-திருநின்றவூர் ரவிகுமார்

அத்தியாயம்- 4
பரோடா
அரவிந்தர் பம்பாய் வந்த அடுத்த இரண்டாவது நாள் (8 பிப்ரவரி 1893) பரோடா போய்ச் சேர்ந்தார். அவர் வங்காளத்தில் இருந்த தனது குடும்பத்தினரையோ உறவினர்களையோ பார்க்கப் போகாமல் இருந்தது நமக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஒருவேளை தனது தந்தை காலமானதும் தாய் நோயாளியாக இருப்பதும் அவருக்கு தெரிந்திருக்குமோ என்று கேட்டால் அதற்கு விடை இல்லை. உடனடியாக வேலையில் சேர வேண்டிய கட்டாயம் இருந்திருக்கலாம். பணியில் சேர்ந்த பின் விடுமுறை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவர் நேராக (தனது வீட்டிற்கு) வங்காளத்திற்குச் செல்லாமல் பரோடா சென்று பணியில் சேர்ந்தார்.
முதலில் நில அளவியல் (சர்வே டிபார்ட்மென்ட்) பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பின்னர் பல்வேறு பிரிவுகளுக்கு மாற்றல் ஆகியது. 1895 இறுதியில் சமஸ்தானத்தின் தலைமைச் செயலகமான திவான் ஆபீசுக்கு வந்தார். அங்கு அவர் அடுத்த சில ஆண்டுகள் இருந்தார். இதெல்லாம் ஐசிஎஸ் பணியைப் போலவே – பைல்களைப் பார்ப்பது, அலுவலக வேலை, பயணம் செய்வது போன்றவை – இருந்தன. அப்படியென்றால் பரோடாவில் ஏன் வேலை செய்ய வேண்டும்? அரவிந்தரே அதற்கு விளக்கம் சொல்லி இருக்கிறார்:
"உண்மைதான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. பரோடா சமஸ்தானம் ஒரு இந்திய சமஸ்தானம். அது இந்திய அரசரின் ஆட்சியின் கீழ் இருந்தது. உங்கள் தலைவிதியை உங்களைவிட உயர்ந்த இடத்தில் இருந்து ஒரு வெள்ளைக்கார அதிகாரி தீர்மானிக்கவில்லை. எனவே அங்கு பணியில் சுதந்திரமும் சுயமரியாதையும் இருந்தது".
தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக இருக்கும்போது அவரால் நிர்வாகப் பணியை தவிர்க்க முடியவில்லை. ஆனால் அவரது உண்மையான நாட்டமோ வேறொரு இடத்தில் இருந்தது. சமஸ்தான அதிபர் அரவிந்தரின் சீரிய திறமைகளைப் பற்றி நன்கு தெரிந்தவர். எனவே அந்த்த் திறமைகளை தனது சமஸ்தானத்திற்கு மட்டுமன்றி தனது சொந்த வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்.
அவர் அரவிந்தரை அழைத்து தேர்ந்த வார்த்தைகளைக் கோரும் முக்கியமான ஆவணங்கள் தயாரிக்கவும், சிறப்பு அறிக்கைகளைத் தயாரிக்குமாறும், தனது பேச்சுக்களை வடிவமைத்து தரும்படியும் பணித்தார். மகாராஜாவுக்கும் அரவிந்திருக்கும் இடையேயான உறவு பற்றி புகழ்பெற்ற மராட்டிய வரலாற்றாளர் ஜி எஸ் சர்தேசாய் எழுதியுள்ள குறிப்பு ஒன்று சுவாரஸ்யமானது:
‘ஸ்ரீ அரவிந்தரும் நானும் அடிக்கடி சாயாஜி ராவுடன் (மகாராஜா) இருப்போம். ஒரு முறை மகாராஜா ஒரு நிகழ்ச்சியில் பேச வேண்டி இருந்தது. ஸ்ரீ அரவிந்தர் அதற்கான உரையைத் தயாரித்திருந்தார். நாங்கள் மூவரும் உட்கார்ந்து அதைப் படித்தோம். பிறகு மகாராஜா, ‘அரவிந்த பாபு, இதை நீங்கள் கொஞ்சம் எளிமையாக்கி எழுதித் தர முடியுமா? இது என்னுடைய நிலைக்கு மேலான, சிறந்த தரத்தில் உள்ளது’ என்றார். ஸ்ரீ அரவிந்தர் புன்முறுவலுடன் சொன்னார்: “தேவையில்லாமல் ஏன் மாற்ற வேண்டும், மகாராஜா? இதை கொஞ்சம் மட்டுப்படுத்திச் சொன்னால் மக்கள் இதை மகாராஜா சொன்னார் என்று நம்பி விடுவார்களா, என்ன? நன்றாக இருக்கிறதோ மோசமாக இருக்கிறதோ எப்படி இருந்தாலும் மகாராஜா மற்றவர்கள் தயாரித்துத் தருவதைத் தான் பேசுகிறார் என்று மக்கள் கருதுகிறார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், இது உங்கள் கருத்துக்களை, சிந்தனைகளை வெளிப்படுத்துகிறதா என்பதுதான். நீங்கள் அதை மட்டும் பாருங்கள்”.
தன் சுதந்திரத்தையும் சுய மரியாதையையும் அரவிந்தர் எப்படிப் பராமரித்தார் என்பது, இதில் மட்டுமல்ல இன்னொரு சம்பவத்திலும் வெளிப்பட்டது.
ஒருமுறை மகாராஜா ஓர் உத்தரவிட்டார். அதிகாரிகள் அனைவரும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்பது அந்த உத்தரவு. அரவிந்தர் அந்த உத்தரவை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி என்றால் அவருக்கு ரூபாய் ஐம்பது தண்டம் என்றார் மகாராஜா. அதைக் கேள்விப்பட்ட அரவிந்தர், ‘அவர் எவ்வளவு வேண்டுமானாலும் தண்டம் போடட்டும். நான் தண்டம் கட்டப் போவதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகத்திற்கு வரப்போவதும் இல்லை’ என்று சொல்லிவிட்டார். பிறகு மகாராஜா மனம் மாறினார். மேற்கொண்டு இந்த விஷயத்தைத் தொடராமல் விட்டுவிட்டார்.
மகாராஜாவுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்தால் அன்று காலை உணவின்போது உடன் சாப்பிட வருமாறு அரவிந்தரை அழைப்பார். காலை உணவுக்குப் பிறகு தன்னுடன் தங்கி இருக்கும்படி அவரை கேட்டுக் கொள்வார். ஆனால் அரவிந்தரை அவர் தனது தனி உதவியாளராக (Private Secretary) எப்பொழுதும் நியமித்தது இல்லை. ஒரே ஒருமுறை 1903-இல் அவர் காஷ்மீர்ப் பயணத்தின் போது அரவிந்தரை தனது தனி உதவியாளராக அழைத்துச் சென்றார். ஆனால் அது நல்ல அனுபவமாக அமையவில்லை.
