ஸ்வதந்திர கர்ஜனை- 2(25)

-தஞ்சை வெ.கோபாலன்

பகுதி: 2.24

சின்ன அண்ணாமலை

பாகம்-2 :பகுதி 25

தேவகோட்டை தேசபக்தர்கள் கோட்டையாயிற்று!

 ”போராட்டம்! போராட்டம்! முடிவில்லாத போராட்டம். இதுவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நமது பதிலாகும்” (Struggle! Struggle! Eternal struggle. This is my reply to the British Imperialism).

-இது ஜவஹர்லால் நேரு 1942 பம்பாய் காங்கிரசில் உதிர்த்த எழுச்சி உரையாகும். அங்கு தன்னுடைய உரையில் ஜவஹர்லால் நேரு சொன்ன கருத்து:

“இந்தியாவின் தன்மானம் பேரம் பேசப்படும் பொருள் அல்ல. இந்திய சுதந்திரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து பேரம் பேசி வாங்க முடியும் என நம்மில் எவரும் கருதத் தேவையில்லை. போராட்டம், ஆம்! போராட்டம்,  அது ஒன்று தான் நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தரமுடியும்”

-இப்படிச் சொன்னார் ஜவஹர்.

‘க்விட் இந்தியா’  தீர்மானமும் அதன் விளைவாக தலைவர்கள் கைதும் நாட்டைப் புரட்டிப் போட்டுவிட்டது. நாடு முழுவதுமே போராட்டக் களமாயின. தமிழகத்தில் ஆகஸ்ட் புரட்சியில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. அதிலும் திருவாடனை, தேவகோட்டை ஆகிய இடங்கள் போராட்டத்தில் முனைப்போடு இருந்தன.

தேவகோட்டை தனவணிகர்களான நகரத்தார் வாழும் பகுதியல்லவா? அமைதியும், தங்கள் தொழிலில் அக்கறையும் கொண்டவர்கள் போர்க் குணமுடையவர்களாக மாறிய நிகழ்ச்சி நம் கவனத்தை ஈர்க்கத் தான் செய்யும்.

நகரத்தார் அதிகம் வசிக்கும் தேவகோட்டையின் அப்போதைய மக்கட்தொகை முப்பதாயிரம் இருக்கலாம். அந்த தேவகோட்டையில் நடந்த இந்த ஆகஸ்ட் புரட்சி விவரங்களை இப்போது பார்க்கலாம்.                                       

தேவகோட்டை சிறை உடைப்பு

தேவகோட்டை சின்ன அண்ணாமலை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது அவர் அடைக்கப் பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள்.

“நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை”.

 -இப்படிச் சொன்னவர் பெருந்தலைவர் காமராஜ்.

ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடனை சிறையில் அடைத்தது. 24 மணி நேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்து விட்டார்கள். இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்திலேயே இது தான் முதல் தடவையாக இருக்கும்.

இனி திரு. சின்ன அண்ணாமலை அவர்களின் வாயால் 1942-இல் திருவாடனையில் என்ன நடந்தது என்பதைக் கேட்போம். நமக்காக அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம் தான் அதைப் படிக்கவோ, தெரிந்து கொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. இப்போதாவது தெரிந்து கொள்வோம்:

“1942 ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு போலீஸார் என்னைக் கைது செய்தனர். பகல் நேரத்தில் எப்போதும் பெரும் கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தபடியால் ஒரு வார காலமாக முயற்சி செய்தும், கைது செய்தால் பெரும் கலகம் ஏற்படும் என்று போலீஸார் கைது செய்வதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர்.

ஆனால் அன்று 144 தடை உத்தரவை மக்கள் முன்னிலையில் நான் கிழித்தெறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டரை மக்கள் விரட்டி அடித்ததாலும் அதற்குமேல் என்னை வெளியில் வைத்திருப்பது பெருத்த அபாயம் என்று கருதி போலீஸார் அன்றிரவே என்னைக் கைது செய்வது என்று முடிவு செய்து விட்டனர்.

