேன்; அதனினும்
மானத ஒளியது மங்குமோர் கணத்தே
யானெனும் பொருள்தான் என்னைக்கொல்? அதனையிவ்
வூனெனக்கொள்வ ருயிரிலார் சிலரே.
பிரமமே யானெனப் பேசுவர் பேசுக!
பிரமமே யானெனப் பேசினர் பெரியோர்.
சுதேசமித்திரன் (17.09.1906) ஆதாரம்: தமிழ் இணையக் கல்விக் கழகம் தொகுத்துள்ள பாரதி கவிதைகள்- பிற்சேர்க்கை: பல புதிய பாடல்கள். {ப்ரம்மம் அல்லது ப்ரமை. ‘நானெ’ன்னும் உணர்ச்சியே தப்புணர்ச்சி. ப்ரம்மம் அல்லது முதற்பொருள்}.
$$$