-பேரா. அ.ச.ஞானசம்பந்தன்

3. பாரதி (பகுதி-ஆ)
கவிஞராய்த் தோன்றிய ஒருவர் தேச பக்தராக மாறியதையும் சமூக சீர்திருத்த நோக்கங் கொண்டவராகப் பரிணமித்ததையும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை அறிந்த தத்துவ ஞானியாக மலர்ந்ததையும் இறைவனுடைய இலக்கணத்தை உணரும் சித்தராக மாறினதையும் வரிசையாக ஓரளவு காண்டல் பயனுடையதாகும்.
இவற்றில் முதல் மூன்று தோற்றத்தையும் இதுவரை ஒருவாறு கண்டோம். சித்தர்களுடைய தொடர்பு பெற்ற கவிஞர் – எங்கும் ஓர் இறைவனே உள்ளான், பல்வேறு சமயங்களிலும் புகுந்து பார்க்கின் விளங்கும் பரம்பொருளின் விளையாட்டல்லால் மாறுபடும் கருத்தில்லை என்ற முடிவையும் அறிந்ததுடன் மட்டுமல்லாமல் உணரவும் செய்கிறார்.
சொல்லினுக்கு அரியனாய்ச் சூழ்ச்சிக்கு அரியனாய் பல்லுரு வாகிப் படர்ந்த வான் பொருளை, உள்ளுயி ராகி உலகங் காக்கும் சத்தியே தானாம் தனிச்சுடர்ப் பொருள் (வி. நா. மாலை - 12 ) யான்எனது அற்றார் ஞானமே தானாய் முத்தி நிலைக்கு மூலவித் தாவான் (வி. நா. மாலை -11)
என்ற முறையில் இறைப் பொருளை விளக்கிட முற்படுகின்றார் கவிஞர்.
அறிவினால் முயன்று பார்த்தாலும் காணுதற்கு எட்டாத பரம்பொருள் அருள் வடிவினனாக உள்ளான் என்ற பேருண்மையை,
அறிவா கியகோ யிலிலே அருளா கியதாய் மடிமேல் பொறிவே லுடனே மிளிர்வாய் (முருகன் பாட்டு - 5}
என்றும் – அவன் யாவரினும் மேம்பட்டவன், அனைவருக்கும் அறிவு கொளுத்துபவன் என்ற உண்மையை,
யாவருக்கும் தலை யாயினான்; மறை, அர்த்தம் உணர்த்தும் நல் வாயினான் (முருகன் பாட்டு - 3)
என்றும் கூறுகிறார்.
இறைப் பொருள் பேராற்றல் வடிவாக இருக்கின்றது என்ற பேருண்மையினைப் பல்வேறு வகையாகப் பேசிச் செல்லும் கவிஞர், அதே நேரத்தில் அந்த ஆற்றல் தவறான வழிகளில் செலுத்தப் பெறுவதில்லை என்றும், தன் மாட்டு அன்பு கொண்டாரிடத்தும் அவ்வாற்றலை மறைத்துக் கொண்டு எளிமைத் தன்மையோடு அருள் செய்யும் இயல்புடையது என்பதையும் வேலன் பாடலி’ல் அழகாக எடுத்துக் காட்டுகிறார். இறைவன் புருவத்தை வளைத்தால், அகில உலகங்களும் தவிடு பொடியாகும் என்பதை முதல் அடியில் குறிப்பிட்டு, அடுத்த அடியில் அத்தகைய பேராற்றல் படைத்த பரம்பொருள் தன் மாட்டு அன்பு செய்யும் வள்ளியாகிய குறப் பெண்ணிடம் சொக்கிப் போய் மரம் போல் நின்றுவிட்டது என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். வில்லினை ஒத்த புருவம்” என்ற பாடலில்,
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை,
வேலவா - அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா
சொல்லினைத் தேனில் குழைத்துரைப்
பாள் சிறு வள்ளியைக் கண்டு
சொக்கி - வேங்கை மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே.
கல்லினை யொத்த வலியமனங்
கொண்ட பாதகன் - சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா.
பல்லினைக் காட்டி வெண் முத்தைப்
பழித்திடும் வள்ளியை - ஒரு
முதியர் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா.