இரவில் அதிகம்பேர் என்னைச் சுற்றி இருக்க மாட்டார்கள், சில பேர் தான் இருப்பார்கள். இருப்பவர்களைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று போலீஸார் எண்ணி அன்றிரவு என்னைக் கைது செய்வதற்கு சுமார் பத்து லாரி ரிசர்வ் போலீசைக் கொண்டு வந்து நான் தங்கி இருந்த ஐக்கிய சங்கம் என்ற கட்டடத்தைச் சுற்றி வளைத்து நிறுத்திக் கொண்டு உள்ளே படபடவென்று குதித்தார்கள்.

அப்பொழுது இரவு மணி 12 இருக்கலாம். சப்தம் கேட்டதும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது என்னைச் சுற்றிப் பல ரிசர்வ் போலீஸ் நின்றது தெரிந்தது.

“உங்களைக் கைது செய்திருக்கிறோம்” என்று போலீசார் சொன்னார்கள். இன்ஸ்பெக்டர் என் கையில் விலங்கை மாட்டி, பல நூற்றுக் கணக்கான ரிசர்வ் போலீஸார் சூழ ‘ராமவிலாஸ்’  பஸ் ஒன்றில் என்னை ஏற்றிக் கொண்டு முன்னும் பின்னும் பல போலீஸ் வண்டிகள் தொடர தேவகோட்டையில் இருந்து 22 மைல் தொலைவில் உள்ள திருவாடனை என்ற ஊருக்குக் கொண்டு சென்றார்கள்.

திருவாடனையில் உள்ள சப்-ஜெயிலில் என்னைக் கொண்டுபோய் அடைத்தார்கள். மறுநாள் காலையில் என்னைக் கைது செய்த விஷயம் ஊர் முழுவதும் பரவி, மக்கள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து ஊரே ஒன்றாகத் திரண்டு என்னை விடுதலை செய்யும்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.

கடைகள் அனைத்தையும் மூடும்படியும் செய்து போலீசைத் திக்குமுக்காட வைத்து விட்டார்கள். என்னை ஏற்றிக் கொண்டு சென்ற ராமவிலாஸ் பஸ்ஸை சூழ்ந்து கொண்டு தீ வைத்துக் கொளுத்தி மேற்படி பஸ்ஸைச் சாம்பலாக்கி விட்டார்கள்.

அதன் பின்னர் தேவகோட்டையில் உள்ள சப்-கோர்ட்டை நடத்தக் கூடாது என்று மக்கள் கோஷம் போட்டிருக்கிறார்கள். அதையும் மீறி கோர்ட்டை நடத்தியதால் மக்கள் கோபம் கொண்டு பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் பிடித்து கோர்ட் கட்டடத்தின் மீது ஊற்றி தீ வைத்து விட்டார்கள்.

போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் கூட்டம் கலையவில்லை. பல பேர் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்கள். அங்கிருந்த கூட்டம் கோபங்கொண்டு புறப்பட்டு, திருவாடனையை நோக்கி வந்தது.

திருவாடனை வரும் வழியில் உள்ள கிராமங்களில் எல்லாம் இளைஞர்களும், பெரியோர்களும் உற்சாகமாக இக்கூட்டத்துடன் சேர்ந்து அவர்களும் திருவாடனையை நோக்கி வந்தார்கள்.

சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து திருவாடனை சப்-ஜெயிலுக்கு என்னை விடுதலை செய்ய வந்துகொண்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும், சப்-ஜெயிலைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களான மாஜிஸ்திரேட் கோர்ட், தாசில்தார் காரியாலயம், கஜானா அதிகாரி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் அனைவரும் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலுக்கு முன்பு வந்தார்கள்.

