புஸ்தகத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க!

-முரளி சீதாராமன்

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான திரு. முரளி சீதாராமன், நகைச்சுவை பொங்க எழுதுவதில் மன்னர். அதேசமயம், விஷயமில்லாமல் இருக்காது. புத்தகக் கண்காட்சி குறித்த இவரது நையாண்டிக் கட்டுரை இது…. சென்னை புத்தகத் திரு விழா தொடங்கி இருக்கிறது, போவோமா ஊர்கோலம்?

எஸ்…அதுபோல ஆசாமிகளை நீங்கள் பல ஊர்களில் பார்க்கலாம் – அதிலும் புத்தகக் கண்காட்சி, புத்தகத் திருவிழா என்று மார்கழி – ஆடி மாத காலங்களில்தான் இந்த  ‘அறிவுஜீவி’களுக்குக் கொண்டாட்டமான பீரியட்! அப்பதான் கல்யாண மண்டபங்கள் காலியாக இருக்கும்! 

அறிவுஜீவி என்பது கொஞ்சம் ஓல்ட் மாடல் – சமூக செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், பிறழ் பாலுறவு ஆய்வாளர்… இப்படிப் பல்வேறு திருநாமங்களுடன் அலைவார்கள்! பேசும் போது ஒரு கான்வர்சேஷனை ஆரம்பித்து விட்டால் போதும் – டேப் ரிக்கார்டர் ஸ்விட்ச் போட்டாற்போல! அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும் – எதிரில் இருப்பவன் கேட்கிறானா, இல்லை என்பது பற்றிக் கவலையே பட மாட்டானுவ! 

இந்த மாதிரிப் புத்தக விழாக்களில் இந்த  ‘அறிவு ஜீவி’ எழுதிய புஸ்தகம் ஏதோ ஒரு ஸ்டாலில் இருக்கும்.  ‘எக்ஸிஸ்டென்ஷியலிசம்’-  ‘சர்ரியலிஸம்’-  ‘பிகாஸோவின் க்யூபிஸம்’… இப்படி எதையோ ஒன்றை 300 பக்கத்துக்கு ஆராய்ச்சி பண்ணி 500 ரூபாய் விலை வச்சிருப்பாங்க!

இல்லாட்டி  ‘புறத் தமிழ் உலகியலில் விளிம்பு நிலைச் சமூகங்களின் தன்னெழுச்சி- ஒரு மீள்பார்வை’… அப்பாடி மூச்சு விட்டீங்களா… 

அப்படியாகப்பட்ட டைட்டில்ல தடிமன் புக் ஒண்ணு போட்ருப்பாங்க! இதுல  ‘மீள்பார்வை’ ங்கறதை மட்டும் பெரிய எழுத்துல போட்டுட்டு மீதி எல்லாம் எறும்பு ஊர்ற மாதிரி போட்ருக்கும்! அட்டையில் பரட்டைத் தலையோட ஒரு ஆள் பீடி குடிச்சிகிட்டு இருப்பான்! 

புத்தகக் கண்காட்சிக்காரன் கெட்டிக்காரன் –   ‘பொன்னியின் செல்வன்’ அட்டையில் ம.செ. அற்புதமா வரைஞ்சிருப்பார், நீங்க அந்தப் புஸ்தகத்தை எடுக்கும் போதே பக்கத்துலயே இந்தப் பரட்டை பீடி புஸ்தகமும் இருக்கா மாதிரி செட் பண்ணியிருப்பார்! நீங்க ஏதோ ஒரு உந்துதல்ல அதை எடுத்தா தொலைஞ்சீங்க!

ஒரு ஜோல்னா பை – குறுந்தாடி – பீடி வாயரான (அந்த அட்டையில் இருப்பது போலவே) ஒரு  ‘அறிவுஜீவி’ உங்கள் முன்பு பிரசன்னமாகி விடுவார்! காஃப்கா, ஆல்பர்ட் காம்யூ, ஜீன் பால் சாரத்ரே எல்லாம் கலந்த கலவை அவர்! 

அநேகமாக அவர் ஏதேனும் அதி தீவிர இயக்கத்தின் இலக்கியப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பார் – அல்லது எதனுடனும் தன்னைப் பொருத்திக் கொள்ளாமல் சுதந்திர அறிவுஜீவியாக இருப்பார்! அல்லது அந்த  ‘மீள்பார்வை’ எழுதினவராகவே கூட இருப்பார்!

இவர்களுடைய பதிப்பகங்களே வித்தியாசமான பெயரோடு இருக்கும்.  ‘சுழல்’-  ‘செந்தழல்’-  ‘புற்று’-  ‘ரோமக்கற்றை’-  ‘சூறைக் காற்று’… இப்படி ஏதாவது குயுக்தியான பேராத்தான் வைப்பாங்க! அது அந்த  ‘அறிவுஜீவி’யின் வீட்டு அட்ரஸில்தான் இயங்கும்! அது பதிப்பித்த ஒரே புஸ்தகம் அதுதான்! 