ஆற்றலே வடிவாகிய பொருள் தன் ஆற்றல் முழுவதையும் மறைத்துக்கொண்டு அடியாருக்கு எளியவனாகக் காட்சி தருகின்றான் என்பதில் மட்டும் பரம்பொருளில் காணப்பெறும் முரண்பாட்டைக் காட்டாமல், உலகத்தார் எவ்வெவற்றை முரண்பாடானவை என்று அடித்துக் கூறுகிறார்களோ அவை அனைத்துமே பரம்பொருளின் வடிவம் என்பதை ‘வேள்விப் பாட்டு’ என்ற பகுதியில் அழகாக இணைத்துக் காட்டுகிறார். உலகத்து மக்கள் ஒரு சிலவற்றை இயற்கை என்று கூறுவதும், ஒரு சிலவற்றைச் செயற்கை என்று கூறுவதும் இன்பம் என்று உரைப்பதும் துன்பம் என்று உரைப்பதும் உண்மைதான் என்ற பேருண்மையை மிக அழகாக. எடுத்துக் காட்டுகிறார்:
இயற்கையென் றுனையுரைப்பார் - சிலர்
இணங்குமம் பூதங்க ளென்றிசைப்பார்
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்
தீயென்பர், அறிவென்பர், ஈசனென்பர்
வியப்புறு தாய்நினக்கே - இங்கு
வேள்விசெய் திடுமெங்கள் 'ஓம்' என்னும்
நயப்படு மதுவுண்டே - சிவ
நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய்
அன்புறு சோதியென்பார் - சிலர்
ஆரிருட் காளியென்றுனைப் புகழ்வார்
இன்பமென் றுரைத்திடுவார் - சிலர்
எண்ணருந் துன்பமென் றுனையிசைப்பார்
புன் பலி கொண்டு வந்தோம் - அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின் படு சிவசக்தி - எங்கள்
வீரைநின் திருவடி சரண் புகுந்தோம்.
இந் நிலையில் இந்த மதுரைப் பதியில் ஏழாம் நூற்றாண்டில் வந்த திருஞான சம்பந்தப் பிள்ளையார் சொக்கனைப் பார்த்துப் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது:
குற்றம் குணங்கள் நீ கூடல் ஆல வாயிலாய்
இவ்வாறு முரண்பாட்டிலேயே முழுமுதலைக் கண்ட கவிஞர் மறுபடியும் ஒருமைப்பாட்டைக் காட்டுவார் போல இவ்வண்ட சராசரங்கள் அனைத்தும் அவற்றில் வாழ்கின்ற உயிர்களும் அவ்வுயிருக்கு உள்ளும் இருக்கின்ற உயிருமாக உறைபவன் அவனே என்ற கருத்தைக் ‘கோமதி மகிமை’ என்ற பகுதியில் இதோ பாடிக் காட்டுகிறார்:
வாழிய, முனிவர்களே - புகழ் வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே, ஊழியைச் சமைத்த பிரான் - இந்த உலக மெலாமுருக் கொண்ட பிரான், ஏழிரு புவனத்திலும் - என்றும் இயல் பெறும் உயிர்களுக் குயிராவான், ஆழுநல் லறிவாவான் - ஒளி யறிவினைக் கடந்த மெய்ப் பொருளாவான். போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய் மாற்றிவாய், துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய் கனியிலே சுவையும் காற்றிலே யியக்கமும் கலந்தாற் போல நீ அனைத்திலும் கலந்தாய் உலகெலாந் தானா யொளிர்வாய், போற்றி அன்னை போற்றி, அமுதமே போற்றி புதியதில் புதுமையாய், முதியதில் முதுமையாய், உயிரிலே யுயிராய், இறப்பிலு முயிராய் உண்டெனும் பொருளி லுண்மையாய், என்னுளே நானெனும் பொருளாய். நானையே பெருக்கித் தானென மாற்றுஞ் சாகாச் சுடராய், கவலை நோய் தீர்க்கு மருந்தின் கடலாய், பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய். யானென தின்றி யிருக்கு நல் யோகியர் ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய், செய்கையாய், ஊக்கமாய் , சித்தமாய், அறிவாய் நின்றிடுந் தாயே, நித்தமும் போற்றி இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி அமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி சக்தி போற்றி, தாயே போற்றி முக்தி போற்றி, மோனமே போற்றி, சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி.
