-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
நிறைவுச் செய்யுள்
.
சங்கரர் சிந்திய சந்தோஷ சாகரம்
சங்கடம் போக்கிடும் சத்குண போதகம்
தீந்தமிழ் செய்யுளில் தித்திக்கத் தந்திட்டேன்
தீதெல்லாம் நீங்கிடச் செய்.
.
ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் அருளிய சிவானந்தலஹரியின் நூறு ஸ்லோகங்களுக்குமான தமிழ் மொழிபெயர்ப்புக் கவிதைகளை சிவபெருமான் அருளாலும், பெரியோர்களின் ஆசிகளாலும் என்னால் இயன்ற அளவுக்குப் படைத்துள்ளேன். இந்த மொழிபெயர்ப்பு நூலின் நிறைவாக இந்தச் செய்யுளை யாத்துள்ளேன்.
.சிவானுபூதியைத் தரும் ஆனந்தத்தை நாம் எல்லோரும் அனுபவிப்பதற்காக, கடல் போன்ற அந்த ஆனந்தத்தை, ஸ்லோகங்கள் என்ற வடிவிலே நமக்காக ஸ்ரீ ஆதிசங்கரர் சிந்தித்து, சிந்தியுள்ளார். இந்த ‘சிவானந்தலஹரீ’ நூல், நமக்கு இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் அனைத்துவித சங்கடங்களையும் போக்குகின்ற மேலான சத்தியத்தை, நன்மையைப் போதிக்கின்ற பொக்கிஷமாகும். இதனை என்னால் இயன்றவரையில் தித்திக்கும் தீந்தமிழில் செய்யுளாக, கவிதையாக மொழிமாற்றித் தந்துள்ளேன். இதனைப் படிப்பவர்க்கும், கேட்பவர்க்கும், அனைவருக்குமே தீமைகள் எல்லாம் நீங்கிடுமாறு அந்தப் பரமேஸ்வரன் அருளட்டும்.
சிவமயம்.
$$$
(சிவகளிப் பேரலை நிறைவு)
$$$