அந்த நேரத்தில் அவரது  ‘அறிவு ஜீவி’தோழர் வருவார்.  “இதை நீங்க இன்னும் பரந்த வெகுஜன வாசிப்புக்கு கொண்டு போலாமே தோழர்”- என்பார் அவர் தனது குறுந்தாடியை நீவியபடி! 

உடனே நம்ம ‘அறிவு ஜீவி’ புலம்ப ஆரம்பித்து விடுவார்!  “இப்படித்தான்பா போன மாசம்  ‘கிழக்கு’க்கு போனேனா? ஹரன் பிரஸன்னா உள்ளேயே விட மாட்டேன்டான்! இன்னும் 100 டைட்டில் லைன்ல இருக்குதாம்”.

 “நீங்க பத்ரி சேஷாத்ரியவே பார்த்திருக்கலாமே தோழர்”- அந்த ஆசாமி சொல்லும் தோரணையைப் பார்த்தால் ஏதோ பத்ரி இவரோடு அரை நிக்கர் போட்டுக் கொண்டு விளையாடின மாதிரி இருக்கும்! 

“இவங்கள்லாம் ஆரியர்கள் தோழர் – நீங்க ஏன்  ‘உயிர்மை’ சாகுல் பாய் கிட்ட போவக் கூடாது?”

 “நீ வேறப்பா, அவன் திராவிடம் அது இதுன்னு பேசுவான் – ஆனால் வியாபாரம்னு வரும்போது சுஜாதா, தி.ஜானகிராமன், அப்துல் ரகுமான், வாலின்னு ஜனரஞ்சமா போயிடுவான்”.

அப்புறம்…. நீங்கள் ஊகித்திருப்பீர்கள்!… எஸ்… நமது அறிவுஜீவி இப்படித்தான் தனது சொந்தப் பதிப்பகத்தைத் தொடங்கினார்! தனது இலக்கிய  ‘ஆய்வு’களை வெளியிட  ‘ஜோல்னா பை’ என்ற பெயரிலும், அதன் துணை அமைப்பாக  ‘தீச்சட்டி’ என்று அரசியல் சமூகக்  ‘கள ஆய்வு’களை வெளியிட இன்னொரு பதிப்பகமும் ஒரே அட்ரஸில் தொடங்கி விட்டார்! 

இதில் அடுத்த டெரரான அம்சம் அவருடைய புஸ்தகத்துக்கு என்று  ‘வாசகர் வட்டம்’ போடுவார்கள்!  ‘குறுக்கு வெட்டு வாசகர் வட்டம்’ என்று ஏதாவது வித்தியாசமா பேர் வைப்பாங்க! Cross Section of the Society ஐ இவங்க ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் உள் வயமான மீட்டெழுச்சியையும், புறவயமான யதார்த்தமான இயல்பிலையும்….

வேண்டாம் விட்ருவோம் – இப்ப நேரா  ‘குறுக்கு வெட்டு’ மீட்டிங் போகிறோம்! நாம 11 வது ஆள்! உள்ளே  ‘அரங்கத்துல’ (ஓலைத்தடுப்புக்குப் பின்னாடி, தர்மா கோல் கூரைக்குக் கீழே  ‘தாஸ்தாவெஸ்கி’ அரங்கம்!) உங்களைத் தவிர மீதி பத்து பேர்ல ஆறு பேர் மேடையில இருப்பாங்க! 

திரும்பலாம்னு எத்தனிப்பீங்க, கரெக்ட்? ஆனால் அது நடக்காது… நடு நாயகமா ஆடியன்ஸ்ல உட்கார வச்சி  ‘கேட் போட்ட மாதிரி’ ரெண்டு பேர் ரெண்டு பக்கம் உட்கார்ந்துப்பாங்க!

ஆனால் இந்த மாதிரிக் கூட்டத்துல ஒரு வசதி – சண்டையே பெரும்பாலும் வராது! ஏன்னா எவனும் மேடையில பேசறதைக் கவனிக்க மாட்டான்! 

தன்னுடைய அடுத்த வெளியீடு  ‘நெதர்லாந்தின் வெள்ளை யானை’- அல்லது  ‘போடெம்ஸ்கியின் வண்ணங்கள் குறித்த பிரக்ஞை’… இப்படி எதையாவது யோசிச்சுகிட்டு இருப்பான்! 

அந்தக் கூட்டத்துலயே உங்களைத் தவிர மத்த எல்லாம் அறிவுஜீவி! சில நேரங்களில்   ‘உரத்த சிந்தனை’யா உற்பத்தி ஆகி, தடித்த வார்த்தைகளா டமால்னு வெடிக்கறதும் உண்டு!

புஸ்தக வெளியீடு முடிஞ்சதும் அடுத்த  ‘அட்டாக்கை’ ஆரம்பிப்பாங்க இந்த டெரர் பாய்ஸ்! புத்தகம் குறித்த ஆய்வு! 