இறைப் பொருளில் ஈடுபட்டு யான், எனது என்ற அகங்கார மகங்காரங்களை அம் மூலப் பொருளில் கரைத்துக்கொண்டு உலா வருகின்ற கவிஞர், பகலைக் கண்டாலும் இரவைக் கண்டாலும் தீயை கண்டாலும் இறைவனின் வடிவாகவே காண்பதில் வியப்பு ஒன்றுமில்லை.
காலை யிள வெயிலின் காட்சி - அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி;
நீல விசும்பினிடை யிரவிற் - சுடர்
நேமி யனைத்துமவ ளாட்சி.
இப்பாடல் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியில் ஓர் அழகிய பாடலை நினைவூட்டுகிறது :
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு,
மாலையே போன்றிலங்கும் தாழ்சடை
இத்தகைய பெருமக்கள் தாம் காணும் இயற்கை செயற்கைக் காட்சிகளையும் மக்களையும் கூட – இறைப் பொருளாகவே காணுகின்றார்கள்.
காக்கையின் கரிய நிறத்திலும் மரத்தின் பச்சை நிறத்திலும் ஒலிக்குறிப்பிலும் இறைவனையே காணுகின்ற காட்சியைக் கவிஞர் இதோ பாடிச் செல்கிறார்:
காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;
பார்க்கு மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத இசைக்குதடா நந்தலாலா;
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா நந்தலாலா.
இதனைப் படிக்கும் பொழுது நம்மாழ்வார் அருளிய ‘மண்ணையிருந்து துழாவி’ என்ற பாடல் நினைவுக்கு, வருகின்றது.
மண்ணை யிருந்து துழாவி
'வாமனன் மண்ணிது' என்னும்,
விண்ணைத் தொழுதவன் மேவு
வைகுந்த மென்றுகை காட்டும்
அறியும்செந் தீயைத் தழுவி
'அச்சுதன்' என்னும் மெய் வேவாள்,
எறியும் தண் காற்றைத் தழுவி
'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,
ஒன்றிய திங்களைக் காட்டி
'ஒளிமணி வண்ணனே' என்னும்
நின்ற குன் றத்தினை நோக்கி
'நெடுமாலே வா' என்று கூவும்.
முழுமுதற் பொருளை உண்டு என்று ஏற்றுக் கொள்பவர்களுங்கூட, ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாத அப் பரம்பொருளுக்கு உருவும், நிறமும் கற்பித்து அதன் பயனாகப் பல்வேறு சமயங்களை வகுத்துக்கொண்டு தம்முள் சண்டையிட்டு மடிவதை இன்றும் காண்கிறோம். பரம்பொருளின் இலக்கணத்தை உள்ளவாறு அறிந்தவர்கள் இங்ஙனம் வேற்றுமை பாராட்ட வேண்டிய தேவையில்லை. நாம ரூபம் கடந்ததே முழுமுதற் பொருள் என்ற பேருண்மையை வேதம் அறிந்தவர்களே அறியாது போனது வருத்தம் தருவதாகும் என்ற பேருண்மையைக் கவிஞர் ‘அறிவே தெய்வம்’ என்ற பாடலில் இதோ பேசுகிறார்:
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களி லே தடு மாறிப்
பெருமை யழிவீரோ?
வேடம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.
நாமம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள்ள வீரென்ற
நான்மறை கண்டிலதே.
உள்ளும் புறமுமா யுள்ளதெலாந் தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே
எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள் தென்றறிஞ ரென்றுமய லெய்துவதாய்
வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்
தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகித்
தன்மையொன்றி லாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மை பலவுடைத்தாய்த் தான் பலவாய் நிற்பதுவே
எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்கு பலமதத்தோர் சாற்றுவது மிங்கிதையே.