கருத்து வேறுபாடுகளும் உரசல்களுமாய் இருந்தாலும், அரவிந்திருக்கும் மகாராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. பரோடா மகாராஜா சிறந்த மன்னர் என்று மட்டுமல்ல, அவர் காலத்தில் இருந்த மற்ற மகாராஜாக்களை விடவும் அவர் முற்போக்குச் சிந்தனை கொண்டவராக இருந்தார் என்று அரவிந்தர் கருதினார். அதேபோல மகாராணி அரவிந்தர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். பாண்டிச்சேரியில் அரவிந்தர் இருந்தபோது மகாராணி அவருக்கு கடிதம் எழுதி ஆன்மிக உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றார்.
ஒரு கவிஞர், இலக்கியவாதி, பண்பாடு உள்ள மனிதன் எப்படி சலிப்பூட்டும் நிர்வாக எந்திரத்தின் பல்சக்கரமாக தொடர்ந்து ஓட முடியும்? விரைவில் அரவிந்தரின் மனதுக்குப் பிடித்தமான வேலை வந்தது. 1897-இல் பரோடா கல்லூரியில் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் ஆசிரியராக வரும்படி அழைப்பு வந்தது. மகாராஜா அதை அனுமதித்தார். பிறகு கல்லூரியில் அரவிந்தரின் தேவை அதிகமாக உணரப்பட்டது. 1897-இல் அவர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இதையெல்லாம் அவர் அரசின் பணியுடன் சேர்ந்தே செய்ய வேண்டியிருந்தது. 1906 ஜூன் மாதத்தில் அவர் நீண்ட விடுப்பில் வங்காளம் செல்லும் வரை தொடர்ந்தது. 1899-இல் கல்லூரி முதல்வராக இருந்த ஆங்கிலேயர் அரவிந்தரை கல்லூரிப் பணிக்கு நிரந்தரமாக அனுப்பும்படி மகாராஜாவை வேண்டிக்கொண்ட போதும் மகாராஜா அதை ஏற்கவில்லை. காரணம் அவருக்கு சீரிய ஆவணங்களைத் தயாரிக்கவும் நிகழ்த்துரைகளை எழுதித் தரவும் அரவிந்தர் தேவைப்பட்டார். இருந்தாலும் 1904-இல் அரவிந்தர் கல்லூரியின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். 1905-இல் முதல்வராக இருந்தவர் நீண்ட விடுப்பில் சென்றபோது பொறுப்பு (தற்காலிக) முதல்வராகவும் ஆனார்.
அரவிந்தர் சிறந்த ஆசிரியர். அது அவரது இயல்பு – ஸ்வதர்மம் – என்றே சொல்லலாம். அதிர்ஷ்டவசமாக அவரிடம் பாடம் கேட்ட சிலர் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளனர். அரவிந்தரும் சில இடங்களில் தனது ஆசிரியர் பணி பற்றிப் பேசி உள்ளார்.
அரவிந்தரின் அண்ணன் மன்மோகன் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார்; புகழ்பெற்றவராகவும் திகழ்ந்தார். ஆனால் இருவருடைய ஆசிரியர் பணியிலும் வேறுபாடு இருந்தது. அரவிந்தரே ஒருமுறை இதைப்பற்றி பேசும்போது, “மன்மோகன் மிகவும் கஷ்டப்பட்டு குறிப்புகளை எடுத்துத் தொகுப்பார். அவரது புத்தகங்களில் பல வரிகள் அடிக்கோடிட்டிருக்கும். ஓரங்களில் குறிப்புகளை எழுதி வைத்திருப்பார். சில பக்கங்கள் மடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் நான் அவ்வளவு அக்கறையாக இருக்க மாட்டேன்” என்றார்.
‘ஆனால் உங்கள் மாணவர்களும் உங்களைப் பற்றி உயர்வாகச் சொல்லி இருக்கிறார்களே’ என்றபோது, “நான் எப்போதும் குறிப்புகளைப் பார்த்து வகுப்பெடுப்பதில்லை. சில நேரங்களில் என்னுடைய விளக்கங்கள் பாடத்துடன் பொருந்தாமல் போய் உள்ளன. எனக்கு ஆச்சரியம் அளித்தது என்னவென்றால் மாணவர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே எழுதிக் கொள்வதும் அவற்றை மனப்பாடம் செய்வதும்தான். இதுபோல இங்கிலாந்தில் நடப்பதில்லை. ஒருமுறை நான் சௌதே எழுதிய ‘நெல்சனின் வாழ்க்கை’ பற்றி பாடம் எடுத்தேன். எனது பேச்சு உரை குறிப்புகளுடன் ஒத்துப் போகவில்லை. எனவே மாணவர்கள் உரைநூலில் இது போல் இல்லையே என்றனர். நான் சொன்னேன் உரைநூல் குறிப்புகளை நான் பார்க்கவில்லை. எப்படி இருந்தாலும் அவை குப்பைதான் என்றேன். நான் விலாவாரியாகப் படித்துச் சொல்வதில்லை. நான் படிப்பேன். அதை என் புத்திக்கு விட்டு விடுவேன். அது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுவேன். அதனால்தான் நான் எப்பொழுதும் அறிஞனாகவில்லை” என்றார் அரவிந்தர்.
ஆனால் அவரது மாணவர்கள் அவரை மதித்தார்கள். இலக்கியம் குறித்த அவரது ஆழ்ந்த அறிவு, அதை சொல்லிக் கொடுப்பதில் அவருக்கே உரிய தனித்துவமான பாணி, காந்தமெனக் கவரும் ஆளுமை, மென்மையான அதேவேளையில் பெருந்தன்மை மிக்க அவரது நடத்தை ஆகியவற்றை அவர்கள் நேசித்தார்கள்.
அவரது மாணவர்களில் ஒருவனான ஆர்.என்.பாட்கர் தனது நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்:
“நான் இன்டர்மீடியட் வகுப்பில் அவரது மாணவராக இருக்கும் நல்வாய்ப்பைப் பெற்றவன். அவர் பாடம் நடத்தும் பாணியே அலாதியானது. துவக்கத்தில் பாடத்தை அறிமுகம் செய்யும் விதமாக தொடர் உரையை நிகழ்த்துவார். பிறகு பாடத்தைப் படிப்பார். ஆங்காங்கே வரும் கடினமான சொற்களையும் வாக்கியங்களையும் விளக்குவார். இறுதியில் சம்பந்தப்பட்ட பாடத்துடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்களைப் பற்றி உரையாற்றுவார்.”
”ஆனால் கல்லூரி வகுப்பறையில் நிகழ்த்தும் உரைகளை விட மேடையில் நிகழ்த்தும் உரைகளைக் கேட்பது செவிக்கும் சிந்தனைக்கும் விருந்தளிக்கும் ஒன்றாகும். சில நேரங்களில் அவர் கல்லூரி விவாத மன்றத்தை தலைமை ஏற்று நடத்துவார். கல்லூரியின் மைய மண்டபம் நிரம்பி வழியும். அவர் அலங்காரமாகப் பேசும் பேச்சாளர் கிடையாது. ஆனால் உயர்தரமான பேச்சாளர். அவர் உரையை அனைவரும் அமைதியாக கூர்ந்து கவனித்துக் கேட்போம். அவர் நின்று பேசும்போது அசைய மாட்டார். கையைக் கூட உயர்த்தவோ அசைக்கவோ மாட்டார். ஆனால் அவர் உதட்டில் இருந்து வார்த்தைகள் அருவி போல தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். வார்த்தைகள் இனிமையாகவும் சரளமாகவும் வந்துகொண்டே இருக்கும். கேட்பவர்கள் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல அவரையும் அவர் பேச்சையும் மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பார்கள். அவர் பேச்சைக் கேட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும் அவரது உருவமும் அவரது சங்கீதக் குரலும் இப்பொழுதும் என் நினைவில் உள்ளன.”