எல்லோரும் என்னிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள்.  நான் சொன்னேன்: ‘இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ஜனங்கள் வருவதால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதோ, வன்முறையை உபயோகிப்பதோ இப்போது உள்ள சூழ்நிலைக்குச் சரியாக இருக்காது. இது சுதந்திரப் போராட்ட வேகம். மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அவர்களுக்கு வழிவிட்டு நில்லுங்கள். அனைவரும் ஒதுங்கிக் கொள்வது தான் இந்த நேரத்தில் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான காரியம்’ என்று அவர்களுக்கு ஆலோசனை கூறினேன்.

அவர்கள் சொன்னார்கள், ‘நாங்களும் எங்கள் குடும்பமும் குழந்தை குட்டிகள் அனைவரும் பக்கத்திலுள்ள லைனில் தான் குடியிருக்கிறோம். வருகின்ற கூட்டம் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் கோபப்பட்டுத் தாக்கினால் என்ன செய்வது?’ என்று கேட்டார்கள். ‘அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு நான் பொறுப்பு’ என்று சொன்னேன்.

அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் ‘சூரப்புலி’ சுந்தரராஜ ஐயங்கார் என்பது ஆகும். என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நான் சொன்னபடி போலீசார் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி நான் இருந்த சப்-ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள். எல்லோரையும் அவரவர் வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருக்கும்படி கூறினேன். அதன்படி அவர்கள் அனைவரும் செய்தார்கள்.

இது நடந்த சிறிது நேரத்துக்கெல்லாம், பல ஆயிரக் கணக்கான மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக் கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள். பலர் ‘ஜெயிலை உடை, கட்டடத்திற்கு தீ வை’ என்று பலவாறாகச் சத்தம் போட்டார்கள்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்து வந்தவர்களில் ஒருவரான எனது நண்பர் திருவேகம்பத்தூர் பாலபாரதி செல்லத்துரை,  எல்லோரையும் அமைதிப்படுத்தி நான் இருந்த சிறைக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். அவர் சொற்படி அனைவரும் சப்-ஜெயிலுக்கு முன்னால் இருந்த மைதானத்தில் உட்கார்ந்தார்கள். பின்னர் செல்லத்துரை அவர்கள் என்னிடம் வந்து “இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

“நீங்கள் என்ன முடிவுடன் வந்திருக்கிறீர்கள்?” என்று நான் திருப்பிக் கேட்டேன். “இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்” என்று பதில் சொன்னார்.

“சரி, அப்படியே செய்யுங்கள்” என்று நான் சொன்னதும், அங்கு நின்ற சிறை வார்டன் ஓடிவந்து இதோ சாவி இருக்கிறது என்று சாவியைக் கொடுத்தார். சாவி வேண்டியதில்லை, உடைத்து தான் திறப்போம் என்று மக்கள் பெரும் முழக்கம் போட்டார்கள். அதன்படியே அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பாரை முதலிய ஆயுதங்களால் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்துத் தகர்த்து கதவைத் திறந்தார்கள்.

பட்டப்பகல் 12 மணிக்கு, பல ஆயிரக் கணக்கான மக்கள் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை. அந்தச் சரித்திரச் சம்பவத்துக்கு நான் காரணமாக இருந்தேன் என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப் படுகிறேன். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது.

மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில் நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கி விட்டது. தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச்சம்பவத்தின் பெருமையை உணரவில்லை.

மதிப்பிற்குரிய ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் 1942-இல் சிறையிலிருந்து தப்பியதே பெரிய வீரச்செயல் என்று நாடு போற்றிக் கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் திருவாடனையில் மக்கள் திரண்டு வந்து சிறைச்சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைது செய்து வைத்திருந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து கொள்ளவுமில்லை; பாராட்டவும் இல்லை.

விடுதலை செய்யப்பட்ட என்னைச் சுற்றி இருந்த மக்கள் என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். சிலபேர் நான் இருந்த சப்-ஜெயிலுக்குத் தீ வைத்தார்கள். வேறு சிலர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் தீ வைத்தார்கள்.