இத்துணைத் தூரம் பரம்பொருளின் இயல்பைத் தம் அறிவாலும் அனுபவத்தாலும் கண்ட முறையில் விரிவாகப் பாடிவந்த கவிஞர் இறுதியாக கோவிந்தசாமி தமக்கு உபதேசம் செய்ததாகப் ‘பாரதி அறுபத்தாறில்’ கடைசி இரண்டு பாடல்களில் தொகுத்துப் பேசுகிறார். பொருள் ஒன்று என்றும், அந்த ஒரு பொருளுக்குப் பல்வேறு நாமங்களும் வடிவங்களும் கற்பிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த நாம ரூபங்கள் அவரவர்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் தரத்திற்கும் ஏற்ற முறையில் சமைக்கப் பெற்றுள்ளன என்றும் ஒருவர் உணர்ந்து விட்டால் சமய வேறுபாட்டைக் கடந்து, நாமரூப வேறுபாட்டைக் கடந்து பொருளைக் காண்டல் கூடும். அங்ஙனம் காண்பதற்கு அடிப்படை அருள் உள்ளம் ஒன்றேயாம் என்பதை எடுத்துக் காட்டுவார் போல, ‘ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்’ என்று பேசிவிட்டு அதனை முடிக்கும் முறையில் இதோ பேசுகிறார்:
பூமியிலே கண்டமைந்து; மதங்கள் கோடி;
புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசு பதம் போற்று மார்க்கம்,
ஸநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,
நாமமுயர் சீனத்துத் தாவு' மார்க்கம்
நல்ல 'கண்பூசி' மதமுதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல வுளவா மன்றே;
யாவினுக்கு முட்புதைந்த கருத்திங் கொன்றே.
பூமியிலே வழங்கிவரு மதத்துக் கெல்லாம்
பொருளினைநா மிங்கெடுத்துப் புகலக் கேளாய்;
சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி ;
தத்வமஸி; நீயே யஃதாம்;
பூமியிலே நீ கடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி
ஸதாகாலம் 'சிவோஹ' மென்று ஸாதிப்பாயே.
இத்துணைத் தூரம் அறிவு வளம், மன வளம். அனுபவ வளம் ஆகியவற்றைப் பெற்று முதிர்ந்த கவிஞராக வாழ்கின்ற ஒருவர் வாழ்க்கையில் ஒரு சிறந்த குறிக்கோளைப் பெற்றவராக இருந்திருத்தல் வேண்டுமென்பதில் ஐயமில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று, பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக வெந்ததைத் தின்று வாழ்ந்து, வேளை வந்தபொழுது சாகின்ற அற்ப மனிதா கூட்டத்தில் தாம் ஒருவர் அல்லர் என்ற உண்மையைக் கவிஞர் ‘யோகசித்தி’ என்ற பாடலில் பாடிக் காட்டுகிறார்:
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
அப்படியானால், இப்பெருமக்களுடைய குறிக்கோள் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது அன்றோ? அதனையும் ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலில் எடுத்துக் காட்டுகிறார் :
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியி லெறிவதுண்டோ ?
சொல்லடி, சிவசக்தி - எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ, இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
நசையறு மனங் கேட்டேன், - நித்தம்
கவ்மெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடுநல் லாங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
தம் வாழ்நாள் சிறந்த குறிக்கோளுடன் மிளிர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் மென்பதையும்,
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே யெண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முனிங்கு
நசித்திடல் வேண்டு மன்னாய்
என்ற இடத்தில் பாடிக் காட்டுகிறார்.
வாழ்க்கையில் ஒருவன் சிறந்த குறிக்கோளைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வகையான தொழிலில் ஈடுபட்டுத் தன் கடமையை நிறைவேற்று கின்றான். எத்தொழிலைச் செய்தாலும் அஃது இறைவன் பணியாகும் என்ற பேருண்மையைக் கவிஞர் அறியாதவர் அல்லர். இப்பேருண்மையைத் ’தேசமுத்துமாரி’ என்ற பாடலில் ‘யாதானும் தொழில் புரிவோம்; யாதும் அவள் தொழிலாம்’ என்று பேசுகிறார். இவ்வாறு கூறியிருப்பினும், பாரதியைப் பொறுத்தமட்டில் வாழ்வின் குறிக்கோளாக அவர் கொண்டது எதனை என்றால்
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
இமைப்பொழுதும் சோரா திருத்தல்
என்பதேயாகும். இக்கடமையை நன்கு நிறைவேற்றத் தமக்கு ஆற்றல் தரவேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கின்ற கவிஞர்,
பண்டைச் சிறுமைகள் போக்கியென் னாவிற் பழுத்த சுவைத்
தண்டமிழ்ப் பாட லொரு கோடி மேவிடச் செய்குவையே
என்று பாடுகிறார்.