மேடையில கச்சலா ஜிப்பா போட்டுகிட்டு, பத்துநாள் வாராத பரட்டைத் தலையோட ஒரு ஆசாமி மைக்கைப் பிடிப்பார்! இவரைத்தான் புஸ்தக அட்டையில பார்த்தோமான்னு கூட உங்களுக்குத் தோணும்! அங்கதான் உங்களுக்கு அஷ்டம சனி ஆரம்பமாகும்! 

ரஷ்ய எழுத்தாளர்  ‘ழேனியல் ழெவழில்ஃபில்’ எழுதின  ‘சைபீரிய உழவனின் குதிரை’- என்கிற நாவலில் வரும்  ‘நிக்கலோவ் அட்ரியானா’ பாத்திரத்தின் சாயல் இதுல வர்ற  ‘கருப்பாயி’ கிட்ட இருக்குதுன்னு ஒரு ‘பிட்’டைப் போடுவார்! 

அங்கதான் ‘இலக்கிய சர்ச்சை’ ஆரம்பமாகும்!  “இது செக்கோஸ்லாவேகியப் புரட்சியின் போது  ‘மெலனாவ் இவனோஸ்கி’ எழுதிய  ‘பிச்சைக் காரனின் முதலிரவு’ குறுங்காவியத்தின் பிரதிபலிப்பு”- என்று ஒரு குறுந்தாடி குரல் கொடுக்கும்!

உங்களுக்கு என்ன தெரியும்? ஏதோ பாலகுமாரனின் சியாமளி; ஜெயகாந்தனின் கங்கா; தி.ஜானகிராமனின் அம்மணி… இப்படி ஏதோ சில பெண் கதாபாத்திரங்கள் உங்கள் மனத்திரையில் நிலைத்திருக்கக் கூடும்! 

மிஞ்சிப் போனால் ‘பொன்னியின் செல்வனின்  நந்தினி, சிவகாமியின் சபதம், சாண்டில்யனின்  ‘ஜலதீபம்’-  ‘கடல்புறா’… இந்த ரேஞ்சில் குறுகிப் போய் உட்கார்ந்து இருப்பீர்கள்! 

அவனானால்  ‘அட்ரியானா நிக்கோலவ்’-  ‘மெலீனா கரோவ்ஷ்கி’-…என்று மேடையில் Verbal Dysentry ஆகக் கழிந்து கொண்டிருப்பான்!

இது எல்லாம் முடிந்து அதே புத்தகத்தின் மீது ‘குழு விவாதம்’-  ‘உள்முக ஆய்வு’ இதெல்லாம் தொடங்கும் முன் நீங்கள் எஸ்கேப் ஆகி இருந்தால் நீங்கள் பாக்யசாலி! 

இதற்கு நடுவில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடக்கும்! கோணிப்படுதா கட்டிய  ‘அரங்கில்’ மின்னல் போல நுழைவாள் ஒரு மாம்பலம் அல்லது மயிலாப்பூர் மாமி! 

 ‘இந்தச் சேற்றில் இப்படி ஒரு செந்தாமரை எப்படிப் பூத்தது?’- என்று நீங்கள் மூச்சடைத்துப் போய் வியக்கும் போதே – அந்த மாமியை விரைந்து போய் வரவேற்பார் இன்னொரு சக  ‘ஜோல்னாப் பை’! 

 “கவிதைப் பறவையின் முறிந்த சிறகுகள்-  பின்மீட்டுருவாக்க கணங்களின் பொய்மைத் தேடல்- இரண்டு டைட்டில் புதுசா வந்திருக்கு மேடம்!”- என்று அவர் அந்த மாமியிடம் தனது அறிவுஜீவிதத்தை நிவேதனம் செய்த அடுத்த கணமே… 

“அதெல்லாம் இல்லை சார்! பொண்ணு அமெரிக்கால இருக்கா! நம்ம பக்கத்து சமையல் பண்ண அவாளோட வெளிநாடுவாழ் இந்தியர் சங்கத்துல ஏதோ போட்டி வச்சிருக்காளாம்! மீனாட்சி அம்மாளின்  ‘சமைத்துப் பார்’ இரண்டு வால்யூம் இருக்கா?”

அறிவுஜீவிதத்தின் ஆணி கழன்று விழும் தமாஷ்களும் அரங்கேறும்!

புஸ்தகத் திருவிழாவை மிஸ் பண்ணிட்டோமேன்னு * ஏங்கறீங்களா? டோன்ட் ஒர்ரி! அடுத்த வருஷமும் அதே ஸ்டாலண்டை அதே ‘குறுந்தாடி’ நின்றிருப்பார் –  ‘பிச்சைக் காரனின் முதலிரவு’  தமிழ் மொழிபெயர்ப்புடன்!

  • பின்குறிப்பு: * இக்கட்டுரை முந்தைய ஆண்டு புத்தகத் திருவிழா நிறைவின்போது எழுதப்பட்டது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s