“நான் ஒருமுறை அவரிடம் என் ஆங்கிலப் புலமையை அதிகரிக்க எந்தெந்த ஆசிரியர்கள் எழுதிய நூலைப் படிக்கலாம் என்று கேட்டேன். நான் ஏற்கனவே மெக்காலே எழுதிய ‘உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை’ என்ற நூலைப் படித்திருந்தேன். எனக்கு அவரது பாணி பிடித்திருந்தது. எனவே மெக்காலேவை தொடர்ந்து படிக்கட்டுமா என்றும் கேட்டேன். அவர் வழக்கமான புன்முறுவலுடன், ‘யாருடைய அடிமையாகவும் ஆக வேண்டாம். உனக்கு நீயே எஜமானனாய் இரு. மெக்காலேவையோ அல்லது வேறு எந்த ஆசிரியரையோ படித்தால் நீ அவராகி விட முடியாது. நீ மெக்காலேவாக முடியாது. அவரது பலவீனமான எதிரொலியாகத் தான் ஆவாய். அவரை போலி செய்பவர் அல்லது அவரது பிரதி என்று உலகம் உன்னை ஏளனம் செய்யும். நீ எப்பொழுதும் சுயமாக வெளிப்பட முடியாது. எனவே நல்ல ஆசிரியர்களின் நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படி. அதுபற்றி நீ யோசி. உனக்கென ஒரு பார்வையை, கோணத்தை உருவாக்கு. அந்த ஆசிரியரின் கோணத்தில் இருந்து நீ வேறுபடலாம். உனக்கென சிந்திக்கும், எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள். அப்பொழுதுதான் உனக்கென ஒரு பாணி உருவாகும். நீ அந்த பாணியின் எஜமானனாவாய்’ என்று ஸ்ரீ அரவிந்தர் கூறினார்”.
-இவ்வாறு பாட்கர் தன் நூலில் குறித்துள்ளார்.
விடுதலைப் போராட்டக் காலத்திலும் விடுதலைக்குப் பின்னும் பிரபல அரசியல் தலைவராக இருந்த கே.எம்.முன்ஷி பரோடா கல்லூரியின் மாணவர். அவர் சொல்கிறார்:
“எனக்கு ஸ்ரீ அரவிந்தரை 1902-லிருந்தே தெரியும். அப்பொழுது நான் மெட்ரிக் பாஸாகி பரோடா கல்லூரியில் சேர்ந்தேன். ஏற்கனவே அவரைத் தெரியும் என்றாலும் கல்லூரியில் சேர்ந்த பிறகு அவர் மீதான எனது மதிப்பும் மரியாதையும் பல மடங்கு உயர்ந்துவிட்டன. அவர் ஆங்கிலப் பேராசிரியராக வந்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நான் அப்படியே பிடித்துக் கொள்வேன்”.
கல்லூரியில் அவரை அறிந்த எல்லோர் மீதும் அவரது தாக்கம் தெளிவாகத் தெரிந்தது. அவருடன் பணியாற்றிய ஆசிரியர் டாக்டர் சி ஆர் ரெட்டி நினைவு கூர்கிறார்:
“எனக்கு அவரைத் தெரியும் என்பதே ஒரு கௌரவம் தான். கல்லூரி முதல்வரான டாக்டர் கிளார்க் என்னிடம் சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது. ‘நீங்கள் அரவிந்த கோஷைச் சந்தித்தீர்களா? அவரது கண்களைக் கவனித்தீர்களா? அவை இனம் புரியாத ஒரு பிரகாசமும் தீவிரமும் கொண்டிருக்கின்றன. அவை நம்மை ஊடுருவிச் செல்கின்றன. ஜோன் ஆஃப் ஆர்க் சொர்க்கத்தின் குரலைக் கேட்டது போல அரவிந்தர் தெய்வ திருஷ்டியைப் பெற்றிருக்கிறாரோ?’ என்று டாக்டர் கிளார்க் கூறினார்”.
பரோடாவில் நிர்வாகப் பணி எனும் சலிப்பிலிருந்து விடுபட்டு ஆசிரியர் பணி என்பது விரும்பத்தக்க மாற்றமாக இருந்தாலும் அரவிந்தரின் உண்மையான ஆர்வம் இருந்தது சமஸ்கிருதம், இலக்கியம், தேச விடுதலை இயக்கம் ஆகியவற்றில் தான். அவர் இங்கிலாந்தில் இருந்தபோது ஐரோப்பிய இலக்கியங்கள், கலாச்சாரத்தைக் கற்றுத் தேர்ந்தார். ஆனால் அவரது சொந்த நாட்டைப் பற்றி அவருக்குத் தெரிந்தது மிகவும் சொற்பமே. தன் நாட்டின் பண்பாடு பற்றியும் நாகரிகம் பற்றியும் சமயங்கள் பற்றியும் எதுவும் தெரியாமல் இருந்தால் நாட்டுக்கு எப்படி சேவை செய்ய முடியும்? எனவே இந்தக் குறைபாட்டைப் போக்க அவர் தீர்மானித்தார். எனவே அவர் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். ராமாயணம், மகாபாரதம், உபநிஷதங்கள், பகவத் கீதை, மகாகவி காளிதாசனின் நாடகங்கள், இன்னும் பிற சமஸ்கிருத நூல்களை அவர் படித்தார்.
சமஸ்கிருதத்தை அவரே சுயமாக கற்கத் தொடங்கினார். அவர் இங்கிலாந்தில் இருந்தபோது ஐசிஎஸ் படிப்புக்காக கிரேக்க, லத்தீன் மொழிகளை அப்படித்தானே கற்றார்? அதேபோல மற்றொரு செம்மொழியான சம்ஸ்கிருதத்தையும் தானே முயன்று கற்றார். எந்த அளவுக்கு என்றால், வேதத்தைப் படிப்பதுடன், அந்த புராதன பிரதியை தனது யோக கண்ணோட்டத்தில் புதுவிதமாக விளக்குமளவுக்கு அதில் வல்லமை பெற்றார். மொழிகளைக் கற்றுக் கொள்வதில் அரவிந்தருக்கு இருந்த ஆர்வம் காரணமாக குஜராத்தி, மராட்டி, வங்க மொழி ஆகியவற்றில் திறம் பெற்றவரானார்.
