ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்

-வ.மு.முரளி

தினமணி நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது….

நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

தேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள ஒரு சிறு பாறைத்தீவு இன்று நாட்டின் கௌரவச் சின்னமாகக் காட்சி தருகிறது. அங்கிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைத் தரிசிக்க நாடு  முழுவதிலுமிருந்து- ஏன் உலகம் முழுவதிலுமிருந்து- மக்கள் வந்து செல்கிறார்கள். அந்தப் பாறையில் அப்படி என்ன விசேஷம்?

இதைத் தெரிந்துகொள்ள 130 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்துக்கு பயணம் செய்ய வேண்டும்.

1892, டிசம்பர் 24-ஆம் தேதி, காவியுடை உடுத்த சந்நியாசி ஒருவர் கடல் நடுவே இருந்த இந்தப் பாறைக்குச் செல்ல உதவுமாறு அங்கிருந்த மீனவர்களை வேண்டினார். ஆனால் மீனவர்கள் யாரும் உதவவில்லை. அதனால் இளம் சந்நியாசி சலிப்படையவில்லை; கடலில் குதித்து நீத்தியே அந்தப் பாறையை அடைந்தார். அங்கு டிச. 24, 25, 26 ஆகிய தேதிகளில், மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவத்தில் ஆழ்ந்தார்.

அந்தத் தவத்தின் இறுதியில், அவருக்குள் ஒரு புதிய ஞான ஒளி உதித்தது. புத்தருக்கு போதிமரம் போல, அந்த இளம் துறவிக்கு ஞானம் வாய்த்தது அந்தப் பாறையில். அவர்தான் பின்னாளில் ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நாமகரணத்துடன் உலகையே தனது அறிவாலும் பேச்சாலும் வென்றவர்.

அவரது பெருமையை நினைவுகூரும் விதமாக பிரமாண்டமாக அங்கு நினைவாலயம் எழும்பி இருக்கிறது. அதன் நிழலில் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பு பல சேவைகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பாறை மகத்தான பாறையானதன் பின்னணியில் அந்த இளம் துறவியின் மாபெரும் தவ வாழ்க்கை புதைந்திருக்கிறது.

வரும் ஆண்டு (2012-இல் எழுதியது) , சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த தின ஆண்டு. இந்த ஆண்டிலேயே இதற்கான கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 1863, ஜனவரி 12-ஆம் தேதி புவனேஸ்வரி அம்மையாரின் கருவறையில் உதித்த நரேந்திரன் என்ற அந்த பாலன், அடிமைப்பட்டிருந்த தேசம் மீது படர்ந்திருந்த சாம்பலையும் சோம்பலையும் போக்க வந்த துறவியாக மலர்ந்தது நமது தேசத்தின் பெரும் பேறு.

நாடு விடுதலைக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த அந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடராக, ஆன்மிக ஒளிவிளக்காக உதித்த சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் பல தலைவர்களை உருவாக்கின. அவர் வாழ்ந்த காலம் மிகவும் குறுகியது; ஆனால் தான் மறைவதற்குள், பல நூறு ஆண்டுகளில் சாதிக்க வேண்டியதை 39 ஆண்டுகளில் சாதித்துத் திரும்பினார்.

அவருக்கு அந்த உத்வேகத்தை அளித்தது எது? குமரிமுனையில் அவர் தவம் செய்த பாறையில் அவருக்கு ஞான ஒளி கிடைக்கக் காரணமானது எது?

1888-ஆம் ஆண்டு துவங்கி 1893 வரை நாட்டின் பல பகுதிகளிலும் அவர் நிகழ்த்திய ‘பரிவ்ராஜக’ சுற்றுப்பயணமே அந்த ஞானத்துக்குக் காரணம். நடந்தும், வண்டியிலும், ரயிலிலும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து தேசத்தை வலம் வந்தபோது, அவர் எண்ணற்ற மக்களைச் சந்தித்தார்; அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டார்.

இடையே 1892, டிசம்பரில் குமரிமுனை வந்தார். அங்கு குமரிமுனை பாறையில் அவர் செய்த தவம் என்பது, மேற்படி பயணத்தில் பெற்ற அனுபவங்களை அசை போடுவதாகவே அமைந்தது. அப்போதுதான் நமது நாட்டின் வீழ்ச்சிக்கும் சீரழிவுக்கும் காரணம் புரிந்தது. அது மட்டுமல்ல, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திட்டமும் மனதில் உதித்தது.

இதை அவரே தனது உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“குமரி முனையில், தென்கோடி முனையில் உள்ள பாறையில் தான் எனக்கு அந்த யோசனை உதித்தது. நம்மிடையே எண்ணற்ற துறவிகள் இருக்கின்றனர். அவர்கள் பல உபதேசங்களைச் செய்கின்றனர். இருந்தும் அனைத்தும் வீணாகின்றன. அப்போதுதான் எனது குருதேவரின் உபதேசம் நினைவில் வந்தது. பசியால் துடிப்பவனுக்கு மத போதனை தேவையில்லை என்பதுதான் அது. நாடு என்ற முறையில் நாம் நமது தனித்தன்மையை இழந்திருக்கிறோம். அதுவே இந்தியாவின் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். நாம் மக்களை இணைத்தாக வேண்டும்”

இதுவே அந்தத் துறவி கண்டறிந்த உண்மை. நாட்டை உள்ளன்போடு வலம் வந்ததன் விளைவாகத் திரண்ட ஞானம் அது. அங்கிருந்து தான், அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் வெற்றிக்கொடி நாட்டும் வேகத்துடன் அந்தப் புயல் கிளம்பிச் சென்றது. பின்னர் நடந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.

இதுவே ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படும் பாறையின் வெற்றிக்கதை. நாட்டையும் மக்களையும் நம்மாலும் நேசிக்க முடிந்தால், கல்லும் கனியும்;  வெற்றுப் பாறையும் புனிதமாகும். சக மனிதனை நேசிக்கும் அன்பே மதத்தின் ஆணிவேர் என்பது புலப்பட்டுவிட்டால், நாம் அனைவரும் அந்த வீரத்துறவி கனவு கண்ட வீரர்களாக மாற முடியும்.

ஒரு மகத்தான சரித்திரத்தின் 120 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தரின் 150- ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ உள்ள நிலையில், அவரது அறைகூவலை கடலலைகளுக்கு நிகராக ஒலித்தபடி இருக்கிறது அந்தப் பாறை. அது உங்கள் காதுகளுக்குக் கேட்கிறதா?

  •  நன்றி:  தினமணி  (24.12.2012)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s