அதன் பின்னர் போலீஸ் லைனை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அப்போது நான் குறுக்கிட்டு, ‘அங்கு ஓடாதீர்கள். அவர்கள் அனைவரும் நமக்காக வேண்டிய ஒத்தாசை செய்திருக்கிறார்கள்” என்று அவர்களிடம் சொன்னேன்.

சில பேர் போலீஸ்காரர்களை சும்மாவிடக் கூடாது என்றும் அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சத்தம் போட்டார்கள். நான் அவர்களைத் தடுத்து, ‘அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள், நமது சுதந்திரப் போராட்டத்திற்கு உறுதுணையாக உள்ளவர்கள், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம். இதோ அவர்களது உடைகள்’ என்று கூறி, போலீஸ்காரர்களுடைய உடைகள் அனைத்தையும் மக்களுக்குக் காண்பித்தேன். அவர்கள் அந்த உடைகளை வாங்கித் தீயில் போட்டுப் பொசுக்கி,  தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

பின்னர் கூட்டத்தினர் அனைவரும் என்னைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். அப்பொழுது என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலும், அதைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களும் கொழுந்து விட்டு எரிந்தன. அச்சமயம் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை ஒருவரும், துப்பாக்கிக் குண்டுகளை இன்னொருவரும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் துப்பாக்கிகளை கையில் ஏந்திக் கொண்டு சிப்பாய்களைப் போல நடந்தனர்.

மக்கள் என்னை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே செல்லும்போது தூரத்தில் போலீஸ் லாரிகள் வருவது தெரிந்தது. போலீஸ் லாரியைப் பார்த்து மக்கள் கோபாவேசப் பட்டார்கள். பலர் போலீஸ் லாரியை அடித்து நொறுக்க வேண்டும் என்று கூச்சல் போட்டார்கள். சிலர் போலீஸ் லாரியை நோக்கி அரிவாளை வீசிக் கொண்டு ஓடினார்கள்.

எல்லோரையும் சமாதானப் படுத்தி ரோட்டுக்கு பக்கமாக இருந்த பனங்காட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி மக்கள் இரு கூறாகப் பிரிந்து ரோட்டின் இரு மருங்கிலும் உள்ள பனங்காட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள். போலீஸ் லாரிகள் மெதுவாக ஊர்ந்து கொண்டு வந்தன.

மக்கள் மறைந்திருப்பதை யூகித்தவர்கள் போல் போலீசார் சுடுவதற்குத் தயார் நிலையில் லாரியில் நின்றுகொண்டு இருந்தார்கள். ரோடு ஓரமாக மறைந்திருந்த ஒருவரை போலீசார் பார்த்து விட்டனர். உடனே அவரை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுட்ட குண்டு மேற்படி நண்பரின் தொடையை தொட்டுக் கொண்டு சென்றுவிட்டது.

உடனே மேற்படி நண்பர் பெரும் கூச்சல் போட்டு “எல்லாம் வெத்து வேட்டு, வெளியே வாங்கடா” என்று கலவரப்படுத்தி விட்டார். மறைந்திருந்த மக்கள் அனைவரும் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டு வெளியே வந்து போலீசாரைத் தாக்க ஓடினார்கள். இச்சமயம் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் ஒரு பக்கமும் குண்டு வைத்திருந்தவர்கள் மறு பக்கமும் பிரிந்து இருந்தார்கள். அதனால் மக்களிடம் இருந்த துப்பாக்கியினால் போலீசாரைச் சுட இயலாமல் போய்விட்டது.