அவரது கவனக்குவிப்பு வல்லமையால் பல்வேறு துறை விஷயங்களைப் பற்றி அவரால் வேகமாகப் படிக்கவும், படித்ததன் சாரத்தை நினைவில் கொள்ளவும் முடிந்தது. அது மட்டுமன்றி அவற்றை வெளிப்படுத்தவும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவரது நிர்வாகப் பணி அவ்வளவு சிரமமாக இல்லை. ஐசிஎஸ்-ஸில் சேர்ந்திருந்ததால் வேறு விதமாக இருந்திருக்கும். அது பற்றி அவரே பின்னொரு சமயம் குறிப்பிட்டுள்ளார்: “நான் ஐசிஎஸ் ஸில் சேர்ந்திருந்தால் என்னவாயிருக்கும்…. என்னை கீழ்ப்படியாதவன் என்றும் சோம்பேறி அதனால் பணி தேங்கிக் கிடக்கிறது என்றும் கூறி வெளியேற்றி இருப்பார்கள்.”
பரோடாவில் இருந்தபோது அவர் செய்த இலக்கியப் பணி அளப்பரியது. மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம், உரைநடை என பல்வேறு விதங்களில் பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் அந்தக் காலகட்டத்தில் எழுதியிருந்தார். அவை அனைத்தும் பாதுகாக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம் தான். 1908 மே மாதத்தில் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது போலீஸார் அவர் வீட்டில் இருந்த எல்லா ஆவணங்களையும், கைப்பிரதிகளையும் எடுத்துச் சென்று புரட்சிகர செயல்களுக்கு அவற்றில் ஆதாயம் தேடினார்கள். பிறகு அவற்றை நீதிமன்ற ஆவணக்கிடங்கில் போட்டு விட்டனர். விதிமுறைகளின்படி அவற்றை சில ஆண்டுகளுக்குப் பிறகு அழித்து விடலாம். ஆனால் நம்முடைய நல்லூழ் அங்கிருந்த குமாஸ்தா, அந்த ஆவணங்கள் எரிக்கப்பட்டு விட்டன என்று சொல்லப்பட்ட போதும், அவற்றை ஒரு இரும்பு அலமாரியில் வைத்து பூட்டி விட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மாறிவிட்ட சூழ்நிலையில், அவை வெளிவந்தன. அவற்றில் பெரும் பகுதி அவர் பரோடாவில் வாழ்ந்த காலத்தில் எழுதியவை.
ஆனால் அனைத்தும் கிடைக்கவில்லை; சில காணாமலே போய்விட்டன. அதில் ஒன்று கவி காளிதாசர் பற்றியது. சமஸ்கிருதம் கற்பதற்காகவும் அதில் தேர்ச்சி பெறவும் அரவிந்தர், காளிதாசர் எழுதிய காவியங்களைப் படித்தார் என்பதை ஏற்கனவே நாம் அறிந்தோம். அவரது கவிதா மேன்மையின் மீது அரவிந்தரருக்கு மிகப் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. அதுபற்றி மிக விரிவாக எழுதுவதற்காக, அவர் அனேகக் குறிப்புகளுடன் கூடிய ஒரு வடிவமைப்பை உருவாக்கி வைத்திருந்தார். பின்னாளில் அதை விரிவாக எழுதத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அரசியல் பணியில் அதற்கான நேரம் கிடைக்கவில்லை.
மகாகவி காளிதாசர் வாழ்ந்த காலகட்டம், அவரது முக்கியமான படைப்புகள், அவரது நாடகங்களில் உள்ள கதாபாத்திரங்கள், அவரது புலமையின் உயர்வு என பல்வேறு அம்சங்களைப் பற்றி அரவிந்தர் எழுதியுள்ளார். அவரது படைப்புகளில் ஒன்றான ‘விக்ரமோர்வசியம்’ என்பதை அரவிந்தர் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். ‘மேகதூதத்தை’ அவர் மொழிபெயர்த்துள்ளார். ஆனால் அதனை போலீஸார் சோதனை என்ற பெயரில் கொண்டுசென்று காணடித்து விட்டனர். அது பெரிய இழப்பு என்று அரவிந்தரே ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்தர் பரோடாவில் இருந்த காலத்தில் ராமாயணம், மகாபாரதத்தில் ஆழ்ந்திருந்தார். அவற்றை மொழிபெயர்க்கவும் செய்தார். அப்பொழுது புகழ்பெற்ற கவிஞரும் நாவலாசிரியரும் வரலாற்றாளருமான ரமேஷ் சந்திர தத் என்பவர் பரோடா வந்திருந்தார். அவர் அரவிந்தரைச் சந்தித்தார். அப்போது அரவிந்தரின் ராமாயண மொழிபெயர்ப்பை அவர் பார்த்தார். அதைப் படித்த பின் அவர், ‘நான் இதை முன்னமே பார்த்திருந்தால் என்னுடைய மொழிபெயர்ப்பை வெளியிட்டு இருக்கவே மாட்டேன். உங்கள் மொழிபெயர்ப்புக்கு முன் என்னுடையது ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போலிருக்கிறது’ என்றாராம்.
மொழிபெயர்ப்பு தவிர மகாபாரதம் பற்றிய குறிப்புகள் என்ற பெயரில் அரவிந்தர் எழுதியுள்ளார். வியாசர், வால்மீகியின் கவித்துவத்தைப் பற்றியும் அவர் எழுதியுள்ளார். அவரது பல கவிதைகள் மகாபாரதத்தில் இருந்து முளைத்தவையே. அவரது பெரிய, சிறந்த படைப்பான சாவித்திரியே மகாபாரதக் கதையில் இருந்து எழுந்ததுதான். (பிரபஞ்ச) படைப்பைப் பற்றி அவரது ஊகங்களும் மகாபாரத, கிரேக்க புராணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த கவிதைகள்தாம்.
சுருக்கமாகச் சொன்னால், பரோடாவில் அவர் வாழ்ந்த காலம் மிக படைப்பூக்கம் கொண்டதாகவே இருந்தது. தொன்மையான பாரதப் பண்பாட்டை புதிய வெளிச்சத்தில் மறு வரைவு செய்வது, தனிப்பட்ட முறையில் இலக்கியப் படைப்புகள் ஆக்கியதென அந்தக் காலகட்டம் சிறப்பானது என்றே கருத முடியும். அதே வேளையில் அவரது அரசியல் செயல்பாடுகளுக்கும், மிகப் பெரிய ஆன்மிக அனுபவங்களுக்கான காலமும் நெருங்கி வந்தது என்றும் கூற முடியும்.
