-மகாகவி பாரதி
சுதேசமித்திரன் இதழில் (1906) வெளியான மகாகவி பாரதியின் ஆரம்பக்காலக் கவிதைகளுள் ஒன்று இது...

யாணர்க் குறையுளா மிந்து நாடதனிற்
காணற் கினிய காட்சிகள் பலவினு
மாணப் பெரிய வனப்பமைந் தின்கவி
வாணர்க் கமுதா வயங்கிடும் பொருளிதென்
றூணப் புலவோ னுரைத்துளன் முன்னாள்
அஃதுதான்:-
கருமையிற் படர்ந்த வானமாங் கடலிடை
ஒருமையிற் றிகழு மொண்மதித் தீவினின்
றெல்லாத் திசையினு மெழில்பெற வூற்றுஞ்
சொல்லா வினிமைகொள் சோதியென் றோதினன்.
ஓர் முறை,
கடற்புற மணன்மிசைத் தனியே கண்ணயர்ந்
திடைப்படு மிரவி லினிதுகண் விழித்துயான்
வானக நோக்கினேன் மற்றதன் மாண்பினை
யூனமா நாவினி லுரைத்தலும் படுமோ?
நினைவறுந் தெய்வீகக் கனவிடைக் குளித்தேன் வாழிமதி!
.
சுதேசமித்திரன் (25-9-1906) இதழ் ஆதாரம்: பாரதி தமிழ்: பக்கம் 30 {யாணர் - அழகு}.
$$$