குண்டுகளைக் கையில் வைத்திருந்த கிராமவாசிகள் மட்டும், மேற்படி குண்டுகளை எறிந்தால் வெடிக்குமா, வெடிக்காதா என்று தெரியாததால் அவற்றை சரமாரியாக வீசிக் கொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில் போலீசார் தங்களைக் காத்துக் கொள்ளச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். குண்டுகளைப் பொழிந்து தள்ளினர். என் இடது கையில் ஒரு குண்டு பாய்ந்தது. மக்களின் முன்னால் நின்ற என் மீது மேலும் குண்டு படக்கூடாது என்று பலபேர் மாறி மாறி என் முன்னால் நின்று தங்கள் மார்பில் போலீசாரின் குண்டுகளை ஏற்று வீரமரணம் எய்தினார்கள்.

இம்மாதிரி தியாகம் செய்த பெரு வரலாற்றை நான் படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்த மாபெரும் தியாகத்தை இன்று நினைத்தாலும் எனது மெய் சிலிர்த்து விடுகிறது. ஒரு தேசபக்தனைக் காப்பதற்காகப் பல பேர் உயிரைக் கொடுப்பது என்பது வீரகாவியமாகப் பாட வேண்டிய அத்தியாயமாகும்.

எவ்வித பிரதி பிரயோசனமும் கருதாமல் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகிகளுக்கு இந்த நாடு என்றும் தலை தாழ்த்தி வணங்கக் கடமைப் பட்டுள்ளது.

இப்படிப் பல பேரைச் சுட்டு வீழ்த்திவிட்டு போலீசார் தப்பி ஓடிவிட்டார்கள். சிலர் இறந்து வீழ்ந்ததும் பலர் உடம்பிலிருந்து ரத்தம் தெறித்தும், அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு நிமிடத்தில் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் ஓடிவிட்டனர். நானும் எனது நண்பர் ராமநாதனும் பிணக்குவியலின் மத்தியில் நின்று கொண்டிருந்தோம்.

உயிர் போன பலரும், உயிர் போகும் தறுவாயில் சிலரும், கை, கால், கண் போன சிலரும் ஒரே ரத்தக்காடாக முனகலும், மரணக்கூச்சலும் நிறைந்திருந்த அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்து பத்து நிமிடத்துக்கும் மேல் நின்று கொண்டிருந்தேன்.

இரவு மணி 7 ஆயிற்று. வெளிச்சம் மங்கி இருள் பரவிற்று. பனங்காடு, சலசலவெற சத்தம். மரத்தினுடன் மரங்கள் உராயும் போது ஏற்படும் பயங்கரமான ‘கிரீச்’ எனும் அச்சமூட்டும் சத்தம். இந்நிலையில் நரிகளின் ஊளை வேறு. சுற்றிலும் இறந்து கிடந்த தேசபக்த தியாகிகளைப் பார்த்து ஒரு முறை அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.

இருட்டில் மேடு பள்ளம் முள், கல், இவைகளில் தட்டுத் தடுமாறி நடந்தோம். காலெல்லாம் கிழிசல் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. கையில் குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தம் வழிந்தது. சுமார் நான்கு மைல் வந்ததும் தலை சுற்றியது. மயக்கமாக இருந்தது. அதே இடத்தில் கீழே ‘தடால்’ என்று விழுந்து விட்டேன். என் நண்பரும் மயங்கிப் படுத்து விட்டார்.

மயங்கிய நிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம். தூங்கிக் கொண்டிருந்த எங்களைச் சிலர் தட்டி எழுப்பினார்கள். சுமார் பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். போலீசார் என்று நினைத்து விட்டோம். ஆனால் அவர்கள் போலீசார் அல்ல. அதற்கு முன்தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்தவர்கள். அது சரி! அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்தார்கள்? எதற்காக எங்களை எழுப்பினார்கள்?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நாங்கள் அவர்கள் உறவினரைப் புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் அவ்வளவு நேரம் அந்த இரவு முழுவதும் படுத்திருந்தோம். இதை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?

       (‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ எனும் நூலில் சின்ன அண்ணாமலை)

(கர்ஜனை தொடர்கிறது)

$$$

One thought on “ஸ்வதந்திர கர்ஜனை- 2(25)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s