இத்தகைய ஒரு குறிக்கோளை மனத்திற் கொண்ட கவிஞர் இறைவனை நோக்கி வேண்டும் வேண்டும்’ என்று கூறுவனவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தாலும் அக்கவிஞருடைய மன நிலையை ஒருவாறு அறிய முடிகின்றது.
மனத்தில் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும்பொழுது நின் மௌன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்
அறம் பொருள் இன்பம்வீ டெனவும் முறையே
தன்னை ஆளும் சமர்த் தெனக்கு அருள்வாய்
நோவு வேண்டேன் நூறு ஆண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன் உன் துணை வேண்டினேன்
வேண்டாத அனைத்தையும் நீக்கி
வேண்டியது அனைத்தும் அருளுவது உன் கடனே
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன் ,
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் –
யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கி வாழ்ந் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா,
ஞானாகா சத்து நடுவே நின்று நான்
'பூமண் டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்த பல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க' என்பேன், இதனை நீ
திருச்செவிக் கொண்டு திருவுள மிரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே
இந்நாள், இப்பொழு தெனக்கில் வரத்தினை
அருள்வாய்.
சிறந்த குறிக்கோளுடைய கவிஞன் ஒருவனுக்கு அக்குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டுமென்று நினைக்கும் பொழுதெல்லாம் ‘அச்சம்’ என்ற ஒன்று அவரைப் பற்றி அல்லலுறுத்துவதையனுபவிக்க நேரிடுகிறது. அவனைச் சுற்றியுள்ளவர்களாகிய உலகத்தார் சொல்லுகின்ற முறையில் அவனைவிட அறிவிலும் ஆற்றலிலும் குறைந்தவர் பலர் எல்லா வகை வளங்களையும் பெற்றுச் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்வில் குறிக்கோள் என்ற ஒன்று மருந்துக்கும் இல்லை. கவிஞனைப் பொறுத்தமட்டிலும் வானை முட்டுகின்ற குறிக்கோள் இருக்கிறது; ஆனால், வாழ்க்கை வசதிக்கு எள்ளளவும் இடமில்லை. அப்படியே வாழ்ந்தால் தன் நிலை என்ன வாகுமோ என்ற ஒரோவழி மனத்தில் அச்சமும் ஏற்படுகிறது. அத்தகைய நிலையில் மனத்தைப் பார்த்து, பாழும் மனமே நீ அஞ்சவே வேண்டாம். இறைவனுடைய தாள்களைச் சரணம் அடையவா யானால், நீ அஞ்ச வேண்டிய தேவையில்லை. இறைவன் தாளைச் சரணம் அடைவதற்கு எவ்வளவு நீ அஞ்சினாலும் அதனால் எவ்வகையான பயனும் ஏற்படப் போவதில்லை” என்று பேசுகிறார் பாரதி.
மேன்மைப் படுவாய் மனமே கேள்
விண்ணி னிடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே.
பயத்தா லேதும் பயனில்லை
யான்முன் னுரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடி முறைசொல்வேன்,
ஆன்மா வான கணபதி
அருளுண் டச்ச மில்லையே.
இம்முறையில் மனத்தைப் பார்த்துத் தேறுதல் கூறிய வுடன், இறைவனுடைய அருள் துணைகொண்டு தான் அச்சத்தை வென்று விட்டதாகக் கவிஞன் அறிந்து கொள்கிறான். எனவே, அச்சத்தில் அமுங்குதல் இல்லை; நடுங்குதல் இல்லை; நாணுதல் இல்லை. எது நேரினும் இடர்ப்பட மாட்டோம்; அண்டம் சிதறினாலும் அஞ்ச மாட்டோம்; கடல் பொங்கி எழுந்தாலும் கலங்க மாட்டோம்; யாருக்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம் என்று பேசி, இறுதியில்
நெஞ்சே வாழி; நேர்மையுடன் வாழி
வஞ்சக் கவலைக்கு இடம் கொடேல் மனமே
தஞ்சம் உண்டு சொன்னார்கள்
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கும்
என்று அமைதி காண்கிறான். ஓயாது சலிக்கின்ற இயல்புடையதாகிய மனம் என்றும் ஒரே நிலையில் எத்துணைப் பெரியவர்கட்கும் இருந்துவிடுமென்று சொல்வதற்கில்லை. ஜீவன் முக்தர்களும் இவ்விதிக்கு விலக்கு அல்லர். ஆதலால் இவ்வளவு தூரம் உறுதிப் பாட்டோடு அச்சத்தை அகற்றி வாழ முற்பட்ட நம் கவிஞருக்குக்கூட மனம் எனும் ஓர் பேய்க் குரங்கு திடீர் திடீரென்று புத்தி மாறி அல்லல் விளைவிக்கத் தொடங்குகிறது. எனவே, மற்றொரு முறை மனத்தைக் கெஞ்சி, ‘ஏ மனமே; நான் சித்தி பெறுமாறு உன்னால் முடிந்த அளவு எனக்குத் துணை புரிவாயேயானால், தங்கத்தால் உனக்கு ஒரு கோயில் கட்டுவேன்” என்று பேசுகிறான்:
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கு மினியனாய்
வாழ்ந்திட விரும்பினேன், மனமே, நீ யிதை
ஆழ்ந்து கருதி, யாய்ந்தாய்ந்து, பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து
தேறித் தேறி, நான் சித்திபெற் றிடவே,
நின்னாலியன்ற துணை புரி வாயேல்,
பொன்னா லுனக்கொரு கோயில் புனைவேன்!