பம்பாயிலிருந்து நேராக பரோடா சென்ற அரவிந்தர் வங்காளத்தில் இருந்த தன் குடும்பத்தினர், உறவினர்களுடன் எப்பொழுது எப்படி தொடர்பு கொண்டார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் பரோடா வந்த பதினோரு மாதங்கள் கழித்து 1894 ஜனவரி பதினோராம் தேதி தனது பாட்டனார் ராஜ் நாராயண போஸுக்கு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள தாத்தா, உங்களுடைய தந்தியும் தபால் அட்டையும் ஒன்றாக இன்று மதியம் வந்தன. நான் இப்பொழுது உள்ள இடத்திலிருந்து பதினைந்து மைல் சுற்றளவில் ஒரு தபால் நிலையமும் இல்லை. அதனால் தந்தி அனுப்புவது சிரமம். நான் அடுத்த வார இறுதியில் வங்கம் வருவேன். இந்நேரம் அங்கு வந்திருப்பேன். ஆனால் எனது போன மாத சம்பளம் இன்னமும் கிடைக்கவில்லை. அது இல்லாமல் நான் வருவது இயலாது. ஒரு மாதம் விடுப்புக் கேட்டுள்ளேன். அனுமதி கிடைத்ததும் கிளம்பத் தயாராகி விடுவேன். எனக்கு உருது தெரியாது. ஏன் இந்நாட்டு மொழி எதுவும் தெரியாது. எனவே என்னுடைய வசதிக்காக ஒரு குமஸ்தாவையும் அழைத்து வருவேன். அவர் வருவது உங்களுக்கு சிரமமாக இருக்காது என்று நினைக்கிறேன். மாமாவிடமிருந்து கடிதம் வந்தது. அதில் சரோவின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அதில் சிக்கல் என்னவென்றால் பரோடாவில் வங்க மொழி தெரிந்தவர் யாருமில்லை. அல்லது வங்க மொழி தெரிந்த யாரும் எனக்கு அறிமுகம் இல்லை. அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்தில் எனக்கு அறிமுகமான கொஞ்சம் வங்க மொழியைக் கொண்டு, கடிதத்தை முழுமையாகப் படிக்க முடியவில்லை என்றாலும் சாரத்தைப் புரிந்து கொண்டேன். எல்லாம் நல்லபடியாகப் போனால் நான் 18-ஆம் தேதி பரோடாவில் இருந்து கிளம்பி விடுவேன். இல்லாவிட்டால் ஓரிரு நாள் தாமதம் ஆகலாம். என்னை நம்புங்கள். உங்கள் பாசத்துக்குரிய பேரன் அரவிந்த் கோஷ்
அவர் எந்தத் தேதியில் போனார், உதவியாளரை அழைத்துக் கொண்டு போனாரா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அந்த ஆண்டு அவர் வங்காளம் சென்றார். இந்தியா வந்த பிறகு முதல்முறையாக அங்கு சென்றார். தியோகாரில் இருந்த தனது பாட்டனார் வீட்டில் தங்கினார். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுபற்றி அவரது தங்கை சரோஜினி எழுதியுள்ளது இது: “உணர்ச்சி ததும்பும் முகம். ஆங்கிலேயர்களை போல நீண்டு வளர்ந்த தலைமுடி. செஜ்-தா (மூத்த சகோதரன்- அரவிந்தர்) மிகவும் கூச்ச சுபாவம் உள்ள நபர்.”
தாயார் அவரைப் பார்த்ததும், ‘இவன் என்னுடைய அரோ இல்லை. அவன் மிகவும் குட்டியாக இருப்பான்’ என்று கூவினார். ‘அவன் கைவிரலில் ஒரு வெட்டுக் காயம் இருக்கும். அதைக் காட்டு பார்க்கலாம்’ என்றார். அதைப் பார்த்த பிறகுதான் அவர் ஏற்றுக்கொண்டார். பாண்டிச்சேரியில் அரவிந்தர் வாழ்ந்த காலத்தில் அதைப் பார்த்துள்ளதாக சில சீடர்கள் எழுதியுள்ளார்கள். மொத்தத்தில் அந்த விஜயம், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினரை சந்தித்தது, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக இருந்தது. இது பரோடா திரும்பிய பிறகு அவர் தங்கைக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுகிறது. அதிலிருந்து சில பத்திகள்:
பரோடா 25 ஆகஸ்ட் 1894 என் அன்புள்ள சரோ, ..... நாளைக்கு நான் கிளம்பினால் தான் பூஜை நேரத்தில் அங்கு வந்து உன்னைப் பார்க்க முடியும். அது என்னால் முடியாத காரியம். இங்கு எனக்குள்ள பணி சுமையும் பண நெருக்கடியும் அதை அசாத்தியமாக்குகின்றன. அங்கு வருவது ஒருவகையில் தவறாக முடியும். ஏனென்றால் நான் திரும்பி பரோடா வந்து பிறகு இங்கு இருப்பதே எனக்கு சகிக்க முடியாததாகிவிடும். யூதாஸ் பற்றி ஒரு பழைய கதை உள்ளது. அது எனக்கு பொருத்தமாக உள்ளது. கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த பிறகு யூதாஸ் தற்கொலை செய்து கொள்வான். நரகத்துக்குப் போவான். அங்கு அவனை இருப்பதிலேயே மிகவும் வெப்பமான உலையில் தொடர்ந்து வாட்டுவார்கள். ஆனால் அவன் தன் வாழ்நாளில் ஒரு நல்ல செயல் செய்திருப்பதால் கடவுள் அவன் மீது பரிவு கொண்டு ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்தன்றும் ஒரு மணி நேரம் வட துருவப் பனியில் இருக்க அனுமதிப்பார். அச்செயல் எனக்கு கருணையாகத் தெரியவில்லை; மாறாக கொடூரத்தின் உச்சம் என்றே நினைக்கிறேன். வட துருவப் பனியிடையே இருந்துவிட்டு நரக உலைக்கு வந்தால் அது ஏற்கனவே இருந்ததைவிட பத்து மடங்கு கொடுமையாகத் தானே இருக்கும்? என்னை பரோடாவில் போடுவதும் அதுபோலத் தான். இந்த அளவு தண்டிக்கப்பட நான் என்ன குற்றம் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. பைத்யநாத்தில் உங்களோடு இருந்த இனிமையான நாட்களுக்குப் பிறகு பரோடாவில் இருப்பது ஏற்கனவே இருந்ததைவிட நூறு மடங்கு கஷ்டமாக உள்ளது. உன்னுடைய கடிதத்தில் 'இங்கு எல்லோரும் நல்லபடியாக இருக்கிறோம்' என்று எழுதி உள்ளாய். ஆனால் அதற்கு அடுத்த வரியிலேயே 'பரீக்கு காய்ச்சல்' என்றும் உள்ளது. பரீ யாரோ ஒருவனென நீ நினைக்கிறாயா? பாவம் பரீ. அவனை மனிதப் பிறப்பிலிருந்தே நீக்கி விடுவது சரியானது என்று நீ நினைக்கலாம். ஆனால் அவன் ஒரு பிறப்பாக இருப்பதையே நீ மறுக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. லேசான காய்ச்சல் என்று நினைக்கிறேன். நான் இங்கு நன்றாக இருக்கிறேன். வங்காளத்தில் இருந்து நிறைய ஆரோக்கியத்தை எடுத்து வந்துள்ளேன். அது செலவாக எனக்கு சில காலம் பிடிக்கும். கடந்த ஆகஸ்ட் 15-இல் நான் இருபத்தி இரண்டாவது மைல் கல்லைக் கடந்தேன். வயதானது போலத் தெரிகிறது. உன்னுடைய கடிதத்திலிருந்து ஆங்கிலத்தில் நீ நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது புரிகிறது. நீ வேகமாக கற்றுக் கொள்வாய் என்று நம்புகிறேன். பிறகு நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை அப்படியே உனக்கு எழுத முடியும். இப்போது அது போலச் செய்ய என்னால் முடியவில்லை. காரணம் உனக்கு புரியுமோ புரியாதோ என்ற சந்தேகம் எனக்குள்ளது. அன்புடன் உன் பாசத்திற்குரிய அண்ணன் அரோ பின்குறிப்பு: என் பெயரின் புதிய எழுத்து இலக்கணம் பற்றித் தெரிந்துகொள்ள, மாமாவிடம் கேள்.