மனமே, எனைநீ வாழ்வித் திடுவாய்
வீணே யுழலுதல் வேண்டா
சக்தி குமாரன் சரண் புகழ் வாயே.
இவ்வாறு கெஞ்சிக் கேட்ட பின்னரும் அந்தப் பாழும் மனம் அவன் விருப்பப்படி நடவாமல் அஞ்சி அஞ்சிச் சாகின்றது. எனவே, நெஞ்சினிடம் சினந்து கீழ்வருமாறு பேசுகிறார்:
................................ நெஞ்(சே)
நினக்கு யானுரைத்தன நிலை நிறுத்தி (டவே)
தீயிடைக் குதிப்பேன் , கடலுள் வீழ்வேன்,
வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்,
ஏதுஞ் செய்துணை யிடரின்றிக் காப்பேன்;
மூட நெஞ்சே, முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன்; இன்னு மொழிவேன்;
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே;
ஏது நிகழினும் 'நமக்கேன்' என்றிரு;
பராசக்தி யுளத்தின் படியுலக நிகழும்.
இவ்வாறு மேலும் நெஞ்சோடு கூறத் தொடங்கி, காரணம் இல்லாமல் அச்சப்படுவதினாலே பயன் ஒன்றும் இல்லை என்ற கருத்தைப் பேசுகிறார்:
இன்னுமொரு முறை சொல்வேன். பேதை நெஞ்சே,
எதற்கு மினி யுளைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி யிடைநமது வசத்தி லில்லை ;
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்.
பின்னையொரு கவலையுமிங் கில்லை நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்.
ஒவ்வோர் இடத்தில் ‘மனம் எனும் பெண்ணே வாழி நீ கேளாய்’ என்றும், ஒவ்வோரிடத்தில் ‘பேயாய் உழலும் சிறு மனமே’ என்றும் பாடுகின்ற கவிஞரின் நிலையை நாம் அறிய முடிகின்றது.
இங்ஙனம் ஓயாமல் மனத்தோடு போராடிய கவிஞர், மனத்தை அடக்க வேண்டுமென்றால் கூட இறைவனுடைய திருவருளை நாடுவது தவிர வேறு வழியில்லை என்ற பேருண்மையைக் காண்கின்றார். மாணிக்கவாசகப் பெருமான், ’அவன் அருளாலே. அவன் தாள் வணங்கி’ என்று கூறியது கவிஞருடைய நினைவுக்கு வருகின்றது போலும். எனவே, மனத்தை ஓயாது அன்பு முறையாலும் சினக்கும் முறையாலும், கெஞ்சுவதைவிட இறைவனைச் சரண் அடைவதே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்து ’வேள்விப் பாட்டு’ என்ற பகுதியில் ’இறைவனே! உடல், பொருள், ஆவி என்ற மூன்றையும் உன் முன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்கின்றோம்; எங்களைக் காப்பது உனது. கடன்’ என்று இதோ பேசுகிறார்:
எம்முயி ராசைகளும் - எங்கள்
இசைகளுஞ் செயல்களும் துணிவுகளும்
செம்மை யுற்றிட வருவாய் - நின்றன்
சேவடி யடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும் - திரு
முன்னரிட் பஞ்சலி செய்து நிற்போம்
அம்மைநற் சிவசக்தி - எமை
அமரர்தந் நிலையி லாக்கிடுவாய்.
இதைத் தொடர்ந்து மகாசக்தி பஞ்சகத்தில் ஐந்து பாடல்களிலும் இறைவனுடைய திருவடியைச் சரண் அடைந்து விட்டதாகக் கூறிப் பெருமிதம் கொள்கின்றார். சரணம் அடைந்த பின்னரும் ஒரோ வழி மனம் பழைய வினை வயத்தால் புலன்கள் வழி செல்லுகின்ற கொடுமையைக் காண்கின்றார் கவிஞர். ‘துறவு’ என்ற அதிகாரத்தின் பின்னரே. ‘அவா அறுத்தல்’ என்ற அதிகாரத்தை வள்ளுவப் பெருந்தகை வைத்த காரணத்தை விளக்கப் புகுந்த பரிமேலழகர் “விடாது வருகின்ற பிறவித் தொடர்பால் பழைய வினை வயத்தால் ஒரோவழிப் புலன்கள் மேல் பற்றுச் செல்லும் ; அதனையும் அறிந்து பரிகரிப்பதற்காகத் துறவு மெய்யுணர்தல் என்பவற்றின் பின்னரே ‘அவா வறுத்தலை’ வைத்தார்” என்று பேசுகின்றார். அஃது எத்துணை உண்மை என்ற பேருண்மையைப் பாரதி பாடலில் காண்கின்றோம். இறைவன் மாட்டுத் தம்மை அடைக்கலமாகக் கொடுத்த கவிஞர் மறுபடியும் புலன்கள் தமக்குத் துன்பம் செய்வதைக் கண்டு உள்ளம் நைந்து இறைவனை நோக்கிக் ‘கருணைக் கடல் ஆகிய உன்னிடத்தில் அற்பனாகிய நான் விரும்பும் இந்தச் சிறிய காரியங்கூடப் பெற முடியாதா’ என்று மனம் உருகி, மகா சக்திக்கு விண்ணப்பம் செய்கின்றார்.
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்
- முச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்து விடு - அல்லா லதில்
சிந்தனை மாய்த்து விடு
யோகத் திருத்திவிடு - அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்து விடு
ஏகத் திருந்துலகம் - இங்குள்ளன
யாவையும் செய்பவளே.
உள்ளம் குளிராதோ - பொய்யாணவ
ஊன மொழியாதோ?
கள்ள முருகாதோ - அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே - அனைத்திலும்
மேவி யிருப்பவளே.
இங்ஙனம் இறைப் பொருளைப்பற்றி ஓயாது பாடித் தன்னையும் அதன் மாட்டுக் கரைத்துக் கொள்கின்ற கவிஞரின் பாடல்களைக் கேட்டவுடன், ‘அடியார்கள் போல் கவிச் சக்கரவர்த்தி பாரதி உணர்வின் துணைகொண்டு முழுமுதற்பொருளை நாடி, அதிலேயே காலங்கழித்துவிட்ட ஒரு பக்தர் போலும்’ என்று நவீன உலகம் நினைந்து நையாண்டி செய்ய வேண்டிய தேவையில்லை. பாரதியின் பரந்த கல்வியறிவும், விஞ்ஞான அறிவும், பல மொழி அறிவும், ஆங்கிலப் புலமையும் நாடு அறிந்த ஒன்றாகும். மூட பக்தியும், மூடநம்பிக்கையும் நிறைந்திருந்த அவருடைய காலத்தில் பேரறிஞராகிய அவர் பல்வேறு விஞ்ஞானப் புதுமைகளையும் நன்கு அறிந்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. இன்றைய நாள் விஞ்ஞானம் பேசும் விரிந்து செல்லுகின்ற அண்டத்தைப் பற்றியும் (expanding universe) அக்கவிஞரும் அறிந்திருக்கின்றார். நம்முடைய நாடு அமைந்திருக்கும் இச்சிறிய பூமி, இதனை ஒரு துணைக் கோளாகவுடைய சூரிய மண்டலம், சூரிய மண்டலத்தைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரிய மண்டலங்களையுடைய பால் வெளி, இப்பால் வெளியைப்போல் கோடி கோடி கோடியான அண்டங்களையுடைய இப்பரந்த ஆகாயத்தில் இவ்வாண்டங்கள் அனைத்தும் ஓயாது சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன என்பதும் – ஒன்றை விட்டு ஒன்று பல காத தூர வேகத்தில் ஓடிக் கொண்டுள்ளன என்பதும் – சர் ஆர்தர் எடிங்ட்டன் போன்ற மாபெரும் விஞ்ஞானிகள் கண்டு உரைத்த புதுமைகளாகும்.