கடிதத்தில் மகிழ்ச்சியும் கண்ணீரும் கலந்திருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் அரவிந்த் என்ற பெயர் ‘அரோபிந்தோ’ என்று மாறி உள்ளதையும் கவனிக்க முடிகிறது.

இந்தக் கடிதம் எழுதப்பட்ட போது அவரது தம்பி பரீ என்ற பரீந்தரனுக்கு வயது பதினான்கு. சரோஜினி அவனைவிட இரண்டு வயது மூத்தவள். மூத்த அண்ணன் வினயபூஷண் இந்தியாவுக்குத் திரும்பிவந்து கூச்பிஹாரில் அரசுப் பணியில் இருந்தார். இளைய அண்ணன் மன்மோகன் ஆக்ஸ்போர்ட்டில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார். விரைவில் இந்தியா வந்து ஆங்கில பேராசிரியராக அரசுப் பணியில் சேரவிருந்தார். அரவிந்தருக்கு நெருக்கமாக இருந்தது அவரது மூத்த தாய்மாமனான ஜோகீந்தர். அவர் அன்பும் மகிழ்ச்சியும் கொண்ட மனிதராகவும் இருந்தார். அவரை அரவிந்தர் ‘வயிற்று வலி தேவதை’ என்று கிண்டலாக அழைப்பார். காரணம் அவர் யாருக்கு எந்தவிதமான வயிற்று வலி வந்தாலும் அதற்கொரு உள்ளூர் மருத்துவத்தைச் சொல்வார்.
முதல் வங்க விஜயத்திற்குப் பிறகு, எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அல்லது கல்லூரி ஆண்டு விடுமுறையின் போதும் அரவிந்தர் வங்காளம் வருவார். அப்பொழுதெல்லாம் மற்றொரு தாய்மாமனான கிருஷ்ணகுமார் மித்ரா வீட்டில் தங்குவார். அவர் சிறந்த தேச பக்தர்; ‘சஞ்ஜீவினி’ என்ற தேசபக்தி ஊட்டும் வார இதழை நடத்தியவர். அவரது மகள் வசந்தி தேவி எழுதி உள்ளது இது: “அரோ தாதா இரண்டு மூன்று டிராக் பெட்டிகளுடன் வருவார். நாங்கள் எல்லாம் இதில் விலை உயர்ந்த ஆடைகள், அணிகள், வாசனை மிகுந்த சென்ட் போன்றவை இருக்கும் என்று நினைப்போம். அதைத் திறக்கும்போது நான் பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். ஒன்றில் சில எளிய ஆடைகள் இருக்கும். மற்றதில் புத்தகங்கள் இருக்கும். புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் இருக்காது. இதை எல்லாவற்றையும் அரோ தாதா படிக்கப் போகிறாரா? நாங்களெல்லாம் விடுமுறையின்போது பேசுவதற்கும் விளையாடுவதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் விரும்புவோம். இவர் விடுமுறையில் கூட படிக்கத்தான் போகிறாரா என்று நினைப்போம். அவர் படிப்பதை மிகவும் விரும்பினார். ஆனால் அதே வேளையில் எங்களுடன் மகிழ்ச்சியாகப் பேசவும் விளையாடவும் செய்தார். அவருடைய பேச்சு எப்பொழுதும் பண்பான வார்த்தைகளில் நகைச்சுவையும் புத்திசாலித்தனமும் சேர்ந்து இருக்கும்.”
மேற்கண்ட விவரங்களிலிருந்து தன் குடும்பத்தினரிடமும் உறவினரிடமும் அரவிந்தரின் அன்பான, பாசமுள்ள இயல்பு வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அவர் தனித்தவராக, அக்கறையற்றவராக இல்லாமல், தன்னைச் சுற்றி உள்ளவர்கள் மீதும் அவர்கள் நல்வாழ்க்கையின் மீதும் ஆர்வம் உள்ளவராக இருந்தது தெரிகிறது. அதேவேளையில் அவர் தன்னுள் நோக்கியவராக, அமைதியாக இருப்பவராக, நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருந்திருக்கிறார்.
பரோடாவில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருந்தது? அவரது சரிதத்தை எழுதிய ஏ.பி.புராணி கூறுகிறார்: ‘ ஸ்ரீ அரவிந்தர் காலையில் தேநீர் அருந்திவிட்டு கவிதை எழுதத் தொடங்கி விடுவார். பத்து மணி வரை அது தொடரும். பிறகு பத்திலிருந்து பதினோரு மணிக்குள் குளியல். பதினோரு மணிக்கு மதிய உணவு. சாப்பிடும் போதே பக்கத்தில் ஒரு சுருட்டு புகைந்து கொண்டிருக்கும். பத்திரிகைகளை படித்துக்கொண்டே சாப்பிடுவார். அரிசிச் சோறு கொஞ்சமாகவும் ரொட்டியை அதிகமாகவும் சாப்பிடுவார். சிறிது மீன் அல்லது இறைச்சி இருக்கும்…..’
அரவிந்தர் பரோடாவில் எப்படி இருந்தார் என்பதைப் பற்றி அவருடனேயே இருந்த ஒருவரின் விவரிப்பைப் பார்க்கலாம். அவர் அரவிந்தருடன் தங்கி இருந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. அரவிந்தர் 1894-லேயே பங்கிம் சந்திரர் பற்றியும் அவரது இலக்கியத் திறன் பற்றியும் எழுதி உள்ளார். அதிலிருந்து அரவிந்தருக்கு வங்க மொழி நன்றாக்க் கைவந்திருப்பது தெரிகிறது. ஆனாலும் மேலும் சரளமாகவும் சிறப்பாகவும் அமைய வேண்டும் என விரும்பினார். அவரது வங்காளப் பயணத்தின்போது இதை அவர் உணர்ந்தார். எனவே அவரது மாமா மூலமாக அப்போது மிகவும் அறியப்பட்ட வங்க எழுத்தாளரான தினேந்திர குமார் ராய் என்பவர் அவருடன் தங்கி இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அரவிந்தர் வங்க மொழியில் சரளமாகப் பேச கற்றுக்கொள்ள முடியும் என்பதால் அந்த ஏற்பாடு. 1899 லிருந்து 1900 வரை இரண்டாண்டுகள் அரவிந்தருடன் பரோடாவில் உடன் தங்கி இருந்தார். அதுபற்றி அவர் ‘அரவிந்த பிரசங்கம்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.