இவ்வளவு பெரிய உண்மையைக் கவிஞர் மிக எளிதாக இதோ பாடிச் செல்கிறார்:
படர்வான் வெளியில் பல
கோடி கோடி கோடி பல்கோடி
இடறாது ஓடும் மண்டலங்கள்
இசைத்தாய் வாழி இறையவனே.
இதனை இவ்விடத்தில் சுருங்கக் கூறிய கவிஞன் “கோமதி மகிமை’ என்ற கவிதையில் மிக விளக்கமாகத் தான் ஒரு வானூலறிஞன் என்பதை அறிவுறுத்துகின்ற முறையில் இதோ பேசுகிறார்:
இக்கதை யுரைத்திடுவேன். உளம்
இன்புறக் கேட்பீர், முனிவர்களே;
நக்ந பிரானரு ளால் - இங்கு
நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்;
தொக்கன அண்டங்கள் - வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்
இக்கணக் கெவரறிவார்? புவி
எத்தனை யுளதென்பதி யாரறிவார்?
நக்க பிரானறிவான்; - மாற்று
நானறியேன் பிற நரரறியார்;
தொக்கபேரண்டங்கள் - கொண்ட
தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள் ; - ஒளி
தருகின்ற வானமொர் கடல்போலாம்;
அக்கட லதனுக்கே - எங்கும்
அக்கரை யிக்கரை யொன்றில் லையாம்.
இக்கட லதனகத்தே - அங்கங்
கிடையிடை தோன்றும் புன் குமிழிகள் போல்
தொக்கன உலகங்கள்: - திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடும்;
மிக்கதொர் வியப்புடைத்தாம் - இந்த
வியன்பெரு வையத்தின் காட்சிகண்டீர்;
மெய்க்கலை முனிவர்களே - இதன்
மெய்ப் பொருள் பரசிவன் சக்திகண்டீர்.
பல கோடி கோடி மைல்களைக் காணக் கூடிய தொலைநோக்கி ஆடிகளைப் பெற்றுள்ள இன்றைய நாளில் கூட இவ் வண்டங்களின் கணக்கைக் கூற, கணித்திட முடியாது என்று விஞ்ஞானம் பேசுகிறது. அக் கருத்தைத் தொக்க பேரண்டங்கள் கொண்ட தொகைக்கு எல்லை இல்லை; அவற்றைக் கணக்கிட்டுச் சொல்லும் திறன் எனக்கும் இல்லை; பிற மனிதர்களுக்கும் இல்லை” என்று மனிதர்களைப் பார்த்துப் பேசும் பொழுது கவிஞர் பேசிக் காட்டுகிறார். “மகா சக்தி வாழ்த்து” என்ற பகுதியிலும்,
விண்டுரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை,
அண்டகோடிகள் வானி லமைத்தனை,
அவற்றி லெண்ணற்ற வேகஞ் சமைத்தனை,
மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவ தெத்தனை யத்தனை யோசனை
கொண்டதூர மவற்றிடை வைத்தனை,
கோல மேநினைக் காளியென் றேத்துவேன்.
என இதே கருத்து மறுபடியும் பேசப்படுகிறது.
எனவே, விஞ்ஞான அறிவு நன்கு நிறைந்துள்ள கவிஞர் பெருமகன் அந்த அறிவின் துணை கொண்டு பொருள்களை நன்கு ஆராய்ந்து, இறுதியில், ‘அறிவின் துணைகொண்டு ஆராய்வதினால் பயன் இல்லை; உணர்வின் துணைகொண்டுதான் உண்மையைக் காண வேண்டும்’ என்ற பேருண்மையை அறிந்தவனராய்க் கோவிந்தசாமியின் உபதேசத்தை மேற்கொள்கிறார் என்று அறிகின்றோம்.
$$$