முதல் சந்திப்பைப் பற்றி ராய் எழுதியுள்ளது இது:
“அரவிந்தரைச் சந்திப்பதற்கு முன் என் மனதில் அவரைப் பற்றிய ஒரு தோற்றம் இருந்தது. அது, அவர் உறுதியான, உயர்ந்த உருவம் உள்ளவர். தலை முதல் கால் வரை ஐரோப்பிய பாணியில் உடை அணிந்திருப்பார். மூக்குக் கண்ணாடிக்குப் பின் கடுமையான கண்கள் கொண்டவராக இருப்பார். முரட்டுத்தனமான வார்த்தைகளும் மனநிலையும் உள்ளவராக இருப்பார். சிறிய தவறுகளைக் கூட சகித்துக்கொள்ள முடியாதவராக இருப்பார் என்றெல்லாம் நினைத்திருந்தேன். முதல்முறை சந்தித்தபோது இதற்கெல்லாம் முற்றிலும் மாறானவராக அவர் இருப்பதை கண்டேன். சற்றே ஏமாற்றம் அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.”
” அடர் நிறத்தில், சற்றே கனவு காணும் கண்களுடன், நடு வகிடெடுத்து கழுத்து வரை மெல்லியதாக நீண்டு தொங்கும் தலை மயிருடன், சொரசொரப்பான அகமதாபாத் வேட்டி கட்டிக்கொண்டு இறுக்கமான இந்திய சட்டை அணிந்த, சற்றே மேல் நோக்கி வளைந்த பழங்காலத்து இந்திய செருப்பை அணிந்த, அம்மை வார்த்தது போல ஆங்காங்கே குழிகள் கொண்ட அந்த இளைஞன் தான் லத்தீன், பிரெஞ்சு, கிரேக்க மொழியின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அரவிந்த கோஷ் என்றால் யார் தான் நம்புவார்கள்? தியோகாரில் உள்ள குன்றைக்காட்டி இதுதான் இமயமலை என்றால் கூட எனக்கு அவ்வளவு அதிர்ச்சி ஏற்பட்டிருக்காது.”
“தாயின் மடியில் ஒரு சிறுவனாக அவர் இங்கிலாந்து சென்றார். நல்ல வாலிபனாக தாய்நாடு திரும்பினார். ஆனால் எனக்கு ஆச்சரியம் அளித்தது அவரது பெருந்தன்மையான மனது. மேற்கத்திய நாகரிகத்தின் ஆடம்பரமும் சொகுசும் அலட்சியமும் பல்வேறு விதமான மனச் சிதறல்களை, தாக்கங்களை ஏற்படுத்தும் சூழ்நிலையில் வாழ்ந்திருந்த போதும் அவையெல்லாம் அவரிடம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இது எனக்கு பெரிதும் வியப்பாகவே இருந்தது.”
தினேந்திரகுமார் ராய் எழுதியுள்ள விஷயங்கள் உண்மையில் ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளன. அரவிந்தர் தனது ஆளுமை வடிவம் பெறும் பதினான்கு ஆண்டுகளை இங்கிலாந்தில் கழித்திருந்த போதிலும் இந்தியா வந்த சில ஆண்டுகளிலேயே முழுமையான இந்தியராகி விட்டார். ஐரோப்பிய கலாச்சாரத்தில் நல்லவற்றை மட்டுமே உள்வாங்கிக் கொண்டு, பொதுவாக அனைவரும் விலக்கக் கூடிய மேம்போக்கானவற்றை விலக்கி விட்டார் என்றால் அதற்குக் காரணம் அவரது உள்ளார்ந்த வலிமைதான்.
அந்த நூலில் ராய் அரவிந்தரின் மனதை ஒருமுகப்படுத்தும் திறன் பற்றியும் புத்தகங்களில் ஆழ்ந்து போவதைப் பற்றியும் விவரித்துள்ளார். “பம்பாயில் இருந்த இரண்டு பிரபல புத்தக விற்பனையாளர்கள் அவருக்கு புத்தகங்களை தொடர்ந்து அனுப்புவார்கள். அவர் தேர்ந்தெடுத்த நூல்களுக்கான விலையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவார். அவர்கள் அந்த நூல்களை ரயில்வே பார்சலில் அனுப்புவார்கள். தபாலில் எதுவும் வந்ததில்லை. பெரிய பெட்டிகளில் ரயிலில் வரும். சில நேரங்களில் சிறிய பார்சல் ஆக இருந்தால் ஒரே மாதத்தில் இரண்டு மூன்று தடவை வரும். வந்தவுடன் அவற்றை படிக்கத் துவங்குவார். ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அவற்றைப் படித்து முடித்து விடுவார். பிறகு புதிய புத்தகங்களை வரவழைப்பார். அவர் போல் தீவிரமாகப் படிப்பவரை நான் பார்த்ததே இல்லை”.
“ஸ்ரீ அரவிந்தர் மேஜையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தால் இரவு ஒரு மணி வரை எண்ணெய் விளக்கொளியில் படித்துக் கொண்டே இருப்பார். கொசுக்கள் அவரைப் பிடுங்கும். அதைப்பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. அவர் உடல் அசையாமல், பல மணி நேரம் அமர்ந்து கண்கள் மட்டும் புத்தகத்தில் இருப்பதை, ஒரு யோகி வெளியுலகம் பற்றி கவனம் இல்லாமல் தெய்வீக தவத்தில் இருப்பதைப் போல, அவர் படித்துக்கொண்டே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். வீடே தீப்பற்றி எரிந்தாலும் அவரது கவனத்தை திருப்புவது அசாத்தியம். இரவெல்லாம் படிப்பார். பல்வேறு ஐரோப்பிய மொழியில் கவிதை, வரலாறு, தத்துவம், நவீனம் என பல்வேறு துறை நூல்களைப் படிப்பார்”.
அதேபோல அரவிந்தரின் இன்னொரு பக்கத்தையும் ராய் தனது நூலில் வெளிப்படுத்தி உள்ளார். அவர் எழுதுகிறார்: “ஸ்ரீ அரவிந்தருக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. அவர் தனியாள். எந்தவிதமான ஆடம்பரமும் சொகுசும் இல்லை. ஒரு அணா கூட வீணாக்க மாட்டார். ஆனாலும் மாதக் கடைசியில் அவரிடம் பணம் இருக்காது. பற்றாக்குறை தான். அவர் தன் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் தொடர்ந்து பணம் அனுப்புவார். ஒருமுறை அவர் மணியாடர் பாரத்தை பூர்த்தி செய்வதைப் பார்த்து எனக்கும் வீட்டுக்கு பணம் அனுப்ப வேண்டுமென ஆசை வந்தது. நான் அவரிடம் பணம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் என்னிடம் கொடுத்துவிட்டார். ‘இவ்வளவுதான் என்னிடம் உள்ளது. இதை அனுப்புங்கள்’ என்றார். நான் சொன்னேன், ‘அப்படி எல்லாம் வேண்டாம். நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்வதைப் பார்த்துக் கேட்டேன். அவ்வளவுதான்’. அவர் தலையை அசைத்து மறுத்தார். ‘என்னை விட உங்களுக்குத் தான் அதிகத் தேவை உள்ளது. எனவே அனுப்புங்கள் என்றார்.”
ஆர்.என்.பாட்கர் நூலிலும் இதே போன்ற விஷயங்கள் உள்ளன. அவர் எழுதுகிறார்: “ஸ்ரீ அரவிந்தர் படிக்கத் துவங்கி விட்டால் சாப்பாட்டைக் கூட மறந்து விடுவார். வேலைக்காரர் என்னிடம் அவருக்கு நினைவூட்டும்படி கேட்பார். நான் அவருக்கு நினைவூட்டுவேன். அதேபோல இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்துள்ளேன். பணத்தைப் பற்றி அவர் எப்போதும் அக்கறை கொண்டதே இல்லை. மாதச் சம்பளம் வந்ததும் அதை ஒரு டிரேயில் வெளிப்படையாக வைத்து விடுவார். ஒருநாள் நான் அவரிடம் கேட்டேன் ‘பணத்தை ஏன் பத்திரமாக வைப்பதில்லை?’ என்று. அவர் சொன்னார், ‘நான் நேர்மையான, நல்ல மனிதர்களிடையே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’. அதற்கு நான் ‘கணக்குப் பார்த்தால்தான் அது தெரியும்’ என்றேன். அதற்கு அவர் ‘கடவுள் என் கணக்கைப் பார்த்துக் கொள்கிறார். அவர் என்னைப் பார்த்துக் கொள்ளும்போது நான் ஏன் அனாவசியமாக கவலைப்பட வேண்டும்?’ என்றார்.”
தினேந்திரகுமார் ராய் தனது நூலில் அரவிந்தரின் வேறொரு பக்கத்தையும் காட்டுகிறார். “அவர் மிடுக்காக ஆடை உடுத்தும் பழக்கம் இல்லாதவர். மகாராஜாவைப் பார்க்கப் போகும்போதும் கூட எப்பொழுதும் இருக்கும் சாதாரண ஆடையில் தான் போவார். அவரது ஆடையைப் போலவே அவரது படுக்கையும் மிகச் சாதாரணமானதாக, எளிமையானதாக இருக்கும். அவர் படுக்கும் இரும்புக் கட்டிலை கடைநிலை குமாஸ்தா கூட பயன்படுத்தத் தயங்குவான். பரோடா பாலைவனத்திற்கு அருகில் உள்ள நகரமானதால் அங்கு கோடையில் வெப்பத்தின் தாக்கமும் குளிர்காலத்தின் குளிரின் தாக்கமும் மிக அதிகமாக இருக்கும். கடும் குளிரில் கூட அவர் குல்ட்டை (மெல்லிய மெத்தையாலான போர்வை) பயன்படுத்தியதில்லை. மலிவான ஒரு போர்வையைப் பயன்படுத்துவார். சுய கட்டுப்பாடுள்ள, தன்னை மறுக்கும் ஒரு பிரம்மச்சாரியாகவே அவர் எனக்குத் தெரிந்தார். பிறரது கஷ்டங்களைக் கண்டு இரங்குபவராகவே இருந்தார். அறிவைத் தேடி சேகரிப்பது மட்டுமே அவர் வாழ்வின் ஒரே லட்சியமாக இருப்பதாகத் தெரிந்தது. அந்த லட்சியத்துக்காக பரபரப்பான உலகியல் வாழ்க்கையிலும் சுய கட்டுப்பாட்டையும் பண்பாட்டையும் அவர் உறுதியாகப் பின்பற்றினார். அவர் நிதானம் இழந்து நான் பார்த்ததில்லை. எந்த உணர்வும் அவரிடம் மிகையாக வெளிப்பட்டு நான் பார்த்ததில்லை. மிகச் சீரிய சுய கட்டுப்பாடு இருந்தாலன்றி இது சாத்தியமே இல்லை.”
” மராட்டிய உணவு எனக்குப் பழக்கமாகவில்லை. ஆனால் அரவிந்தர் அதை ஏற்றுக் கொண்டார். சில நேரங்களில் சமையல் வாயில் வைக்க ஒப்பாது. நான் ஒரு வாய் கூட சாப்பிட மாட்டேன். ஆனால் அவர் எந்த முணுமுணுப்புமின்றி சகஜமாகச் சாப்பிட்டு விடுவார். சமையல்காரரிடம் அவர் குறை சொல்லி நான் பார்த்ததில்லை. அவருக்கு வங்காள உணவு பிடிக்கும். அவர் குறைவாகத் தான் சாப்பிடுவார். மிதமான உணவும் சாந்தமான மனநிலையுமே அவ்வளவு கடுமையான அறிவு உழைப்புக்கு அவரை தகுதி உள்ளவராக்கியது. அவர் தன் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர். தினமும் மாலை ஒரு மணி நேரம் அவர் இருந்த வீட்டின் வராண்டாவில் சீரான வேகத்தில் நடை போடுவார்.”
“அவரது சிரிப்பு ஒரு குழந்தையுடையதைப் போல இயல்பாகவும் மென்மையாகவும் இருக்கும். உதட்டோரங்களில் வளையாத மன உறுதி வெளிப்பட்டாலும் அவர் உள்ளத்தில் எந்தவிதமான உலகியல் ஆசைகளோ சுயநலமோ இல்லை. மனித இனத்தின் துன்பம் தீர்க்க தன்னை தியாகம் செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. அது தெய்வங்களுக்கும் இல்லாத துர்லபமான ஒரு விஷயம். ஸ்ரீ அரவிந்தர் இன்பம்- துன்பம், வளம்- இடர்பாடு, புகழ்ச்சி- பழி இவற்றைப் பொருட்படுத்தாதவராக இருந்தார். எல்லா கஷ்டங்களையும் மனத் தடுமாற்றமின்றி பொறுத்துக் கொண்டார்.”
இதையெல்லாம் படிக்கும்போது அரவிந்தர் பரோடாவில் ஏதோ ஒதுங்கிய வாழ்க்கை வாழ்ந்தார். அறிவு தாகம் கொண்டு புத்தகங்களிலேயே மூழ்கிக் கிடந்தார் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. மாறாக வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை, வெளிப்பாடுகளைக் கற்பது அவரது இயல்பாக இருந்தது. இசை, நடனம், இன்ன பிற பண்பாட்டு செயல்களில் அவர் ஆர்வம் காட்டினார். அவ்வப்போது ராஜ தர்பார் நிகழ்ச்சிகளிலும் அரசு கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இளைப்பாறினார்.
அவருக்கு மிக நெருக்கமானவர்களாக, பரோடா சமஸ்தானத்தில் நீதிபதியாக இருந்த காசிராவ் ஜாதவ் என்பவரும் அவரது தம்பி லெஃப்டினன்ட் மாதவராவ் ஜாதவ் என்ற ராணுவ அதிகாரியும் பாட்கீ என்ற மராட்டிய பிராமண எழுத்தாளரும் இருந்தனர். நகரில் முக்கிய தெருவில் இருந்த காசிராவ் வீட்டில் சில ஆண்டுகள் அரவிந்தர் தங்கி இருந்தார். அரவிந்தரின் அரசியல் பணியில் மாதவராவ் உதவிகள் செய்துள்ளார். அரவிந்தர் எப்பொழுதும் மேம்போக்கான வாழ்க்கையை வாழ்ந்ததில்லை. வெளிப்படையாக தெரிந்த வழக்கமான செயல்பாடுகளுக்கு பின்னே ரகசியமாக அவர் புரட்சிகரப் பணியைத் தொடங்கி இருந்தார். அது உள்ளேயே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
$$$